நலம் யோகம்!



உடலுக்கு ஒளி...மனதுக்கு அமைதி!

யோகா அல்லது யோகம் என்ற சொல்லுக்கு ஒருங்கிணைதல், ஒன்று சேருதல், பதங்கமாதல் என்று பல அர்த்தங்கள் உண்டு. உடல், மனம், ஆன்மா இம்மூன்றும் ஒருங்கிணைதல் என்று நாம் இதனை எடுத்துக் கொள்ளலாம்.மஹரிஷி பதஞ்சலி கூறியிருக்கும் யோகசூத்ரம் என்ற நூலிலும், திருமூலர் அருளியிருக்கும் திருமந்திரத்திலும் அட்டாங்க யோகம் அல்லது அஷ்டாங்க யோகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதில் ஒருங்கிணைதல் என்ற மெய்யுணர்வு, மெய்யறிவு பெற எட்டு படி நிலைகள் குறித்து இவர்கள் விவரித்துள்ளனர். அதில் ஒரு பகுதி மட்டுமே இந்த ஆசனம்.

முறையான உடற் பயிற்சிகள் மூலம் உடலை நோயின்றி வைத்துக்கொள்வதால், அதிக நேரம் தியானத்தில் ஈடுபட முடிகிறது. 
இந்த தியானத்திலிருந்தே ஒருங்கிணைதல் அகம் பிரம்மாஸ்மி என்கிற மெய்யுணர்வு கிடைக்கப் பெறுகிறது. ஆழமான தியானத்தில் ஈடுபடவும், உடலை தயார்படுத்தவுமே ஆசனம் என்கிற படிநிலை வைக்கப்பட்டுள்ளது.

ஆசனம் என்பது இங்கு மூன்றாவது படிநிலைதான். முதல் இரண்டு படிநிலைகள் அதைவிட முக்கியமானவை. அவைதான் அஸ்திவாரமும். முதல் படி நிலை இயமம். இரண்டாவது படி நிலை நியமம். இந்த இயம, நியமங்கள் மனிதனின் ஒழுக்க பழக்கங்களை பற்றி பேசுகிறது. இதில் இயமம் ஐந்தாய் பிரிக்கப்படுகிறது.

முதலில் அஹிம்சை. அதாவது, கொல்லாமை என்று இதற்கு பொதுவான அர்த்தம் உண்டு. மனம், சொல், செயல் இந்த மூன்றின் மூலமாகவும் தன்னையோ, பிறரையோ புண்படுத்தாமல் இருப்பது. இரண்டாவது சத்தியம். பொய் பேசாமல் இருத்தல். இதில் சிந்தையும், சொல்லும், செயலும் ஒற்றுமையாய் இருத்தலே சத்தியம்.

மூன்றாவது அஸ்தேயா. அதாவது, திருடாமை. பிறருடைய பொருட்களை திருடாது இருத்தல் என எடுத்துக் கொண்டாலும், பிறருடைய எண்ணம், பிறருடைய உடமை, பிறருடைய உழைப்பின் பலனை, மனதாலும் ஆசைப்படாமல் இருத்தல் என்பதே இதன் ஆழமான அர்த்தமாகும்.நான்காவது பிரம்மச்சர்யம். 

உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி ஆற்றலை உயர்ந்த நோக்கத்தில் எடுத்துச் செல்லுதல். ஐந்தாவது அபரிகிரஹம். பற்றின்மை(detachment). தேவைக்கு மேல் பொருட்களை சேர்க்காமல் இருத்தல். பேராசையை விடுதல். இவை அனைத்தும் பற்றின்மையில் வரும். இனி ஆசனங்கள் குறித்து பார்ப்போம்.

வக்ராசனம் 

முதுகுத் தண்டு வளைந்து இருப்பதனால் வக்ராசனம் என்று பெயர். தமிழில் வளைந்த ஆசனம் அல்லது முறுக்கு பயிற்சி என்று அழைக்கப்படும் இந்த ஆசனம் செய்ய எளிமையானது. பலன் தரக்கூடியது. விரிப்பின் மீது தண்டாசனத்தில் அமர்ந்து கொள்ள வேண்டும். 

இப்போது வலது முட்டியை மடக்கி வலது பாதத்தை இடது கால் முட்டிக்கு இணையாக வைத்துக் கொள்ள வேண்டும். வலது கையினை நன்றாக சுழற்றி, பின்பக்கம் முதுகுத் தண்டுவடத்துக்கு நேராய் வைக்க வேண்டும். இடது கையை வலது காலுக்கு வெளிப்புறமாக கொண்டு வந்து கணுக்கால்களை பிடித்துக் கொள்ள வேண்டும். 

வெளி மூச்சை இழுத்தபடி, தலையை வலது புறம் பின்பக்கமாகத் திரும்பிப் பார்க்க வேண்டும். இந்த ஆசனத்தில் 30 விநாடியில் இருந்து ஒரு நிமிடம் வரை இயல்பான மூச்சில் இருக்கலாம்.
முதுகுத் தண்டோடு இணைந்து உள் உறுப்புகளும் வளையும்போது, ஜீரண உறுப்புகளுக்கு நல்ல இயக்கம் கிடைக்கிறது. 

இயல்பான சுவாசத்தில் இருந்த நிலையில் இடது கையினை வலது கணுக்காலிலிருந்து விலக்கி, பின் பக்கம் இருக்கும் வலது கையினை முன் பக்கம் கொண்டுவர வேண்டும். இப்போது வலது காலை நேராக்கி ஓய்வு நிலைக்கு செல்லலாம். வலது பக்கம் செய்தது போலவே இடது பக்கமும் அதே கால அளவில் செய்வது அவசியம்.

பலன்கள்

*முதுகுத் தண்டின் நெகிழ்வை அதிகரிக்கும்.

*மலச்சிக்கல், செரிமானக் கோளாறுகள் குறையும்.

*இடுப்பு வலி, முதுகு வலி பிரச்னைகளுக்கு நிவாரணமாய் அமையும்.

*நரம்பு மண்டலத்தில் ஒத்திசைவு ஏற்படும்.

*கணையம், ஈரல் போன்றவை சுத்திகரிக்கப்பட்டு உடல் ஆரோக்கியம் அதிகமாகும்.

*நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு உபயோகமான ஆசனம்.

*கர்ப்பிணிப் பெண்கள், மிகச் சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்தவர்கள், உடலுக்கு மிகவும் முடியாதவர்கள் செய்வதை தவிர்க்கவும்.

அர்த்த பவன முக்தாசனம்

இதை பவன முக்தாசனம், அர்த்த பவன முக்தாசனம் என இரண்டு வகையாகச் செய்யலாம். முதலில் அர்த்த பவன முக்தாசனம். அர்த்த என்ற சமஸ்கிருத சொல்லுக்கு பாதி எனப் பொருள். ஒரு காலை மட்டும் மடக்கி வயிற்றுப் பகுதியில் அடைந்திருக்கும் காற்று, அதாவது, அபான வாயுவை வெளியேற்ற உதவி செய்யும் ஆசனம்.

விரிப்பின் மீது மல்லாந்து படுத்துக் கொள்ள வேண்டும். வலது காலை முதலில் செங்குத்தாக தூக்கி வலது முட்டியை மடக்கி மடித்து வைத்துக் கொள்ள வேண்டும். இரண்டு கைகளாலும் கெண்டைகால் பகுதியை நன்றாக அணைத்துப் பிடிக்க வேண்டும். வலது காலின் தொடைப் பகுதி வலது பக்க வயிற்றுப் பகுதியை நன்றாக அழுத்துவதாக இது அமைந்திருக்கும். 

இடது காலை தலையிலிருந்து 45 டிகிரி கோணத்தில் தூக்கிய நிலையில், மூச்சை வெளியிட்டவாறு, தலை, கழுத்துப் பகுதியினை வலது முட்டியை நோக்கி மடக்க வேண்டும். 30 விநாடிகள் முதல் ஒரு நிமிடம் வரை இருந்துவிட்டு, பொறுமையாகத் தலை பகுதியை முதலில் கீழே வைக்க வேண்டும். 

இரண்டாவது இடது காலை கீழே இறக்க வேண்டும். மூன்றாவதாக கைகளை தளர்த்திய நிலையில், வலது காலை நேராக நீட்டிக் கொள்ள வேண்டும்.இப்போது வலது பக்கம் செய்ததை, அதே கால அளவில் இடது பக்கமும் செய்து பழகுதல் அவசியம்.

பவன முக்தாசனம்

இரண்டு கால்களையும் சேர்த்து செய்வது பவன முக்தாசனம். பவன என்றால் காற்று அல்லது வாயு. முக்தா என்றால் வெளியேற்றம். பவன முக்தாசனம் என்பது உடலில் அடங்கி இருக்கும் காற்றை வெளியேற்றும் ஆசனம். 

விரிப்பின் மீது மல்லாந்து படுத்துக் கொள்ள வேண்டும். இரண்டு கால்களையும் செங்குத்தாக தூக்கி நிறுத்த வேண்டும். பொறுமையாக முட்டியினை மடக்கி இரண்டு கால்களையும் மடித்துக் கொள்ள வேண்டும். இரண்டு கைகளாலும் வெளிப் பக்கத்திலிருந்து நன்றாக அணைத்துப் பிடிக்க வேண்டும். 

இப்போது தொடைப்பகுதி இரண்டும் வயிற்றுப் பகுதியில் அழுத்தம் கொடுக்க வேண்டும். வெளி மூச்சை எடுத்தபடியே தலையை தூக்கி, மூக்கின் நுனிப் பகுதி, இரண்டு முட்டிகளுக்கு இடையில் நுழையும்படி கழுத்தை நன்றாக வளைக்க வேண்டும். மூச்சு இதற்கு முக்கியம். மூச்சை எவ்வளவு நேரம் அடக்கி இருக்க முடிகிறதோ, அவ்வளவு நேரம் மட்டுமே இந்த ஆசனத்தில் இருக்க வேண்டும்.

இப்போது தலையை பொறுமையாகக் கீழே கொண்டுவந்து விரிப்பின் மீது வைத்த பிறகு உள் மூச்சினை எடுக்க வேண்டும். எவ்வளவு நேரத்திற்கு ஒருவரால் வசதியாக மூச்சுப் பிடித்து இருக்க முடிகிறதோ அதுதான் இந்த ஆசனத்திற்கான கால அளவு. உடலை வற்புறுத்தி இந்த ஆசனத்தைச் செய்தல் கூடாது.

பலன்கள்

*செரிமானத்தை மேம்படுத்தி சீராக்கும்.

*மலச்சிக்கல் குறையும்.

*வயிறு வீக்கம், வாயுத் தொந்தரவு குறையும்.

*குடலில் சிக்கியுள்ள காற்று வெளியேறுவதால், வயிற்றுப் பகுதி இலகுவாகும்.

*வயிற்றுத் தசைகள், அடிவயிற்றுப் பகுதி தசைகள், மையத் தசைகள் (Core muscles) உறுதியாகும்.

*முதுகுத் தண்டின் இறுக்கத்தை தணிக்கும்.

*கீழ் முதுகுப் பகுதியில் உள்ள வலி, தளர்ச்சி ஆகியவற்றைக் குறைத்து நெகிழ்வுத் தன்மையை அதிகரிக்கும்.

ஆ.வின்சென்ட் பால்