சிறுகதை-காத்திருப்பான் கமலக்கண்ணன்
காலை ஆறு மணிக்கே சுறுசுறுப்பாக இருந்தது பார்க். பரபரவென நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்த மனிதர்கள் மத்தியில் மிகவும் நிதானமாக ஒரு பெஞ்சில் அமர்ந்து காற்றை வாங்கியபடி ஃபேஸ்புக்கை புரட்டிக் கொண்டு இருந்த போதுதான், “எப்படி இருக்கிறாய் டார்லிங்” என ஆங்கிலத்தில் ஒளிர்ந்தது வாட்ஸ் அப் திரை. யாரோ விளையாடுகிறார்கள். யாராயிருக்கும்... ட்ரு காலர் உபயோகித்து பார்த்ததில் ஏதோ ஒரு வட நாட்டு பெயர் வந்தது. கோபத்துடன் அதை டெலிட் செய்ய போகையில் ஒரு போட்டோ வந்து குதித்தது.
 நானும் கமலும் கொஞ்சம் நெருக்கமாக இருந்த போட்டோ. ஏறக்குறைய பத்து வருடங்களுக்கு முன் எடுத்தது. வயதின் உபயத்தில் இன்னும் அழகாய் இருந்த காலேஜ் நாட்கள். திக்கென்று நிமிர்ந்தேன். கமல் என் முன்னாள் காதலன். வசீகரமாய் இருப்பான். ஒரே ஒரு முறை மிகவும் வற்புறுத்தினான் என்பதால் ஒரு ட்ரிப்பிற்கு ஊட்டி போயிருந்தோம். அப்போது எடுத்த போட்டோ இது. அவன் இலக்கு மனதல்ல இளமையென புரிந்தவுடன் வேகமாய் விலகிவிட்டேன்.
விடாமல் தொடர்ந்து கொண்டே இருந்தான். அடுத்த இரண்டு மாதங்களில் எங்கள் காலேஜ் மாணவர்களுக்கு போதை மருந்து சப்ளை செய்யும் கும்பலுக்கும் அவனுக்கும் தொடர்பு இருக்கிறது என தெரிந்ததும் போலீசுக்கு தகவல் கொடுத்தேன். அவன் கைதுக்கு நான்தான் காரணம்.பிறகு சமர்த்தாக படித்து முடித்து கல்யாணம் செய்து.. ஏறக்குறைய அவனை மறந்தே போனேன். யோசித்து கொண்டிருக்கும் போதே தோளில் விழுந்தது கை. திடுக்கிட்டு திரும்பினேன்.
“என்னடா.. கெளம்பலாமா” சிரித்தபடி என் கணவன் கிருஷ். இந்த ஊர் போலீஸ் கமிஷ்னர். வேர்க்க விறுவிறுக்க ஜாகிங் செய்து இருந்ததில் லேசாக மூச்சு வாங்கியது. பார்த்தால் நாற்பதை நெருங்குகிறான் என யாரும் கணித்து விட முடியாது. கம்பீரமாய் இருந்தான்.
சட்டென மொபைலை மூடிவிட்டு “போ… போகலாங்க” என்றேன்.“ஏன் இப்படி வேர்க்குது... அதுவும் காலங்கார்த்தால இந்த கோயம்புத்தூர் வெதர்ல” என்றான் சிரித்தபடி... “அதெல்லாம் ஒண்ணுமில்லை... வாங்க” என்று சிரிப்பதாய் நடித்து வெளியே வந்தேன். “மண்டே பூஜா குட்டிக்கு ஸ்கூல் ஓபன் ஆகுது. நாம போய் சண்டே அவளை அம்மா வீட்ல இருந்து கூட்டிட்டு வந்தர்லாம்... சரியா” என்றான்.“ம்” என்றேன் சுரத்தில்லாமல்.
“ஏன்.. என்ன ஆச்சு டல்லா இருக்க.. பார்க்ல இருந்தே உன் முகம் சரியா இல்ல.. ரெண்டு நாள் கான்பிரன்சுக்கு உன்னை தனியா விட்டுட்டு கெளம்புறேன்னு கோபமா?’’“ச்சே... சே... அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க” என்றேன் மென்மையாக...
அவனுக்கு போன் வந்து விட்டது “யெஸ் சார்” என்றான் விறைப்பாக...இனி என் பக்கம் திரும்ப வாய்ப்பில்லை. இரண்டு நாட்களுக்கு வேண்டிய எல்லாம் சரியாக இருக்கிறதா என பார்த்து எடுத்து வைத்தேன். சரியாக பத்து மணிக்கு கான்பிரன்சுக்கு கிளம்பினான். அனுப்பி விட்டு திரும்பவும் வாட்ஸ் அப்பை ஓபன் செய்தேன்“சந்திக்க வேண்டும்“ என்ற செய்தி ஒளிர்ந்தது.கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு “விருப்பமில்லை” என்று பதில் கொடுத்தேன்.
“உன் கணவனுக்கு புகைப்படங்கள் அனுப்பி வைக்கப்படும்” என்று பதில் வந்தது ஒரு ஸ்மைலியுடன்...இரண்டு நிமிடங்களுக்குள் ‘வாட்ஸ் அப் கால்’ “மிஸஸ் கமிஷ்னர்... எப்படி இருக்கீங்க? பூஜா குட்டி எப்படி இருக்கா” என்றது கமலின் குரல்...எப்படியோ என்னை பற்றிய எல்லா விஷயங்களையும் பொறுமையாக விசாரித்து விட்டுத்தான் என்னை நெருங்கி இருக்கிறான்.
“எ..எ..ன்..ன வேணும் உனக்கு”லேசாக என் குரல் நடுங்கியது எனக்கே தெரிந்தது.“நீதான் வேணும்” பெரியதாக சிரித்தவன்...“அஞ்சு லட்சம் பணம்... ரெண்டு மணி நேரம் நீ... இன்னிக்கு நைட் எட்டு மணிக்கு மலுமிச்சம்பட்டில என்னோட ஃப்ரெண்ட் அபார்ட்மென்ட்டுக்கு வந்துடு... எப்படியும் உன் புருஷன் வர ரெண்டு நாளாகும்... உன்னை கேக்க யாரும் கெடையாது...”
“அவ்... அவ்..வளவு… பணத்துக்கு நான் எங்கே போவேன்...”“எனக்கு வேண்டியத நான் சொல்லிட்டேன்... போலீசுக்கு வேணும்னா தாராளமா நீ போகலாம்..
என்னை மாட்டி விடறது உனக்கு ஒண்ணும் புதுசில்லையே... ஆனா, உன் பொண்ணு பூஜாவ பத்தியும் அந்த போட்டோஸ் உன் புருஷன் கைக்கு போறத பத்தியும் கொஞ்சம் யோசி... எட்டு மணிக்கு மீட் பண்ணலாம்...லொக்கேஷன் ஷேர் பண்றேன்...”டக்கென போன் கத்தரிக்கப்பட்டது.
“ஹலோ ஹலோ...” ஏறக்குறைய கத்தினேன்... வெறும் சத்தம் மட்டுமே பதிலாக வந்தது... கோபப்பட்டேன்.. சத்தம் போட்டேன்... அழுதேன்...இரண்டு மணி நேரம் ஓடி விட்டது... என்ன செய்வதென்று புரியவில்லை.
இதற்குள் சில முறை என்னவனுக்கு சொல்லி விடலாம் என்று போன் எடுத்தேன். பூஜா குட்டியின் முகம் நினைவிற்கு வந்தது.முடிவு செய்து கொண்டேன். சின்ன பிரீப்கேசில் கிருஷ்ஷின் கைக்கு அடக்கமான பீ238 சைலன்சரை வைத்துக்கொண்டேன். கமலுக்கு தெரியாது. தமிழ்நாடு ரைபிள் கிளப்பில் மாநில அளவிலான துப்பாக்கிச்சுடும் போட்டியில் இரண்டு முறை முதல் பரிசு வாங்கி இருக்கிறேன் என்று. அவனை கொன்று விடுவதென முடிவு செய்து கொண்டேன். எனக்கு பூஜா குட்டியின் வாழ்கையை விட வேறு எதுவும் முக்கியமில்லை. இந்த போராட்டத்தில் நான் இறந்தாலும் பரவாயில்லை. கமல் உயிரோடு இருக்கக்கூடாது.“எட்டு மணிக்கு சந்திப்போம்” என செய்தி அனுப்பினேன் ஒரு சின்ன ஸ்மைலியுடன்...
மனது முழுக்க திகில் நிறைந்து இருந்தது. என்ன ஆகுமென தெரியவில்லை. எல்லாம் நல்லபடியாக முடிந்தால் ஈச்சனாரி பிள்ளையாருக்கு தேங்காய்கள் உடைப்பது என முடிவு செய்து கொண்டேன். சரியாக ஆறு மணிக்கு காரை கிளப்பினேன்.
இருக்கிற டிராபிக்கில் உக்கடத்தை நெருங்குகிற போதே ஒரு மணி நேரம் ஓடிவிட்டது.. ஆத்துபாலம், சுந்தராபுரம் வண்டி வேகம் எடுத்தது. அதற்குள் இரண்டு முறை கிருஷ்ஷின் போன். தலைவலி என்று பொய் சொன்னவுடன் தொந்தரவு செய்யாமல் ரெஸ்ட் எடுக்க சொல்லிவிட்டான்.
அந்தப் பொய்யை சொல்லி முடிப்பதற்குள் ஏசியிலும் முழுவதுமாக வியர்வையில் நனைந்திருந்தேன். சிட்கோவை தாண்டியதும் ஒரு சின்ன டிராபிக் ஜாம். நிறைய வண்டிகள் நின்று கொண்டு இருந்தன. நேரம் வேறு ஆகிக்கொண்டு இருக்கிறது. சில காக்கி சட்டைகள். என்ன பிரச்னையென்று தெரியவில்லை. ஒவ்வொரு வண்டியாக சோதனை செய்து அனுப்பிக் கொண்டிருந்தனர்.
திக்கென்று நிமிர்ந்தேன். பின் சீட்டில் பத்திரமாக அமர்ந்திருந்தது சைலன்சர். கேட்டால் என்ன சொல்லி சமாளிப்பது. வண்டியை திருப்பவும் முடியாது. பின்னால் இன்னும் சில வண்டிகள் சேர்ந்து விட்டிருந்தன.
கமல் கிளம்பி விட்டேன் என்று செய்தி வேறு அனுப்பி இருக்கிறான்.அரை மணி நேரம் கடந்த பிறகு என்னிடம் வந்த போலீஸ்காரர், “எங்க போறீங்க... ஏதாவது ஐடி கார்டு
காட்டுங்க” என்றார்.அவசரத்தில் எதுவும் எடுத்து வரவில்லை.
“என்னம்மா என் முகத்தையே பாத்துட்டு இருக்கீங்க... ஐடி எடுங்க... அப்படியே டிக்கி ஓபன் பண்ணுங்க...”உள்ளே ஒண்ணும் இல்லை என்றவுடன் “சரி கிளம்புங்க’ என்றவர் “ஒரு நிமிஷம்” அந்த பிரீப்கேசுக்குள் என்ன இருக்கு?”“அ..அ..து.. வந்து… சி.. சி.. ல டாகுமென்ட்ஸ்” என்று வண்டியை கிளம்ப முயற்சி செய்தேன். என் பதட்டத்தை அவர் படித்திருக்க வேண்டும்.
“இரும்மா..யார் நீ.. ஐடி கார்டு இல்லைங்கற.. வண்டிய ஓரங்கட்டு. கொஞ்சம் விசாரிக்கணும்” என்றார் குரலில் மரியாதை தேய்ந்து இருந்தது.இதயம் படபடவென அடித்துக் கொண்டது.. இப்போது ப்ரிப்கேசை திறந்து பார்த்து எதற்கு என்று கேட்டால் என்ன பதில் சொல்வது.
கடவுளே…“என்னையா அங்க பிரச்னை” என்று வந்த இன்ஸ்பெக்டர் என்னை பார்த்ததும், “வணக்கம்மா எப்படி இருக்கீங்க..? எங்க இந்த பக்கம்.. தனியாகவா வந்தீங்க?”“ஆமா சார்... ஈச்சனாரில ஒரு ஃபிரண்ட பாக்க வந்தேன்... கிருஷ் சென்னைல ஒரு கான்பிரன்சுக்குபோயிருக்காரு.”“யோவ்... உனக்கு அறிவே கிடையாதா...மேடமை ஏன் வெயிட் பண்ண வெச்சீங்க... உங்களுக்கெல்லாம்” என்றவர். “டிபார்ட்மென்ட்ல இருந்து ஒரு லீட் வந்ததுன்னு ஒரு சின்ன சர்ப்ரைஸ் செக்கிங்... நீங்க கிளம்புங்கம்மா... சார்கிட்ட இதெல்லாம் சொல்ல வேண்டாம்மா” என்றார் சிரித்துக் கொண்டே...
“அது பரவாயில்லை இன்ஸ்பெக்டர்... அவரு ட்யூட்டியதான செஞ்சாரு... நான் நிச்சயமா சொல்ல மாட்டேன்.
வெரி குட்” என்று பதட்டத்தில் ஏதோ உளறி விட்டு வேகமாய் வண்டியை எடுத்தேன்.அடுத்த பத்தாவது நிமிடம் சரியாக எட்டு மணிக்கு அவன் சொன்ன முகவரியில் இருந்தேன்.. வாட்ஸ் அப்பில் “வந்து விட்டேன்” என்று தகவல் கொடுத்தேன். முதல் மாடியில் காத்திருக்க சொன்னான்.
அவன் குறிப்பிட்ட மாதிரி வீட்டின் கதவு திறந்தே இருந்தது. பிரீப்கேசை கெட்டியாக பிடித்துக் கொண்டேன். உள்ளே யாருமே இல்லை.பத்து... பதினைந்து... இருபது நிமிடங்கள்... அரை மணி ஆயிற்று. கமல் வரவில்லை. அவனுக்கு போன் அடித்தால் லைன் கிடைக்கவேயில்லை. வெளியே வந்தேன். எதிர் வீட்டில் கதவை திறந்தவன் என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு,“ யாரை பாக்கணும் என்றான்” குடித்திருந்தான்.“கமல்... என்றேன் திக்கித்திணறி...”“அப்படி இங்க யாரும் இல்லையே” என்றான் சந்தேகமாக...இதற்கு மேல் இங்கு இருப்பது சரியென படவில்லை... அவசரமாக கீழே வந்து வண்டியை ஸ்டார்ட் செய்தேன்.அதற்குள் நான்கைந்து நண்பர்களுடன்அவன் என்னை தேடிக்கொண்டு முதல் மாடியில் இருந்து கீழே வந்து கொண்டு இருந்தான்...
ஆரம்பத்திலேயே ஆக்சிலேட்டருக்கு அழுத்தம் கொடுத்ததில் வண்டி கதறி கொண்டு கிளம்பியது. யாரும் என்னை தொடரவில்லை என்று உறுதி செய்து கொண்ட பின்தான் கொஞ்சம் வேகத்தை குறைத்தேன்.மறுபடியும் ஈச்சனாரியில் ஒரு டிராபிக் ஜாம். எதையும் கவனிக்கவில்லை. நேரம் பார்த்தேன். ஒன்பது. எப்போதும் போல் போன் செய்து பூஜா குட்டிக்கு பிரச்னை ஒன்றும் இல்லை என்று தெரிந்து கொண்டேன். சரியாக ஒரு மணி நேரத்தில் வீட்டில் இருந்தேன்.
என் மனதில் தொடர்ந்து ஒலித்திருந்த ஒரே கேள்வி “கமல் ஏன் வரவில்லை... ஒரு வேளை என் திட்டம் தெரிந்துவிட்டதா...” அப்படியே தூங்கி போனேன். ஈச்சனாரியில் பைக்கில் வந்தவர் மீது லாரி மோதி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி என்று தகவல் சொல்ல செய்திகளும் தேங்காய்களுக்காக பிள்ளையாரும் பொறுமையாக காத்துக் கொண்டிருந்தனர்.
வித்யானந்த்
|