தன்னம்பிக்கை தரும் பரந்து விரிந்த தோள்பட்டை!



முன்பெல்லாம் நம் வீட்டில் உள்ள பெரியவர்கள் ஆண் பிள்ளைகளிடம், “குனிந்து உட்காரக் கூடாது. கூன் விழுந்து விடும். பறந்து விரிந்த தோள்பட்டைதான் ஆண்களுக்கு அழகு” என்பர்.

பறந்து விரிந்த தோள்பட்டை ஆண்களுக்கு மட்டுமல்ல... பெண்களுக்கும் தன்னம்பிக்கையும், தைரியமும் கொடுக்கக்கூடிய ஒன்று. 
எனவே, ஒவ்வொரு பெண்களும் ஏன் கூன் விழுகிறது? அதற்கான காரணம் என்ன? இதில் இயன்முறை மருத்துவத்தின் பங்கு யாது? இதனை எப்படி தடுப்பது என்பவற்றை தெரிந்து கொள்வது அவசியமாகிறது.

கூன் விழுவது...

கழுத்து முன்னோக்கி வளைந்திருப்பது மற்றும் இரு தோள்பட்டையும் சேர்ந்து ஆங்கில எழுத்து ‘C’ போன்று வளைந்திருப்பது. மேல் 
முதுகும் முன் நோக்கி வளைந்து காணப்படும்.

காரணங்கள்...

* கழுத்து மற்றும் தோள்பட்டை தசைகள் ஒரு பக்கம் இறுக்கமாகவும் (Tightness), மறுபக்கம் பலவீனமாகவும் (Weakness) இருப்பது.

யாருக்கெல்லாம் வரலாம்..?

* அடிக்கடி கீழே குனிந்து படிப்பதால் மாணவர்களுக்கு வரலாம்.

* அடிக்கடி தேர்வுத் தாள்கள் திருத்துவதால் ஆசிரியர்களுக்கு வரலாம்.

* அதிகமாக தொலைபேசி பயன்படுத்துபவர்கள்.

* அதிகமாக கணினி பயன்படுத்துபவர்கள்.

* பார்வைத் திறன் குறைவாக உள்ளவர்கள். 

அதாவது, நீண்ட நாட்களாக பார்வைத் திறன் குறைவாக இருக்கும் போது, நாம் தொடர்ந்து பொருட்களை கழுத்தினை முன் நீட்டி உற்றுப் பார்ப்பதினால் கழுத்து அவ்வாறே அமைகிறது. இதில் முக்கியமாக பாதிக்கப்படுபவர்கள் கணினி வழியாக பணிபுரிபவர்கள், மாணவர்கள், தையல் கலைஞர்கள், மருதாணி இடும் தொழிலில் இருக்கும் பெண்கள் மற்றும் இவ்வாறான வரையும் கலையில் இருப்பவர்கள்.

எப்படி கண்டறிவது..?

கூன் விழுவது போன்ற தோற்றம் இருந்தால் இயன்முறை மருத்துவரை நாம் நேரடியாகவோ, ஆன்லைன் வழியாகவோ தொடர்பு கொள்ளலாம். ஒரு சில அசைவுகளை செய்யச் சொல்வார்கள். உதாரணமாக, கழுத்தினை திருப்பிப் பார்ப்பது. 

மேலும், நேராக நிற்கும்போது கழுத்து எவ்வளவு டிகிரி வளைந்து இருக்கிறது, தோள்பட்டை எவ்வளவு சென்டி மீட்டர் விரிந்திருக்கிறது போன்ற விஷயங்களை எளிய முறையில் அறிந்து, எந்த நிலையில் நம் கூன் இருக்கிறது எனக் கண்டறிவர். நம் மூச்சுவிடும் திறனையும் கண்டறிவர். இதனால் எக்ஸ்ரே, ஸ்கேன் போன்ற பரிசோதனைகளுக்கு அவசியமில்லை.

பக்க விளைவுகள்...

* நாள்பட்ட கழுத்து வலி இருக்கும். பின்நாளில் கழுத்து எலும்புத் தேய்மானம் வரும்.

* கழுத்துத் தசைகள் இறுக்கமாக இருக்கும் என்பதால் சிலருக்கு தலைவலியும் அடிக்கடி ஏற்படும்.

* ஒடுங்கிய உடல்வாகான (Posture) தோற்றத்துடன் காணப்படுவதால் தன் மீதான தன்னம்பிக்கை குறைவாக இருக்கும்.

* பின்நாளில் முதுகு வலி வரலாம்.

* ஆழ்ந்த சுவாசம் இல்லாமல் இருக்கும். இதனால் அடிக்கடி சளி தொந்தரவுகள் ஏற்படும்.

தடுக்கும் வழிகள்...

* தினமும் உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.

* காணொளிகள் பார்ப்பதற்கு தொலைபேசிக்கு பதிலாக நாம் தொலைக்காட்சியை தேர்வு செய்யலாம்.

* முடிந்தளவு நிமிர்ந்து உட்கார வேண்டும்.

* குழந்தைகள் பள்ளிக்கு அதிக எடையுடன் கூடிய பையினை எடுத்துச் செல்வதை கட்டாயம் தடுக்க வேண்டும்.

* தொலைபேசி பயன்படுத்துவதை குறைக்க வேண்டும். முடிந்தளவு கீழே குனிந்து பார்க்காமல் கண்களுக்கு நேராக வைத்துப் பயன்படுத்தலாம்.

தீர்வுகள்...

* இதற்கு வேறு மருத்துவத்தில் எந்தவிதமான  தீர்வுகளும் இல்லை. உடற்பயிற்சிகள் மட்டும்தான் ஒரே தீர்வு  என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

* எனவே, அருகிலுள்ள இயன்முறை மருத்துவரை அணுகினால் அவர்கள் நம் தசை திறனுக்கு ஏற்றவாறு உடற்பயிற்சிகளை வடிவமைத்து, கற்றும் கொடுப்பர்.

* குறைந்தது மூன்று மாதங்களாவது தொடர்ந்து உடற்பயிற்சிகள் செய்துவர வேண்டும். அப்போதுதான் தசைகளில் மாற்றங்கள் நிகழத் தொடங்கும்.

* மாதத்திற்கு ஒரு தடவை இயன்முறை மருத்துவரை தொடர்பு கொண்டு அடுத்தகட்ட  உடற்பயிற்சிகளை கற்றுக்கொண்டு செய்து வர வேண்டும். இப்படி ஆறு மாதம் முதல் ஒரு வருடத்திற்குள் நாம் சரியான உடல்வாகினை அடைய முடியும்.

* தசை தளர்வு பயிற்சிகள், தசை வலிமை பயிற்சிகள், மூச்சுப் பயிற்சிகள் என தனித்தனியே உடற்பயிற்சிகளை கற்றுக் கொடுப்பர்.

* இதனை இயன்முறை மருத்துவருடன் ஆன்லைன் வழியாகக் கூட நாம் கற்றுக்கொண்டு செய்து வரலாம். கற்றுக்கொண்ட உடற்பயிற்சிகளை வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து செய்து கொண்டே வருவதால் நாம் இந்த உடல்வாகு சிக்கலில் இருந்து முற்றிலும் விடுபடலாம்.

 நாம் தைரியமானவர்கள், எதிலும் நேர்மறையான எண்ணம் கொண்டவர்கள் என்று பல விஷயங்களை நம் உடல் மொழி வாயிலாக சொல்ல முடியும். எனவே, நமது உடல்வாகு எப்படி இருக்கிறது என்பது மிக முக்கியம். நிமிர்ந்த நடை, விரிந்த தோள்பட்டை என நாம் நம்மை மெருகேற்றிக் கொள்வதன் மூலம் மனதில் தைரியமும், மற்றவர்களுக்கு நம் மேல் மரியாதையும் பெறச் செய்யலாம்.

கோமதி  இசைக்கர் இயன்முறை  மருத்துவர்