Home Sweet Home



‘‘சென்னை, ஸ்ரீபெரும்புதூரில்தான் வளர்ந்தேன், படிச்சேன். சின்ன வயசில் இருந்தே எனக்கு ஏதாவது புதுமையாகவும், கலைநயத்துடன் செய்ய வேண்டும்னு விருப்பம். அந்த தாக்கம்தான் இப்போது நினைவாகி இருக்கிறது’’ என்கிறார் ஆர்த்தி. 
இவர் சென்னை, ஆர்.ஏ.புரத்தில் ‘ரேர்லில்லி’ என்ற பெயரில் ஒரு அழகிய இன்டீரியர் கடையினை அமைத்துள்ளார். இதில் முழுக்க முழுக்க வீட்டினை அலங்கரிக்கக்கூடிய அனைத்துப் பொருட்களையும் காட்சிப்படுத்தியுள்ளார். வீட்டின் உள்ளலங்காரம் குறித்தும் ஆலோசனை வழங்கி வருகிறார்.

‘‘நான் சின்ன வயசில் இருந்தே எந்த ஒரு வேலையையும் ஆக்கப்பூர்வமாகவும், கலைநயத்தோடும் செய்ய விரும்புவேன். அதனால் பள்ளிப் படிப்பை முடித்ததும் இன்டீரியர் துறை சார்ந்து படித்தேன். படிக்கும் போது ஏதாவது ஒரு நிறுவனத்தில் பயிற்சி எடுக்க வேண்டும். நான் மரச்சாமான்கள் கடையில் என் பயிற்சியை துவங்கினேன். அங்கு போன போது மரச்சாமான்கள் குறித்து முழுமையாக தெரிந்து கொள்ள முடிந்தது.

அப்பவே என் மனதில் இந்த துறையில் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆனால் அப்போது அதனை செயல்படுத்த  முடியவில்லை. படிப்பு முடிச்சதும், இன்டீரியர் துறையில் வேலை பார்த்தேன். அதன் பிறகு நான் தனிப்பட்ட முறையில்  பிராஜக்ட்களை எடுத்து செய்ய ஆரம்பித்தேன். 

அப்படி நான் செய்த ஒரு புராஜக்ட்தான் இந்தக் கடையை ஆரம்பிக்க மூலக் காரணம். இந்தக் கடையை நானும் என் சகோதரர் ஆதர்ஷ் இருவரும் இணைந்து நிர்வகித்து வருகிறோம்’’ என்றவர், அவரின்பயணம் குறித்து விவரித்தார்.

‘‘நான் எடுத்தது மிகப்பெரிய பிராஜக்ட். அதற்காக பல ஊர்களுக்கு பயணிக்க நேர்ந்தது ஒவ் வொரு  பொருளும் தனிப்பட்ட முறையில் வேண்டும் என்று கஸ்டமர் எங்களிடம் கேட்டிருந்தார். அதற்காக இந்தியா மட்டுமில்லாமல், வெளிநாட்டிற்கும் பயணித்தேன். அது எனக்கு மரச்சாமான்கள் மட்டுமில்லாமல், உள்ளலங்காரம் குறித்தும் நிறைய தெரிந்துகொள்ளக்கூடிய வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தது. மேலும் எங்கு தரமான பொருள் கிடைக்கும்.

அதற்கான சப்ளையர்கள் யார், அவர்களில் யார் நம்மிடம் உண்மையாக இருப்பார்கள் என பல விஷயங்களை தெரிந்து கொண்டேன். அப்ேபாதுதான் எனக்கு ஒரு விஷயம் புரிந்தது. ஒவ்வொரு பொருளுக்காக பல ஊர்களுக்கு பயணிக்கிறோம். அந்தப் பொருட்கள் அனைத்தும் நாம் இருக்கும் இடத்திலேயே வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்தால் என்ன என்று தோன்றியது.

மரச்சாமான்கள் மட்டுமில்லாமல், உள்ளலங்காரத்திற்குத் தேவையான விளக்கு, சுவர் அலங்காரங்கள், ரக்ஸ், டெக்கோர் என ஒவ்வொன்றுக்கும் பத்துக் கடைகளுக்கு
செல்கிறோம். அவை அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்குமாறு அமைக்க திட்டமிட்டேன். 

அந்த எண்ணத்தின் பிரதிபலிப்புதான் ‘ரேர்லில்லி’. மேலும் சென்னையில் இது போன்ற கடை இல்லை. அதற்கான வாய்ப்பு வெற்றிடமாக இருந்தது. அதை முதலில் ஏற்படுத்த விரும்பினேன்’’ என்றவர், நிறுவனத்தின் பணிகளைப் பற்றி விவரித்தார்.

‘‘ஒரு வீட்டின் உள்ளலங்காரம் என்றால் அங்கு வாரட்ரோப்களை மட்டும் அமைப்பதில்லை. ஒரு அறையின் அளவிற்கு ஏற்ப எங்கு எந்தப் பொருளை வைக்கலாம், கட்டில், மேஜையின் அமைப்பு மற்றும் சுவர் அலங்காரம், சுவர்களின் வண்ணங்கள் அனைத்தும் சிந்திக்க வேண்டும். சிலருக்கு எப்படி அமைக்கலாம் என்ற யோசனை இருக்காது. அவர்கள் எங்களை அணுகினால், இங்குள்ள நிபுணர்கள் அழகாக வடிவமைத்து ஆலோசனையும் வழங்குவார்கள்.

சில சமயம் அவர்கள் விரும்பும் பொருட்கள் எங்க கடையில் இருக்கும். இல்லாத போது அதனை நாங்களே அமைத்து தருவோம். அதே சமயம் எங்க கடையில் உள்ள பொருளை அவர்களின் வீட்டின் அமைப்பிற்கு ஏற்பவும் மாற்றித் தருவோம். 

வீட்டிற்கான ஸ்டைலிங்கும் செய்கிறோம். வாடிக்கையாளர்கள் தேவையை சொன்னால் போதும், அதற்கு ஏற்ப அனைத்தும் நாங்க குழுவாக இணைந்து செயல்படுத்தி தருவோம். புது வீடு மட்டுமில்லாமல் பழைய வீட்டையும் அழகாக மாற்றியமைக்க முடியும்.

காரணம், எங்களின் கடையில் நாங்க பல ஊர்களில் இருந்து பொருட்களை வாங்கி வருகிறோம். ஒவ்ெவாரு முறையும் என் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் புது பொருளைப் பார்க்க வேண்டும். அதுதான் என் விருப்பம். இங்கு அலங்காரம் சார்ந்து அனைத்து பொருட்களும் கிடைக்கும். ஆனால் அதில் மிகவும் சிறப்புமிக்கது, பழங்கால பொருட்களின் கலெக்‌ஷன்தான். அதில் ராமரின் தர்பார் ஓவியம்.

இது 19ம் நூற்றாண்டை சேர்ந்தது. அடுத்து கருப்பு மற்றும்  தங்க  கிரிஸ்டல் கொண்டு அமைக்கப்பட்ட மெழுகுவர்த்தி ஸ்டாண்ட். மார்பில் கல் மற்றும் வெண்கலம் கொண்டு இத்தாலியன் டிசைனில் அமைக்கப்பட்டிருக்கும். இந்த மெழுகுவர்த்தி ஸ்டாண்ட் 18ம் நூற்றண்டை சேர்ந்தது. மேலும் 18ம் நூற்றாண்டை சேர்ந்த சீனாவின் போர்சிலின் பாத்திரங்கள், நம் பாரம்பரியம் வாய்ந்த செட்டிநாடு வீட்டின் கதவுகள், தூண்கள், மரச்சாமான்களும் இங்குள்ளது.

இவை தவிர பழங்காலத்தில் பயன்படுத்திய பொருளை இன்றைய காலக்கட்டத்திற்கு ஏற்ப மாற்றியும் அமைத்து தருகிறோம். உதாரணத்திற்கு 20ம் நூற்றாண்டை சேர்ந்த அழகான பித்தளை திரி விளக்கினை எலக்ட்ரிக் விளக்காகவும் மாற்றியுள்ளோம். 

எங்கக் கடையின் சிறப்பு 3டி கண்ணாடிகள். உங்களுக்கு மனசுக்கு நெருக்கமானவர்களின் புகைப்படத்தினை கண்ணாடியில் 3டி வடிவில் அழகான சுவர் அலங்காரமாக அமைத்து தருகிறோம்’’ என்றவர், ஒரு வீட்டினை அமைப்பது குறித்து ஆலோசனை வழங்கினார்.

‘‘வீட்டிற்கு உள்ளலங்காரம் செய்யும் போது ஒரு தீமினை பின்பற்ற வேண்டும். மார்டனாக அமைக்க வேண்டும் என்றால் அதற்கேற்ப பொருட்களை கொண்டு திட்டமிடலாம். மாறாக பழமையாக இருக்க வேண்டும் என்றாலும் அவ்வாறு செய்யலாம். அப்படி இல்லாமல் ஒரு அறையினை ஒரு மாதிரியும் மற்ற அறையினை வேறு மாதிரியும் அமைத்தால் வீடு முழுமை அடைந்த உணர்வினை கொடுக்காது. அதே போல் வீட்டின் சுவர் நிறங்களும். 

பெரும்பாலானவர்கள் பேஸ்டல் நிறங்களை விரும்புகிறார்கள். அப்படி இல்லாமல் அடர்ந்த மற்றும் பேஸ்டல் நிறங்கள் இரண்டையும் கலந்து சுவற்றினை அழகுப்படுத்தலாம். அடர்ந்த நிறத்தை விரும்பினால், அந்த அறைக்கு வைக்கக்கூடிய பொருட்களை அதற்கேற்ப வைத்தால் பார்க்க அழகாக இருக்கும்.

முன்பு மக்கள் வீட்டினை மார்டனாக அமைத்தார்கள். இன்று தங்களின் வீடு பாரம்பரியத்தை தழுவி இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதனால் மார்டர்ன், பாரம்பரியம் இரண்டையும் இணைத்து அமைத்துத் தரச் சொல்கிறார்கள். 

முழுக்க முழுக்க மார்டனாக அமைக்கப்படும் வீடுகள் ஓட்டல் அறை போல் இருப்பதாக நினைக்கிறார்கள். வேலைக்கு சென்று வீட்டிற்குள் வரும் போது, அது மனசுக்கு நிறைவைத் தரவேண்டும் என்பதுதான் அவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அதைத்தான் நாங்க பூர்த்தி செய்து வருகிறோம்’’ என்றவர், தன் எதிர்காலம் குறித்து நீண்ட பட்டியலிட்டார்.

‘‘இது போல் பல இடங்களில் கடைகளை அமைக்க வேண்டும். காலத்திற்கு ஏற்ப எங்களின் மரச்சாமான்களையும் புதுவிதமாக செய்ய வேண்டும். தற்போது வெளியே உள்ள மரச்சாமான் தொழிற்சாலையில்தான் எங்களுக்குத் தேவையான மரச்சாமான்களை செய்து வருகிறோம். வரும் காலத்தில் சொந்தமாக தொழிற்சாலை அமைக்க வேண்டும் என நிறைய திட்டம் உள்ளது’’ என்றார் ஆர்த்தி.

ஷம்ரிதி