125 குடும்பங்களுக்கு கழிவறை கட்ட காரணமாக இருந்த பெண்!



ஒரு பெண்ணிற்கு கிடைத்த உதவி தன் கிராமத்திற்கும் வேண்டும் எனச் சொல்லி, 125 வீடுகளுக்கு கழிவறை கட்டுவதற்கு காரணமாக இருந்திருக்கிறார் புதுக்கோட்டையை சேர்ந்த ஜெயலஷ்மி. 
பொது வெளிகளில் மலம் கழிப்பதால் எவ்வளவு பிரச்னைகள் எல்லாம் வரும் என்பதை உணர்ந்த இவர், கழிவறை கட்ட தனக்கு தனிப்பட்ட முறையில் வந்த உதவியை ஊருக்காக மாற்றி, எல்லா வீடுகளுக்கும் கழிவறைகள் கட்டிக் கொடுப்பதற்கு உதவியாக இருந்துள்ளார். இது குறித்து அவரிடம் பேசிய போது...

‘‘நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் புதுக்கோட்டையில் உள்ள ஆதனக்கோட்டை என்ற கிராமத்தில்தான். எங்க கிராமத்தில் கழிவறை வசதி என்பது கிடையாது. பொதுவெளியில்தான் மலம் கழிக்க வேண்டிய சூழல் இருந்தது. 

பெண்கள் செல்லும் பாதைகளில் டாஸ்மாக் கடை இருந்தது. அந்தக் கடையில் எல்லா நேரங்களிலும் ஆட்கள் இருப்பார்கள். அதோடு ஏதாவது ஒரு ஆள் குடித்து விட்டு செல்லும் பாதையில் படுத்திருப்பார்கள். இவர்களை கடந்துதான் நாங்க செல்ல வேண்டிய சூழல் இருக்கும். பல நேரத்தில் இவர்கள் பெண்களுக்கு அச்சுறுத்தல்
உள்ளாக்கியிருக்கிறார்கள். அதனால் பலரும் பகல் வேளைகளில் செல்லமாட்டார்கள்.

எங்களுக்கு எவ்வளவு அவசரமான சூழ்நிலை என்றாலும் அது அதிகாலை நேரம் அல்லது இரவு நேரங்களில் தான் சென்று வர வேண்டும். மாதவிடாய் நாட்களில் நிலைமை இன்னமும் மோசமாக இருக்கும். 

மலம் கழிப்பதற்கான இடத்தை தாண்டி வேறு எந்த இடத்திற்கு சென்றாலும் அந்தக் காட்டிற்கு சொந்தக்காரர்கள் திட்டுவார்கள். இந்தப் பிரச்னைகள் எல்லாமே எங்க கிராமத்துப் பெண்கள் அனைவரும் அன்றாடம் சந்தித்து வந்தது தான். ஆனாலும் இது பற்றிய எந்த ஒரு முன்னெடுப்பும் எடுக்காமல் இருந்தனர்.

நான் பள்ளிக்கு செல்லும் போது பள்ளியில் கழிவறை இருக்கும். ஆனால் அதுவே வீட்டிற்கு வந்தால் பொது வெளிக்குதான் செல்ல வேண்டும் என்ற நிலைதான் இருந்தது. இது எனக்கு அசவுகரியமாகவே இருந்தது. நான் படித்து வேலைக்கு சென்று வீட்டில் கழிவறை ஒன்று கட்ட வேண்டும் என்பதுதான் என் குறிக்கோளாக இருந்தது. இந்த சமயத்தில்தான் எனக்கு நாசா செல்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. 

அங்கு நான் செல்வதற்கு பலர் எனக்கு உதவி செய்ய முன்வந்தார்கள். அதில் ஒருவர்தான் கிராமாலயா தன்னார்வ நிறுவனத்தின் முதன்மை நிர்வாகி தாமோதரன் அவர்கள். எனக்கு நாசா செல்வதற்கான உதவிகள் எல்லாம் கிடைத்து, நான் பணம் எல்லாம் கட்டி முடித்த காலத்தில் ஒருநாள் தாமோதரன் சார் என்னை அழைத்தார்.

அவர், ‘உனக்கு வேறு என்ன உதவி வேண்டும்’ என்று கேட்டார். நான் அவரிடம் ‘நான் நாசா போவதற்கான பணம் எல்லாம் கட்டிவிட்டேன். அதனால் வேறு எந்த நிதி உதவியும் வேண்டாம்’ என்று சொன்னேன். அதற்கு அவர், ‘நான் உனக்கு படிப்புச் செலவுக்காக சிறிது பணம் தருகிறேன். உனக்கு வேண்டுமென்ற போது அதை எடுத்துக்கொள்’ என்று சொன்னார். உடனே நான், ‘படிப்பிற்காக நீங்க எனக்கு கொடுக்கும் நிதியினை என் கிராமத்திற்காக செலவு செய்யுங்கள்’ என்று அவரிடம் என்னுடைய கோரிக்கையை விடுத்தேன்.

‘எங்க ஊரில் கழிவறை இல்ைல. இதனால் பெண்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். அதனை கட்டிக் கொடுக்க முடியுமா?’ என கேட்டேன். அவர் உடனே சரி என்று சொன்னார். உடனே நான் எங்க ஊரில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்றேன். அவர்களிடம், ‘உங்க வீடுகளுக்கு கழிவறை கட்டிக் கொடுக்கிறோம்’ என்று கூறினேன்.

அதில் பலர் சரி என்றார்கள். ஒரு சில வீடுகளில் ஆண்கள் வேண்டாம் என்றார்கள். ஆண்களுக்கு பொது வெளிகளில் மலம் கழிப்பது குறித்து எந்த ஒரு பிரச்னையும் கிடையாது. முக்கியமாக அவர்களுக்கு மாதவிடாய் பிரச்னைகள் இல்லை. அதனால் கழிவறை இல்லை என்பதை பெரிய பிரச்னையாக கருத மாட்டார்கள். பெண்களின் நிலைமை அப்படி இல்லை.

மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 10க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மட்டுமே கழிவறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டிருந்தது. அதோடு அந்தக் கழிவறைகள் சிறியதாக இருந்ததால் அதை பயன்படுத்துவதற்கும் கடினமானதாக இருந்தது. இந்தப் பிரச்னைகளால் எங்கள் ஊரில் முக்கால் வாசி வீடுகளில் கழிவறை இல்லை. 

நாங்கள் பல வீடுகளிலும் பேசிய பிறகு ஊர் மக்களை ஒரே இடத்தில் வரவைத்து கழிவறையின் தேவை மற்றும் சுகாதாரம் குறித்து விளக்கினோம். அது பலருக்கு விழிப்புணர்வாக அமைந்தது. வேண்டாம் என்று மறுத்தவர்களும் சம்மதம் சொன்னார்கள். இலவசமாக கழிவறைகள் கட்டிக் கொடுத்தால் அது அவர்களுக்கு எளிதாக கிடைத்தது போல் இருக்கும். மக்களுடைய பங்களிப்பும் இருந்தால்தான் ஒரு திட்டம் வெற்றி பெறும் என தாமோதரன் சார் சொன்னார்.

மக்களுடைய பங்களிப்பாக கழிவறைக்கான அடித்தளம் மட்டும் அவர்களையே அமைத்துத்தர சொன்னோம். கழிவறை எப்படி கட்ட வேண்டும் என்று ஒரு குழு அமைத்தோம். அந்தக் குழுவில் நானும் இருந்தேன். 

எவ்வளவு கற்கள் வைக்க வேண்டும்... அதற்கு எவ்வளவு சிமென்ட், மணல் போட வேண்டும்... எந்தளவில் கழிவறை இருக்க வேண்டும் என்றெல்லாம் நாங்கள் அந்தக் கூட்டத்தில் முடிவு செய்தோம். கழிவறைகள் பயன்படுத்துவதற்கு எளிதாகவும் கொஞ்சம் பெரிதாகவும் இருக்குமாறு பார்த்துக் கொண்டோம்.

இரு மலக்குழி முறை என்ற திட்டத்தின் படி கட்டத் தொடங்கினோம். இதன்படி இரண்டு குழிகள் எடுத்து அதில் ரிங்குகளை வைப்போம். கழிவறையில் இருந்து செல்லும் பைப்புகள்
இரண்டாக ஒரு இடத்தில் பிரியும். அதில் ஒரு பைப் அடைத்துக் கொள்ளும் வசதி இருக்கும். 5 பேர் கொண்ட குடும்பம் கழிவறையை பயன்படுத்தினால் அது நிரம்புவதற்கு 3 வருடங்களாகும்.

அப்படி நிரம்பும் போது ஒரு பைப்பினை மூடிவிட்டு இன்னொரு பைப்பை திறந்தால், கழிவுகள் மற்ற குழிக்குள் சென்றுவிடும். ஏற்கனவே நிரம்பி இருந்த குழி காலியாகிவிடும். அது மீண்டும் நிரம்ப மூன்று வருடமாகும். அதற்குள் மற்ற குழிக்குள் இருக்கும் கழிவுகள் மக்கி உரமாக மாறிடும்.

இதனை செடிகளுக்கும் பயிர்களுக்கும் போடலாம். இப்படி யோசித்து ‘வாஷ்மேன்’ திட்டத்தின் கீழ் 125 கழிவறைகளை கட்டிக் கொடுத்தது கிராமாலயா நிறுவனம். கட்டி முடித்த பின்னரும் எல்லா வீடுகளிலும் அதை முறையாக பயன்படுத்த சொன்னோம். வயதானவர்களுக்கு ஆரம்பத்தில் அசவுகரியமாக இருந்தது. 

பிறகு அவர்களும் பழகிக் கொண்டார்கள். இந்தக் கழிவறைகள் முக்கியமாக அடுத்த தலைமுறை பெண்களுக்கானது. சுகாதாரம் என்பது எவ்வளவு முக்கியம் என்பதை இப்போது என் கிராம மக்கள் அனைவரும் உணர்ந்து கொண்டார்கள்’’ என்கிறார் ஜெயலஷ்மி.

மா.வினோத்குமார்