ஊட்டச்சத்துள்ள உணவுகளை கொடுக்கணும்!
மிக்சி வந்த பிறகு உரல், அம்மிக்கல், ஆட்டுக்குழவி எல்லாம் காணாமல் போய்விட்டது. அதில் இடித்து சமைக்கப்படும் உணவின் சுவைக்கு என்றுமே ஈடு இணையில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதனால் ஏற்படும் ஆரோக்கியம் மற்றும் உணவின் சுவையினை புரிந்துகொண்டவர்கள் மீண்டும் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.  அதில் ஒருவர்தான் திருநெல்வேலியை சேர்ந்த வித்யா லட்சுமி. இவர் உரல் கொண்டு மசாலாப் பொருட்களை இடித்து விற்பனை செய்து வருகிறார். மேலும் ‘நம்ம வீட்டுச் சுவை’ என்ற பெயரில் திருநெல்வேலியில் சிறிய உணவுக் கடை ஒன்றையும் நடத்தி வருகிறார்.  இவரின் உணவகத்தில் வாழை இலை கொழுக்கட்டை, பிடி கொழுக்கட்டை என அனைத்து ஆரோக்கியமான உணவுகளையும் விற்பனை செய்து வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறார். ஊட்டச்சத்துள்ள உணவுகளை மட்டுமே கொடுக்க வேண்டும் என்று குறிக்கோளாக செயல்பட்டு வரும் வித்யா லட்சுமியிடம் பேசிய போது...‘‘எனக்கு சொந்த ஊர் கோவை. பிகாம் வரை படிச்சிருக்கேன். திருமணமாகி திருநெல்வேலிக்கு வந்துவிட்டேன். என் மாமியார் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.
அதற்கான சிகிச்சைகளை மேற்ெகாண்டு வந்தோம். நான்தான் அவரை முழுமையாக வீட்டில் இருந்தபடியே கவனித்துக் கொண்டேன். ஆறு ஆண்டுகள் புற்றுநோயினால் அவர் பட்ட அவஸ்தைகளை நேரில் பார்த்தவள் நான். இன்றைய காலக்கட்டத்தில் 25 வயதுள்ளவர்களுக்கே இதய நோய் வருகிறது.
சிறு வயது குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாய் இருக்கிறது. மேலும் சிறு வயதில் உள்ளவர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு மிகவும் முக்கிய காரணம் நம்முடைய உணவு முறைதான். பாரம்பரிய உணவுகளை நாம் தவிர்க்க ஆரம்பித்த காலம் முதல் நம்முடைய உடலில் பல கோளாறுகள் ஏற்பட துவங்கியுள்ளது. இன்று யாருமே வீட்டில் மசாலாக்களை தயாரிப்பது இல்லை. அனைத்தும் கடைகளில் கிடைப்பதால், அதையே பயன்படுத்த துவங்கிவிட்டோம். அவ்வாறு தயாரிக்கப்படும் உணவுகள், மசாலாக்கள் அனைத்தும் சத்துகள் இல்லாதவை. குறிப்பாக மெஷின்களில் தயாரிக்கப்படும் மசாலாக்களில் நார்சத்துகள் இல்லாமல் போகிறது. இதற்கு பதிலாக உரலில் அல்லது செக்கில் ஆட்டும் போது உணவினுடைய சத்துகள் அப்படியே நமக்கு கிடைக்கும்.
நானும் என் கணவரும் இந்த விஷயம் குறித்து விவாதித்து அதை செயல்படுத்த தொடங்கினோம். அதில் முதலாவதாக தொடங்கியதுதான் மசாலாப் பொருட்கள் தயாரிப்புகள். எல்லா வீடுகளிலும் மிகவும் கட்டாயம் தேவைப்படக்கூடியது இந்த மசாலாக்கள்.
அதனை பாரம்பரிய முறையில் தயாரித்துக் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே உரலில் இடிச்சு தயாரித்தோம். அந்த மசாலாக்களை பயன்படுத்தும் போது உணவில் தனிப்பட்ட சுவை தெரிந்தது’’ என்றவர், உணவுக்கடை ஆரம்பித்தது குறித்து பேசத் தொடங்கினார்.
‘‘திருமணத்திற்குப் பிறகுதான் நான் சமைக்கவே கற்றுக்கொண்டேன். என் மாமியார் புற்றுநோயினால் அவதிப்பட்டாலும் அவர்தான் எனக்கு சமைக்க சொல்லிக் கொடுத்தார். முக்கியமாக மசாலாக்களை எவ்வாறு தயாரிக்கணும்னு கற்றுக் கொடுத்தார்.
ஒரு மசாலா தயாரிக்க என்னென்ன பொருட்கள் எந்த அளவில் சேர்க்க வேண்டும் என்று அவரிடம்தான் தெரிந்துகொண்டேன். ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதால், உரலில் இடித்து மசாலாக்களை தயாரிக்க துவங்கினேன். முதலில் தெரிந்தவர்களுக்கு கொடுத்தேன். அவர்கள் மீண்டும் கேட்க பிசினஸாக மாற்ற முடிவு செய்தேன். ‘கல்பவிருக்ஷம்’ என்ற பெயரில் மசாலாக்களை தயாரித்து விற்பனை செய்யத் தொடங்கினேன்.
மசாலாக்களின் சுவையால் செவி வழி செய்தியாக பரவி பல புதிய வாடிக்கையாளர்களும் கிடைத்தனர். அப்போது முதன் முதலாக பாளையங்கோட்டை பகுதியில் ஸ்டால் வைக்கும் வாய்ப்பு கிடைத்தது. அங்குதான் நாங்க தயாரித்த மசாலாக் களில் இருந்து உணவுப் பொருட்களை தயாரிக்கத் தொடங்கினோம்.
அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதுதான் தனியாக உணவுக் கடை தொடங்க காரணமாக இருந்தது. மசாலாக்களை வைத்து நல்ல சத்துள்ள உணவுகளை தயாரிக்கலாம் என ஒவ்வொன்றாக செய்து பார்க்கத் தொடங்கினோம்.
அதிலும் சிறுதானிய உணவு வகைகள் உடலுக்கு சத்துக்கள் நிறைந்தது என்பதால், அதில் உணவு வகைகளை முதலில் டிரையலாக செய்து பார்த்தோம். நன்றாக வந்ததால், ‘நம்ம வீட்டுச் சுவை’ என்ற பெயரில் உணவுக் கடையை தொடங்கினேன். இனிப்பு கொழுக்கட்டை, காரக் கொழுக் கட்டை, வாழை இலை கொழுக்கட்டை, பிடி கொழுக் கட்டை போன்றவற்றை விற்பனைக்கு வைத்தோம்.
வாழை இலையில் வைத்து கொழுக் கட்டையை வேக வைக்கும் போது வாழை இலையில் இருக்கக்கூடிய சத்துகளும் கொழுக்கட்டையில் கலந்து நல்ல ஊட்டச்சத்தை கொடுக்கும். உணவிலும் சரி தரத்திலும் சரி சமரசம் கூடாது என்று வெள்ளை சர்க்கரை சேர்ப்பதை தவிர்த்தோம். மேலும் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய எந்த ஒரு பொருளையும் சேர்க்கக்கூடாது என்று முடிவு செய்தோம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் சாப்பிடக் கூடிய வகையில் உணவுப் பொருட்களை தயாரித்து வருகிறோம். ஒவ்வொரு பொருளையும் இரண்டு மூன்று முறை செய்து பார்த்து விட்டுதான் அதனை விற்பனை செய்யத் தொடங்குவேன். கம்பு, தினை, ராகி என மூன்று வகைகளில் ரவைகள் தயாரிக்கிறோம். கம்பு ரவை உடல் எடையை குறைக்கும் தன்மை கொண்டது. வாழைப்பூ, முருங்கை இலைகளை குழந்தைகள் விரும்பி சாப்பிடமாட்டார்கள்.
அதை கொழுக்கட்டை வடிவில் தரும் போது விரும்பி சாப்பிட ஆரம்பித்தார்கள். பச்சை மிளகாய், தக்காளி, முருங்கை இலை, கொத்தமல்லி, கறிவேப்பிலை, சிவப்பு மிளகாய் என பல வகை வடகங்கள் எங்களிடம் உள்ளது. ராகி சிவல், கம்பு சிவல், கம்பு, நவதானியம், தினை போன்றவற்றில் லட்டு மற்றும் ஸ்நாக்ஸ் வகைகள் செய்து வருகிறேன். சர்க்கரை நோயாளிகளுக்கென சால்ட் குக்கீஸ், சால்ட் பிரெட் போன்றவை செய்கிறேன்.
ஊட்டச்சத்து உணவு வகைகள் கொடுக்க வேண்டும் அதுவும் குறைந்த விலையில் கொடுக்க வேண்டும் என்பதால், என் கடைகளில் 5 ரூபாயிலிருந்து 30 ரூபாய்க்குள்தான் அனைத்து உணவு வகைகளும் இருக்கும். இதனைத் தொடர்ந்து மோமோஸ் உணவினை சிறு தானியத்தில் முயற்சி செய்து வருகிறேன். ஆரம்பத்தில் நானும் என் கணவரும்தான் இதனை செய்து வந்தோம். ஆர்டர்கள் மற்றும் உணவுக் கடை ஆரம்பித்த பிறகு வேலைக்காக ஆட்களை நியமித்திருக்கிறேன். நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகளை கொடுக்க வேண்டும் என்பதுதான் என் எண்ணம்’’ என்கிறார் வித்யா லட்சுமி.
செய்தி: மா.வினோத்குமார்
படங்கள்:வா.முருகன்
வாசகர் பகுதி
காய்களின் பலன்கள்!
கய்கறிகள் உடலுக்குத் தேவையான பல ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன, அவை வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் ஆக்சிஜனேற்றிகள் போன்றவற்றை உள்ளடக்கியவை. காய்கறிகள் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற இதய நோய்களைத் தடுக்க உதவுகின்றன. தினசரி உணவில் காய்கறிகளைச் சேர்த்துக்கொள்வது உடல்நலத்தை மேம்படுத்துகிறது.
வெள்ளரிக்காய்: கோடை சீசனில் கிடைக்கும் வெள்ளரிக்காய்களை அரைத்து அதனுடன் நாட்டுச் சர்க்கரை சேர்த்து ஒரு கோப்பை வீதம் காலை - மாலை ஒரு மாதம் பருகி வந்தால் உடல் எடை கட்டுக்குள் வரும். தொடர்ந்து சாப்பிடும் போது, இதிலுள்ள தாதுப் பொருட்கள் உடல் வெப்பத்தைக் குறைத்து, கருவளையம் உள்ள கண்கள் போன்றவற்றிற்கு தீர்வு தரும். இது குளிர்ச்சி பொருள் என்பதால் ஆஸ்துமா போன்ற பிரச்னை உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.
உணவுக்குப் பின் வெள்ளரிக்காய்களை எடுத்துக்கொள்வதால் குளிர்ச்சியை தந்து வெப்பத்தை தணிக்கும்.புடலங்காய்: புடலங்காயில் சோடியம், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இரவு உணவுக்கு பின் ஒரு மணி நேரம் கழித்து அரைத்து வடிகட்டிய புடலங்காய் ஜூஸில் நாட்டுச் சர்க்கரை சேர்த்து அருந்தினால் தூக்கமின்மை நோயைக் கட்டுப்படுத்தும்.
வெப்பத்தினால் வரும் சூட்டை குறைக்கும். இந்த காய் வயிற்றுப் புண்களையும், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களையும் ஆற்றும். இதிலுள்ள நார்ச்சத்து கெட்ட கொழுப்புகளைக் கரைக்கும் திறன் கொண்டது. இதை நறுக்கி சீரகம், மிளகு, மஞ்சள், உப்பு சேர்த்து குக்கரில் வேகவைத்து அருந்தி வந்தால் எடை குறையும் வாய்ப்புண்டு.
- விஜயலட்சுமி, வேலூர்.
|