நியூஸ் பைட்ஸ்
 வைரல் வேலை
துபாயில் இருக்கும் பெரும் கோடீஸ்வரர்களின் வீடுகளை நிர்வகிப்பதற்கு ஆட்கள் இல்லை. வீட்டுக்கு உரிமையாளர்கள் தங்களது பிசினஸ்களில் மூழ்கி விடுவதாலும், ஏக்கர் கணக்கில் பெரிதாக வீடுகள் இருப்பதாலும் வீட்டைச் சரியாக அவர்களால் நிர்வகிக்க முடிவதில்லை. ஓர் அலுவலகத்தை நிர்வகிப்பது போல வீட்டை நிர்ணயிப்பதற்கு ஹவுஸ் மேனேஜர்களைத் தேடுகின்றனர்.  வீட்டில் வேலை செய்யும் சமையல்காரர்கள், தோட்டக்காரர்கள், துப்புரவுப் பணியாளர்கள், எலெக்ட்ரீசியன், வாட்ச்மேன், பிளம்பர் உட்பட அனைத்து வேலையாட்களையும் நிர்வாகம் செய்வது, வீட்டுக்கு என்னென்ன தேவையோ அதையெல்லாம் வாங்குவது, மாத பட்ஜெட்டை வகுப்பது என பல வேலைகளை ஹவுஸ் மேனேஜர்கள் செய்ய வேண்டும். இந்த வேலைக்கு வருட சம்பளமாக 83 லட்ச ரூபாய் வழங்கப்படும். இந்தியாவில் மிக உயர்ந்த பதவியில் வகிப்பவர்களுக்குத்தான் இந்தச் சம்பளம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மிதக்கும் ஆய்வகம்
ஒவ்வொரு நிமிடமும் சுமார் 20 டன் பிளாஸ்டிக் குப்பைகள் கடலில் கலப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. கடலில் கலப்பதற்கு முன்பு பிளாஸ்டிக் குப்பைகள் பெரிதாக இருக்கும். கடலில் கலந்த பிறகு சிறு துகள்களாக உடைந்து, மைக்ரோ பிளாஸ்டிக்குகளாக அந்தக் குப்பைகள் மாறிவிடுகின்றன.
இந்த மைக்ரோ பிளாஸ்டிக்குகள் கடலில் வாழும் மீன் உட்பட அனைத்து உயிரினங்களுக்கும் தீங்கு விளைவிப்பதோடு, சூழல் அமைப்பைக்கும் கேடு விளைவிக்கின்றன. கடலில் உள்ள அனைத்து பிளாஸ்டிக் குப்பைகளையும் அகற்றுவது என்பது மனித குலத்துக்கே பெரும் சவால். இந்நிலையில் ‘பிளாஸ்டிக் ஒடிஸி’ என்ற கப்பல், கடல் கடலாகப் பயணம் செய்து பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றுவதோடு, அவற்றை மறுசுழற்சி செய்து, மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இதனை ‘மிதக்கும் ஆய்வகம்’ என்றும் அழைக்கின்றனர்.
சினிமா உணவகம்
சமையலைக் கூட சலிப்பில்லாத ஒரு ஜாலியான அனுபவமாக மாற்றுவதற்காக சினிமா உணவகங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது, சீனா. அங்கே உள்ள பொழுதுபோக்குத் துறையை ஒரு கலக்கு கலக்கி வருகிறது, சினிமா உணவகம். இந்த நவீன திரையரங்கில் ஒவ்வொரு இரண்டு இருக்கைக்கு முன்பாக ஒரு மேசை இருக்கும். வழக்கமான இருக்கைகளை விட மிகவும் குறைவான இருக்கைகளே இருக்கும்.
சமையலின் மீது ஆர்வமும், காதலும் கொண்டவர்களுக்காக இதை வடிவமைத்திருக்கின்றனர். நம் சமையலறையில் ஒரு மிகப்பெரிய திரை இருந்து, அதில் நமக்குப் பிடித்த படம் ஓடிக்கொண்டிருப்பதைப் பார்த்துக்கொண்டே சமைத்தால் சலிப்பு பறந்துவிடும். சமைப்பது கூட மகிழ்ச்சியான அனுபவமாகும். இதையே ஒரு பிசினஸாக மாற்றியிருக்கின்றனர் சீனர்கள். ஆம், இந்த சினிமா உணவகத்தில் சினிமா பார்த்துக்கொண்டிருக்கும் போது, பார்வையாளர்களுக்கு இண்டக்சன் ஸ்டவ், கடல் உணவு, காய்கறிகள் உட்பட அவர்களுக்கு விருப்பமான உணவைச் சமைப்பதற்கான அனைத்து மூலப்பொருட்களும் வழங்கப்படும். தாங்கள் என்ன சமைக்கப்போகிறோம், அதற்கு என்ன தேவை என்று டிக்கெட் முன்பதிவு செய்யும் போதே சொல்லிவிட்டால், அதை திரையரங்கம் ஏற்பாடு செய்துவிடும். பார்வையாளர்கள் சினிமாவைப் பார்த்துக்கொண்டே சமைக்கலாம். அதற்காகத்தான் அந்த மேசை.
சாதனை படைத்த லேடி காகா
உலகப்புகழ்பெற்ற பாடகி லேடி காகா. சமீபத்தில் பிரேசிலில் உள்ள ரியோ நகரில் அமைந்திருக்கும் கோபகபானா கடற்கரையில் ஓர் இசை நிகழ்ச்சியை நடத்தினார். இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்குக் கட்டணம் கிடையாது. யார் வேண்டுமானாலும் கலந்து கொண்டு பார்வையிடலாம். லேடி காகா இசை நிகழ்ச்சியை சுமார் 25 லட்சம் பேர் நேரடியாக பார்வையிட்டிருக்கின்றனர். ஒரு பெண் இசைக் கலைஞரின் நிகழ்ச்சிக்கு இவ்வளவு லட்சம் பேர் வந்தது இதுவே முதல் முறை.
இரண்டு கண்டங்களை நடந்தே கடந்தவர்!
இங்கிலாந்தைச் சேர்ந்தவர், லூக் டாகின். கடந்த செப்டம்பர் மாதம் இங்கிலாந்திலிருந்து, வியட்நாம் வரை பயணம் செல்ல திட்டமிட்டார். விமானம், கப்பல், பேருந்து, டாக்ஸி, ஆட்டோ என்று எந்த வாகனங்களையும் பயன்படுத்தக்கூடாது, குறுக்கு வழியிலும் செல்லக்கூடாது. நடந்தே பயணம் செய்ய வேண்டும் என்பது அவர் வகுத்துக்கொண்ட பயண விதி.
இங்கிலாந்து, பிரான்ஸ், பெல்ஜியம், லக்ஸம்பெர்க், ஜெர்மனி, ஆஸ்திரியா, ஹங்கேரி, செர்பியா, பல்கேரியா, கிரீஸ் என பல நாடுகளின் வழியாக, 12 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றே வியட்நாமை அடைந்திருக்கிறார் லூக். தினமும் குறைந்தபட்சம் 50 கிலோ மீட்டர் தூரம் நடந்திருக்கிறார். ஐரோப்பாவில் ஆரம்பித்த அவரது நடைப்பயணம் ஆசியாவில் முடிந்திருக்கிறது. இரண்டு கண்டங்களை நடந்தே கடந்தவர் என்ற பெருமையையும் பெற்றுவிட்டார்.
த.சக்திவேல்
|