Sustainable ஃபேஷன் வடிவமைப்பாளர் பொறுப்பு மட்டுமல்ல!



- டிசைனர் வினோ சுப்ரஜா

ஃபேஷன்... நிலையற்ற உலகம். இன்றைய டிரெண்டிற்கு ஏற்ப அவை மாறிக்கொண்ேட இருக்கும். நம் முன்னோர்கள் பயன்படுத்திய உடைகள் இப்போது ஃபேஷனாக மாறிவருகிறது. காலச்சக்கரம் சுழல்வது போல் ஃபேஷனும் சுழன்றுக் கொண்டேதான் இருக்கும். அதற்கேற்ப மக்களும் புதுவித ஆடைகளை வாங்கி அணிந்து கொண்டுதான் இருக்கிறார்கள். 
இதனால் ஏற்படக்கூடிய மாசு குறித்து யாருக்கும் தெரிவதில்லை. பிளாஸ்டிக், மருத்துவக் கழிவுகளை ஒப்பிட்டு பார்க்கும் போது, ஃபேஷன் துறையினால் ஏற்படக்கூடிய கழிவுகள்தான் அதிகம். அதனை உலகிற்கு வெளிப்படுத்தும் கலங்கரை விளக்கமாக திகழ்கிறார் வினோ சுப்ரஜா.

வந்தவாசியில் பிறந்த இவர் தற்போது துபாயில் வசித்து வந்தாலும் உலகம் முழுதும் நிலையான (sustainable) ஃபேஷன் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். அதற்கு அங்கீகாரமாக பிரிட்டிஷ் பாராளுமன்றத்தின் பொது சபையில் உலகளாவிய நிலையான ஃபேஷன் குறித்து இவர் ஏற்படுத்தி வரும் முயற்சிக்காக விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார். லண்டன் மற்றும் நியூயார்க் போன்ற உலகளாவிய ஃபேஷன் மேடைகளில் தமிழ் பாரம்பரியத்தை சஸ்டெயினபிள் ஃபேஷன் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.

குறிப்பாக லண்டன்  ஃபேஷன் வீக்கில் நாட்டுப்புறக்கலையான புரிசை தெருக்கூத்தை உடைகள் மூலம் பறைசாற்றினார். மேலும் தமிழ் பாரம்பரிய கைவினைக் கலைஞர்களுக்கு ஒரு நிலையான எதிர்காலத்தினை உருவாக்க ஃபேஷன் என்ற ஆயுதத்தை கையில் எடுத்துள்ள வினோ... அவரின் நிலையான பயணம் குறித்து மனம் திறந்தார்.

‘‘வந்தவாசியில் பிறந்த சாதாரண பெண் நான். ஆர்கிடெக்ட் படிச்சிட்டு தொலைக்காட்சியில் வி.ஜேவாக பணியாற்றினேன். திருமணத்திற்குப் பிறகு சீனாவில் செட்டிலானேன். அங்கு சும்மா இருக்க பிடிக்காமல், ஃபேஷன் குறித்து படிச்சேன். ஆனால் ஃபேஷன் குறித்து எந்த அடிப்படை அறிவும் எனக்கு கிடையாது. முதலில் தவறாக இந்த துறையை தேர்வு செய்துவிட்டதாக என் கணவரிடம் அழுதிருக்கிறேன். ஆனால் அவர்தான் எனக்கு தைரியம் கொடுத்து படிக்க சொன்னார்.

அதன் பிறகு நிறைய தேடல்கள், ஆய்வுகளில் அந்த துறைப் பற்றி முழுமையாக தெரிந்து கொண்டதன் பலன் இறுதியாண்டில் நான் தயாரித்த டிசைன் ஷாங்காய் ஃபேஷன் வீக்கில் இடம் பெற்று விருதும் கிடைச்சது. 

அதன் பிறகு அமெரிக்கா, துபாய் என்று நாங்க பயணமானோம். அமெரிக்காவில் இருந்த போது நியூயார்க் ஃபேஷன் வீக்கில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைச்சது. துபாயிலும் என் பணி தொடர்ந்த போது அங்கு ஃபேஷன் துறையினால் ஏற்படும் மாசுக் கேடு பற்றி கேள்விப்பட்ட போது பெரிய அதிர்ச்சியாக இருந்தது.

எந்த டிரஸ் யார் அணிந்தால் நன்றாக இருக்கும் என்று யோசித்திருக்கேன். ஆனால் அதற்கு பின்னால் இருக்கும் இருண்ட பக்கத்தினை பற்றி சிந்திக்கவே இல்லையே என்று வருத்தப்பட்டேன். அன்று முடிவு செய்ததுதான் சஸ்டெயினபிள் ஃபேஷன். 

முழுக்க முழுக்க ஆர்கானிக் பருத்தி உடைகளை மட்டுமே தயாரிக்க முடிவு செய்தேன். அதன் அடிப்படையில் தெருக்கூத்து குறித்து உருவாக்கிய புரிசை டிசைன்கள் லண்டன் ஃபேஷன் வீக்கில் இடம் பெற்றது’’ என்றவர் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் தனக்கு கிடைத்த அங்கீகாரம் குறித்து விவரித்தார்.

‘‘ஒருநாள் உலக தமிழ் அமைப்பில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் உங்களின் சஸ்டெயினபிள் ஃபேஷனுக்காக விருது வழங்க இருப்பதாகவும், பாராளுமன்றத்தில் ஐந்து நிமிடம் உங்களின் கருத்தினை நீங்க வெளிப்படுத்தலாம் என்று சொன்னாங்க. முதலில் எனக்கு எதுவுமே புரியல. அதன் பிறகு கிடைத்திருக்கும் ஐந்து நிமிட வாய்ப்பில் சொல்ல நினைக்கும் விஷயங்களை சொல்லி முடிக்கணும். 

குறிப்பாக தெருக்கூத்து, அதில் உருவான புரசை கலெக்‌ஷன் மற்றும் சஸ்டெயினபில் ஃபேஷன். எனக்கு எழுதி வச்சு பேச எல்லாம் தெரியாது. மனசில் இருந்ததை பேசினேன். அந்த ஐந்து நிமிட பேச்சுக்கு நல்ல வரவேற்பு கிடைச்சது. மனசுக்கு ரொம்பவே சந்தோஷமா இருந்தது.

நான் பலமுறை லண்டன் போயிருக்கேன். முதல் முறை டூரிஸ்டா, இரண்டாவது லண்டன் ஃபேஷன் வீக்கிற்காக, இப்போது விருதுக்காக. ஒவ்வொரு முறை அங்கு போகும் போது பிரிட்டிஷ் பாராளுமன்றத்தின் வெளியே உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு முன் நின்று புகைப்படம் எடுக்க தவறமாட்டேன். இந்த முறை விருதுடன் படம் பிடித்த போது ரொம்ப நெகிழ்ச்சியா இருந்தது. என்னைப் பொறுத்தவரை சஸ்டெயினபிள் ஃபேஷன் குரு அவர்தான்.

ஆரம்ப காலத்திலேயே அதற்காக குரல் கொடுத்திருக்கிறார். வெஸ்டர்ன் உடைகளை தகர்த்தி, பருத்தி உடைக்கு மாறச் சொன்னார். அதற்காக பெரிய அளவில் மார்க்கெட்டிங் எல்லாம் செய்யல. அவர் போகும் இடமெல்லாம் ராட்டையை கொண்டு நெய்வார்.

 எனக்கு அரசியல் தலைவரா அவரை தெரியாது. ஆனால் ஃபேஷன் உலகில் அவரை பெரிய சஸ்டெயினபிள் ஐகானாதான் நான் பார்க்கிறேன். அவர் இருந்த காலத்தில் எந்தவித சோஷியல் மீடியாவும் கிடையாது. ஆனால் ஒவ்வொரு கிராமமாக சென்று மக்களை சந்தித்து பருத்தி உடைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

நான் சஸ்டெயினபிளை கையில் எடுத்த போது, ஒரு துணியை 30 தடவை போடச் சொல்ற... உடைகளை அளவோடு வாங்க சொல்றன்னு என்னை பலரும் திட்டினாங்க. அந்த சமயத்தில் காந்திதான் என் மனத்திரையில் வருவார். அவரைப் போல் எல்லாம் என்னால் செய்ய முடியாது என்றாலும் ஒரு சின்ன துரும்பாக இருக்க விரும்புகிறேன். 

அதன் மூலம் இந்த பிரபஞ்சத்தில் என்ன மாற்றம் வருமோ வரட்டும். ஊருக்கே சூரியனா இருக்க முடியலைன்னாலும், ஒரு சின்ன அகல் விளக்காக இருக்கலாமே. அந்த சின்ன ஒளி வரும் காலத்தில் பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என்பது என் நம்பிக்கை’’ என்றவர், தற்போது பவானி ஜமக்காலம் நெசவாளர்களுடன் இணைந்து ஒரு புது பிராண்டினை அறிமுகம் செய்துள்ளார்.

‘‘கடந்த ஒரு வருடமாக நான் பவானியில் உள்ள நெசவாளர்களுடன் வேலை பார்க்கிறேன். முன்பு அங்கு 5000த்துக்கும் மேற்பட்ட நெசவாளர்கள் இருந்தாங்க. இப்ப விரல் விட்டு எண்ணும் அளவில்தான் இருக்காங்க. 60 வயதிற்கு மேல் உள்ளவர்கள்தான் இத்தொழிலில் ஈடுபட்டு வராங்க. காரணம், நிலையான வருமானம் கிடைப்பதில்லை. 

இதன் காரணமாகவே அடுத்த தலைமுறையினர் யாரும் இந்தத் தொழிலில் ஈடுபடவில்லை. எல்லோரும் படிச்சிட்டு வேற வேலையில் இருக்காங்க. நல்ல விஷயம்தான் என்றாலும் இது நம்முடைய அடையாளம். அது காலப்போக்கில் முற்றிலும் அழிஞ்சிடும். அதே சமயம் அவர்களின் கலைக்கு அங்கீகாரம் கொடுத்தால், கண்டிப்பாக இந்தக் கலையை காப்பாற்ற முடியும்.

முன்பெல்லாம் நம்முடைய ஒவ்வொரு வீட்டிலும் பவானி ஜமுக்காளம் இருக்கும். ஆனால் இன்று யாரும் தரையில் அமர்ந்து சாப்பிடுவதில்லை. அதனால் இதன் உற்பத்தி மற்றும் வியாபாரமும் குறைந்துவிட்டது. எப்படி உணவுத் தொழிலில் சிறுதானியங்களை மதிப்புக்கூட்டும் பொருளாக மாற்ற முடிகிறதோ அதேபோல் இந்த ஜமுக்காளத்தையும் ஃபேஷன் உலகில் மாற்றி அமைக்க விரும்பினேன். அப்படி நான் தயாரித்ததுதான் லக்சுரி கைப்ைபகள்.

இந்த பேக்குகளை என் பிராண்ட் பெயரில் தயாரித்து துபாய் மார்க்கெட்டில் விற்பனைக்காக வைத்திருக்கிறேன். நான் ஜமுக்காளத்தினை கைப்பையாக மாற்றியது போல் அதைப் பார்த்து மற்ற டிசைனர்கள் அதை வேறு பொருளாகவும் மாற்றி அமைக்கலாம். உதாரணத்திற்கு சோபா, சேர்களின் மேல் கவர் துணியாகவும் இதனை பயன்படுத்தலாம். 

அதற்கு ஜமுக்காளத்தினை உலகளவில் தெரியப்படுத்த வேண்டும். அதற்கான வேலையினை என் சமூகவலைத்தளம் மூலம் செய்து வருகிறேன். இதைப் பார்க்கும் மற்ற டிசைனர்களும் இவர்களுக்கு வாய்ப்புக் கொடுக்க முன் வரவேண்டும் என்பதுதான் என் நோக்கம். இந்த ஜமுக்காளத்தினை சுறுக்கு தள்ளுதல் என்ற முறையில் நெசவு செய்வாங்க.

வெள்ளை நிற நூல் இதில் இணைக்கப்பட்டு இருந்தாலும் நம் கண்களுக்கு அதில் உள்ள மற்ற வண்ணங்கள்தான் தெரியும். எனக்கு வேண்டிய டிசைன்களை வரைபடமாக வரைந்து அதற்கு ஏற்ப தயாரித்து தரச் சொல்லி அதை கைப்பையாக மாற்றுகிறேன்’’ என்றவர் தன் எதிர்கால திட்டம் குறித்து விவரித்தார்‘‘நான் எதுவும் பிளான் செய்வதில்லை. தில்லியில் ஒரு கண்காட்சியில்தான் ஜமுக்காளத்தினை பார்த்தேன். அதன் பிறகு இவர்களுடன் இணைந்து செயல்பட ஆரம்பித்தேன்.

தற்போது துபாயில் இரண்டு மால்களில் உள்ள கடைகளில் இந்த கைப்பைகள் விற்பனைக்கு உள்ளன. சிங்கப்பூரிலும் கடை உள்ளது. அடுத்து வேறு இடங்களிலும் கைப்பைகளை விற்பனைக்கு வைக்கும் எண்ணம் உள்ளது. இந்த விருது ஒரு எனர்ஜி பானம்தான். சஸ்டெயினபிள் என்ன என்பதை மக்கள் புரிந்துகொள்ளவே காலம் ஆகும். 

அதுவரை என்னுடைய ஓட்டம் நிற்காது. காரணம், இதில் நான் செய்ய வேண்டிய வேலை நிறைய இருக்கு. மேலும் ஜமுக்காளத்தில் வேறு என்ன செய்யலாம் என்பது குறித்த ஆய்வும் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது. அதனைத் தொடர்ந்து அடுத்த ஃபேஷன் கலெக்‌ஷன் குறித்தும் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்’’ என்றார் வினோ சுப்ரஜா.

ஷம்ரிதி