புதுவித பொங்கல் ரெசிபிகள்
பொங்கல் பண்டிகை என்றாலே சூரியனுக்கு சர்க்கரைப் பொங்கல் படைப்பது மட்டுமல்ல... பொங்கல் அன்று மாட்டுக்கு மொச்சை+பூசணி போட்டு பொங்கல் படைப்பது போன்றவை தொன்றுத் தொட்டு வழக்கமாக இருந்து வருகிறது. இக்காலக்கட்டத்தில் சில சத்தான வித்தியாசமான பொங்கல் செய்து வீட்டில் உள்ளவர்களையும், வீட்டுக்கு வந்த விருந்தாளிகளையும் அசத்த சில பொங்கல் வகைகளை வழங்கியுள்ளார் சமையல் கலைஞர் குப்பம்மாள்.
இளநீர் பொங்கல்
தேவையானவை: அரிசி - 1 கப், இளநீர் - 1½ கப், ஏலக்காய் - 1, கிராம்பு - 2, நீளமாக நறுக்கிய வெங்காயம் - 1, இஞ்சி, பூண்டு - விழுது 2 தேக்கரண்டி, உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப.
செய்முறை: அடுப்பில் குக்கர் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் ஏலக்காய், கிராம்பு தாளித்து, பின் இஞ்சி-பூண்டு விழுது, வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இத்துடன் அரிசி சேர்த்து வாசனை வரும் வரை சிறு தீயில் வறுத்து, இளநீர் ½ கப் மற்றும் உப்பு சேர்த்து குக்கரை மூடி 4 (அ) 5 விசில் வரும் வரை விட்டு பின் கீழே இறக்கி விசில் நீங்கியப் பின் மூடியைக் கழற்றி நன்றாக கலக்கவும். கமகம ‘இளநீர் பொங்கல்’ ரெடி. விரும்பினால் புதினா சேர்க்கலாம்.
கொத்தமல்லி புளிப் பொங்கல்
தேவையானவை: பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 1 கப், பச்சரிசி - 1½ கப், புளி - பாதி எலுமிச்சை அளவு, மிளகாய் பொடி - 1 டீஸ்பூன், மஞ்சள் பொடி - 1 சிட்டிகை, பெருங்காயம் - ½ டீஸ்பூன், பூண்டு - 6 பல், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் அரிசியை கழுவி போட்டு 3 கப் தண்ணீர் விட்டு அடுப்பில் வேகவைக்கவும். அரிசி நல்லா வெந்த பின் கொத்தமல்லி தழை, மிளகாய் பொடி, மஞ்சள், பெருங்காயம், பூண்டு, உப்பு போட்டு கிளறவும். கடைசியில் புளியைக் கரைத்து ஊற்றி சிறிது நேரம் சிறுதீயில் வேகவிட்டு நன்றாக கிண்டி இறக்கவும். இது சூடாக சாப்பிட சுவையாக இருக்கும்.
குறிப்பு: எண்ணெய், நெய் இல்லாத கலோரி நிறைந்த பொங்கல்.
முள்ளங்கி பொங்கல்
தேவையானவை: சிவப்பு, வெள்ளை முள்ளங்கி தோல் சீவி துருவியது - 2, தேங்காய் - ½ மூடி (துருவியது), பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2, சீரகம், கடுகு, மிளகு - தலா ½ டீஸ்பூன், பூண்டு பல் - 5, பச்சரிசி - 1½ கப், எலுமிச்சை - 1, பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 கப், பெருங்காயம் - ½ டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் 3 (அ) 4 கப் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்துக் காய்ந்ததும் அரிசிப் போட்டு அரிசி ¾ பாகம் வெந்ததும் துருவிய முள்ளங்கி, பூண்டு, தேங்காய் துருவல் சேர்த்து சிறு தீயில் வேகவைக்கவும். அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு தாளித்து, பச்சை மிளகாய், வெங்காயம் போட்டு வதங்கிய பின் முள்ளங்கி பொங்கலில் கொட்டிக் கலக்கவும். பிறகு மிளகு, சீரகம் பொடித்து, உப்பு, எலுமிச்சை சாறு போட்டு பொங்கலில் கலந்து நன்றாகக் கலக்கி இறக்கவும்.குறிப்பு: சத்து நிறைந்தது, இதைச் சாப்பிட்டால் வாயுத் தொந்தரவு இல்லாதது, உடம்பு வலிகள் போக்கும்.
புதினா பொங்கல்
தேவையானவை: அரிசி - 1 கப், புதினா - ½ கப், தேங்காய்ப் பால் - 1 கப், நறுக்கிய வெங்காயம் - 1, சிறிய பச்சை மிளகாய் - 2, இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன், பட்டை - 1 சிறு துண்டு, ஏலக்காய்- 2, குங்குமப்பூ - 1 சிட்டிகை, நெய் - 2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவைக்கு.
செய்முறை: குக்கரில் நெய்விட்டு பட்டை, ஏலக்காய் தாளித்து அதில் வெங்காயம், புதினா, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும். வதங்கிய பின் ஊறவைத்த அரிசி, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து சிறு தீயில் வறுக்கவும். இத்துடன் தேங்காய்ப்பால், குங்குமப்பூ, உப்பு, சிறிது எண்ணெய், தண்ணீர் 1½ கப் (அ) 2கப் விட்டு குக்கரை மூடி 4 விசில் வரும் வரை வேகவிட்டு இறக்கவும். பின் விசிலை நீக்கி நன்றாக கலக்கி சூடாக பரிமாறவும்.குறிப்பு: எண்ணெய் ஊற்ற விருப்பப்படாதவர்கள் கூட கொஞ்சம் நெய் சேர்த்துக் கொள்ளலாம். இத்துடன் அமெரிக்கன் கார்னைச் சேர்த்தால் சுவையும், மணமும் அபாரமாக இருக்கும்.
கேழ்வரகு வாழைப்பூ பொங்கல்
தேவையானவை: கேழ்வரகு - 1 கப் (நன்றாக 8 மணி நேரம் ஊறியது), புழுங்கல் அரிசி - 1 கப் (ஊறவைத்தது), நெய் - 3 டீஸ்பூன், ஏலக்காய் - 2, நறுக்கிய வாழைப்பூ - ½ கப், பட்டை - 1 சிறு துண்டு, ஜாதிக்காய் - சிறிது, இஞ்சி-பூண்டு விழுது - 3 டீஸ்பூன், பட்டை, சோம்பு - பொடித்தது 1 டீஸ்பூன், மிளகாய் தூள் - 2 டீஸ்பூன், நல்லெண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் நெய் விட்டுக் காய்ந்ததும் ஏலக்காய், பட்டை, ஜாதிக்காய் தாளித்து, பின் இஞ்சி-பூண்டு விழுது, பட்டை, சோம்பு, மிளகாய் பொடி சேர்த்து வதக்கவும். பின் ஊறவைத்த புழுங்கல் அரிசி, கேழ்வரகு சேர்த்து சிறு தீயில் நன்றாக வதக்கவும். நீர் சுண்டியதும் 4 கப் தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
அரிசியும், நீரும் ஒரே மட்டத்திற்கு வரும் போது நல்லெண்ணெயில் நன்கு வறுத்த வாழைப்பூவையும், உப்பு சேர்த்து கேழ்வரகு கலவையில் கலந்து வேகவிடவும். நன்றாக குழைந்து வெந்தப்பின் பரிமாறவும். இது ஒரு வித்தியாசமான ‘கேழ்வரகு வாழைப்பூ பொங்கல்’. இது சிறியவர் முதல் பெரியவர் வரை சாப்பிடக்கூடிய சத்தான பொங்கல். ஜவ்வரிசி இனிப்பு பொங்கல்
தேவையானவை: ஜவ்வரிசி - 300 கிராம், வெல்லம் - 200 கிராம், பால் - ¼ லிட்டர், நெய் - 50 கிராம், முந்திரி - 10, ஏலக்காய் தூள் - ½ டீஸ்பூன், உலர்ந்த திராட்சை - 15.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும். தண்ணீர் கொதித்த பின் ஜவ்வரிசியைப் போட்டு குழைந்து வெந்தப் பின் வெல்லம், ஏலக்காய் தூள் ேசர்த்து நன்கு கிளறவும். அத்துடன் பாலையும், நெய்யையும் ஊற்றி கிளறி அடுப்பை நிதானமாக எரிய விடவும். இவை அனைத்தும் பொங்கல் பக்குவத்திற்கு வந்தபின் திராட்சை, முந்திரியை தூவி இறக்கவும். இது சாப்பிட இனிப்பாகவும், சுவையாகவும் இருக்கும்.
வெங்காயப் பொங்கல்
தேவையானவை: பச்சரிசி - ½ கிலோ, பால் - 200 மிலி, வெங்காயம் - ¼ கிலோ (பொடியாக நறுக்கியது), பட்டை - 1 சிறு துண்டு, உலர் திராட்சை - 10, மிளகு, சீரகம் - தலா 1 டீஸ்பூன், முந்திரி - 10, லவங்கம் - 4, பாதாம் பருப்பு - 10 (பொடித்தது), நெய், உப்பு தேவையான அளவு, ஏலக்காய் - 8.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி (தேவையான அளவு) அடுப்பில் வைத்து, நெய் காய்ந்ததும் வெங்காயத்தை போட்டு வதக்கவும். பின் லவங்கம், பட்டை, ஏலக்காய், மிளகு, சீரகம் ஆகியவற்றைப் போட்டு சிவக்கும் வரை வதக்கிய பின் ½ லிட்டர் தண்ணீர் ஊற்றி, உப்புச் சேர்த்து வேகவிடவும்.
கொஞ்சம் கொதித்த பிறகு முந்திரி, திராட்சை, பொடித்த பாதாம், அரிசி (ஊறவைத்தது) போட்டு கொதித்து வரும் போது பாத்திரத்தின் அடியில் அரிசிப் பிடித்துக் கொள்ளாமல் இருக்க நன்றாக சிறு தீயில் கலக்கவும். அரிசி பதமாக வெந்தப்பின் காய்ச்சிய பாலைச் சேர்த்து கலந்து விடவும். அரிசி எல்லாம் ஒன்றாக கலந்து பதமாக வெந்தப்பின் இறக்கவும். இதுதான் வெங்காயப் பொங்கல். இதற்கு தேங்காய் சட்னி சரியான காம்பினேஷன். கோதுமை ரவை தக்காளி பொங்கல்
தேவையானவை: கோதுமை ரவை பெரியது - 1 கப், பட்டை - 1 சிறு துண்டு, கிராம்பு - 4, சீரகம் - 1 டீஸ்பூன், இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் - ½ கப், தக்காளி நறுக்கியது - 1 கப், மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன், புதினா இலை - சிறிது, உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைத்துக் காய்ந்ததும் பட்டை, கிராம்பு, சீரகம் சேர்த்துப் பொரித்ததும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கி, பின் இதனுடன் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதங்கியதும், நறுக்கிய தக்காளியைச் சேர்த்து 5 நிமிடம் வதங்கியப் பின் கோதுமை ரவையை இதனுடன் சேர்த்து வதக்கியப் பின் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து பாத்திரத்தில் உள்ளதை குக்கருக்கு மாற்றி 2½ கப் தண்ணீர் சேர்த்து 2 விசில் வைத்து இறக்கவும். பிறகு குக்கரைத் திறந்து புதினா இலைகளை தூவி நன்குக் கிளறி பரிமாறவும். இது சுவையாக இருக்கும்.
குறிப்பு: இதை சூடாகச் சாப்பிட்டால்தான் கோதுமையில் செய்த வகைகள் சுவையாக இருக்கும். தேவைப்பட்டால் முதலிலேயே குக்கரில் வதக்கி பொங்கல் செய்யலாம்.
தொகுப்பு: ப்ரியா
|