ஆர்கானிக் தயாரிப்புகளில் அசர வைக்கும் சகோதரிகள்!
இப்போது எங்குப் பார்த்தாலும் ஆர்கானிக்... ஆர்கானிக் என்ற சொல்லைதான் கேட்கமுடிகிறது. காரணம், இது ரசாயனம் கலக்காத பொருள் என்று மக்கள் மனதில் பதிய வைத்துவிட்டார்கள். அதே சமயம் ஆர்கானிக் என்றால் அதன் விலையும் அதிகம் என்று முத்திரையும் பதிவு செய்துவிட்டார்கள். ஆர்கானிக் பொருட்களை அனைவரும் வாங்கக்கூடிய விலையில் தர முடியும் என்கிறார்கள் சென்னையை சேர்ந்த மூன்று சகோதரிகள். இவர்கள் ‘நயா ஆர்கானிக்ஸ்’ என்ற பெயரில் சருமம், தலைமுடி என அனைத்து அழகியல் சார்ந்த பொருட்களையும் தயாரித்து அனைவரும் வாங்கக்கூடிய விலையில் விற்பனை செய்து வருகிறார்கள். இவர்களின் தயாரிப்பு குறித்து பேசத் துவங்கினார் மூன்று சகோதரிகளில் ஒருவரான சுகன்யா.
‘‘நானும் என் சகோதரிகள் சரண்யா, அர்ச்சனா மூவரும் ஆர்கானிக் முறையில்தான் ஸ்கின்கேர் மற்றும் ஹேர்கேர் பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். 90க்கும் மேற்பட்ட பொருட்களை நாங்க வழங்கி வருகிறோம். இந்தத் தொழிலுக்கு வரும் முன் பத்து வருடமாக தனியார் நிறுவனத்தில் மனிதவள நிர்வாகியாக நான் வேலை பார்த்து வந்தேன். பல முன்னணி நிறுவனத்தில் உயர் பதவியில் இருந்திருக்கிறேன். என்னைப் போல என் முதல் தங்கையும் தனியார் நிறுவனத்தில் உயர் பதவியில் இருந்தார். கடைசி தங்கை கெமிக்கல் துறையில் பொறியியல் பட்டப்படிப்பு முடித்தவர். என் கடைசி தங்கை சொன்ன அந்த ஒரு விஷயம்தான் நாங்க இந்தத் தொழிலை எடுத்து நடத்த காரணம்.
ஆர்கானிக் பொருட்கள் என்றால் அதில் ரசாயனம் கலப்பு இருக்காது. அதனால் அதன் விலையும் அதிகம் என்றுதான் நினைக்கிறோம். ஆனால் அதே பொருட்களை நியாயமான விலையில் கொடுக்க முடியும் என்று எங்களுக்குப் புரிய வைத்தது என் கடைசி தங்கைதான்.
அதன் பிறகுதான் ஆர்கானிக் பொருட்களில் சோப் முதல் ஷாம்பு வரை அனைத்துப் பொருட்களையும் நியாயமான விலையில் கொடுக்க முடியும் என்று எங்களுக்கு புரிந்தது. அதன் அடிப்படையில்தான் நாங்க எங்களின் நிறுவனத்தை 2019ல் ஆரம்பித்தோம். இதில் சருமம் மற்றும் தலைமுடிக்குதான் நாங்க முக்கியத்துவம் தருகிறோம்.
அதில் நலங்குமாவு சோப், லெமன் சோப், வெட்டிவேர் சோப், ஆம்லா-குப்பைமேனி சோப், காபி பீன் சோப், ஆலோவேரா சோப், மில்க் சோப், பீட்ரூட் சோப், கேரட் சோப், ஒயிட் டெர்மரிக் சோப், சார்கோல் சோப், ரோஸ் சோப் என பல வகையான சோப்புகளை தயாரிக்கிறோம்.
சோப் மட்டுமில்லாமல் பேஸ் வாஷில் வறண்ட சருமம், ரெட் வைன் மற்றும் சார்கோல் என மூன்று வகையினை தயாரிக்கிறோம். பெரியவர்களுக்கு மட்டுமில்லாமல் குழந்தைகளுக்கும் ஹெர்பல் பாத்-குளியல் பவுடர், மில்க் டாய் சோப், நலங்குமாவு பவுடர், கிட்டி லிப்பாம், மெக்ரூன் லிப்பாம் கொடுக்கிறோம்.
கேசத்திற்கு சிகக்காய் பவுடர், ஹேர் ஆயில், ஆன்டி டேன்ட்ரப் ஷாம்பு, ஹேர் மாஸ்க், ஷாம்பு பார் தயாரிக்கிறோம். இதுதவிர வாசனை மெழுகுவர்த்தியும் உள்ளது. மேலும் புதிய ஆர்கானிக் பொருட்களை தயாரிக்கும் எண்ணமும் உள்ளது’’ என்றவர், தொழில் துவங்கியது பற்றி விவரித்தார்.‘‘பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு பிராஜக்டில் ஏதாவது ஒன்று செய்ய வேண்டும்.
அதில் என் தங்கை ஆர்கானிக் சோப் ஒன்றை தயாரித்தார். அவளுடன் படித்த மாணவன் ஒருவர் பிரபல சோப் தயாரிப்பாளரின் மகன். அதனால் என் தங்கை கண்டுபிடித்த சோப்பின் ஃபார்முலா மற்றும் பேட்டென்ட் உரிமையை அவருக்கு தரும்படி கேட்டார். அதற்கு பெரிய ெதாகை தருவதாகவும் கூறினார். எல்லாவற்றையும் விட பெண்கள் சொந்தமாக தொழிலில் ஈடுபடும் போது அதில் பல பிரச்னைகள் மற்றும் சவால்களை சந்திக்க நேரிடும்.
அதை எதிர்கொள்ள முடியாது என்றார். பெண்களால் முடியாதது எதுவும் இல்லை என்பதை நிரூபிக்க தான் அவளுக்கு பக்கபலமாக இருக்க நினைத்தோம். நாங்க இருவரும் பார்த்து வந்த வேலையை ராஜினாமா செய்தோம். வீட்டில் எல்லோரும் இந்த விஷப்பரீட்சை அவசியமா என்றார்கள்.
ஆனால் நாங்க துணிச்சலுடன் செயலில் இறங்கினோம். வெற்றியும் பெற்றுவிட்டோம். பெண்களுக்கு தன்னம்பிக்கை, மனதிடம், லட்சியம், சரியான திட்டமிடுதல் இருந்தால் எந்த துறையிலும் எங்கள் மூவரை போல் சாதித்து காட்டலாம்’’ என்றவர், தங்களின் தயாரிப்புகளுக்கு ISO மட்டுமில்லாமல் GMD மற்றும் இம்போர்ட் எக்ஸ்போர்ட் லைசென்சும் பெற்றுள்ளார்.
‘‘எங்களின் தயாரிப்புப் பொருட்களை இந்தியா மட்டுமில்லாமல் வெளிநாடுகளுக்கும் விற்பனை செய்கிறோம். நார்வே, ஆப்பிரிக்கா, டான்சானியா போன்ற நாடுகளில் காஸ்மெடிக் பொருட்களை விற்பனை செய்ய எளிதாக அனுமதி கொடுக்க மாட்டார்கள். நாம் அதை பரிசோதனை செய்து தயாரித்தாலும் அவர்களும் பல்வேறு ஆய்வுகளை நம் பொருட்கள் மேல் மேற்கொள்வார்கள். அதன் தரத்தை சோதித்த பிறகுதான் அனுமதி வழங்குவார்கள்.
எங்கள் தயாரிப்புகளை இந்த மூன்று நாடுகளுமே பரிசோதித்து ஏற்றுக்கொண்டது எங்க ஆர்கானிக் தயாரிப்புகளுக்கு கிடைத்த உயரிய அங்கீகாரமாக கருதுகிறோம். காரணம், எங்களின் ஒவ்வொரு பொருளின் ஃபார்முலா அர்ச்சனாவால் தயாரிக்கப்படுகிறது. அதில் எங்களின் ஃபேஸ் சீரம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினைப் பெற்றிருக்கிறது. எங்க வீட்டுக்கு வருபவர்கள் எல்லோரும் எங்க பெற்றோரிடம் ‘மூன்று பெண்களா..? எப்படி கரை சேர்க்கப் போறீங்க’ன்னுதான் கேட்பாங்க. அவர்கள் இன்று ‘மூன்று பெண்களும் தங்கங்களாக இருக்காங்க... திறமையுடன் ஒன்றுபட்டு முத்துப் போல் ஜொலிக்கிறாங்க’ன்னு பாராட்டுறாங்க’’ என்றவர், பிசினசில் சந்தித்த பிரச்னைகளை பகிர்ந்தார்.‘‘எந்த பிசினசில்தான் பிரச்னை இருக்காது. எங்களுக்கும் பிரச்னை வரும். அதை நேர்மையான முறையில் சரி செய்திடுவோம்.
அதே போல் சில பொருட்களை தயாரிக்கும் போது நாம் நினைக்கும் வடிவில் வராது. எங்களின் சோப்பில் பசும்பால் சேர்க்கிறோம். ஆரம்பத்தில் பால்கோவா போல் திரண்டுவிடும். ஆறு ஏழு முறை டிரையலுக்குப் பிறகுதான் சோப்பாக வந்தது. எங்களின் அனைத்து பொருட்களும் இங்கு கிடைக்கும் மூலப்பொருட்கள் கொண்டுதான் தயாரிக்கிறோம். ஃபாரின் பொருட்களை தவிர்த்து நமக்கு இங்கு எளிமையாக கிடைக்கும் குப்பைமேனி, பூலாங்கிழங்கு வைத்துதான் தயாரிக்கிறோம்.
எங்களின் மில்க் சோப்பினை இரண்டு மாத குழந்தைக்கும் பயன்படுத்தலாம். சென்னை அடையாறில் உள்ள புற்றுநோய் சிகிச்சை மையத்தில் அங்குள்ள குழந்தைகள் எங்களின் மில்க் சோப்பினைதான் பயன்படுத்தி வருகிறார்கள்’’ என்றவர்களுக்கு பக்கபலமாக இருப்பது அவர்களின் பெற்றோர்.
‘‘நாங்க சக்சஸ் செய்ய முக்கிய காரணம் எங்களின் பெற்றோர்கள் மற்றும் எங்களின் கணவர்கள். அப்பா கல்வியை கொடுத்தார். அம்மா சுதந்திரமாக, தைரியமாக செயல்பட உதவினார். எங்க மூவரின் கணவர்கள் எல்லோரும் உயர் பதவியில் இருக்கிறார்கள். ஆனால் தொழிற்சாலைக்கு வந்துவிட்டால் எங்களுடன் சேர்ந்து வேலை பார்க்க ஆரம்பித்து விடுவார்கள்.
எங்களின் வளர்ச்சிக்கு குடும்பம் ஒரு பக்கம் இருந்தாலும், வாடிக்கையாளர்கள் இல்லாமல் நாங்க இல்லை. அவர்களின் தொடர் ஆதரவுதான் நாங்க வெற்றி பெற காரணம். வெற்றி பெற்றுவிட்டோம் என்று அமைதியாக இல்லாமல், அடுத்து என்ன பொருட்களை தயாரிக்கலாம் என்று ஆய்வு செய்து கொண்டு இருக்கிறோம்’’ என்ற சகோதரிகள் பல விருதுகளை பெற்றுள்ளார்கள்.
விஜயா கண்ணன்
|