போலி ORS பானங்களுக்கு தடையின் பின்னணியில் பெண் டாக்டர்!
உடலில் நீர் இழப்பு ஏற்பட்டாலோ, தொடர் வயிற்றுப் போக்கு இருந்தாலோ உடனே கடைகளில் விற்கும் ‘ORS’ (Oral Rehydration Solution) என்ற பொடி அல்லது பானத்தினை குடிக்க கொடுப்பார்கள். இதன் மூலம் உடலில் உள்ள நீர் சத்து கட்டுப்பாட்டில் வரும் மற்றும் வயிற்றுப் போக்கினால் ஏற்பட்ட இழப்பும் சரியாகும். ஆனால், இந்தப் பொடிகளில் உள்ள வேதியப் பொருட்கள் இல்லாமல் வெறும் சர்க்கரை மட்டுமே சேர்க்கப்பட்டு, போலி பொடி மற்றும் பானங்கள் கடைகளில் விற்கப்படுகின்றன. இதனை சாப்பிடுவதால், குழந்தைகளுக்கு மட்டுமில்லை பெரியவர்களுக்கும் உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இது போன்ற போலி பொடிகளை தயாரிக்கும் மருந்து நிறுவனங்களை கண்டறிந்து, அதற்கு எதிராக சட்டரீதியாக எதிர்த்துப் போராடினார் டாக்டர் சிவரஞ்சனி சந்தோஷ்.
எட்டு வருடப் போராட்டத்திற்குப் பிறகு அதில் வெற்றியும் கண்டார். அதன் அடிப்படையில் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையம் (FSSAI) இவ்வாண்டு அக்டோபர் மாதம் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய உரிமம் வழங்கும் அதிகாரிகளுக்கு உணவு வணிக நிறுவனங்கள் (FBOs) தங்கள் தயாரிப்புகளின் பெயர்களில் இருந்து ORS என்ற சொல்லை நீக்குமாறு உத்தரவை பிறப்பித்தது.
பழங்களை அடிப்படையாகக் கொண்ட, ‘கார்பன் ஏற்றப்படாத’ அல்லது ‘குடிக்கத் தயாராக உள்ளவை’ என்று பெயரிடப்பட்ட பானங்கள் கூட அதிகாரப்பூர்வ மருத்துவத் தரத்துடன் தயாரிக்கப்படாவிட்டால் ORS என்ற வார்த்தையை பயன்படுத்த முடியாது என்று FSSAI தெளிவுப்படுத்தியுள்ளது. டாக்டர் சிவரஞ்சனி சந்தோஷின் எட்டாண்டு காலப் போராட்டத்தைத் தொடர்ந்து இந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
‘‘இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையத்தின் இந்த உத்தரவு மிகப்பெரிய நிம்மதியை தந்துள்ளது. தவறாகப் பெயரிடப்பட்ட தயாரிப்புகள் குழந்தைகளை காப்பாற்றுவதற்குப் பதிலாக உயிருக்கு ஆபத்தை விளைவிக்கின்றன. ORS என்பது நீரிழப்பிலிருந்து காப்பாற்றுவதற்காக 20ம் நூற்றாண்டின் மிக முக்கியமான மருத்துவ கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும்.
ஆனால், பல ஆண்டுகளாக, சில நிறுவனங்கள் இந்தப் பெயரின் கீழ் அதிக சர்க்கரை உள்ள பானங்களை விற்பனை செய்து வந்துள்ளனர். இந்த பானங்கள் வயிற்றுப்போக்கை நிறுத்துவதற்குப் பதிலாக மேலும் நிலைமையை மோசமாக்க செய்யும். ஒவ்வொரு 100 குழந்தை இறப்புகளில் சுமார் 13 மரணங்கள் வயிற்றுப்போக்கினால் ஏற்படுகின்றன.
பொது சுகாதாரத்தை வேண்டுமென்றே பல நிறுவனங்கள் புறக்கணிக்கின்றன. தொடக்கத்தில் எனது போராட்டத்திற்கு சக மருத்துவர்கள் ஆதரவு தரவில்லை. அவ்வளவு ஏன்... என் குடும்பத்தினரும் என்னுடன் நிற்கவில்லை. அதுவே எனக்கு பெரிய அளவில் மன அழுத்தத்தை கொடுத்தது.
ஆனாலும், குழந்தைகளின் நலத்திற்காக எனது போராட்டத்தைத் தொடர்ந்தேன். 2022ல் தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் சர்க்கரை பானங்களை ORS ஆக விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு எதிராக ஒரு பொது நல வழக்கை பதிவு செய்தேன்’’ என்றவர், தான் ெதாடுத்த வழக்கின் செயல்பாடு குறித்து விவரித்தார். ‘‘போலி ORS தயாரிப்புகளில் லிட்டருக்கு 120 கிராம் வரை சர்க்கரை சேர்க்கப்பட்டிருக்கும். இது உலக சுகாதார அமைப்பு (WHO) பரிந்துரைத்த லிட்டருக்கு 13.5 கிராம் சர்க்கரையை விட மிக மிக அதிகம் என்பதைத்தான் என்னுடைய மனுவில் குறிப்பிட்டிருந்தேன். இந்த பானங்களில் போதுமான எலக்ட்ரோலைட் அளவுகளும் இருக்காது. அதனை பருகும் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும். என்னுடைய மனுவினை சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் மற்றும் FSSAI ஆய்விற்கு வழிவகுத்தது.
முதலில் FSSAI உணவுப் பொருட்களில் ORS பயன்பாட்டைக் கட்டுப்படுத்தியது. சில தயாரிப்பு நிறுவனங்கள் ரிட் மனுக்களை தாக்கல் செய்ததால், காப்புரிமைகள், வடிவமைப்புகள் மற்றும் வர்த்தக முத்திரைகளின் கட்டுப்பாட்டு அமைப்பின் இறுதி முடிவு வரை ORS வார்த்தையை பயன்படுத்த ஒழுங்குமுறை ஆணையம் தற்காலிகமாக அனுமதித்தது.
இந்தியாவில் 60% குழந்தைகள் வயிற்றுப்போக்கு, உடலின் நீர் இழப்பின் போது ORS குடிப்பதால் பயன் பெறுகிறார்கள். இது எளிமையான மற்றும் மிகவும் பயனுள்ள மருத்துவ சிகிச்சை முறைகளில் ஒன்றாகும். உப்பு, சர்க்கரை மற்றும் தண்ணீர்... இந்தக் கலவை உலகளவில் பல உயிர்களைக் காப்பாற்றியுள்ளது. சரியாகப் பயன்படுத்தினால் வயிற்றுப்போக்கு, வாந்தியால் ஏற்படும் நீரிழப்பை தடுத்து நிறுத்தலாம். உலக சுகாதார அமைப்பின் பரிந்துரையின்படி, ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2.6 கிராம் சோடியம் குளோரைடு, 13.5 சர்க்கரை, 1.5 கிராம் பொட்டாசியம் குளோரைடு மற்றும் 2.9 கிராம் ட்ரைசோடியம் சிட்ரேட் இருக்க வேண்டும். இதற்கு நேர்மாறாக, போலியாக தயாரிக்கப்படுவதில் சர்க்கரைஅளவு 110-120 கிராம் இருக்கும். தேவையான உப்புகள் இருக்காது. இதன் மூலம் உலக சுகாதார அமைப்பால் மருத்துவ ரீதியாக பரிந்துரைக்கப்பட்ட சூத்திரத்தை போலி நிறுவனங்கள் பின்பற்றுவதில்லை.
மேலும், அதிலுள்ள அதிக சர்க்கரையின் அளவு வலிப்பு, உறுப்பு செயலிழப்பு அல்லது வேறு உடல் உபாதைகளுக்கு வழிவகுக்கும். ORS என்று பெயரிடப்பட்ட எதுவும் மருத்துவ ரீதியாக பாதுகாப்பானது என்று பொதுவான நம்பிக்கை மக்களிடையே நிலவுகிறது. தற்போதைய FASSIயின் ஆணை ஒரு வெற்றி என்றாலும், அதன் அமலாக்கம் முக்கியமானது” என்றார் டாக்டர் சிவரஞ்சனி சந்தோஷ்.
பாரதி
|