பரதநாட்டியத்தில் ஐம்பது வருட கலைப் பயணம்!



கலைமாமணி டாக்டர் லஷ்மி ராமசாமி

தொன்மை  வாய்ந்த  பரதக்கலையை பெருமை பெற்ற பல்வேறு சிறப்பு குருமார்களிடம் பயின்று, அக்கலையையே தன் வாழ்நாள் உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்து வருபவர் சென்னையை சேர்ந்த  ஸ்ரீமுத்ராலயா நிறுவனர் டாக்டர் லஷ்மி ராமசாமி. தன் ஐம்பத்தாறு வயதிலும் கலை மேல் கொண்ட ஆர்வத்தினால், தன் நாட்டியத்தினை மேடைகளில் அரங்கேற்றி வருகிறார். 
பரதக்கலையில் முனைவர் பட்டம் பெற்று, தான் கற்ற கலைக்கு இன்று வரை பெருமை சேர்த்து வருகிறார். தமிழ்நாடு அரசின் ‘கலைமாமணி’ விருது உட்பட பல்வேறு சாதனை விருதுகளை பெற்றுள்ளார். அமெரிக்க அரசு அகில உலக ஃபுல்பிரைட் ஊக்கத்தொகை அளித்ததன் மூலம் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள கோல்டன் கேட் பல்கலைக்கழகத்தில் கலை மற்றும் கலாச்சார மேலாண்மை பயின்றவர்.

மார்கழி உற்சவத்தில் தனி ஆவர்த்தனமாக நடனமாடிய அனுபவம்... பரத நாட்டியத்தினை ஆறு வயது முதல் பயின்று வருகிறேன். என் அம்மாவிற்கு இந்தக் கலையை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. ஆனால் அவர்களால் அதனை பயில முடியவில்லை. அதனால் எனக்கு பயிற்றுவிக்க விரும்பினார். 
அதனால் சிறு வயதில் இருந்தே நான் பரதக்கலையை முறைப்படி கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன். எனது முதல் ஆச்சாரியர் திருநெல்வேலியில் இருந்த இந்திரா கிருஷ்ணமூர்த்தி, தலைமை ஆச்சாரியர் பத்மஸ்ரீ சித்ரா விஸ்வேஸ்வரன், பத்மபூஷண் கலாநிதி நாராயணன் அவர்கள். அவர்களைத் தொடர்ந்து நாட்டியத் துறையில் ஆதர்சன குருமார்களாக இருந்தவர்கள் நிறைய பேர்.

அதில் பத்மா சுப்பிரமணியம், நந்தினி ரமணி, சொப்பன சுந்தரி, தனஞ்செயன் மாஸ்டர் என பலரையும் சொல்லலாம். நான் கற்றுக் கொண்ட கலையை மேடைகளில் அரங்கேற்றி வந்தேன். அதன் பிறகு சென்னையில் ‘ஸ்ரீமுத்ராலயா’ என்ற பெயரில் நாட்டியப் பள்ளியை துவங்கி அதன் மூலம் பலருக்கு பரதக்கலையை கற்பித்து வருகிறேன். 

எனது மாணவர்களுடன் இணைந்து நானும் பல்வேறு நாட்டிய நிகழ்ச்சிகளை மேடைகளில் அரங்கேற்றி வருகிறேன். சில காலம் என் உடல் நலம் பாதிப்பு அடைந்திருந்ததால், தனியாக மேடையில் நடனமாடுவதை தவிர்த்து வந்தேன். இப்போது மீண்டும் பழைய உற்சாகத்துடன் மேடை ஏற ஆரம்பித்து இருக்கிறேன். இந்த மார்கழி உற்சவத்தில் தனி நடனம் ஆடினேன். அது பரதக்கலை மீது நான் கொண்டிருக்கும் காதல் என்று தான் சொல்ல வேண்டும்.

தனி நடனத்திற்கான பயிற்சி அனுபவம்...

இந்த மார்கழி உற்சவத்திற்காக ஆறு மாதம் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டேன். 56 வயதில் தொடர்ந்து மேடையில் ஒன்றே முக்கால் மணி நேரம் ஆடியது நல்ல அனுபவமாக இருந்தது. அறுவை சிகிச்சை காரணமாக ஆறு வருடம் நடனமாடாமல் இருந்தேன். உடல் கொஞ்சம் நலமானதும், மீண்டும் தீவிர நடனப் பயிற்சிகளை மேற்கொள்ள ஆரம்பித்தேன். அது என்னை பழைய படி மீண்டு வர உதவியது. இந்த மார்கழி உற்சவத்திற்காக நான் பயிற்சி எடுத்தது மிகவும் உணர்ச்சிகரமான அனுபவம் என்று சொல்லலாம்.

மனசு இளமையாக இருந்ததாலும், உடலும் வயதும் சாதனைகளுக்கு சற்று தடையாக இருக்கிறது. ஆனால் அதையும் என்னுடைய பயிற்சி மூலம் வென்று வருகிறேன். என்னுடைய இந்த வருட நிகழ்ச்சிக்கு பல பிரபலங்கள் வந்திருந்தார்கள். அவர்கள் அனைவரும் என்னை பாராட்டிய போது, இன்னும் மேலும் நடனத்தில் நான் ஈடுபட வேண்டும் என்ற உற்சாகத்தை அளித்திருக்கிறது.

ஓவியர் கேசவ் வெங்கடராமன் ஓவியத்தை நடனம் மூலம் மறு உருவாக்கம் செய்தது...

என்னுடைய ஒவ்வொரு நடனத்தின் போதும், ஓவியர் கேசவ் அவர்களின் ஓவியத்தையும் அதற்கான விளக்கத்தையும் கொடுத்த பிறகுதான் நான் நடனம் ஆட துவங்கினேன். அது பலராலும் வெகுவாக பாராட்டப்பட்டது. நான் கேசவ் அவர்களின் மிகப்பெரிய ரசிகை. அவரது ஓவியத்தில் அபிநயமும் ரசமும் நிறைய இருக்கும். 

ஏற்கனவே சித்ர பரதம் என்னும் பெயரில் அவரது ஓவியத்திற்கு நடனமாடிய அனுபவங்கள் இருந்தது. அவரது ஓவியங்களை மறு உருவாக்கம் செய்து தனி நாட்டியமாகவே ஆட வேண்டும் என்ற ஆசை நெடுநாளாக இருந்தது. சப்தவிடங்கள் என்னும் சிவன் மூர்த்தமாக இருப்பதே இதன் மூலக் கருப்பொருள்.

இதற்கு இசை டாக்டர் ராஜ்குமார் பாரதி அவர்கள் அமைத்துக் கொடுத்தார். பாகவதத்திலிருந்து நயத்துடன் கவிதைகளை எடுத்து சங்கரநாராயணன் கொடுத்தார். இது ஒரு மிகச்சிறந்த கூட்டு முயற்சி. முதல் ப்ரமாணமாக நாட்டிய ப்ரமாணத்தை எடுத்திருந்தேன். 

இதில் வெண்ணைக்காக நடனம், காளிங்கன் மேல் கோபம் கொண்ட நடனம், ராஸ் என்கிற கோபிகைகளுடன் கிருஷ்ணன் ஆடக்கூடிய நடனமாக மூன்று நாட்டியங்களை அமைத்தேன். அடுத்து ஜகத் ப்ரமாணம், பக்தி ப்ரமாணம், தர்ஷன ப்ரமாணம், சரணாகதி ப்ரமாணம் என ஆடியது மிகச் சிறந்த அனுபவம்.

சாதனைகள் மற்றும் விருதுகள்...

தமிழ்நாடு அரசின் ‘கலைமாமணி’ விருதினைப் பெற்றது எனது பரதக் கலைக்கு கிடைத்த சிறந்த அங்கீகாரம். நாட்டிய சேவைக்காக ‘ந்ருத்ய கலா ரத்னா’, ‘நாட்டிய கலை அரசி’, ‘ஆசார்யகலா விபன்சி’, ‘ஆசார்ய கலாபாரதி’, ‘சாதனைப் பெண்மணி, ‘பால சரஸ்வதி’, ‘நாட்டிய கலாமணி’, ‘நாட்டிய கலா சாரதி’, ‘கலா ஆசார்ய சிரோன்மணி’, ‘நாட்டிய கமலம்’ போன்ற பல்வேறு விருதுகளை பெற்றிருக்கிறேன். எனது ‘சிற்பியின் கனவு’ நடனம் சிறந்த படைப்பாக அகில உலக நடன ஐக்கிய சபையால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.

எதிர்கால ஆசைகள்...

இந்தக் கலையை மேலும் நிறைய மேடைகளுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் என் ஆசை, கனவுன்னு சொல்லலாம். அதற்கு காலமும் நேரமும் கடவுளின் அனுக்கிரகம் மற்றும் ஆசீர்வாதங்களும் ஒருசேர இருக்க வேண்டும். ஒரு சில நடனங்கள் நினைத்ததும் மேடையேறி விடும். சில நடனங்கள் பல வருடங்களாக மனதிற்குள் கருவாகி உருவாகி மேடைக்காக காத்திருக்கிறது.

நிறைய நல்ல கருத்துக்களை நடனம் மூலம் சொல்ல வேண்டும். பாரம்பரிய தொன்மை வாய்ந்த பரதக்கலையை அடுத்த தலைமுறைக்கு சீரிய முறையில் கொடுத்து செல்ல வேண்டும்... இப்படி நிறைய லட்சியங்கள் இருக்கு’’ என்கிறார் பரதக்கலைஞர் லஷ்மி ராமசாமி.

 தனுஜா