நள்ளிரவை நடுங்க வைத்த பெண்கள்!
இந்திய ராணுவத்தின் முன்னணியில் நின்று, ஒருவர் நிலத்திலும் மற்றொருவர் வானிலுமாக இரு பெண்கள், மோசமான பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து, “இது
இந்தியா.  யாருக்கும் பயமில்லை” என்று சொன்ன தருணம், உலகமே கேட்கும்படியாக உற்று நோக்கும் குரல்களாய் இருந்தது.பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாதி முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் நள்ளிரவில் ஏவுகணைத் தாக்குதல்கள் நிகழ்த்தியது.  இதில் பனிக்கட்டி போல உறைய வைத்த பயங்கரவாதத்தை களைந்த இரண்டு பெண் வீராங்கனைகளான இந்திய ராணுவத்தின் லெப்டினென்ட் கர்னல் சோபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் இருவரும் பத்திரிகையாளர் சந்திப்பில் கம்பீரத்துடன் அளித்த பேட்டி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. லெப்டினென்ட் கர்னல் சோபியா குரேஷி
நிலத்தில் இருந்து நிலையாய் தாக்கும் கருடனாய் லெப்டினென்ட் கர்னல் சோபியா குரேஷி, இந்திய ராணுவத்தில் பெண்களுக்கு திறந்துவைக்கப்பட்ட வாயில்களில் முதன்மையானவராக நுழைந்தவர். நேர்மை, நெறிமுறை, நீடித்த சாதனை இவரின் அடையாளங்களாய் பார்க்கப்படுகிறது.
தாக்குதலில் பங்கேற்றதோடு இல்லாமல், பார்வையில் தெளிவும், பேச்சில் துணிவுமாக சர்வதேச ஊடகங்கள் முன் “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கையின் முழு விளக்கத்தையும் தைரியமாக முன்வைத்த வீரப்பெண்ணாய் மிளிர்கிறார் குரேஷி.
ஊடகத்தின் முன் குரேஷி பேசுகையில், ‘‘இந்த தாக்குதலுக்கு மதிப்பளிக்கவே முடியாது. இது சுரங்க வழியில் நுழைந்து நம் தேசத்தின் தளங்களை அழித்த பயங்கரவாதத்திற்கு நாம் கொடுத்த நீதியான பதில்.
நம்பகமான உளவுத் தகவல்கள் மற்றும் எல்லை தாண்டிய தீவிரவாதத்தில் அவர்களுக்குள்ள தொடர்பின் அடிப்படையில் தாக்குதலுக்கான இலக்குகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. பாகிஸ்தானின் எந்த ராணுவ நிலையும் குறிவைக்கப்படவில்லை” எனத் தெளிவாகக் கூறினார். குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 36 வயது கர்னல் சோபியா குரேஷி, இந்திய ராணுவத்தின் தகவல் தொடர்பு (சிக்னல்ஸ்) படைப்பிரிவின் அதிகாரியாக செயல்பட்டு வருகிறார். ராணுவக் குடும்பத்தைச் சேர்ந்தவரான குரேஷியின் தாத்தா மற்றும் அப்பா இருவருமே இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். இவரின் கணவர் கர்னல் தாஜுதீன் பாகேவாடியும் இந்திய ராணுவத்தில் இருக்கிறார்.
2006ல் காங்கோவில் ஐ.நா. அமைதி காக்கும் பணியில் கர்னல் குரேஷி பணியாற்றியதுடன், 2010 முதல் பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு எதிராக அமைதி காக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்திருக்கிறார். 2016ல் சர்வதேச ராணுவப் பயிற்சியில் இந்தியா மட்டுமின்றி ஜப்பான், சீனா, ரஷ்யா, அமெரிக்கா, கொரியா, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய நாடுகள் என மொத்தம் 18 படைப்பிரிவுகள் பங்கேற்றதில் இந்திய படைப்பிரிவை வழிநடத்திய ஒரே பெண் அதிகாரியாக லெப்டினென்ட் கர்னல் குரேஷி செயல்பட்டுள்ளார். சர்வதேச ராணுவப் பயிற்சியில் பெண் அதிகாரிகள் ஈடுபட்டது கிடையாது. இந்த சாதனையையும் முறியடித்த முதல் பெண் அதிகாரி என்கிற பெருமையும் குரேஷிக்கு உண்டு.
ஏர்விங் கமாண்டர் வியோமிகா சிங்
2,500 மணி நேரத்திற்கும் மேலாக வானில் பறக்கும் அனுபவம் கொண்டவர் வியோமிகா சிங். வியோமிகா என்றால் ‘வானத்தில் வாழ்பவள்’ எனப் பொருளாம். அதற்கேற்ப வானில் இவர் எழுதியதோ ஒரு வீரக் கவிதை!
‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலில் இந்திய விமானப்படையை பிரதிநிதித்துவப்படுத்தி, இந்தியாவின் தீர்மானத்தை வெளிப்படையாக அறிவித்தார். ஊடகவியலாளர் சந்திப்பில், ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல் பயங்கரவாதத்திற்கு எதிரான அறிக்கை.
நம் நாட்டு மக்களை மீண்டும் மீண்டும் காயப்படுத்துபவர் எவராக இருந்தாலும், பதில் பெறுவார்கள்!” என உறுதியான குரலில் கர்ஜித்தார் வியோமிகா. “இந்தியா தனது பதிலடியில் மிகுந்த நிதானத்தை கடைபிடித்துள்ளது. எனினும், நிலைமையை மேலும் மோசமாக்கும் வகையில் பாகிஸ்தான் ஏதேனும் விஷமம் செய்தால், அதற்கு பதிலடி கொடுக்க இந்திய ஆயுதப் படைகள் முழு அளவில் தயாராக உள்ளன” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். சாதாரண குடும்பத்தில் பிறந்து, இந்திய விமானப்படையில் முதல் தலைமுறை அதிகாரியாக உயர்ந்த வியோமிகா, தனது பள்ளிப்படிப்பை டெல்லியில் உள்ள செயின்ட் ஆண்டனீஸ் சீனியர் செகண்டரி பள்ளியில் முடித்தார். பள்ளி நாட்களில், அவர் தேசிய கேடட் கார்ப்ஸில் (NCC) உறுப்பினராக இருந்திருக்கிறார். இது அவரை விமானப்படையில் சேரும் ஆர்வத்தை தூண்டியிருக்கிறது. பின்னர், டெல்லி பொறியியல் கல்லூரி ஒன்றில் சுற்றுச்சூழல் பொறியியலில் பட்டம் பெற்றிருக்கிறார்.
வியோமிகா சிங் 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 18 அன்று இந்திய விமானப்படையில் ஹெலிகாப்டர் பைலட்டாக நியமிக்கப்பட்டுள்ளார். முதலில் சீட்டாக் மற்றும் சீட்டா உள்ளிட்ட ஹெலிகாப்டர்களை ஓட்டி வந்தார். 2017ல் விங் கமாண்டராக பதவி உயர்வு பெற்று, பெண்களின் பாதுகாப்பு படையில் பணியாற்றி வருகிறார்.
2021ல் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற முதல் பெண் போர் விமானியாக சிறப்பு பெற்றவர் வியோமிகா சிங்பெண்கள் முன்னேற்றத்தை பிரதிபலிக்கும் இரண்டு முக்கியமான அதிகாரிகளான லெப்டினென்ட் கர்னல் சோபியா குரேஷி மற்றும் விமானப்படை விங் கமாண்டர் வியோமிகா சிங் இருவரின் வீரச் செயல்களும், பெண்கள் பின்தங்கும் காலம் இனி இல்லை, வீரமாக வாழ்வதுதான் பெண்ணின் வலி இனி என்பதை பெண்களுக்கு சொல்லாமல் சொல்லும் செய்தியாக இருக்கிறது.
மணிமகள்
|