தஸ்கர் பஜார்
சென்னை, கொட்டிவாக்கம், ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் ‘தஸ்கர் பஜார்’ நிகழ்ச்சி ஜனவரி 4 முதல் 12ம் தேதி வரை நடைபெற்றது. இதில் கிட்டத்தட்ட 18 இந்திய மாநிலங்களில் இருந்து 110க்கும் மேற்பட்ட திறமையான கைவினைஞர்கள், நாடு முழுவதிலும் இருந்த கலந்து கொள்ள வந்திருந்தார்கள். இவர்கள் தங்களின் பொருட்களை இந்த பஜாரில் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். தஸ்கர், 1981ல் நிறுவப்பட்ட ஒரு தேசிய தன்னார்வ நிறுவனம். பாரம்பரிய இந்திய கைவினைஞர்கள் மற்றும் கைவினைப்பொருட்களை தயாரிப்பவர்களின் வளர்ச்சிக்காக இந்த அமைப்பு துவங்கப்பட்டது. அவர்களின் முன்னேற்றத்திற்காகவே இந்த அமைப்பு இன்றுவரை செயல்பட்டு வருகிறது.
இந்த அமைப்பின் முக்கிய நோக்கமே, கிராமப்புறங்களில் கைவினைப் பொருட்கள் செய்பவர்கள், புது விதமான உடைகளை தயாரிப்பவர்கள், கலை வேலைப்பாடுகள் கொண்டவர்கள் என பலரையும் ஒன்றாக இணைத்து அவர்களின் பொருட்களை கண்காட்சி மூலம் மக்கள் மத்தியில் எடுத்துச் செல்வது என ஒரு பாலமாக செயல்பட்டு வருகிறது. 25 இந்திய மாநிலங்களில் 600க்கும் மேற்பட்ட கைவினைக் குழுக்கள் மற்றும் சிறிய உற்பத்தியாளர்களை உள்ளடக்கி தேசிய அளவில் பரந்து விரிந்திருக்கிறது இந்த தஸ்கர் அமைப்பு. கைவினைப் பொருட்கள், கைத்தறி உடைகள், காந்த எம்பிராய்டரி, தோல் பொம்மலாட்டங்கள், மீனாகாரி நகைகள், இயற்கை சாயம், புஞ்சா துரிஸ், டெரகோட்டா, மூங்கில் பெல்ஸ் தயாரிப்புகள், பழங்குடியினரின் கலைப்பொருட்கள், கைவினைப் பொருட்கள், அப்ளிக் வேலைப்பாடுகள், பருத்தி ஜம்தானி, பதிக் மற்றும் பந்தனி, காதி, சந்தேரி, பனாரசி, இகாட் நெசவு, பக்ரு, டபு, அஜ்ரக் மற்றும் இண்டிகோ பிளாக் பிரின்டிங், பேட்ச் ஒர்க், கலம்காரி கை ஓவியங்கள் என பல பிரபலமான கைவினைப் பொருட்கள் இங்கு விற்பனையில் இருந்தது. இதில் பிச்வாய், காளிகாட், பாட்டச்சித்ரா, மதுபானி ஓவியங்கள், கோண்ட் மற்றும் மினியேச்சர் ஓவியங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.
இதில் விற்பனை செய்து வந்த கொண்ணை நிறுவனத்தினரான ஹேமாவிடம் பேசும் போது, ‘‘எனக்கு சொந்த ஊர் திருத்தணி. நான் கொண்ணை என்கிற பெயரில் குழந்தைகளுக்கான துணி வகைகளை தயார் செய்து வருகிறேன்.
தஸ்கர் விழா என்பது 40 வருட பாரம்பரியம் கொண்டது. இதில் சிறிய அளவில் கைவினைப்பொருட்கள் உருவாக்கம் செய்றவங்க, பாரம்பரிய நெசவு முறையை பின்பற்றுபவர்கள், இயற்கைக்கு உகந்தப் பொருட்களை தயாரிப்பவர்கள், மூங்கில் பொருட்கள் என பலதரப்பட்ட கைவினைக் கலைஞர்களை அரவணைத்து மக்களிடையே அறிமுகப்படுத்தி அவர்களின் வியாபாரத்தை பெருக்குவதுதான் இந்த பஜாரின் நோக்கம். வருஷா வருஷம் நடக்கக்கூடிய இந்த கண்காட்சியில் பல மாநிலங்களில் இருந்தும் வந்து கைவினைக் கலைஞர்கள் தங்களின் பொருட்களை விற்பனை செய்றாங்க. இந்த வருஷம் 18 மாநிலங்களை சேர்ந்தவர்கள் பங்கு பெற்று இருக்காங்க. ஒவ்வொருவரும் வித்தியாசமான பொருட்களை தயாரிக்கும் கலைஞர்கள். கொண்ணை என்ற பேருல நான் இயற்கையான சாயத்தால் செய்யப்பட்ட குழந்தைகளுக்கான காட்டன் துணிகளை தயாரிக்கிறேன்.
மேலும் குழந்தைகள் பயன்படுத்தும் துணிகளான டயப்பர், பெண்களுக்கான சானிட்டரி நாப்கின்கள் என எல்லாமே தைத்துக் கொடுக்கிறேன். இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இருந்தும் பொருட்களை வாங்கி தயாரித்து வருகிறேன். குழந்தைகளுக்கான டயப்பர்களை ஃபேம்பூ பருத்திக் கொண்டு தயாரிக்கிறோம். இது ஈரத்தை உள்ளிழுக்கும் திறன் கொண்டது. இந்த டயப்பர்களைதான் என் குழந்தைகளுக்கும் நான் பயன்படுத்தி வருகிறேன்’’ என்றார் ஹேமா.
அசாமின் பிரபலமான உடையை விற்பனை செய்து வருகிறார் சுசாந்த். புது விதமான உடைகளை தயாரித்து விற்பனை செய்து வரும் இவரின் வெளவாலின் உருவ அமைப்பு கொண்ட துணி புது விதமாகவும் பார்க்க அழகாகவும் இருக்கிறது. ‘‘அசாமின் பிரபல உடை என்றால் அது முகா பட்டுதான்.
தகதகவென ஜொலிக்கும் தங்க நிறம்தான் இந்தப் பட்டின் அடையாளம். ‘முகா’ என்றால் மஞ்சள் நிறம். மஞ்சள் நிறத்தில் ஜொலிக்கும் பட்டுப்புடவைகளை ‘முகா பட்டு’ என்று அழைப்பார்கள். இந்தப் பட்டினை அசாமில் கெளரவ குறியீடாக பார்க்கிறார்கள். அங்கு மட்டுமே வளரக்கூடிய அன்ந்திரியா அஸ்ஸாமினிஸ் என்ற பட்டுப்புழுவில் இருந்துதான் முகா பட்டின் நூல் கிடைக்கிறது.
இந்தப் பட்டுப்புடவையின் முதல் தரம் வெண்மை நிறத்தில் இருக்கும். வெண்மை நிற முகா பட்டுப்புடவைக்கு சர்வதேச பட்டுச் சந்தையில் எப்போதும் பெரும் வரவேற்பு உண்டு. இதில் பீட்ரூட், வெங்காயத் தோல், மருதாணி, மஞ்சள் போன்ற இயற்கை சாயங்களை சேர்த்து வண்ணப் பட்டுப்புடவைகளை நெய்வோம்.
இந்த பட்டு நூல் கைகளாலேயே தயாரிக்கப்படுகிறது. பொதுவாக பட்டுப் புடவையினை அதிகமாக துவைக்கும் போது அதன் நிறம் மங்கும் என்று சொல்வார்கள். ஆனால் இதை துவைக்க துவைக்க அது புது புடவைப் போல் காட்சியளிக்கும். மேலும் இதனை மூன்று தலைமுறைக்கு வைத்து பயன்படுத்தலாம் என்பதால், பலரும் அந்த பட்டுப்புடவையினை தங்களின் பாரம்பரிய புடவையாக வாங்க முன்வருகிறார்கள்’’ என்றார் சுசாந்த்.
மா.வினோத்குமார்
|