என் தொழில் வழியே என் மண்ணையும் மக்களையும் பாதுகாக்கிறேன்!
பயன்படுத்தி வேண்டாமென தூக்கி எறியும் விவசாயக் கழிவுகளான வைக்கோல், வாழை இலை, கரும்பு சக்கை வைத்து, மக்கும் தன்மை கொண்ட (Zero waste biodegradable), சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத விதத்தில் டம்ளர், தட்டு, பவுலிங் பாக்ஸ், ஸ்பூன், ஸ்டோரேஜ் டப்பா, ஸ்ட்ரா எனத் தயாரித்து இந்தியா முழுவதும் சப்ளை செய்து வருகிறார் கோயம்புத்தூரைச் சேர்ந்த ராதா.
ராதாவின் ஜீரோ வேஸ்ட் பயோ டி கிரேடபிள் தயாரிப்பு குறித்து அவரிடம் பேசியதில்...
‘‘பயன்படுத்திவிட்டு வேண்டாமென நாம் தூக்கியெறிகின்ற பிளாஸ்டிக் கழிவுகளால் இந்த பூமி அழிவை நோக்கி நகர்கிறது. காரணம், பிளாஸ்டிக் அழியாமல் பல ஆண்டுகள் நிலைத்திருக்கும் தன்மைஉடையது. பிளாஸ்டிக் கழிவுகள் மண்ணில் விழும்போது தாவர வளர்ச்சிக்கு தடையாவதுடன், அதிலிருக்கும் ரசாயனக் கலவைகள் மண்ணின் தரத்தைக் குறைத்து, நீர் நிலைகள் மற்றும் விவசாய நிலங்களை மாசுபடுத்துகின்றது. பிளாஸ்டிக் பொருட்களை உணவாகக் கருதி விலங்குகளும், கடல் வாழ் உயிரினங்களும் உண்பதால், அவற்றின் இறப்பிற்கும் பிளாஸ்டிக் கழிவுகள் காரணமாக அமைகின்றது. ஒரு பிளாஸ்டிக் பொருள் மண்ணில் விழுந்து மக்க குறைந்தது 450 வருடங்கள் எடுக்கும் என்கிறார்கள் சூழலியலாளர்கள். ஆனால் எங்கள் தயாரிப்பை பயன்படுத்திவிட்டு காலையில் தூக்கி எறிந்தால் மாலைக்குள் அது இருந்த இடம் கண்களுக்குத் தெரியாது’’ என்றவர், அவரின் ஜீரோ வேஸ்ட் பயோ டி கிரேடபிள் தயாரிப்பு குறித்து விரிவாக விளக்க ஆரம்பித்தார்.‘‘இதைத் தொடங்கும் போது கொஞ்சம் போராட்டம்தான்.
நார்மலாக ஒரு பேக்கரிக்கு சென்று சாப்பிட பஃப்ஸ் வாங்கினாலே பிளாஸ்டிக் கவர் அல்லது பேப்பரில் வைத்துதான் கொடுக்கிறார்கள். பார்சல் வாங்கினாலும் பிளாஸ்டிக் கவர் அல்லது அலுமினியம் ஃபாயில் கவரில் பேக்கிங் செய்து கொடுக்கிறார்கள்.
அதிகபட்சம் எல்லாமே பிளாஸ்டிக்தான். மண்ணில் தூக்கி எறிகிற இந்தப் பொருட்களை ஏன் நாம் இயற்கையான விவசாயப் பொருட்களில் இருந்து தயாரித்துக் கொடுக்கக்கூடாது என குடும்பமாக அமர்ந்து யோசித்ததில் தோன்றியதுதான் இந்தத் தயாரிப்பு.
விவசாயக் கழிவுகளில் ஆடு, மாடுக்கு உணவாகப் போடுகிற வைக்கோல், கரும்புச் சக்கை, வாழை இலை என விரைவில் எளிதாக மக்கும் கழிவுப் பொருட்களை பயன்படுத்தத் தொடங்கினோம். டீ கப் முதன் முதலில் தயாரான போது அதன் எடை 40 கிராம் இருந்தது. இன்று அதே கப் 2 கிராம், 3 கிராம் எடையில் எங்களிடம் கிடைக்கிறது.
பல்வேறு அளவுகளில் ஏழுவிதமான தயாரிப்புப் பொருட்களை தற்போது தயாரித்து வழங்குகிறோம். இதற்காக காங்கேயத்தில் உள்ள மிகப்பெரிய அரிசி ஆலைகளில் இருந்து ரா மெட்டீரியல்களை மொத்தமாகக் கொண்டு வருகிறோம்.
டீ கப் தவிர்த்து, சிற்றுண்டிக்கான சின்ன தட்டு, பெரிய தட்டு, பஃபே முறையில் உணவு சாப்பிடும் 10 இஞ்ச் தட்டு, ஃபுல் மீல்ஸ் சாப்பிடுகிற தாளி வடிவ பிளேட், சின்ன, பெரிய வடிவிலான பவுல் கப்புகள், ஸ்பூன் தவிர்த்து, கேரளா மட்டை அரிசியில் ஸ்ட்ராவும் தயாரித்து வழங்குகிறோம். இந்த ஸ்ட்ராவை பயன்படுத்திவிட்டு அப்படியே கடித்து சாப்பிடலாம்.
எங்களின் எல்லாத் தயாரிப்புகளுமே வெற்றிதான் என்றாலும், திரவ உணவுகளை பேக் செய்து கொண்டு செல்கிற ஸ்டோரேஜ் பாக்ஸ் மட்டும் சரியான முறையில் கொண்டு வர முடியவில்லை. காரணம், வேக்ஸ் கோட்டிங் எதையும் நாங்கள் பயன்படுத்துவதில்லை.
திரவ உணவை டோர் டெலிவரியாய் கொடுக்க எடுக்கும் 45 நிமிடத்தில், உணவின் சூட்டை டப்பா தாக்கினாலும் சிறிய அளவு லீக்கேஜ் ஏற்பட்டு விடுகிறது. உணவு லீக் ஆகாமல் அதிக நேரம் இருக்கவும், டப்பாவின் எடையினை குறைக்கவும் கூடுதலான செயல் முறைகள் தற்போது நடைபெற்று வருகிறது.
எங்கள் தயாரிப்பை மக்களிடத்தில் சேர்ப்பதில் மிகப்பெரிய போராட்டம் எங்களுக்கு இருந்தது. மேல்தட்டு வகுப்பைச் சேர்ந்த மக்கள் மட்டுமே ஆரம்பத்தில் வாங்கி பயன்படுத்திய நிலையில், பிளாஸ்டிக் கழிவு குறித்த விழிப்புணர்வு கொஞ்சம் கொஞ்சமாக வந்த பிறகு, எளிய மக்களும் எங்கள் தயாரிப்புகளை நோக்கி வர ஆரம்பித்தனர். அவர்களின் இல்லங்களில் சிறிய அளவில் நடக்கும் நிகழ்ச்சிகள், திருமணம், வளைகாப்பு, பிறந்தநாள் என அனைத்திற்குமே தேவைப்படுகிற அளவில், யூஸ் அண்ட் த்ரோ பொருட்களை எங்களைத் தேடிவந்து வாங்கிச் செல்கிறார்கள். எங்கள் தயாரிப்புகளை, கோவையில் இருக்கும் ஒருசில சூப்பர் மார்க்கெட்களிலும் நாங்கள் காட்சிப்படுத்தி இருக்கிறோம்.
கோவையில் உள்ள ஒரு சில பிரபல நகைக்கடைகள், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு எங்கள் ஜீரோ வேஸ்ட் பயோ டி கிரேடபிள் கப்பை பயன்படுத்திதான் காஃபி, டீ போன்ற சூடான பானங்களை வழங்குகிறார்கள்’’ என மேலும் நம்பிக்கை தெரிவித்த ராதா, ‘‘ஒரு டீ கடை கண்ணாடி கிளாசில் அல்லது நமது வீடுகளில் நாம் என்ன டெம்பரேச்சரில் டீ சாப்பிடுகிறோமோ, அதே டெம்பரேச்சரை இந்த கப்புகளும் 20 நிமிடங்கள் வரை தாங்கி நிற்கும்.
குடித்து முடித்த பிறகு சாலைகளில் அல்லது குப்பையில் அல்லது செடி, கொடிகளுக்கு நடுவில் தூக்கி எறிந்தாலும், அதனை ஆடு, மாடுகள் சாப்பிட்டாலும் எந்தத் தீங்கும் யாருக்கும் நேராது. பூமிக்கும் பாதிப்பு வராது. சுருக்கமாக இந்த பூமியை நாங்கள் காப்பாத்துகிறோம்’’ என்கிறார் புன்னகைத்தபடி ராதா.
‘‘டீ கப்புகளில் மணமக்களின் புகைப்படங்கள், லேபிள் கஸ்டமைசேஷன் போன்றவற்றையும் செய்து தருகிறோம். இவற்றை வாடிக்கையாளர் தங்களுக்குப் பிடித்த மாதிரி பதிவேற்றிக் கொள்ளலாம்’’ என்றவர், ‘‘இதற்கென எங்கள் யூனிட்டில் 20 முதல் 25 நபர்கள் மாறி மாறி வேலை செய்கிறார்கள். இந்திய அளவில் மூன்று பேர்கள் இந்தத் தயாரிப்பில் இருந்தாலும், மொத்த தமிழ்நாட்டுக்கும் நாங்கள்தான் கொண்டு சேர்க்கிறோம்.
ஒரு தொழிலை நானும் செய்தேன்... காசு பார்த்தேன் என்றில்லாமல், பூமிக்கு நல்லது பண்ணினேன் என்ற வகையில், எமது நிறுவனத்தின் பெயர் நீடித்து நிலைக்க வேண்டும்’’ என்ற ராதா, ‘‘ஆண்டுகள் பல கடந்தாலும், கோவையில் உள்ள ஜீரோ வேஸ்ட் பயோ டி கிரேடிபிள் தான் முதன் முதலில் இதைத் தொடங்கினார்கள் என்கிற பெயர் கிடைக்க வேண்டும்’’ என விரல் உயர்த்துகிறார் புன்னகைத்தபடி. ‘‘எங்கள் தயாரிப்புகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போதே, விதை பந்து மற்றும் விதை பேனாக்களையும் அன்பளிப்பாய் அனுப்பி வைக்கிறோம். பேனாவின் அடிப்பகுதியில் துளசி,
முள்ளங்கி, கத்தரி, தக்காளி, வெண்டை என ஏதாவது ஒரு செடியின் மரபு விதை இருக்கும். ரீஃபிள் தீர்ந்ததும் பேனாவை மண்ணில் ஊன்றினால், இரண்டு மூன்று நாட்களில் விதை முளைக்க ஆரம்பிக்கும்.
அதேபோல், உருண்டை வடிவ களிமண்ணில் விதை, உரம், தண்ணீர், கரி வைத்து பந்துகளாக உருட்டி வைத்திருப்போம். இந்த விதைப் பந்துகளை நிலத்தில் எங்கு போட்டாலும் செடி முளைக்கத் தொடங்கும்’’ என்றவர், ‘‘சுருக்கமாய் என் தொழில் வழியாக இந்த மண்ணையும் மக்களையும் பாதுகாக்கிறேன்’’ என்கிறார் அழுத்தமாக. ‘‘நமது மண்ணிற்கும், வருங்கால சந்ததிக்கும் நல்லது செய்ய நினைப்பவர்கள், பூமிக்கு கேடு விளைவிக்கிற பிளாஸ்டிக்கை தவிர்த்து, மாற்றாக இந்தப் பொருட்களை பயன்படுத்த இப்போதே ஆரம்பித்தால்தான் பலரும் இந்தப் பயன்பாட்டின் நன்மைகளை உணர்ந்து, இந்தத் தொழிலை நோக்கி வருவார்கள்’’ என்றவாறு விடைபெற்றார்.
செய்தி: மகேஸ்வரி நாகராஜன்
படங்கள்: சதீஷ்
|