சிறுகதை-நாங்களும் மனிதர்களே
‘‘சா ர் கொஞ்சம் நில்லுங்கள்…’’ என்றாள் பூங்கொடி.குரல் கேட்டு திரும்பி பார்த்தார் கதிரேசன். ‘‘என்னம்மா… என்னையா கூப்பிட்ட.’’‘‘ஆமா சார்… கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடிதான் இந்த இடத்தை சுத்தம் பண்ணிட்டு போனேன். அதுக்குள்ள இவ்ளோ குப்பை கொண்டு வந்து கொட்டிட்டு போறீங்க… குப்பை போடுற இடமா இது... வாரத்துல மூணு நாள் நீங்க இப்படித்தான் பண்றீங்க…’’ என்றாள் கோவ மாக.‘‘அட, என்னம்மா… ரொம்ப ஓவரா பேசுற. என் வீட்டு வாசல்ல ஓரமாதான போட்டிருக்கேன். இதுல உனக்கென்ன பிரச்னை’’ என்றார் கதிரேசன்.
 ‘‘சார் ரோடும் உங்க வீட்டு வாசலும் ஒண்ணாதான் இருக்கு. நானும் தினமும் இந்த ரோட்ட சுத்தம் பண்றேன்... உங்க வீட்டு வாசலையும் சேர்த்துதான். குப்பையை குப்பைத் தொட்டியில் போடுங்க. இல்ல குப்பை வண்டிதான் தெனம் வருதுல்ல... அதுல போடுங்க. அதவிட்டுட்டு இப்படி சுத்தம் பண்ண இடத்துல போட்டா என்ன அர்த்தம்...’’ கோவமாக கேட்டாள் பூங்கொடி. ‘‘இங்க பாரும்மா... சுத்தம் பண்றதுதான் உன் வேலை. அதுக்கு தான சம்பளம் வாங்குற...’’ திமிராய் பேசினார் கதிரேசன்.
‘‘சார் சுத்தம் பண்றது என் வேலைதான். நான் அதை சரியாத்தான் பண்ணிட்டு இருக்கேன். அதுக்குதானே சம்பளம் வாங்குறது... ஏளனமா பேசாதீங்க’’ என்றாள் பூங்கொடி.
கதிரேசனுக்கு கோவம் தலைக்கேறியது. ‘‘என்னம்மா நீ பாட்டுக்கு பேசிட்டு இருக்க... நான் அப்படித்தான் குப்பை போடுவேன்.
உன்னால முடிஞ்சத பார்த்துக்கோ’’ என்று சொல்லி தன் கைகளில் வைத்திருந்த மீதமுள்ள குப்பையையும் பூங்கொடி கண்முன்னே கீழே கொட்டினார். வீட்டு வாசலில் தன் கணவர் சத்தம் போடுவதை கேட்டு வீட்டிலிருந்து வெளியே வந்தாள் கெளரி.
‘‘ஏம்மா… என்ன, எதுக்கு சத்தம் போடுறீங்க…’’‘‘அம்மா… இங்க பாருங்க. உங்க வீட்டுக்காரர் பண்ணியிருக்கறது. போன வாரம் கூட அவர் கொட்டியிருந்த குப்பையில கண்ணாடி துண்டுகள் நிறைய கிடந்தது.
எடுத்து சுத்தம் பண்ணும் போது கையில கீறல் பட்டு ரத்தம் வந்துடுச்சு. இரண்டு நாள் என்னால் சரியா வேலை செய்ய முடியல... சாப்பிட முடியல... வீட்ல சமைக்கும் போது எவ்ளோ கஷ்டப்பட்டனு என் புள்ளைங்கள கேட்டா சொல்லும். இப்படி சுத்தம் பண்ண இடத்துல போட்டா எப்படிமா... நீங்களே சொல்லுங்க’’ என்றாள் ஆதங்கமாக பூங்கொடி. ‘‘ஏங்க அவங்க சொல்றது சரிதானே. ஏன் இப்படி வாசல்ல கொட்டுனீங்க? முதல்ல யார் உங்கள இந்த வேலைய செய்ய சொன்னது? சமையல் வேலை முடிச்சிட்டு நானே குப்பைத் தொட்டியில் போட்டு வரலானு இருந்தேன். அதுக்குள்ள இப்படி பண்ணி வச்சிருக்கீங்க…’’ என்றாள் கோவமாக.பூங்கொடி முன்பே கெளரி இப்படி பேசியது அவருக்கு கோவத்தை அதிகப்படுத்தியது. கெளரியை முறைத்துவிட்டு வீட்டுக்குள்ளே சென்றார் கதிரேசன்.
‘‘சரிம்மா இனிமே இப்படி நடக்காம பார்த்துக்கிறேன். இந்த ஒரு தடவ மன்னிச்சிடு’’ என்றாள் கெளரி.‘‘அம்மா... மன்னிப்பெல்லாம் ஏம்மா கேக்குறீங்க... இதோ இப்ப சுத்தம் பண்ணிடுறேன்’’ என்று குப்பையெல்லாம் எடுத்து, தான் வைத்திருந்த சிறிய குப்பை வண்டியில் போட்டாள்.கதிரேசன் தான் வைத்ததுதான் சட்டம் என்று நினைப்பவர்.
எதைப் பற்றி பேசினாலும் முடிவில் தன்னுடைய கருத்துதான் முடிவாக இருக்க வேண்டும் என்று எண்ணுவார். பேங்கில் மேலதிகாரி வேலையில் இருந்து போன மாதம்தான் ஓய்வு பெற்றார். வீட்டில் சிறு சிறு வேலை செய்வதாக சொல்லி அந்த வேலையை கௌரியே திரும்ப செய்கிறபடி செய்து விடுவார்.
இப்படித்தான் அவருடன் முப்பத்தைந்து வருடமாக குடும்பம் நடத்தி வருகிறாள். டைனிங் டேபிளில் வந்தமர்ந்தான் கார்த்திக். ‘‘என்னம்மா… அப்பா சாப்பிட வரலியா’’ என்றான். நடந்ததை கூறினாள் கெளரி. ‘‘அம்மா… இப்ப எதுக்கு அப்பாவ குப்பை சுத்தம் பண்றவங்க முன்னாடி கோவமா பேசுனீங்க.
சுத்தம் பண்றது அவங்களோட வேலை.நீங்க எல்லார்கிட்டயும் இப்படித்தான் நடந்துப்பீங்க. ஆனா, மத்தவங்களும் உங்கள மாதிரியே இருக்கணும்னு எதிர்பார்க்கிறது ரொம்ப தப்பு’’ என்று அவன் பங்குக்கு கெளரியை பேசிவிட்டு ஆபீஸ் கிளம்பி சென்றான் கார்த்திக். இரண்டு நாட்களாக கெளரியிடம் பேசவில்லை கதிரேசன். கெளரியும் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்தாள். அன்று ஞாயிற்றுக்கிழமை. ஆபீஸ் விடுமுறை என்பதால் கார்த்திக் ஒன்பது மணி ஆகியும் எந்திரிக்கவில்லை. மதியம் சமையலுக்கு கறி வாங்குவதற்காக பக்கத்தில் இருக்கும் கறிக்கடைக்கு கிளம்பினார் கதிரேசன். கடை அவர் வீட்டிலிருந்து கொஞ்ச தூரம்தான். நடந்தே செல்லலாம் என்று கூடையை எடுத்துக் கொண்டு வீட்டிலிருந்து வெளியே வந்தார்.
கெளரி துணி காயவைத்துக் கொண்டிருந்தார். சிக்கனா, மட்டனா… எது வாங்கி வர வேண்டும் என்று கேட்பார்… எதுவும் கேட்கவில்லை. கெளரியை பார்த்ததும் கோவம் வர, செருப்பு கூட போட மறந்து விறுவிறு என்று நடந்து சென்றார்.‘‘பாய்… சிக்கன் அரை கிலோ, மட்டன் அரை கிலோ போடுங்க’’ என்றார்.‘‘என்ன கதிர் சார் வீட்ல கறி செஞ்சி ரொம்ப நாள் ஆச்சா… இல்லியே… கார்த்திக் தம்பி மூணு நாளுக்கு முன்னாடி தானே கறி வாங்குச்சி… இல்ல செருப்பு கூட போடாம வந்திருக்கீங்களே... அதான் கேட்டேன்’’ என்று கிண்டலடித்தார்.
அப்போதுதான், தான் செருப்பு போடாமல் வந்தது கதிரேசனுக்கு ஞாபகம் வந்தது.போயும் போயும் ஒரு குப்பை சுத்தம் செய்யுற பெண் முன்னாடி தன்னை கோபமாய் பேசியது இன்று செருப்பு போடக் கூட மறக்க செய்து விட்டதே என்று மீண்டும் கெளரியை மனதில் திட்டிக் கொண்டார். திரும்பவும் யாராவது பார்த்துக் கேட்பதற்குள் வீட்டுக்கு சென்றுவிட வேண்டும் என்று நினைத்து வேகமாக நடந்தார். கொஞ்ச தூரம்தான் சென்றிருப்பார். ‘‘அய்யோ… அம்மா’’ என்று கத்தினார் அவர்.
காலில் ஏதோ குத்தி ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. கீழே குனிந்து பார்த்தார். நிறைய கண்ணாடி துகள்கள். காலில் ஏறியிருந்தது. கூடையை கீழே போட்டு விட்டு நிலைத்தடுமாறி விழுந்தார். பக்கத்தில்தான் பூங்கொடி சாலையை சுத்தம் செய்து கொண்டிருந்தாள். கதிரேசன் விழுந்ததை பார்த்து விட்டு ஓடிவந்தாள்.
‘‘சார் என்னாச்சு’’ என்று கேட்டுக் கொண்டே அவர் காலை பார்த்தாள். ரத்தம் அதிகமாக வந்து கொண்டிருந்தது. அவர் காலை தன் மடியில் வைத்து காலில் இருந்த கண்ணாடி துகளை பொறுமையாக எடுத்தாள். தான் கொண்டு வந்த தண்ணீர் பாட்டிலில் இருந்த தண்ணீரை ஊற்றி காலை கழுவி பின் அவளுடைய கர்ச்சீப்பால் காலை கட்டினாள்.
‘‘சார் போன் வச்சிருக்கீங்களா? உங்க வீட்ல தெரியப்படுத்தணும்’’ என்றாள்.அவர் போனை எடுத்து கார்த்திக் என்ற பெயரில் கால் போடுமா என்றார்.
பூங்கொடி போன் செய்து நடந்ததை எல்லாம் கார்த்திக்கிடம் சொன்னாள். அடுத்த நொடி கார்த்திக் வண்டியில் வந்தான். பூங்கொடி கதிரேசனை தாங்கலாக தூக்கி வண்டியில் உட்கார உதவி செய்தாள்.
இருவரும் பூங்கொடிக்கு நன்றி சொல்லி ஹாஸ்பிட்டலுக்கு சென்றனர்.வாசலில் நின்று கொண்டிருந்தாள் கெளரி. காலில் கட்டுடன் வந்திறங்கிய கதிரேசனை பார்த்ததும் ஓடி வந்து கையை பிடித்துக் கொண்டாள். ‘‘கெளரி என்னை மன்னிச்சிடு’’ என்றார்.
‘‘இப்ப என்ன ஆயிடுச்சு மன்னிப்பெல்லாம் கேக்குறீங்க… மொதல்ல கீழ பார்த்து நடங்க’’ என்றாள்.ஹாலில் உட்கார வைத்து விட்டு சற்று நேரத்தில் காபி போட்டுக் கொண்டு வந்து கொடுத்தாள்.‘‘கெளரி நான் பண்ண அதே தவற யாரோ ஒருவர் பண்ணியதால்தான் எனக்கு காலில் காயம் ஏற்பட்டது’’ என்று வருத்தத்துடன் கூறினார்.
‘‘என்ன சொல்றீங்க…’’‘‘ஆமா, கெளரி... குப்பையை குப்பைத் தொட்டியில் போடாம யாரோ கவர்ல உடைந்த கண்ணாடி துகள்களை நடக்குற வழிலே போட்டு வச்சிருக்காங்க... அதனால்தான் எனக்கு காலில் கண்ணாடி குத்தியது’’ என்றார்.
கெளரி அமைதியாக இருந்தாள்.‘‘தப்பு முழுக்க முழுக்க என்னோடது தான்...’’‘‘நான் அந்தப் பெண்ணை எவ்வளவு கடுமையாக பேசினேன். அது எவ்வளவு பெரிய தவறுனு இப்ப நான் உணர்ந்துட்டேன்.
அந்தப் பெண்ணுக்கும் இப்படித் தானே காயம் ஏற்பட்டு வேலை செய்ய முடியாம கஷ்டப்பட்டிருப்பாள். இன்று அவள்தான் எனக்கு உதவி செய்தாள். இனியும் இது போன்ற தவறை செய்ய மாட்டேன்’’ என்றார் கதிரேசன். தன் கணவர் மனம் மாறியது கெளரிக்கு மகிழ்ச்சியாக இருந்தது. மறுநாள் காலை… கதிரேசன் வீட்டு வாசலில் வழக்கம் போல் பூங்கொடி சாலையில் சுத்தம் செய்து கொண்டிருந்தாள். ‘‘கெளரி… கொஞ்சம் காபி போட்டுக் கொண்டு வா’’ என்றார்.
கெளரியும் காபி போட்டு வந்து கொடுத்தாள்.
அதை வாங்கிக் கொண்டு வாசலை நோக்கி சென்றார். பூங்கொடியை அழைத்தார்.‘‘என்னையா சார் கூப்பிட்டீங்க...’’ என்றாள். ‘‘ஆமாம்மா இங்க வா… இப்படி உட்கார்’’ என்று கார்டனில் இருந்த சேரில் அமரச் சொன்னார். அவள் கையில் காபியை கொடுத்து குடிக்க சொன்னவர், ‘‘என்ன மன்னிச்சிடும்மா’’ என்றார் கதிரேசன்.
‘‘ஐயா மன்னிப்பெல்லாம் கேட்கா தீங்க… நான் அதை அன்னைக்கே மறந்துட்டேன். என்னை போன்ற சாலை தூய்மை செய்றவங்கள சக மனுஷியா மதிச்சாலே போதும். நாங்களும் காலையில எல்லா வேலையையும் முடிச்சிட்டு இங்கு வேலை செய்யும் போது ஒரே அசதியா இருக்கும்.
ஆனா, இந்த வேலையை நான் விரும்பிதான் செய்யுறேன். குப்பையை மக்கும் குப்பை… மக்காத குப்பைனு பிரிச்சி போடணும். ஆனா, அதை யாரும் கடமையா செய்யுறது இல்லை. நம்ம வீட்டு குப்பை மொதல்ல வீட்டை விட்டு போனா போதும்னுதான் நினைக்கிறாங்களே தவிர அதை சுத்தம் பண்றவங்களும் மனுசங்கதானே என்று நெனச்சி பார்த்தா இந்த தவறை செய்ய மாட்டாங்க சார்.
இன்னும் மழை நேரத்துல குமட்டல் வரும். அந்தளவுக்கு குப்பையை போட்டு வச்சிருப்பாங்க… இந்த நிலைமை மாறணும். நாங்களும் மனிதர்கள்தான்னு ஒவ்வொருத்தரும் புரிஞ்சிகிட்டாதான் உண்மையான சுத்தம் ஏற்படும்.நாம மட்டும் நம்மள சுத்தமா வச்சிக்கிட்டா பத்தாது. நம்ம சுத்தி இருக்குற இடமும் சுத்தமா இருக்கணும். என் புள்ளைங்களுக்கு தினமும் சொல்லுவேன்.
காலையில வர அவசரத்துல போட்டது போட்டபடி வருவேன். ஆனா, வேலை முடிஞ்சு வீட்டுக்குப் போனா என் புள்ளைங்க பொருளை எல்லாம் இருக்க வேண்டிய இடத்துல வச்சிருப்பாங்க… நான் ரொம்ப படிக்கல ஐயா… மூணாவதுதான் படிச்சிருக்கேன். ஆனா, நாளைக்கு நம்ம புள்ளைங்க நல்லா இருக்கணும்னா இந்த இயற்கையை பாதிக்கிற எந்தவொரு தவறையும் நம்மாள ஏற்படக்கூடாதுனு மட்டும் இந்தத் தொழில் மூலம் தெரிஞ்சிகிட்டேன்.
மண்ணுல மக்காத கேரி பேக்கை உபயோகப்படுத்தக்கூடாதுனும் எனக்கு தெரிஞ்சவங்க கிட்ட எல்லாம் சொல்லுவேன். எங்கிட்ட மன்னிப்பு கேக்குறதுக்கு பதிலா… உங்களுக்கு தெரிஞ்சவங்க கிட்ட நான் சொன்ன விஷயத்தை சொல்லி புரியவைங்க. இதுவே எனக்கு போதும்’’ என்று சொல்லி காபி கப்பை கதிரேசனிடம் கொடுத்தாள்.
‘‘சாலையை தூய்மைப்படுத்தும் பெண் தானே என்று எவ்வளவு சாதாரணமாக நினைத்துவிட்டேன். உண்மையிலே மனிதர்களை மதிக்கும் விதத்திலும்… இயற்கையின் மீது நீ கொண்ட அக்கறையிலும் நீதானம்மா படித்தவள்’’ என்று சொல்லி அவள் கையை குலுக்கினார் கதிரேசன்.
|