கேன்சர் நோயாளிகளுக்கு கூந்தலை தானம் செய்த இளம் மருத்துவர்!
முடிதான் நமக்கான தோற்றம்... கூடுதல் அழகு என நினைத்து பெண்கள் கூந்தலை கலரிங், ஸ்டெயிட்டனிங், கர்லிங், வேவிங், யு கட், ஸ்டெய்ட் கட் என முக்கியத்துவம் தந்து அழகுபடுத்திக் கொண்டிருக்க, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் மருத்துவரான ரேஷ்மா கஃபூர், தனது இடுப்பு வரை நீண்டு வளர்ந்த அழகிய கூந்தலை, தலையில் இருந்து மொத்தமாக மழித்து அடையார் கேன்சர் நிறுவனத்திற்கு தானமாக வழங்கியிருக்கிறார். மருத்துவர் ரேஷ்மாவின் அதிரடியான இந்த செயல் குறித்து பேசியதில்...
‘‘இளம் வயது கேன்சர் நோயாளிகள் பலரும் மன அழுத்தத்தில் இருக்கும் நிலையில், அவர்களுக்கு நம்பிக்கையும் உற்சாகத்தையும் தருகிற விதத்தில்தான் நான் முடி தானம் செய்திருக்கிறேன்’’ என்றவர், ‘‘கேன்சர் நோயில் பாதிக்கப்பட்ட பெண்களின் நீண்டு வளர்ந்த அழகிய கூந்தல் உதிர்வதாலும், ஆண்களின் புருவம் மற்றும் கண் இமைகளில் உள்ள முடிகள் உதிர்விலும் மிகப்பெரிய மன அழுத்தத்தை அவர்கள் சந்திக்கிறார்கள். தங்களின் தோற்றம் மாற ஆரம்பிக்கும் போதே, வாழ்க்கை மீதான நம்பிக்கையை இழக்க ஆரம்பிக்கிறார்கள்.
மனச்சோர்வில் இருந்து கேன்சர் நோயாளிகளை வெளிக்கொண்டு வந்து, நாங்களும் உங்களோடு இருக்கிறோம் என்ற நம்பிக்கையை அவர்களுக்கு விதைத்து, ஊக்கப்படுத்தவுமே முடி தானம் செய்தேன்’’ என்றவர், ‘‘கேன்சர் நோயாளிகளுக்கு தரப்படும் ஹீமோதெரபி மற்றும் ரேடியேஷன் இரண்டுமே வேகமாகப் பெருகும் கேன்சர் செல்களை அழிக்க பயன்படுத்தப்படுகிற சிகிச்சை முறை.  ஆனால் இந்த மருந்துகள் உடலுக்குள் சென்று நல்ல செல்களையும் சேர்த்தே அழிக்கின்றன. இதில் நமது முடியின் வேர்கால்களும் (Hair follicles) பாதிக்கப்படும் செல்களில் ஒன்றாக இருப்பதால், கேன்சர் நோயாளி தன்னுடைய 65 சதவிகிதம் முடியினை சிகிச்சையில் இழக்க நேரிடுகிறது.  ஒரு நோயாளி கேன்சர் நோயில் இருந்து மீண்டு வந்து, வாழ்க்கையை தொடர்வதே மிகப்பெரிய ஒன்றாக பார்க்கப்படும் போது, முடி உதிர்வதெல்லாம் ஒரு விஷயமா என நினைக்கலாம்தான். ஆனால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் நிலையில் இருந்து பார்த்தால்தான், இது அவர்களின் தோற்றம் சார்ந்த விஷயம் என்பது நமக்குப் புரிய வரும். அதிலும் இளம் வயதினர் கேன்சரில் பாதிக்கப்பட்டால், நோய் பாதிப்பிற்குப் பிறகான அவர்களின் தோற்றம், மனச் சோர்வுக்கு(dipression) அவர்களை இட்டுச் செல்லும்.
எனக்கு கேன்சர் இருக்கு. ஹீமோதெரபி சிகிச்சை எடுக்கிறேன். அதனால் முடி கொட்டிவிட்டது எனச் சொல்வதில் கேன்சர் நோயாளிக்கு மிகப் பெரிய மனத்தடை இருக்கும். அடுத்த
வரிடம் சொல்லும்போது உள்ளிருந்து ஒரு வலி அவர்களுக்கு வரும்.
இதில் நோயை வென்று வெளியில் வருவதற்கான காலம் அவர்களுக்கு கூடுதலாகலாம்’’ என்றவர், ‘‘ரத்த தானம் அளவுக்கு இந்த முடிதானம் பெரிய அளவில் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை’’ என்கிறார்.
‘‘முடி தானம் செய்ய நினைப்பவர்கள், தங்கள் கூந்தலை பாப்கட் செய்துவிட்டு, மீதியை தானம் செய்கின்றனர். எதுவுமே பண்ணாமல் இருப்பதற்கு இது பரவாயில்லை என்றாளும், முடி தானம் செய்ய நினைப்பவர்களின் முடி குறைந்தது 12 முதல் 15 இஞ்ச் நீளமாவது இருக்க வேண்டும்.
குறிப்பாக ஆண்கள் முடி தானம் செய்ய நினைத்தால், 12 இஞ்ச் நீளத்திற்கு தங்கள் முடியை வளர்த்த பிறகு தானம் செய்ய வேண்டும். நீக்கிய தங்கள் முடியை அடையார் கேன்சர் நிறுவனத்திற்கு நேரில் சென்றோ அல்லது நிறுவன முகவரிக்கோ கொரியர் வழியாகவோ அனுப்பி வைக்கலாம்’’ என்றவரிடம், அவர் முடி தானம் செய்த நாள் குறித்த கேள்வியை முன் வைத்ததில்...
‘‘முடியை மொத்தமாக மழிக்க நான் முடிவெடுத்தாலும் உள்ளே ஒரு உதறல் இருந்து கொண்டேதான் இருந்தது. நன்றாக யோசித்து விட்டு இந்த முடிவை எடுங்கள் என ஹேர் சலூனில் இருந்தவர்கள் என்னை அறிவுறுத்தினார்கள்.
முழுமையாக ஹெட் ஷேவ் செய்த பிறகு, மகிழ்ச்சியோடுதான் என்னைக் கண்ணாடியில் பார்த்தேன். ‘ஐயோ நான் அழகை இழந்துட்டேன். அசிங்கமா இருக்கேன்’ என்கிற வருத்தம் கொஞ்சம் கூட வரவில்லை. முடியை நீக்கியபின் வீட்டிலும், பணியிடத்திலும், நீ இப்போதும் நன்றாக அழகாய் தெரிகிறாய் என்றே சொன்னார்கள்’’ எனப் புன்னகைக்கிறார் இந்த இளம் மருத்துவர். ‘‘என்னைப் பார்ப்பவர்கள் முடி என்னாச்சு என்றுதான் கேட்கிறார்கள். கேன்சர் நோயாளிகளுக்காக தானம் செய்துவிட்டேன் என்ற என் பதிலைக் கேட்டதும், அவர்கள் முகத்தில் ஆச்சரியத்தையும் பிரமிப்பையும் உடனே பார்க்க முடிகிறது. இது நான் அவர்களிடத்தில் ஏற்படுத்தும் சின்ன சலனம்தானே. என்னைப் பார்த்து இரண்டு பேர் முடி தானம் செய்ய முன்வந்தால், அது எனக்கு மகிழ்ச்சி’’ என்றவருக்கு அவரின் அப்பாதான் ரோல் மாடலாம்.
‘‘என் அப்பா மாஸ்டர் GM பாட்ஷா அன்பும் கருணையும் கொண்ட காவல்துறை அதிகாரியாக ரத்த தானம் செய்வது, தேவைப்படுகிற ரத்தத்தை சேகரித்துக் கொடுப்பது, சாலை விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவது, மாணவர்களுக்கு மாஸ்டராக இருந்து கராத்தே, குங்ஃபூ சொல்லித் தருவது என வலம் வருவதுடன், 40க்கும் மேற்பட்ட திரைப் படங்களில் விஜய், சூர்யா போன்ற பிரபலங்களோடு போலீஸ் கேரக்டரிலும் நடித்திருக்கிறார். கூடவே ரத்த தான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த, 51 முறைகளுக்கு மேலாக ரத்த தானம் செய்து தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர்.
எத்தனை முறை ரத்த தானம் செய்தாலும் நமக்கு ஒன்றும் ஆகாது. ஆரோக்கியமாக இருப்போம் என்கிற விழிப்புணர்வுக்காக யானை ஏற்றப்பட்ட லாரியை கயிறு கட்டி பற்களால் இழுத்து விழிப்புணர்வை வழங்கியவர். தற்போது தூத்துக்குடி துறைமுகத்தில் ஃபயர் அலுவலராக பணியில் இருக்கிறார். அப்பாவைப் போலவே சமூக சேவையில் நானும் இறங்கி ரத்த தானம், முடி தானம், உறுப்பு தானம் செய்யும் பக்கெட் லிஸ்டு எனக்கும் இருந்தது.
+2 முடித்ததுமே மருத்துவம் படிக்க வெளிநாடு சென்றுவிட்டேன். பிறகு மருத்துவம் சார்ந்த FMGE தேர்வை முடித்து, தற்போது மருத்துவராகப் பணியாற்றிய படி,மருத்துவ மேல் படிப்புக்கான நுழைவுத் தேர்வுக்கும் தயாராகிக் கொண்டிருக்கிறேன். இப்போதுதான் என் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கான நேரம் கிடைத்தது. சரி, முதலில் கேன்சர் நோயாளிகளுக்காக முடியை தானம் செய்யலாம் என என் விருப்பத்தை பெற்றோர்களிடம் தெரிவித்தேன்.
ஆசிரியராக இருக்கும் என் அம்மா இதற்கு சம்மதித்ததோடு, நல்ல செயலை செய்ய ஒரு நிமிடமும் யோசிக்கக்கூடாது. நமக்குன்னு வாழ்றது வாழ்க்கையே இல்லை என்ற என் அப்பாவின் ஆசியுடன் களத்தில் இறங்கினேன்.ஆரோக்கியத்தோடு இருப்பவர்கள் முடி தானம் செய்தால் மூன்றே மாதத்தில் முடி வளர்ந்துவிடும். ஆனால் கேன்சர் நோயாளிகளுக்கு வளர தாமதம் ஏற்படும். எனவே, மறுபடியும் முடி நீளமாக வளர்ந்த பிறகு மீண்டும் தானம் கொடுக்கவே முயற்சிப்பேன்’’ என்றவாறு நம்மிடம் விடைபெற்றார்.
மகேஸ்வரி நாகராஜன்
|