சாக்லேட் சாப்பிட இனி தயக்கம் வேண்டாம்!
சாக்லேட் என்று சொன்னாலே 60 வயதானவர்களும் வேண்டாம் என்று சொல்லமாட்டார்கள். பிறந்தநாள்... புது சட்டை அணிந்தாலோ... திருமண நாளோ... தேர்வில் அதிகளவு மதிப்பெண் பெற்றாலோ... எந்த ஒரு விசேஷம் என்றாலும்... முதலில் சாக்லேட் எங்கே என்று கேட்பது வழக்கம். அது மட்டுமில்லை சாக்லேட் என்று சொன்னாலே பெரியவர்களும் சிறியவர்களாக மாறிவிடுவார்கள். சொல்லப்போனால் சாக்லேட்டிற்கு என்று ஃபேன்கள் இல்லாதவர்களே கிடையாது. ஆனால், குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய சாக்லேட்கள் உடலுக்கு ஆரோக்கியமானது இல்லை என்பதால் பெற்றோர்கள் அதனை குழந்தைகளுக்கு கொடுக்க தயங்குகிறார்கள்.  குழந்தைகளுக்கு சாக்லேட் வாங்கித் தர பெற்றோர்கள் பயப்பட காரணம் அதிலுள்ள சர்க்கரை. அதிகப்படியான சர்க் கரை உள்ள சாக்லேட் சாப்பிடுவதால் பல் சொத்தை, எடை அதிகரிப்பு போன்ற உபாதைகள் ஏற்படுகின்றன. குழந்தைகள் சாக்லேட் சாப்பிடணும், அதே சமயம் அது ஆரோக்கியமானதாகவும், தீங்கு ஏற்படுத்தக் கூடாது என்று நினைக்கும் பெற்றோர்களுக்காகவே ‘டார்க் சாக்லேட்’களை அறிமுகம் செய்துள்ளார் சென்னையை சேர்ந்த அர்ச்சனா பிரதீப்.
 ‘‘அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’’ என்பதற்கிணங்க அளவாக சாப்பிட்டால் எதுவுமே ஆரோக்கியம்தான். அவ்வகையில் சாக்லேட்டும் அளவாக கொடுத்தால் குழந்தைகளுக்கு எந்தவித தீங்கும் ஏற்படுத்தாது. குறிப்பாக,‘‘ டார்க் சாக்லேட் சாப்பிட்டால் ஆரோக்கியமே என்று’’ கூறும் அர்ச்சனா, ‘தைய் சாக்லேட் ஸ்’ என்ற பெயரில் டார்க் சாக்லேட்களை மட்டுமே விற்பனை செய்து வருகிறார். ‘‘எனக்கு சொந்த ஊர் மதுரை.
 அப்பா மத்திய அரசு ஊழியர். அவருக்கு டெல்லிக்கு டிரான்ஸ்பர் ஆனதால், வளர்ந்தது, படிச்சது எல்லாம் அங்குதான். கல்லூரியில் படிக்க நான் சென்னைக்கு வந்தேன். அதன் பிறகு ஐ.டி நிறுவனத்தில் மூன்று வருடம் வேலை பார்த்தேன். எனக்கு அந்த வேலையில் பெரிய அளவில் விருப்பமில்லை. அதனால் நண்பர்களுடன் சேர்ந்து சொந்தமாக வெப் டெவலப்பர்ஸ் மற்றும் டிசைனிங் பிராஜட்ஸ் செய்து வந்தோம்.
என்னுடைய திருமணத்திற்குப் பிறகு நான் சென்னையிலேயே செட்டிலாயிட்டேன். சின்ன வயசுல இருந்தே எனக்கு ஹோம் மேட் ஃபுட் என்றால் அலாதிப் பிரியம். குறிப்பா எனக்கு இனிப்பு என்றால் ரொம்ப பிடிக்கும்.
எல்லா ஊரில் உள்ள பிரபல இனிப்புகளை சாப்பிட வேண்டும் என்று நினைப்பேன். உணவு மேல் ஏற்பட்ட தனிப்பட்ட விருப்பம் தான் எனக்கு ஒரு ஃபுட் நிறுவனத்தை துவங்க வேண்டும் என்ற விருப்பத்தை ஏற்படுத்தியது’’ என்றவர் தன் பிசினஸ் பயணம் குறித்து விவரித்தார். ‘‘2020ல்தான் என்னுடைய ஃபுட் கம்பெனியை தொடங்கினேன். அப்போது கொரோனா என்பதால் சரியா போகல. அந்த சமயத்தில் என் கணவர் ஒருநாள் வீடியோவை பார்த்தவர் என்னிடம் டார்க் சாக்லேட் செய்து தரச்சொல்லிக் கேட்டார். நானும் செய்து கொடுத்தேன். சின்னச் சின்ன குறைபாடு இருந்தாலும், சுவை நன்றாக இருந்தது. கொரோனாக்கு பிறகு எல்லோரும் ஆரோக்கியம் மேல் தனிப்பட்ட கவனம் செலுத்த ஆரம்பிக்க துவங்கினாங்க.
சாப்பாடு முதல் ஸ்னாக்ஸ் வரை அனைத்தும் ஆர்கானிக்கா பார்க்க ஆரம்பிச்சாங்க. அப்பதான் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சாக்லேட்களையும் ஆர்கானிக்கா கொடுக்கலாம்ணு யோசிச்சு, டார்க் சாக்லேட் பிசினஸ் பண்ணலாம்னு என் கணவர்தான் எனக்கு ஐடியா கொடுத்தார். நான் ஏற்கனவே செய்திருந்தாலும், அதில் இருந்த சின்னச் சின்ன குறைபாடுகளை நீக்கி தயாரித்தேன். அதனை ஒரு ஆர்கானிக் கடைக்கு சப்ளை செய்தோம். நல்ல வரவேற்பு கிடைச்சது. அப்படித்தான் ‘தைய் சாக்லேட்ஸ்’ உருவானது.
பொதுவா சாக்லேட் சாப்பிட்டா அதில் உள்ள சர்க்கரை தன்மை உடலுக்கு எனர்ஜியை கொடுக்கும். ஆனால், அது சில மணி நேரம்தான் இருக்கும். டார்க் சாக்லேட் சாப்பிட்டால் எனர்ஜி கிடைப்பது மட்டுமில்லாமல் மனசும் ரிலாக்ஸாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படும்.
காரணம், அதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்டுகள் இதயத்திற்கு பலமும், ரத்த அழுத்தத்தை குறைத்து, ரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது. இதன் சுவை கசப்பு கலந்து இனிப்பாக இருப்பதால், சர்க்கரை நோய் பிரச்னை உள்ளவர்களும் தாராளமா டார்க் சாக்லேட்களை சாப்பிடலாம். குழந்தைகள் இதை சாப்பிடும் போது சுறுசுறுப்பாக இருப்பார்கள். சாக்லேட் சாப்பிடவே கூடாதுன்னு சொல்ல மாட்டேன். ஆனால், ஒரு சாக்லேட் வாங்கும் போது அதில் உள்ள மூலப்பொருட்களைப் படிச்சு பார்ப்பது அவசியம். அதில் எந்த வகை சர்க்கரை பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்ட பிறகு வாங்க வேண்டும். சாக்லேட்களை சந்தோஷமாக சாப்பிட அது ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். அதற்கு நான் எடுத்த சிறிய முயற்சிதான் இது’’ என்றவர் அதன் செய்முறை குறித்து விளக்கினார்.
‘‘ஆர்கானிக் முறையில் விவசாயம் செய்யப்பட்ட கோகோ பீன்களை வாங்கி அதைத்தான் நாங்க சாக்லேட்டாக தயாரிக்கிறோம். ‘பீன் டூ பார்’ பிராசெசமைதான் நாங்க பின்பற்றுகிறோம்.
கோகோ மரத்தில் மஞ்சள் நிறத்தில் கோகோ பழங்கள் இருந்தால் அது நன்கு பழுத்த பழம். அந்தப் பழத்தை பறித்து அதற்குள் இருக்கும் சுளையினை நொதித்தல் முறையில் கொட்டைகளை எடுத்து காய வைத்தால் கிடைப்பதுதான் கோகோ பீன்ஸ். அதனை நாங்க மிஷினில் தோல்களை உரிச்சு, பவுடராக செய்து, நான்கு நாட்கள் அரைப்போம்.
அவ்வாறு அரைக்கும் போது அதிலிருந்து கோகோல பட்டர் தனியாக பிரியும். பொதுவாக இந்த வெண்ணையை பயன்படுத்தமாட்டார்கள். நாங்க அதை எடுப்பதில்லை. பீன்களை அரைக்கும் போது அது திரவிய பதத்திற்கு மாறும்.
அந்த சமயத்தில் நாட்டுச் சர்க்கரை, பனங்கற்கண்டு, கோகோனட் சுகர், பிரௌவுன் சுகர் இதில் ஏதாவது ஒன்றை சேர்ப்போம். பிறகு சாக்லேட் மோல்களில் சேர்த்து பிரீஸ் செய்தால் டார்க் சாக்லேட் ரெடி. பாதாம், முந்திரி, வால்நட் என மூன்று ஃபிளேவர்களில் கொடுக்கிறோம்.
சாக்லேட் மட்டுமில்லை அதனை ஆர்கானிக் முறையில்தான் பேக்கிங்கும் செய்கிறோம். பிளாஸ்டிக் பொருட்களை எந்த வகையிலும் உபயோகிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். கொட்டைகள், நாட்டுச் சர்க்கரை, பனங்கற்கண்டு அனைத்தும் முதல் ரகம் என்று தரமானவற்றை வாங்குவதால் எங்களின் தயாரிப்பும் தரத்தில் முதல் ரகமாக இருக்கிறது. குவாலிட்டியில் நாங்க காம்பிரமைஸ் செய்வது இல்லை.
மன அழுத்தத்திற்கு எடுத்துக் கொள்ளும் மாத்திரைகளை விட எங்க சாக்லேட் டின் விலை குறைவுதான்’’ என்று சமூக பொறுப்புணர்வுடன் கூறியவர், விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்ப உதவிக்காக ‘அக்ரி டெக்’ என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தையும் தொடங்கியுள்ளார்.
‘‘கோகோவை இந்தியாவில் தெற்கு மாநிலங்களில் மட்டுமே பயிர் செய்கிறார்கள். அதுவும் ஊடு பயிராக குளிர்காலத்தில் மட்டுமே பயிர் செய்ய முடியும். இந்தியாவில் பெரும்பாலும் கோகோ இறக்குமதிதான் செய்யப்படுகிறது. உலக அளவில் ஆப்பிரிக்காவில் மட்டுமே அதிகம் கோகோ பயிரிடப்படுகிறது.
நாங்கள் தமிழ்நாடு, கேரளா விவசாயிகளிடமிருந்து மட்டுமே கோகோ பீன்களை வாங்குகிறோம். கோகோ விவசாயத்திற்கு, காலநிலை மாற்றத்தால் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. பிற்காலத்தில் சாக்லேட்களை படத்தில் மட்டுமே குழந்தைகளுக்கு காட்ட வேண்டிய நிலைமையும் வரலாம்.
அதனால் நானும் என் கணவரும் விவசாயிகளுக்காக இந்த நிறுவனத்தை துவங்கினோம். நவீன தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி கோகோ விவசாயத்தை மேலும் எவ்வாறு வளர்ச்சியடைய செய்யலாம் மற்றும் கோகோ பீன்களை எவ்வாறு பாதுகாக்கலாம் என்பது குறித்த சில ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.
அரசும் பல வகைகளில் எங்களைப் போன்ற தொழில் முனைவோர்களுக்கு உதவுகிறது. பெண்களுக்கு வேலை வாய்ப்புகள் நிறைய உள்ளது. வாய்ப்புகள் கதவை தட்டும் போதே பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதே சமயம் குடும்பத்தார் ஒத்துழைப்பு இருந்தால் கண்டிப்பாக வீட்டுக்கொரு பெண் தொழில்முனைவோர் உருவாகலாம்’’ என்றார் அர்ச்சனா பிரதீப்.
செய்தி: கலைச்செல்வி
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்
|