வாசிப்பு இல்லாதவர்களால் விடுதலை படத்தை புரிந்துகொள்ள முடியாது!



கவிதா  கஜேந்திரன்

‘விடுதலை 2’ படமும் சரி, அதற்கான சப்டைட்டில் வேலையும் சரி, எமக்கான பணியாக இருந்தன. இன்று அவை நமக்கான பணியாகி இருக்கிறது.வாசிப்பில்லாதவர்களால் விடுதலை படத்தையும், மார்க்சியத்தையும் புரிந்துகொள்ள முடியாது. 
இப்படியாக படத்தில் தனது சப்டைட்டில் அனுபவம் குறித்து ட்வீட் ஒன்றை பகிர்ந்திருந்தார் கவிதா கஜேந்திரன்.

ராட்டர்டேம் திரைப் பிரதி, விடுதலை 2 இரண்டாம் பாகத்தின் சப்டைட்டில் பணி என படத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவம், வாசிப்பு குறித்தெல்லாம் தனது X தள பதிவில் எழுதியிருந்த
வரைச் சந்தித்து, அவரின் பின்னணி குறித்தும், விடுதலை 2 பட வாய்ப்புக் குறித்தும் பேசியதில்...

உங்களைப் பற்றி சொல்லுங்கள்?

அம்மா ஜெயபாரதிக்கு ஊர் ராயபுரம். அப்பா கஜேந்திரன் கொடுங்கையூர். அதனால் நான் படித்தது, வளர்ந்தது எல்லாமே வடசென்னையில்தான். கொடுங்கையூரோட தடாலடி வாழ்க்கைக்குள்தான் வளர்ந்தேன். பெரும்பாலும் படித்தது கிறிஸ்தவ மிஷினரி பள்ளிகளாகவே இருந்தது. 
இதனால் எளிய மக்கள் மீது ஒரு பச்சாதாபம் இருந்துகொண்டே இருந்தது. பள்ளி ஆசிரியர் ஒருவர் ஆங்கிலத்தில் ஆர்வத்தை ஊட்ட, வாசிப்பு பழக்கமும் ஏற்பட்டது. பூலான் தேவியின் வாழ்க்கை வரலாறு நூலை 8ம் வகுப்பு படிக்கும் போதே படித்து முடித்திருந்தேன். ஆங்கில இலக்கியம், நாவல் என வாசிப்புத் தொடர, நான் பார்க்காத வேறொரு உலகத்திற்குள் புத்தகங்கள் அழைத்துச் சென்றது. பள்ளி முடித்ததும், அண்ணா ஆதர்ஷ் கல்லூரியில்
பி.ஏ. ஆங்கில இலக்கியம் படித்தேன்.

அரசியல் ஈடுபாடு எப்படி ஏற்பட்டது?

கல்லூரியில் படிக்கும்போதே ஞானி அவர்களின் “ஓ பக்கங்கள்” தொடரை வாசிக்கத் தொடங்கியிருந்தேன். அவர் எழுத்தின் அழுத்தம், தேடிச்சென்று சந்திக்கத் தூண்டியது. அவரின் ‘பரீக்ஷா’  நாடகக் குழுவிலும் இருந்தேன். அப்போது தொழிற்சங்கம் சார்ந்த நாடகம் ஒன்றிலும் நடித்தேன். தொடர்ந்து பத்து வருடங்கள் வாசிப்பு, நடிப்பு, தயாரிப்பு என அவருடன் பயணித்ததில், ஒரு மென்டாராகவே எனக்கு மாறினார்.

அப்போது அரசியல் குறித்தெல்லாம் அவரிடத்தில் விவாதிக்க ஆரம்பித்தேன். ஞானியின் இல்லத்திற்கு ஆக்டிவிஸ்ட் பலர் வருவார்கள். அவர்களை கூர்ந்து கவனித்து, இணைந்து இயங்க ஆரம்பித்த பிறகு, நான் பார்த்து வந்த ஈவென்ட் மேனேஜ்மென்ட் வேலை, மீடியா புரொடக் ஷன் வேலைகளில் இருந்து விலகி, இடதுசாரி இயக்கங்களோடு என்னை இணைத்துக் கொண்டேன்.

NFIW (National Federation of Indian Women) அமைப்பிலும், பிறகு சி.பி.ஐ.எம் பார்ட்டியில் AIDWAல் (All India Democratic Women’s Association) இணைந்து இயங்க ஆரம்பித்தேன். சேப்பாக்கம், திருவல்லிக்கேணி பகுதிகளில் இயக்கம் மற்றும் மாதர் சங்கத்தை உருவாக்கி, கிளைகள் அமைப்பது, இயக்கங்களை உள்ளே கொண்டுவருவது, கட்சியின் கீழ் உள்ள வெகுஜன அமைப்புகள், தொழிற்சங்கத்திற்கு கீழ் அனைத்து சங்கங்களையும் செயல்படுத்துவது, மக்களை சந்திப்பது, மக்களோடு இருப்பது, தெருமுனைக் கூட்டங்கள் என இளம் செயலாளராக தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் எனது செயல்பாடுகள் இருந்தது. இதற்கு நடுவில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் சம்பவத்தில், உண்மை கண்டறியும் குழுவிலும் இருந்தேன்.

அப்போது இந்தியாவின் அரசியல் சூழல் மாறி மதச் சார்பின்மைக்கான பேரணி ஒன்று ரதயாத்திரையாக கிளம்ப, இளைஞர்கள் பலர் அதில் இணைகிறார்கள். இறுதியில் அது மக்கள் மேடைப் பயணமாக மாற, நானும் அதில் இருக்கிறேன். 

தமிழ்நாடு முழுக்க 15 மாவட்டங்களைக் கடந்து, தொடர்ந்து 20 நாட்கள் நடைபெற்ற பயணம் அது. பிறகு, தேசிய அளவிலான கூட்டமைப்பு ஒன்றினை, ஆக்டிவிஷ்ட் ஷப்னம் ஆஷ்மி தலைமையில், பெண்கள் அமைப்புகள் இணைந்து நடத்த, 2019 தேர்தலை ஒட்டி தேசிய இயக்கம் ஒன்று ஆரம்பிக்கப்படுகிறது.

இதில் அஸ்ஸாமில் தொடங்கி டெல்லி வரை நடைபெற்ற பிரச்சாரத்தை நான் தலைமையேற்று நடத்துகிறேன். இது எனக்கு மிகப்பெரிய அனுபவமாக அமைந்தது. இந்த பிரச்சார பயணத்தில்தான், எனது இணையரான ராஜசங்கீதனை சந்திக்கிறேன். தொடக்கத்தில் நண்பர்களாக பயணித்து, பிறகு இணையர்களாக இணைந்தோம்.

விடுதலை 2 படத்திற்கான சப்டைட்டில் வாய்ப்பு குறித்து?

வெற்றிமாறன் தோழரோடு எனக்கு சின்ன நட்பு இருந்தது. நான் இயக்க அரசியலில் இருக்கிறேன் என்பது அவருக்கும் தெரியும். ஏற்கனவே ஒருசில தமிழ் படங்களுக்கு சப்டைட்டில் செய்து
கொடுத்த அனுபவமும், கூடவே The WIRE, PARI போன்ற இணைய தளங்களுக்கு மொழியாக்கம் செய்த அனுபவமும் இருந்தது. 

அவரின் Grassroot பட  நிறுவனம் தயாரிப்பில், கோபிநயினார் இயக்கிய, “மனுஷி” படத்தில் சப்டைட்டில் செய்யச் சொல்லி முதலில் கேட்டார். அதுவும் அரசியல் படம்தான். எனது வேலை அவர்களுக்கு பிடிக்கவே, விடுதலை 2 பட சப்டைட்டில் வாய்ப்பு வந்தது.

இந்தப் படத்தில் உங்களின் பணி குறித்து?

முதல் பாகத்திற்கு ஏற்கனவே சப்டைட்டில் செய்யப்பட்டு இருந்தது. இரண்டாவது பாகத்திற்கு மட்டுமே நான் சப்டைட்டில் செய்ய, இரண்டு பாகத்தையும் இணைத்து நான்கரை மணி நேரம் ஓடக்கூடிய படம் ஜனவரியில் ராட்டர்டேம் பிலிம் பெஸ்டிவல் செல்ல, 30 நிமிடம் எழுந்து நின்று (standing ovation) இந்தப் படத்திற்கு கைதட்டினார்கள். 

ஒரு சின்ன வார்த்தை, ஒரு சொல்லாடலை உபயோகப்படுத்துவதற்காக  சரியான ஆங்கில மொழி பெயர்ப்பைத் தேடும்போதே, அது என்னை வேறொரு வாசிப்புத் தளம், வெவ்வேறு புத்தகங்கள் என அழைத்துச் சென்றது. பல்வேறு வாசிப்புகளுக்குள் சென்று வந்தேன்.

என்னை நம்பி கொடுக்கப்பட்ட இந்த வேலையில், என்னை மறுபடியும் ரிவைல் பண்ணிக்கொள்ளக்கூடிய ஒரு தருணமாகவும், பல வாசிப்புக்கு இட்டுச் செல்லும் இடத்திலும் படம் இருந்தது. 

பொலிட்டிகலாக நிறைய உரையாடல்களை நிகழ்த்தியது. வாத்தியார் அரசியல் பாடம் எடுக்குற மாதிரியான உணர்வையே படம் எனக்குத் தந்தது. படத்தில் சில விஷயங்களை மாற்ற மாற்ற, சப்டைட்டிலும் மாறிக்கொண்டே இருந்தது. நாளை படம் வெளியாகும் நிலையில், முதல்நாள் வரை வேலையிருந்தது.

உங்கள் பார்வையில் மொழி பெயர்ப்பு என்பது என்ன?

சரியான வார்த்தைக்குள் (vocabulary) நுழைவது. இயக்குநர் வெற்றிமாறனின் பார்வையில் வரும் இந்தப் படம், எந்த இடத்திலும் தவறாக சிதைந்துவிடக்கூடாது என்பதில் நான் தெளிவாக இருந்தேன். அவர் யோசித்த அரசியல் தன்மையோடு (political correctness) கொடுக்க வேண்டும் என்பதுதான் அவர் எனக்கு கொடுத்திருக்கும் வேலை. 

இதற்காக நிறைய மெனக்கெட்டேன். இந்தப் படத்தில் வாத்தியார் எந்தவொரு டயலாக்கையும் சுலபமாகப் பேசியிருக்கவே மாட்டார். அவரின் வசனங்களை அவர் சொல்ல வருகிற நோக்கத்துடனே கொடுக்க வேண்டும் என்றே நினைத்தேன்.

இயக்குநர் வெற்றிமாறன் குறித்து?

அவர் இயக்குநர் மட்டுமில்லை. ஆழ்ந்த வாசிப்பும் சிந்தனையும் கொண்டவர். எந்த விஷயத்தைக் கையில் எடுக்கிறாரோ, அதற்கான முழுமையான விஷயங்கள், மண் சார்ந்த வட்டார மொழி, வட்டார பழக்கவழக்கம் என சின்னச் சின்ன விஷயங்களை ஆழ்ந்த புரிதலோடு கொடுக்கின்ற பெர்பெக் ஷனிஷ்ட். எம்.ஏ. இங்கிலீஷ் லிட்ரேச்சர் படித்தவர் என்பதால், சப்டைட்டிலை பிரின்ட் எடுத்து கொடுத்து, அவர் பேப்பர் திருத்துவது போல் திருத்திக் கொடுத்த பிறகே பணி நிறைவடையும். அந்த அளவுக்கு வசனங்கள் நுணுக்கமாக, நுட்பமாகப் பார்க்கப்பட்டது.

சாதிய ஒடுக்குமுறை, பண்ணை ஒடுக்கு முறை, தொழிற்சங்க பிரச்னைகளை காண்பித்து, இன்றைக்கு இருக்கின்ற தாராளமயமாக்கலுக்குள் நுழைந்த அரசியல் பாடத்தை இந்தப் படம் காட்டுகிறது. புனைவு கதைக்குள் சின்ன அரசியலை நம் வரலாற்றில் இருந்து எடுத்து வைக்கிறார். மணலூர் மணியம்மையின் பாத்திரத்தையும் புனைவுக்குள் கொண்டு வருகிறார்.

இன்றைக்கு மணலூர் மணியம்மை பற்றி நிறைய பேர் பேசுகிறார்கள். மஞ்சுவாரியர் அந்த கேரக்டரை தன் பாத்திரத்தில் வெளிப்படுத்தும்போது அது பேசுபொருளாகிறது. நடந்து முடிந்த சென்னை புத்தகக் காட்சியில் மக்கள் அதிகம் தேடிய புத்தகங்கள் புலவர் கலியபெருமாள் மற்றும் தமிழரசன் வரலாறு.

“தத்துவம் இல்லாத தலைவர்கள் ரசிகர்களைத்தான் உருவாக்க முடியும்” போன்ற வசனங்களும் அழுத்தமாகவே இருந்தது. எத்தனையோ வில்லன்களை இந்த தமிழ் சினிமா பார்த்திருந்தாலும், ஒரு தலைமைச் செயலாளரை வில்லனாக இந்தப் படத்தில்தானே பார்த்தோம். 

இடதுசாரி சித்தாந்தத்திற்குள் நுழைந்து படம் செய்வது சுலபமில்லை. இப்படியான ஒரு படத்தை எடுக்கிறார் என்றால், மார்க்ஸ் குறித்து வாசிக்கிறார். மார்க்சீய தத்துவங்கள், சித்தாந்தங்களை புரிந்துகொள்கிறார் என்றுதானே புரிந்துகொள்ள வேண்டும்.

நடிகை மஞ்சுவாரியர் பாத்திரம் குறித்து?

திரைப்பட விழாவுக்கு படம் சென்றுவந்த பிறகே, மஞ்சுவாரியர் காட்சிகள், வாத்தியார் ப்ளாஷ்பேக் காட்சிகள் படமாக்கப்பட்டது. தியேட்டர் ரிலீஸுக்காக கமர்ஷியல் செய்வதில்கூட இயக்குநர் தன்னை காம்ப்ரமைஸ் செய்துகொள்ளவில்லை. மஞ்சுவாரியரை இடதுசாரி சிந்தனை உள்ள பெண் தலைவர் பாத்திரமாக படைத்திருந்தார்.

இடதுசாரி சிந்தனை உள்ள பெண்ணால் மட்டுமே தனது இணையரின் உடலை உரிமை கோர மாட்டேன் என்கிற சிந்தனையை புரிந்துகொள்ள முடியும். இந்தக் காட்சியும் வசனமும் பல பெண் தோழர்களின் தியாகத்தை அடையாளப்படுத்தியது. பெருங் காதல் கொண்டு திருமணம் செய்துதானே தியாக வாழ்க்கைக்குள் இவர்கள் நகர்கிறார்கள்.

அலைடா குவேராவுடன் நீங்கள் பயணித்தது குறித்து?

சேகுவேரா மகள் அலைடா குவேரா இந்தியா வந்தபோது அவரோடு இரண்டுநாள் பயணிக்கும் வாய்ப்பு நான் சார்ந்த கட்சி வழியாக அமைந்தது. அலைடா ரொம்பவே எளிமையாக இருந்தார். ஸ்பானிஸ் மொழி மட்டுமே அவருக்குத் தெரியும். போகிற இடங்களில் இயக்க பாடல்களை ஸ்பானிஷ் மொழியில் பாடினார். சேகுவேராவின் கடைசிகால நினைவுகளில் சிலவற்றை பகிர்ந்து கொண்டார்.

தான் சிறுமியாக இருந்தபோது, தன் அப்பா மாறுவேடத்தில் வந்து கிளம்பியது, அலைடா குவேராவின் நினைவுகளில் ஆழமாகவே பதிந்திருக்கிறது. அலைடா பயங்கர ஷார்ப். க்ராஸ்பவரும் இருந்தது. மன்றோ சிலையை  பார்த்து “ஆங்கிலேயருக்கு ஏன் இன்னும் இங்கு சிலை” எனக் கேட்டார். என்னை அவர் காமனாதே (camarada) என அழைத்தார். ஸ்பானிஷ் மொழியில் இதற்கு காம்ரேட் எனப் பொருளாம். அவர் என்னை அப்படி அழைத்தது மகிழ்ச்சியாக இருந்தது.

மணியம்மையும் மஞ்சுவாரியரும்!

மஞ்சுவாரியர் கதாபாத்திரம், தோழர் மணலூர் மணியம்மை தோற்றத்தை ஒத்தே உருவாக்கப்பட்டு இருக்கிறது. தொளதொளவென அரைக்கை சட்டை, ஒரு வேஷ்டி, கிராப் கட்டிங், ஒரு சிலம்பக் குச்சி சகிதமாக சைக்கிளில் வலம் வரும் மணலூர் மணியம்மை தோற்றம், இந்திய இடதுசாரி இயக்கத்தில் மறக்க முடியாத தோற்றம்! சாதி ஒழிப்பு, பெண் விடுதலை, கூலி உயர்வு என எல்லா போராட்டங்களையும் தஞ்சையில் முன் நின்று நடத்தியவர் தோழர் மணலூர் மணியம்மை.

செய்தி: மகேஸ்வரி நாகராஜன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்