ரெஃபரிஜிரேட்டர்
ஒரு முழுமையான பர்ச்சேஸ் வழிகாட்டி!மீந்து போனதை எல்லாம் தூக்கி எறிந்து குப்பையாக விரயமாக்கியதொரு காலம். அதையே பாதுகாப்பாக வைத்து மீண்டும் உபயோகப்படுத்தி வாழ்வது இக்காலம். வீட்டு உபயோக அத்தியாவசிய சாதனங்களில் ஒன்றாக மேல்தட்டு, மத்தியமர், கீழ்தட்டு என எல்லா வர்க்கத்தினருக்கும் தேவைப்படும் ஒன்றாக மாறிப்போன குளிர்சாதனப் பெட்டியைத் திறப்போமா?

‘விருந்து போல சாப்பாடு... வீட்டில் என்ன விசேஷம் இன்னிக்கு? ஒரே அசத்தலா இருக்கே... ஏன் இத்தனை வெரைட்டி?’ என்று எல்லோரும் ஆர்வமாக டைனிங் டேபிளில் குழுமியிருக்க... சாம்பார், மோர்க் குழம்பு, தேங்காய் சாதம், புலவ், வடை, பாயசம், பொரியல், கூட்டு, துவையல்... இப்படி தட்டு முழுக்க விதம் விதமாக பரப்பி வைத்திருக்க ஆச்சரியம் அனைவருக்கும்!

‘அதுவா... புதுசா ஃப்ரிட்ஜ் வாங்கப் போறேன்... அதான் ஒரு மாசமா ஸ்டாக் இருந்த எல்லா அயிட்டமும் இன்னிக்கு சாப்பாடா போடறேன்’னு சொல்ல...
ஒருத்தரையும் காணோம்!‘என்ன ஒரு மாச உணவா’ என்று ஓடியாச்சு... எங்கே போகப் போறாங்க? இன்னும் பெரிய ஃப்ரிட்ஜ் வாங்கப் போறேன்ல... அப்ப இருக்கு இதே விருந்து... அப்படியே வச்சிருந்து கொடுப்போம்ல!இவங்களுக்கு ஃப்ரிட்ஜ்னா பழசை உள்ள வைக்க மட்டும்னு நினைப்பு. முக்கிய விஷயம் என்ன தெரியுமா? பல பொருட்களை புதுசா ஃப்ரெஷ்ஷா வைக்க அதுதான் காரணம். இந்தத் தொழில்நுட்பம் இல்லாட்டி பல பொருட்கள் விவசாய இடத்தில தேக்கம் அடைஞ்சு நம்மை அடையாமலே போயிருக்கும். அமெரிக்காவுக்கு கும்பகோணம் வெற்றிலை போய் சேருது. பெங்களூரு ரோஜா காதலர் தினத்துக்கு கடல் தாண்டிப் போய் காதல் சொல்லுது. நியூசிலாந்து கிவி பழம் இன்னிக்கு நம்ம கையில... எல்லாமே இந்தத் தொழில்நுட்பத்தால!
வீட்டுக்கு ஓடி வந்தவுடன் ஜில்லுனு குடிக்க எதாவது இருக்கான்னுதானே வாறோம். இதோட அருமை தெரிஞ்சவங்க ஃப்ரிட்ஜ்-ஐ வேண்டாம்னு சொல்லமாட்டாங்க! அந்த காலத்துல ஜில்லுனு குடிக்க எத்தனை கஷ்டப்பட்டாங்க தெரியுமா? மண்பானைதான் அப்ப ஃப்ரிட்ஜ். உலகம் முழுக்க ஏதோ ஏதோ ஐடியா செய்தும், குளிரூட்டப்பட்ட பொருட்கள் பெரிய ராஜாக்களுக்கு மட்டுமே கிடைக்கும். எகிப்திய அடிமைகள் மகாராஜாக்களுக்கான பானங்களை ஜில்லுனு வச்சுக்க மண்பானை மேலே தண்ணி ஊற்றிகிட்டே இருப்பாங்களாம். ஈரானில் இன்னும் முதல் குளிர் சாதனப்பெட்டி இருக்கு... யாக்ச்சல் என்றுபெயர். மிக ஆழமாக தோண்டி மேலே மண்ணால் கட்டப்பட்ட அமைப்பு.
பகலில் ஐஸ் உருகி அதுவே குளிராக வைத்துக் கொள்ளும். குளிரும் இரவுகளில் திரும்ப உறையும். மலைகளில் இருந்து கொண்டு வரும் பனிக்கட்டிகளை இப்படி பாதுகாத்தார்கள். பெர்சியன் பொறியாளர்கள் கி.மு. நானூறில் கண்டுபிடித்த ஃப்ரிட்ஜ்... 60 அடி உயரம்... கீழே 5 ஆயிரம் கன மீட்டர் அளவுள்ள மிகப்பெரிய குளிரூட்டப்பட்ட அமைப்பு. நடு பாலைவனத்தில் கட்டப்பட்ட இந்த அமைப்பு வியக்க வைக்கிறது இன்றும். அப்ப அரசர்களுக்கு மட்டுமே கிடைச்ச விஷயம்... இப்ப பொட்டிக்கடைல அஞ்சு ரூபா ஜூஸ்லேர்ந்து ஆரம்பிச்சி டாஸ்மாக்ல ‘பீர் கூலிங் இல்லை’ன்னு சொல்லற அளவுக்கு ‘குடி’யுரிமை பெருகிப் போய்... குடிமக்கள் அனைவருக்கும் குளிர்சாதனப் பெட்டி அவசியமா போச்சு. நல்ல பொருள் சாகாம இருக்கவும் ஃப்ரிட்ஜ்... செத்த பொருள் கெடாம இருக்கவும் ஃப்ரிட்ஜ்!
இந்த ஃப்ரிட்ஜ் வந்த வரலாறை கொஞ்சம் பார்ப்போமே...
பனி பெய்யும் ஊர்களில், பனியில இருக்கிறப்ப 6 மாசம் வரைகூட பொருட்கள் கெட்டுப் போகாம இருக்கு என்கிற உண்மைய கண்டுபிடிச்சவுடன், மனுஷனுக்கு பனி மேலே ஆசை வந்துடுச்சு. ஐஸ் மேலே ஆர்வம் வந்தா ஐஸ் வெச்சே சாதிக்கணும்... ஐ மீன் ஐஸை வச்சே சாதிக்கணும்னு கிளம்பிட்டான்!பாஸ்டன் பக்கத்துல ஒருத்தர். அவர் எதிர்காலம் பனில குளுகுளுன்னு குளுமையா இருக்கிறதை பார்த்தார். நல்ல தண்ணி ஏரில இருக்கிற பனியை அறுத்து கப்பல்ல பனிக்கட்டி இல்லாத ஊர்களுக்கு - அதாவது கரீபியன் தீவுகளுக்கு அனுப்ப, அந்த ஊர்ல இருக்கிறவங்களுக்கு அதை வச்சு என்ன பண்ண என்று தெரில... இதே இந்தியாவா இருந்தா ஐஸ் வச்சு பதவி கூட வாங்கி இருப்பாங்க!
அப்புறம் ஒரு ஐடியா செய்தார்... ஒவ்வொரு இடமா போய் பனிக்கட்டியை பழக்கப்படுத்தினார். ஜில் சுவையை உணர வைத்தார். பிறகு வியாபாரம் செய்தார். பிறகு உலகம் முழுக்க பனிக்கட்டி வியாபாரம் கொடிகட்டி பறந்தது. நம்ம ஊர் சம்பா, குறுவை விவசாய அறுப்பு போல பனிக்கட்டி அறுவடை அந்தப் பக்கம் கொடிகட்டி பறந்தது. பனிக்கட்டியை பாதுகாக்க ஆயிரம் யோசனைகள்... முதல்ல ஐஸ் மெஷின் அதாவது, பனிக்கட்டி உருவாக்கும் இயந்திரம் கண்டுபிடிச்சாங்க... அது ஒரு அறை அளவுக்கு இருந்துச்சு. அதுதான் நம் ஃப்ரீசரின் கொள்ளுப் பாட்டி. இப்ப டி.வி. பொட்டி விளம்பரத்துல ஒரு அழகான பொண்ணு வர்றா... ‘பனிக்கட்டிகள் இருக்கா’ன்னு ஐஸ்க்ரீம் போல குழைவா கேக்கறா. ஹீரோ போயி எடுக்க எடுக்க குறையாம வருது. இன்னிக்கு இத்தனை எளிதா இருக்கு...
அன்னிக்கு உள்ள ஹீரோக்கள் பனிக்கட்டி வேண்டும்னு கேட்டா இளவட்டக்கல் போலதான் தூக்கி ஏழு கடல், ஏழு மலை தாண்டி கூண்டுக்குள் இருக்கும் கிளியின் உடம்புக்குள் உள்ள மந்திரவாதி உயிர் போல எடுத்துக்கிட்டு வரணும்! தொழில்நுட்பம் வீட்டுக்குள் வந்து எல்லாவற்றையும் மிக எளிதா மாத்தி இருக்கு. ஹீரோ ஆக ஒரு ஃப்ரிட்ஜ் போதுமானதா இருக்கு!பனிக்கட்டி இல்லாத ஊர்களில் அதை தயாரிக்க பெரும்பாடு பட்டு இருக்காங்க... ரசாயனக் கலவைகள் போட்டு சோதனை செய்து இருக்காங்க. அஹமதாபாத்ல கூட ஐஸ் படலம் தயாரிச்சு இருக்காங்க. சீனாவும் பல முறைகளை பயன்படுத்தி இருக்கிறது..
ஆரம்பத்தில் இருந்தே இந்தியாவில் மண்பானை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருக்காங்க.. இன்றைக்கும் மின்சார செலவில்லாத ஃப்ரிட்ஜ் மண்பானைதான்!
அறிவியலும் இயற்கையும் இன்றைக்கு உபயோகப்படுத்தும் ஃப்ரிட்ஜுக்கு கொஞ்ச நாள் காத்திருக்கத்தான் வைத்தன. எளிதாகப் பயன்படுத்தும் தொழில்நுட்பம் வந்தது அத்தனை எளிது அல்லவே. எத்தனையோ ஆராய்ச்சிகள், மனித உழைப்புகள், மணி மணியாக காலத்துளிகள், பணம் எல்லாம் செலவானதில், நாம் இன்னிக்கு உள்ளே வகை வகையாக என்னென்னவோ சேமிக்க முடிகிறது!
ஒரு காலத்தில் ஐஸ் ஹவுஸ் மிகப்பிரபலம்... எல்லா ஊர்களிலும் இருக்கும்... அங்குதான் இறக்குமதி செய்த பனிக்கட்டிகளை சேமிச்சு வைப்பாங்க. மரத்தூள், இரட்டை அடுக்கு என்று ரொம்ப கஷ்டப்பட்டு பாதுகாத்து வினியோகிச்சாங்க. வீட்டிலேயே பனிக்கட்டியை பாதுகாக்க நிறைய யோசனை செய்ததில் உருவானது பனிக்கட்டி டப்பா... அதாவது, மரத்தில் ஃப்ரிட்ஜ் ஒன்றை வடிவமைத்து இருக்கிறார்கள். பிறகு ஆராய்ச்சியாளர்கள் யோசனை செய்து இன்றைய ஃப்ரிட்ஜுக்கு கொள்ளுப் பாட்டியை கொண்டு வந்துட்டாங்க!
என்னதான் தொழில் நுட்பம்? இதில் என்னதான் இருக்கு? குளுகுளுன்னு எப்பவும் இருக்கே! நிறைய நாட்களுக்கு ஃப்ரெஷ்ஷா பொருட்களை வச்சுக்குதே! நம்ம மனசை இந்த தொழில்நுட்பத்தோடு இணைச்சா மனசும் எப்பவும் குளுகுளுன்னு ஃப்ரெஷ்ஷா இருக்கும்ல? இப்படின்னு யோசனை வருதுல்ல... அதான் இதோட மகிமை!தொழில்நுட்பம்னு பார்த்தா குட்டி யோசனை... ஆனா, பெரிய விதி. வெப்பத்தை ஒரு இடத்தில் இருந்து கடத்தி குளிர்ச்சியை அனுப்புவது... வெப்பம் வெளியேறி அந்த இடத்தை குளுமையாக்கணும். சொல்றது எளிது... அதை சின்ன பெட்டியில செய்யறது எவ்ளோ கஷ்டம்?
நம்ம இயற்கையால ஒரு மழைல ஊரையே குளிர்விக்க முடியுது... குளுமையாக்கிடுது... அது சரி... ஆனா, ஒரு பொருள் வெப்பம் இல்லாம ஜில்லுன்னு இருக்க எப்பவும் பொட்டிக்குள்ள மழை பெய்ய முடியாதே... உள்ளே குளிர் காத்து அடிக்குது... அதுதான் விஷயம்!குளிர்சாதனப் பெட்டிய நாமெல்லாம் ஒரு நாளைக்கு குறைஞ்சது 50 முதல் 100 தடவ திறந்து மூடுவோம். உள்ள குளிர்காத்து எப்பவும் இருக்கும். அதுக்குப் பின்னாடி பார்த்தா சூடா இருக்கும். ரொம்ப குழப்ப மா இருக்கா? இங்கதான் நம்ம அறிவியல்!
கம்பிகள் வளைஞ்சு, வளைஞ்சு போறதை எல்லாரும் பார்த்து இருப்போம். அது ஒரு பயணப் பாதை. பின்னாடி கம்பிகளுக்கு இடுக்கில் ஒரு குழாய் போகும். அந்தக் குழாயில்தான் அதிக அழுத்தத்தில் ரெஃப்ரிஜன்ட் என்ற வாயு சுத்திக்கிட்டே இருக்கும். அந்த வாயுவுக்குக் கூட பெரிய வரலாறு உண்டு. இப்பதான் சுற்றுச்சூழலுக்கு அதிக ஆபத்து இல்லாத வாயு வந்துருக்கு. அந்த வாயுதான் குளிர்விக்க பயன்படுது.
கேப்பிலரி வால்வ் என்று ஒன்று இருக்கும்... அது கிட்டத்தட்ட நம்ம ஸ்ப்ரிங் அமைப்பில் இருக்கும். அங்க அதிக அழுத்தத்தில் அந்தத் திரவம் அனுப்பப்படும். அது சுத்தி சுத்தி அதன் அழுத்தம் விரிவடையும்போது குளிர்ந்து வெளியேறும். அது பொட்டிக்குள்ள இருக்கிற பொருட்களை குளிர்விச்சிட்டு, அங்க இருக்கிற பொருட்களின் வெப்பத்தைத்தான் தாங்கி சூடா வெளியேறும். இது வெப்ப இயக்கிவியல் என்று சொல்லப்படும் தெர்மோ டைனமிக் தொடர்புடைய விஷயம். அந்த வெப்பம் குளிர்சாதனப் பெட்டி பின்னாடி இருக்கிற கம்பிகள் மூலமா வெளியேற்றபடுது. பிறகு அது கம்ப்ரசர் வழியா போறப்ப, கம்ப்ரசர் அதை அதிக அழுத்தத்துடன் வெளியேற்றும். அப்ப அது கேப்பிலேரி குழாய் வழியா திரும்பி போறப்ப குளிர்விக்கப்படுது. அழுத்தமா அனுப்பி அது விரிவாகும்போது குளிரும் விதியை பயன்படுத்தி குளிரூட்டப்படுது. திரவமா, வாயுவா மாறிகிட்டே இருக்கும்.
படத்தில் நீல நிறம் குளிர்ச்சியை குறிப்பிடுகிறது. வாயுப் பெட்டியின் உள்ளே பொருட்களை குளிர்வித்துவிட்டு திரும்பும் வேளையில் பொருட்களின் வெப்பத்தைத் தன்னுள் வாங்கிக் கொண்டு சூடாகி திரவமாகிறது. அது கம்ப்ரசர் உள்ளே சென்று அதிக அழுத்தத்தில் வெளியேற்றப்பட்டு குளிர்
விக்கப்படுகிறது. அவ்ளோதான் விஷயம்!
கொஞ்சமா தேவை இருந்தா ஃப்ரிட்ஜ். கொஞ்சம் கொஞ்சமா நிறைய சேர்த்து வச்சுக்கணும்னா ஃப்ரீசர்!
இரட்டைக் கதவு, மூணு கதவு, நாலு கதவு, ஜன்னல், டிஜிட்டல் டிஸ்ப்ளே... இப்படி என்ன என்ன மாடலோ குமிச்சு வச்சு இருக்காங்க... எப்படித்தான் தேர்ந்து எடுக்கிறது?
(அடுத்த இதழில் முடிவெடுப்போம்!)
படம்: புதூர் சரவணன்