பார்வை இழப்பை நான் ஒரு குறையாக கருதவில்லை!
பல சவால்களை கடந்து ஒரு சிறந்த தொழில்முனைவோராவது என்பது வெற்றிகரமான விஷயம். இவ்வகையில் பல நிராகரிப்புகளையும் தடைகளையும் சந்தித்திருந்தாலும், தன் பார்வைக்குறைபாட்டை ஒரு தடையாக எண்ணாமல் தன் உழைப்பை மட்டுமே மூலதனமாக வைத்து வெற்றிகரமான தொழில்முனைவோராக உருவாகியிருக்கிறார் கீதா.  கேரளாவைச் சேர்ந்த இவர் இயற்கையான முறையில் உற்பத்தி செய்யப்படும் மஞ்சள் கொண்டு மதிப்புக்கூட்டப்பட்ட உணவுப் பொருட்களை தயாரித்து ‘கீதா’ஸ் ஹோம் டூ ஹோம்’ (Geetha’s Home to Home) எனும் பெயரில் விற்பனை செய்து வருகிறார். தடைகளை தாண்டிய தன் வெற்றிப்பயணம் குறித்து கீதா பகிரும் போது...  “நான் பிறக்கும் போது என் உலகம் அழகாக இருந்தது. ஆனால் 13 வயதில் எனக்கு ஏற்பட்ட ரெட்டினிடிஸ் பிக்மென்டோசா எனும் பாதிப்பால் என் பார்வைத்திறனில் குறைவு ஏற்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக பார்வையை இழக்கத் தொடங்கினேன். பின்னர் என் 15 வயதில் முற்றிலுமாக பார்வையை இழந்தேன். இருள் சூழந்தது போன்ற இந்த உலகை நான் மனதளவில் ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.
 ஆனால் பார்வையை இழந்தேனே தவிர நம்பிக்கையை இழக்கவில்லை. படிப்பில் எனக்கு அதிக ஆர்வம் இருந்ததால், பிரெய்லி மொழியை கற்றுக்கொண்டு என் படிப்பை மேலும் தொடர்ந்தேன். பட்டப்படிப்பை முடித்தேன். திருமணத்திற்குப் பிறகு என் கணவர் எனக்கு பக்கபலமாக இருந்து வருகிறார். சில வருடங்களுக்கு முன்பு நானும் என் கணவரும் இணைந்து ஒரு ஆர்கானிக் உணவகத்தை நடத்தி வந்தோம். இதுதான் பிசினஸில் எங்களது முதல் முயற்சி.
ஆர்கானிக் முறையில் உற்பத்தி செய்யப்பட்ட காய்கறிகளை கொண்டு தயாரிக்கப்படும் ஆரோக்கியமான உணவு மற்றும் பானம் ஆகியவற்றை தயாரித்து விற்பனை செய்து வந்தோம். ஆனால் அது வாடகை இடம் என்பதால் உணவகம் வைத்திருந்த அந்த இடத்தை நாங்கள் இழக்க வேண்டியிருந்தது.
தொடர்ந்து உணவகத்தை நடத்த முடியவில்லை என்றாலும், உணவகம் நடத்தியபோது கிடைத்த அனுபவம் மற்றும் வாடிக்கையாளர்களின் வரவேற்பு எனக்கு நம்பிக்கையை கொடுத்தது. பின்னர் என் குழந்தைகள் மற்றும் குடும்பத்தில் கவனம் செலுத்த கொஞ்ச காலம் இடைவெளி எடுத்துக்கொண்டேன்.
சிறிது காலத்திற்குப் பிறகு நான் ஏதேனும் வேலைக்கு செல்ல வேண்டுமென தோன்றியதால் வேலை தேட ஆரம்பித்தேன். எனக்கிருக்கும் பார்வைக்குறைபாட்டை நான் ஒரு தடையாக எடுத்துக்கொள்ளவில்லை என்றாலும், நான் வேலை கேட்கச்சென்ற இடங்களில் அதையே காரணமாக சொல்லி வேலை தர மறுத்தனர்.
வேலை எதுவும் கிடைக்காத நிலையில் நான் சொந்தமாக ஏதேனும் தொடங்க வேண்டும் என முடிவு செய்தேன். ஏற்கனவே உணவகம் நடத்திய அனுபவம் இருப்பதால் உணவு சம்பந்தமாகவே தொழில் செய்யலாம் என்று திட்டமிட்டேன். அதுகுறித்து என் கணவரிடம் சொன்ன போது அவரும் என்னை ஊக்குவித்தார். என் திறமைகளை பலர் சந்தேகித்திருந்தாலும் அவர் எப்போதும் என் மீது நம்பிக்கை வைத்திருந்தார்” என்றவர் சொந்தமாக ஆன்லைன் ப்ராண்ட் தொடங்கியது குறித்து பேசினார்.
“ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் மூலம் உணவு ப்ராண்ட் ஒன்றை தொடங்க நினைத்தேன். ஏற்கனவே உணவு சார்ந்த தொழிலில் முன் அனுபவம் இருந்ததால் ஆன்லைன் தொழில் தொடங்குவதில் நம்பிக்கையாக இருந்தேன். முதலில் சிறிதளவில் இருந்து தொடங்கலாம் என்று வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட நெய், ஊறுகாய் போன்றவற்றை ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய தொடங்கினேன்.
தொடர்ந்து புது வகையான உணவுப்பொருட்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டேன். அதில் தூய்மையான மஞ்சளை முதன்மை பொருளாகக் கொண்டு ‘குர்கு மீல்’ என்ற சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த ஒரு உணவுப்பொருளை தயாரித்தேன். நான் நினைத்தது போலவே அந்த உணவுப் பொருள் வந்தது. இது பெண்களுக்கு குழந்தை பிறந்த பிறகு கொடுக்கக்கூடிய ஒரு மேம்படுத்தப்பட்ட ஆரோக்கிய உணவு. இதற்காக 3 வருடங்களாக ஆராய்ச்சியில் ஈடுபட்டேன். மஞ்சள், பேரீச்சை, பாதாம் பருப்பு, தேங்காய்ப்பால், வெல்லம் போன்றவற்றின் கலவை. தூய்மையான மஞ்சளின் ஆரோக்கியம் நிறைந்த இது ஒரு சூப்பர்ஃபுட். ‘குர்கு மீல்’ தயாரிப்பில் பிரதிபா மஞ்சள் வகையை பயன்படுத்துகிறோம்.
இந்தவகை மஞ்சளில் குர்குமின் எனப்படும் மருத்துவ குணங்கள் நிறைந்த சேர்மம் அதிகமாக காணப்படுகிறது. இது உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவக்கூடும். இந்த சப்ளிமென்ட் உணவினை நேரடியாகவும் அல்லது பாலில் கலந்தும் எடுத்துக்கொள்ளலாம். மருத்துவ குணமிக்க உணவுப்பொருள் என்றாலும் அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும். இதனைத் தொடர்ந்து மஞ்சளை முதன்மையாகக் கொண்டு வேறு சில உணவுகளையும் அறிமுகப்படுத்தியிருக்கிறோம்.
மஞ்சள் முக்கிய உணவு என்பதால் பிரதிபா வகை மஞ்சளினை நாங்களே விவசாயம் செய்கிறோம். நானே நடவு செய்து அதனை அறுவடை செய்யும் போது ஏற்படும் உணர்வுக்கு அளவே கிடையாது. என் கைகளால் நடவு செய்து மஞ்சளை அறுவடை செய்த போது ஏற்பட்ட உணர்வினை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ேமலும் இயற்கையான, தூய்மையான, ஆரோக்கியமான உணவுப்பொருளை தயாரித்து வழங்குகிறோம் என்று நினைக்கும் போது மனதுக்கு நிறைவாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது.
பார்வைக் குறைபாட்டினால் பல்வேறு இடங்களில் வேலை நிராகரிப்புகளை சந்தித்த நான் இப்போது என் சொந்த தொழில் மூலம் முன்னேறியிருக்கிறேன். எனக்கு ஏற்பட்ட பார்வை இழப்பை நான் ஒரு குறையாக கருதவில்லை. எவ்வளவு தோல்வி ஏற்பட்டாலும் நம்பிக்கையை மட்டும் இழக்காதீர்கள்” என்று சமூகத்திற்கு நம்பிக்கை அளிக்கிறார்.
ரம்யா ரங்கநாதன்
|