இளைஞர்களும், விதிமீறல்களும்!
மூளையின் முடிச்சுகள்
‘இளம் கன்று பயமறியாது’, ‘மனித மனம் குரங்கு’ போன்ற பழமொழிகளை வளரிளம் பருவ வயதினருக்கு சொல்லும் அளவுக்கு முக்கியமான காலகட்டமாக இளைஞர்களின் வயது இருப்பதை மறுக்க முடியாது.  தன்னைப் பற்றி புரிந்துகொள்ள முடியாத ஒரு பருவமென்றால் அது வளரிளம் பருவம் மட்டுமே.இளம் வயதினரிடம் இருக்கும் குதர்க்கமும், எல்லையற்ற கற்பனைகளும், எதுவானாலும் பார்த்துக்கலாம் என்கிற வீராப்பும், சமூக கட்டமைப்புக்குள் இருக்கின்ற அத்தனை விஷயங்களையும் கேள்விக்குள்ளாக்கும் நபர்களாக எப்போதும் இருக்கிறார்கள். சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோ வைரலாய் பரவியது. இருபது வயதுக்குள் இருக்கின்ற ஒரு இளைஞன், தன் வயிற்றுப் பகுதியை காண்பித்து, ‘தன் காதலி ஐ போன் விரும்பினாள் என்றும், அதற்காக தனது கிட்னியை விற்று, அதில் கிடைத்த பணத்தில் ஐபோன் வாங்கினேன்’ எனவும் ஜாலியாய் சிரித்தபடி ஒரு வீடியோவை பதிவேற்றி இருந்தான். ஏதோ ஒரு நாட்டின் ராஜ்யத்தையே பிடித்த மாதிரி அவனுடைய முகத்தில் குதூகலத்தையும், கொண்டாட்டத்தையும் பார்க்க முடிந்தது.
Teenage Brain is Always Tricky Brain என்பார்கள். இளைஞர்களின் உடலும், மனமும் தராசின் எடை போல் ஒருசேர இல்லாமல், மாறி மாறி ஏறி இறங்கிக் கொண்டேயிருக்கும் பருவம். அதனால்தான் மைனராக இருக்கும் பட்சத்தில் குற்றம் புரிகிற இளைஞனுக்கு, சட்டம் தண்டனையை குறைத்து, அவனை திருத்தி நல்வழிப்படுத்தும் முயற்சிகளை கையில் எடுக்கிறது.
பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் போக்சோ சட்டம் (POCSO Act) இளைஞர்களுக்கு எதிராக தவறாகப் பயன்படுத்தப்படுவதை சமீபத்தில் வெளியான ‘COURT’ திரைப்படம் வெளிப்படுத்தியது. போக்சோ சட்டத்தைப் பயன்படுத்தி, மைனராக இருக்கும் ஒரு பெண்ணின் காதலை குடும்பத்தினர் எப்படி மடைமாற்றுகின்றனர் என்பதையும், வளரிளம் பருவத்து ஆண், பெண் ஈர்ப்பில் உடலும், மனமும் கற்பனைகளையும், கனவுகளையும் வெளிப்படுத்தும், குறும்புத்தனமான செயல்களில் கட்டுண்டு,
என்ன மாதிரியான விளைவுகளை தங்களுக்கு அவை ஏற்படுத்தும் என்பதை அறியாதவர்களாய், சட்டம் குறித்த விழிப்புணர்வு வழங்கப்படாத தலைமுறையினராக குடும்பமும், சமூகமும், சட்டமும் எப்படி அந்த நிகழ்வைப் புரிந்து கொள்கிறது, இளைஞர்களை வழிநடத்துகிறது என்பதை தெளிவாக திரைக்கதையில் வெளிப்படுத்தி இருந்தார்கள். இம்மாதிரியான படைப்புகள் வழியாகவே, இளம் தலைமுறையினரின் செயல்களை பெற்றோருக்கும், சமூகத்திற்கும் புரிய வைக்க முடியும். சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகிற இன்றைய இளைஞர்கள், தங்களின் ரீல்ஸ்களை வைரலாக்கும் எண்ணத்தில், இனி சினிமாவில் கதாநாயகர்களே தேவையில்லை என்கிற
அளவுக்கு சாகசங்களில் ஈடுபடுவதை பல்வேறு தளங்களில் பார்க்க முடிகிறது.
இன்றைய இளைஞர்கள் இயற்கையுடனும், இயந்திரத்துடனும் மல்லுக்கட்டுவதாகட்டும், முக்கியமாய்ஆண்-பெண் உறவில் நட்பை வெளிப்படுத்துவதாகட்டும், காதலை சொல்வதிலும், காமத்தை புரிந்துகொள்ள முயற்சி செய்வதிலுமாகட்டும், அனைத்து தளங்களிலும் அதகளப்படுத்திக் கொண்டே அவர்களின் உலகை இன்னும் கூடுதலாய் விரிவுபடுத்திக்கொண்டே செல்கிறார்கள். இளம் தலைமுறையின் இந்த அதிரடி மாற்றத்தை பெரியவர்கள் உள்வாங்கிக் கொள்வது கடினமான ஒன்றாகவே இருக்கிறது. இளைஞர்கள் அதிகம் கொண்ட நாடாக இந்தியா இருப்பதால், அவர்கள் செய்கிற அனைத்து செயல்களும் சமூகத்தில் உடனே பிரதிபலிக்கிறது. ஐபோனுக்காக கிட்னியை விற்ற பையனையும், தன்னுடைய பிறந்தநாளை வீட்டில் கொண்டாடவில்லை என்பதற்காக தற்கொலை செய்ய முயற்சித்த பெண்ணையும் புரிந்துகொள்ள முடியாமல் இன்றைய பெற்றோர் தவிக்கின்றனர். இளைஞர்களையும், கற்பனைகளால் நிறைந்த அவர்களின் உலகையும் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், முதலில் அவர்களை கவனிக்கத் தொடங்க வேண்டும்.
இவர்களை வழிநடத்த வேண்டிய பொறுப்பு குடும்பத்துக்கும், அரசுக்கும், சமூகத்துக்கும் இருக்கிறது என்றாலும், இந்த இளைஞர்களின் வழியாகத்தான் கல்வியையும், சமூகக்
கட்டமைப்பையும் நாம் திணித்துக் கொண்டிருக்கிறோம்.
விதிகளை மீறுகிற இளைஞர்களின் வழியாகத்தான், ஒவ்வொரு காலகட்டத்திலும் சமூகம் பல்வேறு மாற்றங்களை சந்தித்து வந்திருக்கிறது. இளைஞர்கள் செய்கிற தவறுகளை ஒப்பீடு செய்து பார்க்காமல், தலைமுறை இடைவெளியை கருத்தில் கொண்டு, ஒப்பீடு செய்தல் மிகவும் பிற்போக்குத்தனமான விஷயம் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகி, கல்வியில் ஈடுபாடு காட்டாமல், படிக்க வேண்டிய வயதில் கல்வி கற்காமல், காதல், காமம் என இளைஞர்கள் சுற்றுகிறார்கள் என குற்றச்சாட்டுகளை தொடர்ந்து அவர்கள் மீது சுமத்தாமல், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்கிற ரீதியில் சிந்தித்தால் மட்டுமே, இளைஞர்களை மேம்படுத்த முடியும். இங்கே சமுதாயத்தின் முன் பொறுப்பற்ற நபராகவும், சட்டத்தின் முன் குற்றவாளியாகவும் ஒரு வட்டத்திற்குள், வாழ்நாள் முழுவதும் இளைஞர்கள் அடைக்கப்படுகிறார்கள்.
நான் கெட்டவன், மோசமானவன், சைக்கோதனமானவன் போன்ற வார்த்தைகளை திரைப்படங்கள் வழியாகவும், சமூக ஊடகங்கள் வழியாகவும், ஃபேன்டசிக்காக இளைஞர்கள் சொல்வதைக் கேட்கும்போது, குறிப்பிட்ட வார்த்தையின் வீரியம் தெரியாமல் பேசுகிறார்கள் என்பதோடு, அவர்கள் பயன்படுத்துகிற வார்த்தைகள், அவர்களை எல்லை மீறி நடக்க வைக்கத் தூண்டுகிறது என்றும் எடுத்துக்கொள்ளலாம். நல்லவர்களாக இருப்பதையே மனிதர்கள் என்றைக்கும் விரும்புவார்கள்.
அதனால்தான் சினிமா கதாநாயகர்களின் மீது பெரிய பிரமிப்பு இன்றைக்கும் இருக்கிறது.இளம் தலைமுறையினர் மீது கட்டமைக்கப்படும் இத்தகைய தவறான எண்ணங்களால், நல்லவிதமாய் வாழ நினைக்கும் இளைஞர்களும், இக்கட்டான சூழலில் இருந்து எப்படி மீள வேண்டுமென்கிற வழிகாட்டுதல் கிடைக்காமலே வாழ்நாளைத் தொலைக்கிறார்கள்.
தன் மீதான நல்ல அபிப்பிராயமும், மரியாதையும் மட்டுமே மனிதனை மனிதநேயத்துடன் இருக்க வைக்கிறது. வளரிளம் பருவ வயதில் இருக்கும் இளைஞர்களின் மூளைக்குள் இருக்கும் எண்ணங்களை எடை போடாமல், அவர்களின் சிந்தனைகளை நேர்வழிப்படுத்துவதே நாம் அவர்களுக்கு செய்யும் மரியாதை. வாசகர் பகுதி
தேங்காய் எண்ணெயும் அதன் நன்மைகளும்!
* இதய ஆரோக்கியத்திற்கு தேங்காய் எண்ணெயில் சமைக்கப்பட்ட உணவுகள் பேருதவி புரிகிறது. இதிலிருக்கும் லாரிக் அமிலம் இதய ரத்தக்குழாய்கள் மற்றும் எல்.டி.எல் எனப்படும் கொலஸ்ட்ரால் கொழுப்பை அதிகம் சேராமல் தடுத்து உடல் நலனை பாதுகாக்கிறது.
* தேங்காய் எண்ணெயில் சருமத்தை மிருதுவாக்கும் மற்றும் சுருக்கங்களை போக்கும் ஆன்டி ஆக்ஸிடென்டுகள் ஆதிக்கம் நிறைந்திருக்கின்றன. கோடை காலங்களில் தேங்காய் எண்ணெயை மேல்புற தோலில் பூசிக்கொள்வதால் சூரியனின் சுட்டெரிக்கும் வெப்பத்திலிருந்து தோலை பாதுகாக்கலாம்.
* காயங்கள் ஏற்பட்டு ஆறிக் கொண்டிருக்கும் புண்கள், புதிதாக ஏற்பட்ட ரத்தக்காயங்களில் அடிக்கடி நீர் படுவதை தவிர்க்க, அக்காயங்களில் தேங்காய் எண்ணெயை தடவுவதன் மூலம் நீர் புகாமல் பாதுகாப்பதோடு அப்புண்கள் மற்றும் காயங்கள் வேகமாக ஆறவும் உதவுகிறது.
* தினந்தோறும் தலைக்கு சுத்தமான தேங்காய் எண்ணெயை தேய்த்து வருவதன் மூலம் தலை முடி கொட்டுதல், பித்த நரை அல்லது இளநரை, பொடுகு, வழுக்கை ஏற்படுவது போன்ற தலைமுடி சார்ந்த பிரச்னைகளை சுலபமாக தீர்க்கிறது.
* தினமும் காலையில் எழுந்த உடன் சிறிதளவு தேங்காய் எண்ணெயை வாயில் ஊற்றிக் கொண்டு ஒரு 20 நிமிடங்கள் வாயை நன்கு கொப்பளித்து, பிறகு அந்த எண்ணெயை துப்பி விட வேண்டும். இதை தினந்தோறும் செய்து வருபவர்களுக்கு பற்களில் சொத்தை ஏற்படுவது, ஈறுகள் வலுவிழப்பது, வாய் துர்நாற்றம் போன்ற பிரச்னைகள் ஏற்படுவதை தடுக்கும்.
* குளிர்ச்சி தன்மை அதிகம் கொண்ட தேங்காய் எண்ணெயால் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் உடல் உஷ்ணம் நீங்கி உடல் சீக்கிரத்தில் குளிர்ச்சி அடையும். தேங்காய் எண்ணெயை உடல் மற்றும் தலைக்கு தேய்த்து பின்பு குளிப்பதால் உடலில் இருக்கின்ற உஷ்ண நோய்கள் நீங்கி கண்களும் குளிர்ச்சி பெறும்.
- ச.லெட்சுமி, தென்காசி.
|