தேசம் கடந்து மணக்கும் மதுரை மல்லி!



‘‘மல்லிகை...  என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ..!’’ என்ற பாடலுக்கு ஏற்ப மல்லிகை மலரின் மணத்திற்கு மயங்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. அனைவரையும் சுண்டி இழுக்கும் நறுமணம் கொண்ட இந்த மல்லிகை மலரில் இருந்து சாறெடுத்து அதனை வாசனை திரவியம் தயாரிக்க உதவும் மூலப் பொருளாக உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார் மதுரையை சேர்ந்த உமா கண்ணன். இவரின் இந்த நறுமண நிறுவனம் மதுரை தியாகராஜர் குழுமத்தின் ஒரு அங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. 

‘‘நான் பிறந்தது லண்டனில். திருமணத்திற்குப் பிறகு மதுரையில் செட்டிலாகிவிட்டோம். நான் மானுடவியலில் டாக்டரேட் பட்டம் பெற்றிருக்கிறேன். ‘மல்லிகையை ஒரு பூவாக மட்டும் இல்லை, அழகு, தூய்மை, மணம் மற்றும் கலாச்சாரத்தின் குறியீடாக பார்க்கிறேன். அந்த மணத்திற்கு மயங்காதவர்கள் யாரும் இல்லை. 
அப்படிப்பட்ட பாரம்பரிய மலரில் இருந்து புதிதாக ஒன்றை உருவாக்க முடியுமா என்ற கேள்வி என்னுள் எழுந்தது. மதுரை மண்ணின் அடையாளமாகவும், மீனாட்சி அம்மனின் விருப்பமான மலரான மல்லிகையை கொண்டு ‘மதுரை மல்லி பிராக்ரன்ஸ்’ என்ற நிறுவனம் ஒன்றை அமைத்தேன். எனக்கு இது ஒரு தொழில் முயற்சி மட்டுமல்ல... நம் மண்ணின் மகத்துவத்தை உலகம் புகழ வைக்க கடவுள் அளித்த வாய்ப்பாக நினைத்தேன்’’ என்று கூறும் உமா கண்ணன், 
‘மதுரை மல்லி’ என்ற தலைப்பில் புத்தகத்தினை எழுதியுள்ளார். ‘‘நாங்கள் மல்லி, முல்லை மலர்களில் இருந்து மூலச்சாற்றை எடுத்து உயர்தரமான பிரெஞ்சு பர்ஃப்யூம் தயாரிக்க உதவும் ஜாஸ்மின் சம்பாக் எனப்படும் மூலப்பொருள் தயாரிக்கிறோம். இந்த மூலப்பொருளினை தயாரிக்க மல்லிகை விவசாயிகளிடம் இருந்து கிலோ கணக்கில் பூக்களை கொள் முதல் செய்கிறோம். 
இந்தியாவில் 40க்கும் மேற்பட்ட மல்லி வகைகள் உள்ளன. அதில் மதுரையில்  குண்டு மல்லி, முல்லை மற்றும் பிச்சிப் பூ என்ற மூன்று வகைகள் பிரபலமானவை. இந்த மூன்று வகை பூக்களிலுமே நாங்க நறுமண மூலப் பொருளினை தயாரிக்க பயன்படுத்துகிறோம். 

முதலில் பறிக்கப்பட்ட மல்லிகைப் பூக்களில் உள்ள ஈரப்பதம் போகும் வரை சில மணி நேரம் உலர்த்த வேண்டும். அவை மொட்டாக இருக்கும் போதே சாறு எடுக்க பயன்படுத்தப்படும் இயந்திரத்தில் போட்டு விடுவோம். அப்போதுதான் அதிலிருக்கும் மணம் வெளியேறாமல் இருக்கும். இயந்திரத்தில் நசுக்கப்பட்ட பூக்களை ஒருநாள் அப்படியே விட்டுவிட்டு மறுநாள் அதன் சாற்றினை வடிகட்டி எடுப்போம். அதிலுள்ள மெழுகினை நீக்கியதும் அது திரவ வடிவத்திற்கு மாறும். இந்த திரவத்தினை அப்சல்யூட் திரவம் என்று அழைப்போம்.

1000 கிலோ மல்லிப் பூவிலிருந்து ஒரு கிலோ அப்சலூட்தான் பெற முடியும். எண்ணெய் வடிவத்தில் இருக்கும் இந்த திரவம் ரோஜா, மஸ்க், ஆரஞ்சு பூ போன்ற பிற இயற்கை எண்ணெய்களுடன் கலந்து, உலகத் தரமான பர்ஃப்யூமாக மாறுகிறது. 

முழுக்க முழுக்க இயற்கையாகவும், உயர்ந்த தரத்திலும் தயாரிக்கப்படுவதால், உண்மையான மணத்தை தக்க வைக்க முடிகிறது’’ என்று கூறும் உமா கண்ணன், பெண்கள் மற்றும் குழந்தைகளின் கற்றலுக்கும் வருவாய் உயர்வுக்கும் பல பயிற்சி பட்டறைகளை நடத்தி வருகிறார். 

‘‘நான் எந்தப் பணி செய்தாலும் அதில் பெண்களுக்கு முக்கியத்துவம் இருக்கும். மல்லிப்பூக்கள் கொண்டு வித்தியாசமாக செய்யப்படும் மாலைகள், பூச்செண்டுகள், ஜடைகள் செய்வது குறித்த பயிற்சியினை பெண்களுக்கு அளித்து வருகிறேன். 

இதன் மூலம் நறுமணத்திற்கு மட்டுமில்லாமல் அந்தப் பூக்களை வேறு வகையில் மதிப்புக் கூட்டும் பொருளாக மாற்றி அதன் மூலம் பெண்களுக்கு வருவாயினை ஏற்படுத்தி தருகிறேன். 

ஒரு பெண்ணிற்கு முக்கியமானது தன்னம்பிக்கை, சுயநம்பிக்கை, தொடர்புத்திறன், நேர்மறை எண்ணம் மற்றும் கடின உழைப்பு. இதனுடன் நெட்வொர்க்கிங், நேர மேலாண்மை, திட்டமிடல் போன்ற திறன்களையும் அவர்கள் வளர்த்துக் கொள்வது அவசியம். அதே சமயம்  தங்களின் பாரம்பரியத்தையும், கலாச்சார அடையாளத்தையும் காக்கவும் வேண்டும். 

என்னுடைய நறுமண நிறுவனம் மட்டுமில்லாமல் எங்க குழுமத்தில் உள்ள மற்ற நிறுவனங்களில் பெண்களுக்கு அதிக அளவு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தந்திருக்கிறேன். 

நம்முடைய அடையாளத்தை காக்க, பழமையை பாதுகாப்பது மட்டும் போதாது. அதில் புதுமையையும் சேர்க்க வேண்டும். பாரம்பரியத்தின் வேர்களைக் காத்து, அதிலிருந்து புதிய கிளைகளை வளர்க்கும் மனப்பாங்கு அவசியம்’’ என்கிறார் உமா கண்ணன்.

செய்தி: கலைச்செல்வி

படங்கள்: வெற்றி