கலைஞர்களுக்கு என்னால் முடிந்த ஆதரவை அளிக்க வேண்டும்!
“இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்திருந்த காலக்கட்டம் அது. என் தாத்தா பி.வி. நாராயணன் 1948ல் சவுகார்பேட்டையில் சிறியதாக தொழில் தொடங்கினார். நட்ஸ் வகைகள் முதல் டபுள் சைடு ஃபீடிங் பாட்டில் வரை சிறிதளவில் தொடங்கிய வியாபாரம் ஹிந்துஸ்தான் டிரேடிங் கம்பெனியாக உருவெடுத்தது. கலைஞர்களுக்கு தேவையான அனைத்துப் பொருட்களும் கிடைக்கக்கூடிய பிரதானமான இடமாக மாறியது இந்த சிறிய கடை. தாத்தாவை தொடர்ந்து என் அப்பா வெங்கடகிருஷ்ணன் தொழிலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றார்.
 இது ஒரு தொழில் என்பதையும் தாண்டி நம்பகத்தன்மை, தனித்துவம், வாடிக்கையாளர்களுடனான நல்லுறவு என அவர்கள் பாதுகாத்து வந்த மரபு மூன்றாவது தலைமுறையாக எனக்கும் கடத்தப்பட்டிருக்கிறது. அனைவராலும் அறியப்பட்ட ஹிந்துஸ்தான் டிரேடிங் கம்பெனி எனும் ஒரு கடை 51 வருடங்களை கடந்து அதன் நற்குணங்கள் மாறாமல் இன்றளவும் தொடர்கிறதென்றால் என் தாத்தா மற்றும் அப்பாவின் நல்லெண்ணமும் நல்லிணக்கமும்தான் காரணம்” என்று நெகிழ்கிறார் அம்ரிதா வெங்கடகிருஷ்ணன்.  “இந்த நிறுவனத்திற்கு இப்போது நான் உரிமையாளராக இருக்கிறேன். ஆனால், இது என் தாத்தாவும் அப்பாவும் தூவிய விதை. கலைக்கு தேவையான பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் முதலில் நினைவுக்கு வருவது எங்க நிறுவனமாகத்தான் இருக்கும். திறமையை மட்டுமே கைகளில் கொண்டிருந்த கலைஞர்களுக்கு அப்பா அளித்த ஆதரவு என்பது அவர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்தது. 1947ல் என் தாத்தா தனியார் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்.
1948ல் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்கிற எண்ணத்தில் வேலையை விட்டு விட்டு சவுகார்பேட்டையில், காசி செட்டித் தெருவில் சிறிதளவில் ஒரு கடையில் தன் வியாபாரத்தை தொடங்கினார். அதில் நட்ஸ், ரப்பர் பொருட்கள், ரிப்பன் போன்றவற்றை விற்றுக் கொண்டிருந்தார். டபுள் சைடிங் ஃபீடிங் பாட்டில் அந்தக் காலத்தில் பிரபலமாக இருந்தது.
கொல்கத்தாவில்தான் அதற்கான உற்பத்தி பொருட்கள் கிடைக்கும். அங்கிருந்து அவற்றை கொண்டுவந்து, தனித்தனியாக இருக்கும் கண்ணாடி பாட்டில், நிப்பிள் போன்றவற்றை முறையாக ஃபிட் செய்து முழுமையான டபுள் சைடிங் ஃபீடிங் பாட்டிலாக உருவாக்கும் வேலையை என் பாட்டி பார்த்துக் கொண்டார். எங்க வீட்டில் பின்கட்டில் ஷெட் அமைக்கப்பட்டிருக்கும். அந்த இடத்தினை பாட்டி பாட்டில் தயாரிப்பிற்காக பயன்படுத்திக் கொண்டார்.
அங்குள்ள பெண்களுக்கு வேலை வாய்ப்பாகவும் அமைந்தது. குடும்பங்களை கவனித்துக்கொள்ளும் பெண்கள் வீட்டு வேலைகளை முடித்த பின்னர் கிடைக்கும் நேரங்களில் ஷெட்டுக்கு வந்து டபுள் சைடிங் ஃபீடிங் பாட்டிலை ஃபிட் செய்யும் வேலையை செய்வார்கள்.
இது அவர்களுக்கு சிறிதளவில் வருமானம் ஈட்டும் ஒரு வழியாக இருந்தது. பாட்டி தயாரிக்கும் இந்த ஃபீடிங் பாட்டில்களை விற்பனை செய்வது தாத்தாவின் பொறுப்பு. சென்னை மட்டுமின்றி பல்வேறு இடங்களுக்கு சென்று வியாபாரத்தை விரிவுப்படுத்தினர்.
அந்தக் காலத்தில் எங்க குடும்பத்தில் கார் இல்லை. ஆனால், சரக்குகளை ஏற்றிச் செல்லும் வேன் இருந்தது. தாத்தாவின் வியாபாரத்தில் முக்கிய பங்களித்தது வேன் தான். என் அப்பா பத்தாம் வகுப்பில் தேர்ச்சியாகவில்லை என்பதால், தாத்தா அப்பாவையும் தொழிலில் இணைத்துக்கொண்டார்.
தொழில் செய்வதில் தாத்தா நிறைய உத்திகளை கையாண்டார். ஒரு இடத்திலிருந்து வெவ்வேறு இடங்களுக்கு பொருட்களை எடுத்துச் சென்று வியாபாரம் செய்யும் போது சரக்குகள் தீர்ந்துவிட்டால் மறுபடியும் சரக்குகளை எடுக்க சென்னைக்கு வரவேண்டியிருக்கும். இந்த சிரமத்தை குறைக்க, என் தாத்தா, அப்பாவை வியாபாரம் செய்ய வேண்டிய ஊருக்கு போகச் சொல்லிவிட்டு, இங்கிருந்து தேவையான பொருட்களை சரக்கு ரயில் மூலம் அனுப்பிவிடுவார். அங்கிருந்து அப்பா அதனை பெற்றுக்கொள்வார். இதனால் பயண நேரம், செலவு போன்றவை மிச்சமானது. வெளியூர்களில் வேன்களில் வைத்து ஸ்பாட் சேல்ஸ் செய்யும் போது சில்லறை வணிகர்களே அதிகமாக வாங்கிச் செல்வார்கள். அதனால் கடைகளுக்கு நேரடியாகவும் சரக்குகள் வழங்கினோம். இப்போது இது எளிதான காரியமாக தோன்றலாம். ஆனால், அந்தக் காலத்தில் இது சாமர்த்தியமான வியாபார உத்தியாக இருந்தது” என்றவர், தங்களின் நிறுவனம் ஸ்டேஷனரி மற்றும் கலை சார்ந்த பொருட்களுக்கு பிரசித்திப்பெற்ற இடமாக மாறியது குறித்து பகிர்ந்தார்.
“விநியோகம் செய்யும் திறமையை பார்த்த மெட்ராஸ் பென்சில் ஃபேக்டரி அவர்களின் தயாரிப்புகளை விற்பனை மற்றும் விநியோகம் செய்யும் ஏஜென்ட் பொறுப்பினை எங்க நிறுவனத்திற்கு கொடுத்தார்கள்.
என் தாத்தாவும் அப்பாவும் இதனை சிறப்பாக செய்தனர். அந்த சமயத்தில் கேமலின் ப்ராண்ட் வரவு தந்தது. அவர்களும் விநியோகம் செய்யும் பொறுப்பினை கொடுத்தார்கள். இதன் பின்னர் ஸ்டேஷனரி மற்றும் ஆர்ட் சப்ளைஸ் விற்பனையில் எங்க நிறுவனம் தான் முன்னோடியாக திகழ்ந்தது.
அப்பாவுக்கு திருமணமானதும், வெளியூர்களுக்கு சென்று வியாபாரம் செய்வது தவிர்த்து, சென்னையிலேயே கடை வைக்க சொன்னதும், இப்போது கடை அமைந்திருக்கும் இதே ராயப்பேட்டை பகுதியில் அஜந்தா ஹோட்டல் அருகே 1974ல் எங்க நிறுவனத்தின் புதிய கிளையை அப்பா திறந்தார்.
நன்றாக சென்று கொண்டிருந்த நிலையில் வேறு நிறுவனம் அந்த இடத்தை வாங்கியதால், அப்பாவின் கடையுடன் சேர்த்து வரிசையாக அமைந்திருந்த நிறைய கடைகளை இடித்தனர். கடையின் அடையாளமாக அமைந்த அந்த இடத்தினை தக்க வைத்துக்கொள்ள அப்பா நிறைய போராடியும் முடியவில்லை.
அப்பாவிற்கு கலை மீதும் கலைஞர்கள் மீதும் தனிப் பிரியம் உண்டு. அவர்களுக்கு தேவையான பொருட்களை வழங்கி ஆதரிப்பதிலும் கவனம் செலுத்தி வந்தார். க்ளாஸ் கலர், க்ளாஸ் சில்க் பெயின்ட் எல்லாம் அந்தக் காலத்தில் எல்லா இடங்களிலும் கிடைக்காது.
மக்களின் விருப்பத்திற்காகவே தரமான தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து இறக்குமதி செய்தார். ஆர்வமுள்ள மக்களிடம் கலையை ஊக்குவிப்பதற்காக சிங்கப்பூரிலிருந்து கலைஞர்களை வரவழைத்து க்ளாஸ் சில்க் பெயின்டிங் கலையை பெண்களுக்கு கற்பித்தார்.
அப்போது இந்தக் கலையை கற்றுக்கொண்ட ஒரு பெண் இப்போது எங்க கடையில் நடைபெறும் ஒர்க் ஷாப்களில் சில்க் பெயின்டிங் வகுப்புகளை நடத்துகிறார். இது போன்ற பல நேர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கிறார். வியாபாரத்தை தாண்டி வாடிக்கையாளர்களின் நம்பிக்கையையும் அன்பையும் பெற்றார்.
தற்போது இந்திய திரைப்பட கலை இயக்குநர் தோட்டா தரணி, அரசு கவின் கலை கல்லூரியில் முதல்வராக இருந்த மனோகர் போன்ற பிரபலமான கலைஞர்கள் அவர்களின் ஆரம்பகால கற்றல் நிலையில் இருந்தபோது அப்பா ஆதரவளித்தது குறித்து இப்போதும் பேசுகிறார்கள். கலைஞர் மனோகர் கடைக்கு வந்து பொருட்களை பார்த்துக்கொண்டிருந்த போது அவருடன் அன்பாக பேசி, ‘உன்னால் முடியும்... நீ வரைந்து பழகு’ என்று சொல்லி அவர் வாங்கிய பொருட்களுடன் சேர்த்து இலவசமாக அவர் விரும்பிய பென்சில் ஒன்றை அப்பா கொடுத்தார். ஒரு சிறிய பென்சிலாக இருந்தாலும், அப்போது கிடைத்த பெரும் ஆதரவு அது என்பார்கள்” என்றவர் மேலும் தொடர்ந்தார்.
‘‘வாடிக்கையாளர்கள் கேட்கும் பொருள் இங்கு இல்லையென்று அப்பா சொல்லவே மாட்டார். கலைஞர்கள் உள்ளே வந்தால் அவர்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கி மன நிறைவாக செல்கின்றனர். நானும் அதையே கடைபிடிக்கிறேன். குறிப்பிட்ட சீசனுக்காக மட்டும் பொருட்களை வாங்கி வைப்பதில்லை.
எல்லா காலத்துக்கும் அந்தப் பொருள் கிடைக்கும் என்பதே எங்க கடையின் சிறப்பு. அப்பாவுக்கு உடல்நிலையில் தொய்வு ஏற்பட்டபோது 2012ல் நான் கடையின் பொறுப்பை ஏற்றேன். அப்போது கணக்குகள் எல்லாம் டிஜிட்டல் வடிவத்தில் இல்லை. அப்பா எல்லாவற்றையும் குறிப்பேடுகளில் எழுதி வைத்திருந்தார்.
அதனை டிஜிட்டல் தரவுகளாக மாற்றினேன். நிறைய வியாபார உத்திகளையும் தொழில் மீதான மதிப்பையும் அப்பாவிடம் இருந்து கற்றுக்கொண்டேன். அப்பா கலைஞர்களுக்கு ஆதரவளித்தது போலவே முடிந்தவற்றை செய்ய வேண்டும் என்கிற எண்ணம் எனக்கும் இருக்கிறது.
கேன்வாஸ் பெயின்ட் செய்யும் கலைஞர்கள் தங்களது படைப்பை ஃபிரேம் செய்ய விரும்புவார்கள். அவசரமாக பரிசளிக்க வேண்டும் எனும் நேரங்களில் கூட அதனை ஃபிரேம் செய்ய நேரமும் செலவும் ஆகும். இதுபோன்ற சிரமங்களை தவிர்க்க ஏற்கனவே ஃபிரேம் செய்யப்பட்ட கேன்வாஸ் நாங்களே தயாரிக்கிறோம். 2022ல் இதே இடத்தில் பெரிய அளவில் பிரமாண்டமாக அமைத்தோம்.
கலைஞர்களை ஆதரிக்கும் வகையில் இங்கு ஒவ்வொரு வாரமும் ஆர்ட் ஒர்க் ஷாப் நடத்துகிறோம். தாத்தா முதலில் தொடங்கிய சிறிய கடை இன்றும் அங்கு உள்ளது. பெண்கள் இது போன்ற பொறுப்புகளில் வரும்போது நிறைய சவால்களை சந்திக்கலாம். தைரியமும் சரியான அணுகுமுறையும் இருந்தால் நிச்சயம் தொடர்ந்து வளரமுடியும்.
என் தாத்தா மற்றும் அப்பா உருவாக்கிய இந்த நிறுவனத்தை மூன்றாவது தலைமுறையாக நான் பொறுப்பேற்று நடத்துவது பெருமைக்குரிய விஷயம். தொழிலை விரிவுபடுத்தும் நோக்கத்தில் மேலும் கிளைகளை தொடங்க வேண்டும் என்பது என் ஆசை” என்றார்.
செய்தி: ரம்யா ரங்கநாதன்
படங்கள்:ஆ.வின்சென்ட் பால்
|