காஸ் அடுப்பை உபயோகிக்கும் முறை!
வாசகர் பகுதி
 * சமையல் செய்யும் போது நைலான் ஆடைகளை அணியக்கூடாது. பருத்தி ஆடைகளையே அணிய வேண்டும். காட்டன் ஏப்ரனை உபயோகிப்பது இன்னும் நல்லது. உடைகள் கலையாமல் பாதுகாக்க இது உதவும்.
* காஸ் அடுப்பை ஏற்றுவதற்கு முதலில் தீக்குச்சியை பற்ற வைத்தப் பிறகே அடுப்புக்குமிழைத் திறக்க வேண்டும். லைட்டரை உபயோகிக்கும் போது முதலிலேயே அடுப்புக்குமிழைத் திறந்து விடுவதால் காஸ் சிறிதளவேனும் வெளியேறிவிடுகிறது. லைட்டரைத் தவிர்ப்பது நல்லது.
* இரண்டு வருடங்களுக்கு ஒருமுறையாவது கண்டிப்பாக ரப்பர் குழாயை மாற்ற வேண்டும். அதில் ஏற்படும் விரிசல்கள் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருக்கும். ISI முத்திரைப் பதித்த ரப்பர் குழாயை வாங்கி மாற்ற வேண்டும்.
* சிலிண்டர் எப்போதும் நேராக இருக்க வேண்டும். காலி சிலிண்டராக இருந்தாலும் கூட அதை படுக்க வைக்கக் கூடாது.
* குழந்தைகளை சமையலறையில் விளையாட அனுமதிக்கக் கூடாது. குறும்புக்காரக் குழந்தைகள் காஸ் இணைப்புகளுடன் விளையாடுவது எவ்வளவு ஆபத்தான விஷயம் என்பது நமக்கே தெரியும்.
* சூடானப் பாத்திரங்களை காஸ் அடுப்பில் இருந்து இறக்கி வைக்க இடுக்கியை உபயோகிக்க வேண்டும். நம்முடைய உடையையோ, சேலையையோ உபயோகிக்கக் கூடாது.
* சமையல் பாத்திரங்களை அடுப்பிலேயே விட்டு விட்டு மற்ற வேலைகளை கவனிக்கப் போகக்கூடாது. அதிலிருக்கும் பொருட்கள் பொங்கி வழிந்து அடுப்பை அணைத்து கேஸ் கசியும் அபாயம் உள்ளது.
* மாற்றுச் சிலிண்டர் இணைப்பு கொடுக்கும்போது பூஜை விளக்குகள், ஊதுபத்தி அனைத்தையும் அணைக்கவும். மின்சார இணைப்புகளை இயக்காதே.மேற்கூறியவற்றைக் கடைபிடித்து வந்தால் காஸ் அடுப்பினால் வரும் ஆபத்துகளில் இருந்து நம்மைக் காக்க இந்த ஆலோசனைகள் நமக்கு பெரிதும் உதவும்.
- பி.தீபா, கிருஷ்ணகிரி.
|