தெளிவான வார்த்தைகளில் பாடல்கள் வெளிவர வேண்டும்!
திறமை இருந்தால் எந்த வயதிலும் வாய்ப்பு நம்மை நாடி வரும். அதற்கு உதாரணம் தான் சென்னையை சேர்ந்த ஸ்வர்ணலதா. வங்கித் துறையில் பணியாற்றி வந்தவர், கவிதை மேல் இருந்த ஆர்வத்தினால் பல ஆல்பங்களுக்கு பாடல் வரிகளை எழுதி தந்தவர், சினிமா துறையிலும் கால் பதித்துள்ளார். ‘‘நான் பிறந்தது சேலம். வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். அப்பா தமிழ் புலமை வாய்ந்தவர். இரண்டு புத்தகம் எழுதியுள்ளார்.

அவருடைய அந்த புலமைதான் எனக்கு தமிழ் மேல் தனிப்பட்ட ஆர்வத்தினை ஏற்படுத்தியது. நிறைய புத்தகங்கள், கவிதைகள் படிப்பேன். தமிழ் மட்டுமில்லாமல் எனக்கு படம் வரைவதிலும் ஆர்வமுண்டு. ஆனால் எனக்கு கவிதை எழுதத் தெரியும் என்பதே நான் வேலைக்கு சேர்ந்த பிறகுதான் தெரிந்தது.
வங்கி வேலை என்றாலே இடம் மாற்றம் இருக்கும். இடமாற்றம் காரணமாக விடுமுறையில் இருந்தேன். அந்த சமயத்தில் என் குழந்தைக்காக ‘தரையில் வந்த சொர்க்கம்’ என்ற தலைப்பில் பாட்டு ஒன்று எழுதினேன். அப்போதுதான் எனக்கே கவிதை மற்றும் பாடல்கள் எழுத வரும் என்று தெரிந்தது.
அதன் பிறகு மும்பையில் வேலை பார்த்த போது, ரயில் பயணத்தில் இயற்கையை ரசித்து கவிதைகள் எழுதுவேன். என் வங்கியின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. அதற்காக வங்கியினை அன்னையாக பாவித்து கவிதை ஒன்றை எழுதி, அதற்கான படமும் வரைந்தேன். அந்த கவிதை ஆண்டு புத்தகத்தில் இடம் பெற்றது.
அதன் பிறகு எங்க வங்கியில் விழா நடக்கும் போதும் மற்றும் ஊழியர்களின் பிறந்த நாட்களுக்கு கவிதை எழுத ஆரம்பித்தேன். அதேபோல் என் அப்பாவின் 70வது பிறந்தநாளுக்கும் ஒரு கவிதை எழுதி பரிசளித்தேன். மேலும் என் சமூகவலைத்தளத்தில் நான் எழுதிய கவிதைகளை பதிவு செய்தும் வந்தேன்’’ என்றவர் அவர் எழுதிய கவிதைக்கு தமிழ்நாட்டு அரசிடம் விருது பெற்றுள்ளார். ‘‘என் காலில் முறிவு ஏற்பட்டு விடுமுறையில் இருந்தேன். அந்த சமயத்தில் பிரபல நாளிதழில் கலை மற்றும் பண்பாட்டு துறை சார்ந்த விளம்பரம் வந்திருந்தது. அதில் பெண்கள் தினத்திற்காக ‘என்று தணியும் எங்கள் அடிமை மோகம்’ தலைப்பில் கவிதை எழுதி அனுப்பச் சொல்லி இருந்தாங்க. நானும் எழுதி அனுப்பினேன். எனக்கு முதல் பரிசு கிடைத்தது. அது எனக்குள் மேலும் தாக்கத்தினை அதிகரித்தது. இசை ஆல்பங்கள் மற்றும் ஆன்மீக பாடல்களும் எழுத ஆரம்பித்தேன்.
சில பாடல்களை நானே தயாரித்து அதனை வீடியோவாக என் யுடியூப் தளத்தில் வெளியிடுவேன். அதன் மூலம் இசை அமைப்பாளர் ஜான் பீட்டர் அவர்களின் அறிமுகம் கிடைத்தது.
அவர் தன் இசை ஆல்பத்திற்கு பாடல்கள் எழுதிக் கொடுக்க சொல்லி கேட்டார். அதன் பிறகு அவர் தயாரித்த ‘படவா’ என்ற படத்திற்கு ‘கொட்டுதே வானம்...’ என்ற பாடல் எழுதினேன். அந்தப் படம் இப்போது ரிலீசாகியுள்ளது. பலரும் பாடல் வரிகள் நன்றாக இருப்பதாக வாழ்த்து தெரிவித்தார்கள். இது என்னுடைய முதல் சினிமா பாடல்’’ என்றவர் அவர் எழுதும் பாடல்களை வீடியோவாக தன்னுடைய யுடியூப் பக்கத்தில் வெளியிட்டு வருவதாக கூறினார். ‘‘இசை ஆல்பம் என்னுடைய தனிப்பட்டது மட்டுமில்லாமல் மற்றவர்களுக்கும் எழுதித் தருகிறேன். சிலர் சிச்சுவேஷன் சொல்வாங்க. சிலர் டியூனுக்கு ஏற்ப வரிகளை கேட்பாங்க. சில சமயம் டியூனை மாற்றவும் செய்வாங்க. அந்த சமயத்தில் வார்த்தைகள் சரியாக பொருந்தாமல் போகும், அதை மாற்றி அமைத்தும் தருவேன். இன்று வரும் பாடல்களில் இசைதான் பிரதானமாக இருக்கிறது. வார்த்தைகள் தெளிவாக இருப்பதில்லை.
அதனால் பெரும்பாலான பாடல்கள் மக்கள் மனதில் அதிக நாட்கள் இடம் பிடிப்பதில்லை. வேறு ஒரு வைப்பான பாடல் வந்தால் உடனடியாக அதற்கு மாறிவிடுகிறார்கள். அழகான வார்த்தைகள் கொண்டு பாடல்கள் வந்தால் அவை என்றும் மக்கள் மனதைவிட்டு நீங்காமல் இருக்கும். மக்களிடம் நல்ல கருத்தான வரிகளை கொண்டு சேர்க்க முடிவதில்லை. அப்படிப்பட்ட பாடல்களை நிறைய எழுத வேண்டும் என்பதுதான் என் ஆசை.
சினிமா ஒரு கடல். அதில் சிலருக்கு வாய்ப்பு கிடைக்கும். வாய்ப்பு கிடைக்காமலும் போகும். சினிமாவிற்கு பாடல் எழுத வேண்டும் என்பது என் ஆசை. அது ஒரு பாடல் மூலம் நிறைவேறி இருக்கிறது. மேலும் வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக செய்ய நான் தயாராகத்தான் இருக்கிறேன்’’ என்றார் ஸ்வர்ணலதா.
நிஷா
|