பெண்களுக்காக பெண்களால் செயல்படுத்தப்படும் திட்டம்!
“குஜராத் மாநிலத்தில் கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் வகையில் கணிதம் மற்றும் அறிவியல் சார்ந்த சிறப்பு பாடங்களை கற்பிக்கும் திட்டத்தை வாத்சல்யா ஃபவுண்டேஷன் மூலம் செயல்படுத்திக் கொண்டிருந்தோம்.  ஆனால், பள்ளிகளில் நடைபெறும் இந்த சிறப்பு வகுப்புகளின் போது பெரும்பாலான மாணவிகள் ஒவ்வொரு மாதமும் ஐந்து முதல் ஆறு நாட்களுக்கு பள்ளிக்கு வருகை தராமல் விடுப்பு எடுத்து வந்தனர். காரணம், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அசௌகரியமான உணர்வு. மேலும் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு இல்லாமையினாலும் மாணவிகள் பள்ளிக்கு வருவதை தவிர்த்தார்கள்.  உடனே இதற்கான தீர்வு காணும் முயற்சியாக செயல்படுத்தப்பட்டதுதான் ‘சகி ப்ராஜெக்ட்’ ’’ என்கிறார் வாத்சல்யா ஃபவுண்டேஷன் நிறுவனர் ஸ்வாதி பெடேகர். இவர் ‘சகி ப்ராஜெக்ட்’ எனும் திட்டத்தின் மூலம் கிராமப்புற பெண்களுக்கு மாதவிடாய் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, இயற்கைப் பொருட்களை கொண்டு ஆரோக்கியமான முறையில் சானிட்டரி நாப்கின்களை தயார் செய்து வழங்கி வருகிறார். மேலும் கிராமப்புற பெண்களின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வகையில் சானிட்டரி நாப்கின் தயாரிப்பு பயிற்சிகளை வழங்கி பல பெண்களை தொழில்முனைவோராக உருவாக்கி வருகிறார்.
 “இந்தியா ஃபெடெரேஷன் ஆஃப் யூனிவர்சிட்டி வுமன் அசோஸியேஷனின் முன்னாள் ப்ரெசிடென்டாக இருந்த நான், பின்னர் கிராமப்புற மாணவர்களுக்கு நடைமுறை விளக்கங்களுடன் பாடங்களை கற்பிப்பதில் ஆர்வமாக இருந்தேன். குஜராத் மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கணிதம் சார்ந்த பாடங்களை நடைமுறை விளக்கங்களுடன் கற்பிக்க குழு அமைத்து அதற்கான செயல்திட்டத்தினை நான் தொடங்கிய வாத்சல்யா ஃபவுண்டேஷன் மூலம் செயல்படுத்தி வந்தேன்.
அப்போதுதான் மாணவிகள் அதிகப்படியான விடுப்புகள் எடுப்பது குறித்து தெரியவந்தது. அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளை கவனித்த போது, மாதவிடாய் காலத்தின் போது கடைபிடிக்க வேண்டிய சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு அவர்களிடம் இல்லை. இன்றும் துணிகளையே பயன்படுத்துகின்றனர். அவற்றை மீண்டும் பயன்படுத்தும்போது அதனால் ஏற்படும் விளைவுகள் அவர்களுக்கு தெரிவதில்லை.
துணிகளால் ஏற்படும் அசௌகரியத்தால் கவனச்சிதறல் ஏற்பட்டு வகுப்புகளை கவனிக்க முடிவதில்லை. மாணவிகள் மட்டுமின்றி பெரும்பாலும் கிராமப்புற பெண்களுக்கும் இதே நிலைதான். அவர்களிடம் மாதவிடாய் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அதுகுறித்த அடிப்படை கல்வியறிவினை கற்பிக்கத் தொடங்கினோம். துணிகளுக்கு பதிலாக சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்தும்படி அறிவுறுத்திய போது, சிலர் மாற்றத்தை ஏற்றுக்கொள்ள முன்வந்தனர். ஒரு சிலர் நாப்கின் பயன்பாட்டினால் தோல் அரிப்பு மற்றும் தொற்று பிரச்னைகள் ஏற்படுவதாக தெரிவித்தனர். பெரும்பாலான சானிட்டரி நாப்கின்களில் பாலிமர் என்ற பிளாஸ்டிக் கலவை உள்ளது. அது ஈரப்பதத்தை உறிஞ்சக் கூடிய தன்மைக் கொண்டது. இதனால் பல்வேறு பாதிப்புகளும் ஏற்படலாம்.
இவை பெண்களுக்கு தடையாக அமைந்துவிடக்கூடாது என்பதற்காக, என் கணவருடன் கலந்தாலோசித்து அவரின் உதவியுடன் ஆரோக்கியமான முறையில் சானிட்டரி நாப்கின்களை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டோம். வாழை நார் போன்ற இயற்கையான பொருட்களை கொண்டு சானிட்டரி நாப்கின்களை தயாரித்து பள்ளி மாணவிகளுக்கு வழங்கினோம். முற்றிலும் இயற்கையான பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட நாப்கின்களால் மாணவிகளுக்கு எந்தவித பிரச்னையும் ஏற்படவில்லை.
மாணவிகள் மற்றும் கிராமப்புற பெண்களுக்கு இந்த நாப்கின்கள் தடையின்றி கிடைக்க வேண்டுமென்பதற்காக மிகக் குறைந்த விலையில் நாப்கின்களை விநியோகம் செய்யத் தொடங்கினோம். மேலும் மாதவிடாய் கால சுகாதாரம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினோம். அந்த சமயத்தில் பல பெண்களுக்கு வேலை வாய்ப்புகள் இல்லாததும் தெரியவந்தது.
பெண்களின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வகையில் அவர்களுக்கு தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர முயற்சி செய்த போது, அந்தக் கிராமப்புறங்களில் இருக்கின்ற தேவையே அவர்களுக்கு தீர்வாக அமைந்தது. தற்போது இவர்கள் சானிட்டரி நாப்கின்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்” என்றவர், ‘சகி ப்ராஜெக்ட்’ குறித்து தொடர்ந்து பேசினார்.
“பெண்களால் பெண்களுக்காக சானிட்டரி நாப்கின்களை தயாரித்து விநியோகம் செய்யும் திட்டம்தான் ‘சகி ப்ராஜெக்ட்.’ பெண்கள் குழுக்களாக அமைந்து நாப்கின்களை இயந்திரம் மூலம் முற்றிலும் இயற்கைப் பொருட்களை கொண்டு தயார் செய்கின்றனர்.
இயந்திரங்கள் வாங்குவதற்கான உதவி மற்றும் யூனிட்களை அமைத்து தொழிலை தொடங்கவும் உதவி வருகிறோம். இயற்கையான முறையில் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக குறைந்த விலையில் நிர்ணயம் செய்திருப்பதால், கணிசமான அளவில் மட்டுமே பெண்களால் லாபம் ஈட்ட முடியும். இருப்பினும் அவர்களுக்கு வேலை வாய்ப்பினை உறுதி செய்வதற்கு இது உதவுகிறது.
தற்போது இந்தியா முழுவதும் 28 மாநிலங்களில் 200க்கும் மேற்பட்ட யூனிட்கள் அமைக்கப்பட்டு 3000க்கும் மேற்பட்ட பெண்கள் சானிட்டரி நாப்கின் தயாரிப்பில் ஈடுபடுகின்றனர். ஆரோக்கியமான முறையில் சானிட்டரி நாப்கின்களை தயாரித்து விநியோகம் செய்யத் தொடங்கிய பின்னும், அவற்றை முறையாக அகற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது. மாதவிடாய் காலத்தில் வெளியாகும் உதிரம் தீங்கானது.
அந்த நேரத்தில் பயன்படுத்தப்படும் நாப்கின்களை நிலத்தில் இடுவதால் பூமியை அசுத்தம் செய்கிறோம் என்ற எண்ணத்தினால் மீண்டும் சானிட்டரி நாப்கின் பயன்பாடுகளை தவிர்க்க முயற்சி செய்தனர். ஆரோக்கியமான சானிட்டரி நாப்கின்களை வழங்கி அதனை பயன்பாட்டிற்கு கொண்டு வந்த பின் அவற்றை சரியாக அகற்றுவதற்கான வழி இல்லையென்றால் ‘சகி ப்ராஜெக்ட்’ முழுமையில்லாமல் போய்விடும் என யோசித்து என் கணவர் இதற்கான ஒரு தீர்வினை கொண்டு வந்தார். சானிட்டரி நாப்கின்களை அகற்ற மின்சார எரியூட்டி பயன்படுத்தலாம். ஆனால் அதன் விலை அதிகம். மேலும் அதிக மின்சாரம் தேவைப்படும். பாரம்பரிய முறையில் சானிட்டரி நாப்கின்களை எரித்து ஆரோக்கியமான முறையில் அகற்றுவதற்கு டெரக்கோட்டாவினால் செய்யப்பட்ட கொள்கலனை என் கணவர் தயாரித்தார். சானிட்டரி நாப்கின்களை அந்த கலனில் இட்டு எரிக்கும் போது எந்தவித தீங்குமின்றி அவை அகற்றப்படும்.
இதனை பெண்களுக்கு அறிமுகப்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வந்தோம். கிராமப்புற அரசுப் பள்ளிகளிலும், பெண்கள் அதிகம் கூடுகின்ற பகுதிகளிலும் இந்த டெரக்கோட்டா எரியூட்டிகளை அமைத்தோம். இது ஒரு எளிமையான எரியூட்டி என்பதால் சுலபமாக பயன்படுத்தலாம். மின்சார எரியூட்டிகளை காட்டிலும் இந்த இயற்கை எரியூட்டிக்கான செலவு பத்தில் ஒரு மடங்குதான். சானிட்டரி நாப்கின்களை அகற்றுவதற்கான ஒரு வழியை காட்டியதும், மீண்டும் கிராமப்புற பெண்கள் எந்தவித தயக்கமும் இன்றி அவற்றை பயன்படுத்த ஆரம்பித்தனர்.
பூப்பெய்ந்தவுடன் பெரும்பாலான பெண்கள் தங்கள் பள்ளிப் படிப்பை இடைநிறுத்தம் செய்து வந்தனர். படிப்பை நிறுத்திவிட்டு இளம் வயதில் திருமணம் செய்து, ரத்த சோகை போன்ற பிரச்னைகளை சந்தித்த பெண்கள், ‘சகி ப்ராஜெக்ட்’ மூலம் விழிப்புணர்வு அடைந்து முன்னேறியிருக்கின்றனர். மாணவிகள் கல்வி இடைநிற்றல் குறைக்கப்பட்டிருக்கிறது. தற்போது பெண்கள் பலரும் நாப்கின் தயாரிக்கும் யூனிட்களை சொந்தமாக அமைத்தும் வருகின்றனர்” என்றார் ஸ்வாதி.
ரம்யா ரங்கநாதன்
|