மதுரையில் ஒரு மூலிகை வனம்!



“கிருஷ்ணகிரி மாவட்டம், பெரியகோட்டப்பள்ளி என்ற குக்கிராமத்தில்தான் நான் பிறந்து வளர்ந்தேன். இளம் வயதில் என் சகோதரர்கள் ராணுவத்தில் சேர்ந்துவிட்டனர். ஒருமுறை என் அப்பாவை பாம்பு கடித்துவிட்டது. உடன் யாரும் இல்லை. மேலும் அது ஒரு குக்கிராமம் என்பதால் போக்குவரத்து வசதியும் சரியாக இருக்காது. 
அப்பாவை உடனடியாக மருத்துவமனைக்கு கூட்டிச் செல்வதில் சிக்கல் இருந்தது. என்ன செய்வதென்று தவித்திருந்த தருணத்தில் எங்க தோட்டத்தில் வேலை செய்யும் பணியாளர்கள் உடனே சில மூலிகைகளை கொண்டு வந்து என் அப்பாவின் உயிரை காப்பாற்றினார்கள்.

என் சகோதரர்களின் இடத்தில் இருந்து அவர்கள் செய்த உதவி என் மனதில் பதிந்து போனது. நாங்க விவசாய குடும்பம் என்பதால் எங்களுக்கு ஒரு தோட்டமும் இருந்தது. அதில் சில மூலிகைகள் இயல்பாகவே வளர்ந்திருக்கும். எனக்கும் அவற்றில் சிலவற்றின் பெயர்களும் அதன் பயன்களும் தெரியும். ஆனால் அப்பாவிற்கு நடந்த அந்த சம்பவம் என் வாழ்வில்
ஓர் தாக்கத்தை ஏற்படுத்தியது. 
அதற்கான முன்னோடிதான் இந்த மூலிகை வனம்” என்று நெகிழும்  மதுரையை சேர்ந்த சுபஸ்ரீ, தான் சொந்தமாக வீடு கட்ட வாங்கிய நிலத்தை முழுவதுமாக மூலிகை வனமாக உருவாக்கியுள்ளார். நம்மில் பலரும் மறந்து போன, பெயர் தெரிந்தும் அதன் பலன் தெரியாத பல்வேறு மூலிகைகளை அடுத்தடுத்த தலைமுறைகளுக்காக பாதுகாத்து வருகிறார் இந்த தமிழ் ஆசிரியர். மதுரை, வரிச்சியூர் அருகே அமைந்துள்ள இவரின் மூலிகை வனம் குறித்து தொடர்ந்து பேசியதில்...

“சிறுவயதில் கிராமத்தில் வளர்ந்தபோது என்னுடைய பொழுதுபோக்கே தோட்டத்தில் வலம் வருவதுதான். அப்போதே அங்குள்ள ஒவ்வொரு செடியையும் நான் அடையாளம் கண்டுகொள்ள முயல்வேன். தெரியாதவற்றை தோட்டக்காரர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வேன். இதனால் சில மூலிகைகளின் பெயர்களும் பயன்களும் எனக்குத் தெரியும்.  திருமணத்திற்குப் பிறகு மதுரைக்கு வந்தபோது, அதே ஆர்வத்துடன் தோட்டம் அமைக்கத் தொடங்கினேன்.

வீட்டிலேயே எங்களுக்குத் தேவையான சில செடிகளை வளர்க்கும் போது அதோடு சில மூலிகைத் தாவரங்களையும் சேர்த்து வளர்த்தேன். வாடகை வீடு என்பதால் வீட்டின் மாடியில் குறுகிய இடத்தில் மண் தொட்டிகளில்தான் வளர்த்தேன். நெகிழி பைகள் மற்றும் பீங்கான் தொட்டிகளையோ பயன்படுத்தக்கூடாது என்று குறிக்கோளாக இருந்தேன். நெகிழி பைகளை தவிர்த்து மண்ணை பாதுகாத்து, ஆரோக்கியமான முறையில் மூலிகைகளை வளர்த்து பாதுகாக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தேன்.

மூலிகை வளர்ப்பு பயணத்தில் இருக்கும் போது, சொந்த வீடு கட்டுவதற்காக ஒரு இடம் வாங்கியிருந்தோம். ஆனால் அவ்வளவு பெரிய இடத்தில் வீடு கட்டும் ஆசையை தாண்டி எனக்கு வேறொரு கனவு எழுந்தது. 

இந்த இடத்தில் ஒரு பெரிய வீட்டை கட்டி வாழ்வதை விட, அதையே ஒரு மூலிகை வனமாக மாற்றினால் அடுத்தடுத்த தலைமுறையினருக்கும் பெரும் பலனாக இருக்கும் என்ற யோசனையை என் வீட்டில் சொன்னேன். அவர்களும் சம்மதிக்க அந்த இடத்தில் மூலிகைத் தோட்டத்தை அமைக்க ஆரம்பித்தேன்.

ஆரம்பத்தில் எனக்கு தெரிந்த மற்றும் கிடைத்த மூலிகைகளை வளர்த்தேன். ஆனால் மேலும் பலன் தரக்கூடிய நிறைய மூலிகைகளை வளர்த்து அவற்றை பாதுகாக்க நினைத்தேன். அந்த மூலிகைகள் குறித்து நிறைய புத்தகங்களை படிக்கத் தொடங்கினேன். சித்த வைத்தியம், ஆயுர்வேதம் போன்றவற்றில் மூலிகைகளின் பங்கு பற்றியும் தெரிந்து கொண்ட போது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. மூலிகைகளைப் பொறுத்தவரை அவற்றை நேரடியாக மருந்தாக கொடுக்க முடியாது. அதற்கென்றே சில முறைகள் உண்டு. அதன்படி செயல்படும் போதுதான் அதற்கான பலன்கள் கிடைக்கும். 

என்னால் மருத்துவ ரீதியாக செயல்பட முடியாது என்றாலும் மூலிகைகளை என்னால் முடிந்த வரை பாதுகாப்பது என்னுடைய கடமை. அதனால் மூலிகை தாவரங்களை சேகரிக்கத் தொடங்கினேன். இப்போது என் வனத்தில் சுமார் 583 வகையான மூலிகைத் தாவரங்கள் உள்ளன” என்றவர், மூலிகை வனத்தின் சிறப்பம்சங்களை குறிப்பிடுகிறார்.

“இங்குள்ள ஒவ்வொரு தாவரத்திலும் அதன் இயற்பெயர் மற்றும் அறிவியல் பெயர் குறிப்பிடப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மூலிகைகளின் அறிவியல் பெயர்களை தெரிந்துகொள்ள நிறைய தேடலில் ஈடுபட்டேன். 

மேலும், என்னுடைய எம்.ஃபில் படிப்பில் திட்ட மருத்துவமும் மூலிகைகளும் குறித்த ஆராய்ச்சியில் நிறைய மூலிகைகளை தேடி அலைந்தேன். எல்லா மூலிகைகளும் ஒரே இடத்தில் கிடைக்கவில்லை. மூலிகைகளை ஒரே இடத்தில் அறிவியல் பெயரோடு குறிப்பிட்டிருந்தால், என்னைப்போல் மூலிகை ஆராய்ச்சியில் ஈடுபடும் மாணவர்களுக்கு எளிதாக இருக்கும் என்ற நோக்கமும் மூலிகை வனம் உருவாக்க ஒரு காரணம்.

இப்போது பல்வேறு இடங்களில் இருந்தும் ஆராய்ச்சி மாணவர்கள் மூலிகை வனத்திற்கு வந்து குறிப்புகளை எடுத்துச் செல்கிறார்கள். பல்வேறு மூலிகைத் தாவரங்கள் ஒரே இடத்தில் இருப்பதால் அவர்களின் ஆராய்ச்சி படிப்பிற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மாணவர்கள், ஆர்வலர்கள் என பல மாநிலங்களில் இருந்து இங்கு மூலிகையைப் பற்றி தெரிந்துகொள்ள வருகிறார்கள். 

சிறு குழந்தைகள் கூட தாவரங்களின் பெயர்களை ஆர்வத்துடன் கேட்டு தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள். ஆச்சர்யத்துடன் அவற்றை தொட்டுப் பார்க்கிறார்கள். ஆர்வமுள்ள குழந்தைகளுக்கு முதலில் கீரை வகைகளை அறிமுகப்படுத்தும் போது அவர்களும் ஆர்வமாக கேட்டு தெரிந்து கொள்கிறார்கள்’’ என்றவர், 32 வகையான மூலிகைகளை வைத்து தலைமுடிக்கான எண்ணெய் தயாரித்து வருகிறார்.

‘‘மூலிகைகள் குறித்தும் அதன் பலன்கள் பற்றியும் தெரிந்திருப்பதால், முதலில் தலைமுடிக்கான எண்ணெயை தயாரித்தேன். 32 வகையான மூலிகைகளை இதில் பயன்படுத்தி இருக்கிறேன். முதலில் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கு கொடுத்தேன். அவர்கள் மூலம் மற்றவர்களும் கேட்க ஆரம்பித்தார்கள். அவர்களுக்கும் எண்ணெயினை தயாரித்து தருகிறேன். மேலும் சில பொதுவான உடல் பிரச்னைக்காகவும் மூலிகைகளை வழங்கி வருகிறேன்.

இந்த மூலிகைகள் அனைத்தும் மண் தொட்டியில்தான் வளர்க்கிறேன். மேலும் இதிலிருந்து உதிரும் தழைகள், பூக்கள், காய்கள் என அனைத்தையும் உரக்குழியில் சேர்த்து அதிலிருந்து தயாராகும் உரத்தைதான் செடிகளுக்கு பயன்படுத்துகிறோம். சில மூலிகைகளின் பெயர்கள் தெரியாமலே வீட்டில் வளர்க்கிறேன். 

அதன் பெயர் என்ன என்ற தேடலில் இருக்கிறேன். பெயரை கண்டறிந்தபின் அவற்றை என் வனத்தில் வைப்பேன். தாவரங்கள் மட்டுமின்றி பறவைகளின் பல்பெருக்கமும் நடந்து கொண்டிருக்கிறது. என் கணவர் எனக்கு ஆதரவளிக்க வேலையிலிருந்து விஆர்எஸ் வாங்கிவிட்டு, தோட்ட பராமரிப்புகளை கவனித்து வருகிறார்” என்றவர், மூலிகைகளின் பயன்களை பகிர்ந்து கொண்டார்.

“கல் தாமரை, வாதநாராயணன், பதிமுகம், மாகாளி கிழங்கு, கருநொச்சி, கருமருது, கரு இஞ்சி, தான்றிக்காய், அஸ்வகந்தா, எலும்பொட்டி, சதாவாரி, தொழுகண்ணி, நறுமுன்னை, கருஊமத்தை, தழுதாழை, சிறு தேக்கு, சர்ப்பகந்தா, நேத்திரம் பூண்டு, கருஞ்செம்பை, அந்தரத்தாமரை, இலைப் பிரண்டை, முட்சங்கன், வெள்ளை கல்யாண முருங்கை, சிவப்பு அகத்தி, வெண் தூதுவளை, சிவப்பு மருதாணி, ஆடையொட்டி, புத்திரஜீவி, சங்க நாராயண சஞ்சீவி, கருட கால் சஞ்சீவி, மிருக சஞ்சீவி, சர்க்கரை சஞ்சீவி, நஞ்சுமுறிச்சான், நாகதந்தி, நாகமல்லி என மேலும் பல்வேறு மூலிகைகள் இங்குள்ளன. 

அன்றாட வாழ்க்கையில் நமக்குத் தெரிந்தே சில மூலிகைகளை நாம் கடந்து செல்கிறோம். அவற்றில் ஆச்சர்யப்படுத்தக்கூடிய மருத்துவக்குணங்கள் நிறைந்திருக்கின்றன. அவ்வாறு நான் வியந்து பார்த்த ஒன்று ஆவாரம்பூ.

நமக்குத் தெரியாத பல நன்மைகள் இதில் உள்ளன. டீ, காபிக்கு பதில் ஆவாரம்பூ மூலிகை நீரையே பருகுகிறோம். ஒருமுறை பூனைமீசை என சொல்லப்படுகின்ற மூலிகையை என்னிடம் கேட்டு வந்த நபர், அதை கஷாயமாக குடித்துவந்தப்பின் சிறுநீரகக் கோளாறு சார்ந்த பிரச்னைக்கு தீர்வளித்ததாக சொன்னார். அக்ரகாரா, பல் சார்ந்த பிரச்னைக்கு சிறந்தது. மூலிகைகள் பற்றி எல்லோரும் நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும்.

அப்போதுதான் நாம் அதனை அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டு செல்ல முடியும். இதற்காக பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மூலிகைகளின் பலன்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். மூலிகைகளை அழிவிலிருந்து காத்து, ஒரே இடத்தில் பலவகையான மூலிகைகள் கிடைக்கும் இடமாக இந்த வனத்தை மேம்படுத்த வேண்டும். 

இங்கு சென்றால் இந்த மூலிகை கிடைக்கும் எனும் நம்பிக்கையோடு மக்கள் அணுகக்கூடிய இடமாக இது காலத்துக்கும் இருக்க வேண்டும். ‘மூலிகை வாசம் நோயற்ற சுவாசம்’ என்பதுதான் என் தாரக மந்திரம்” என்கிறார் சுபஸ்ரீ.

ரம்யா ரங்கநாதன்