Zip & Go Sarees



குர்த்தி அல்லது சல்வாரை எப்படி S,M,L,XL,XXL,XXXL என அளவு பார்த்து வாங்குகிறோமோ அதுபோல சேலையையும் வாங்க முடியும். அந்தளவுக்கு ரெடி டூ வேர் சேலைகளை பக்காவாக மாற்றித் தருகிறோம் எனப் பேச ஆரம்பித்தவர், நங்கநல்லூரில் உள்ள சாய் சில்க்ஸ்  நிறுவன உரிமையாளரான ராஜி.
‘‘ரெடி டூ வேர் சேலை தவிர, பிளவுஸ் சேலையோடு  இணைத்து வருகிற, ZIP&Go சேலை மாடல் ஒன்றையும் நாங்கள் அறிமுகப்படுத்தி இருக்கிறோம்’’ என்றவர், ‘‘பெண்கள் குர்த்தி, சல்வார், சுடிதார் போடுகிற நேரத்தில் சேலையும் உடுத்த முடியும் என்கிற கான்செப்ட்தான் இது’’ என்றவாறே, ஃப்ராக் அணிவது போல சேலையை அணிந்து காட்டியது பார்க்க வியப்பை ஏற்படுத்தியது.

‘‘பெண்களில் சிலர் என்னிடம் சொல்வது, ‘உங்களுடையது சேலை கடையா? வேண்டவே வேண்டாம். குர்த்தி, சல்வார், சுடி என்றால் சொல்லுங்க வாங்குகிறோம்’’ என்பார்கள். குர்த்தி,
சல்வாருக்கு பெண்கள் கொடுக்கும் வேல்யூஸ் ஏன் சேலைக்கு இல்லையென யோசிக்க ஆரம்பித்து, இன்றைய இளம் தலைமுறைப் பெண்களை எப்படியாவது சேலை கட்ட வைக்க வேண்டுமென, சில புதுமைகளை சேலையில் புகுத்தினேன்’’ என்றவாறு மேலும் தொடர்ந்தார்.

‘‘இன்றைய பெண்களுக்கு சேலை கட்ட ஆசை இருக்கு. ஆனால். கட்டத் தெரியல. வீட்டில் இருக்கும் பெரியவர்கள் கட்டிவிட்டாலும் பிடிக்கல. பார்லர் சென்று இன்ஸ்டென்டா செலிபிரேட்டி ஸ்டைலில் சேலை கட்ட நினைக்கிறார்கள். 

ஒவ்வொரு முறையும் பார்லர்  சென்று  சேலை உடுத்த எல்லாப் பெண்களாலும் முடியாது. சேலைக்கென இருக்கும் பாக்ஸ் போல்டிங், அயனிங் எல்லாம் நேரத்தையும் பணத்தையும் விரயம் செய்கிற விஷயமாக இருக்கிறது.

நிறைய யோசித்ததில், யார் உதவியும் இல்லாமலே பெண்கள் சேலை கட்டும் கான்செப்ட்டை கொண்டுவர நினைத்தேன். எனக்குத் தோன்றியதை வரைந்து, அளவுகளோடு படமாக்கி, என்னையே சோதனைக்கு உட்படுத்தி, ரெடிமேட் சேலையாக பயன்படுத்தியதில், அதிலுள்ள குறை நிறைகள் புரிந்தது. அவற்றையும் நிவர்த்தி செய்து, பத்தே செகண்டில் அணிகிற ரெடிமேட் சேலை கான்செப்ட்டை முதலில் உருவாக்கினேன்.

அடுத்ததாக உங்களிடம் கட்ட முடியாமல் அலமாரிகளை அடைத்துக் கொண்டிருக்கும் சேலைகளையும், ரெடி டூ வேர் சேலையாக மாற்றித் தருகிறேன் என அறிவித்ததுமே, முதல் நாள் 10 சேலை, அடுத்த நாள் 30, அதற்கு அடுத்த நாள் 60, அதற்கு அடுத்த நாள் 100, அதற்கும் அடுத்த நாள் 1000ம் என சேலைகள் குவியத் தொடங்கியது. 

இன்று லட்சக்கணக்கான சேலைகளை, ரெடி டூ வேராக மாற்றிக் கொடுத்திருப்பதுடன், இதன் அடுத்தகட்டமாக இன்பில்ட் இன்ஸ்கெட் ஸாரி, மொபைல் பாக்கெட் ஸாரி என மாற்றி, சேலையில் மிகப்பெரிய அனுபவத்தையே சேர்த்து வைத்திருக்கிறேன்’’ என அழுத்தமாகவே புன்னகைக்கிறார் ராஜி.

‘‘சேலையை ஒரு இடத்தில் தேர்வு செய்து, பிறகு அதற்கு தேவைப்படும் ரவிக்கையை சேலையில் இருந்து வெட்டி, லைனிங் கிளாத் எடுத்து, அது இரண்டையும் வேறொரு இடத்தில்
தைக்கக் கொடுத்து, சேலைக்கு பால்ஸ், முந்தானை, உள்பாவாடை என இத்தனையும், நேரத்தை விரையம் செய்கிற விஷயமாக இருப்பதுடன், செலவை கூடுதலாக்கும் ஒன்றாகவும் பெண்கள் பார்க்கிறார்கள்.

ZIP & Go சேலையில் பிளவுஸ் சேலையோடு அட்டாச்சாகி வருவதுடன், பெண்கள் அணிகிற லெக்கின்ஸ், த்ரீ போர்த், சுடிதார் பாட்டத்தின் மேல்கூட சேலையை அப்படியே கோர்ட் அணிவது போல அணிந்து, ஜிப்பினை போட்டுவிட்டால் சேலையில் நீங்கள் பெர்ஃபெக்ட் லுக் என்பதோடு, சேலை கட்டுவதற்கு எடுக்கும் நேரம் இரண்டே நொடி’’ எனப்புன்னகைத்தவர், ‘‘ஜிப்பே வேண்டாம் என்பவர்கள், பிளவுஸின் இரண்டு பக்கமும் நாட் போட்டு  உடுத்தலாம்’’ என்கிறார்.‘‘ரெடி டூ வேர் சேலை தவிர்த்து, ஐயர், ஐயங்கார், மாதுவா, மராத்தி ஸ்டைல் மடிசார்களையும் ரெடி டூ வேராக தயாரித்து தருகிறோம். மடிசாரை பேன்ட் மாட்டுவது போல மாட்டி முந்தானையை சுற்றினால் மடிசார் ரெடி. மாமி லுக்கும் ரெடி.

தினமும் சேலை கட்டுபவர்களுக்கு உள்பாவாடையால் இடுப்பைச் சுற்றிலும் தழும்பு இருக்கும். ஜிப் அண்ட் கோ ஸாரியில் இந்தப் பிரச்னைகள் வராது. காரணம், இதற்கு உள்
பாவாடை தேவையில்லை. அதேபோல் வயதான முதியவர்கள் சேலையை கட்டி தடுமாறிய நிலையில் படிகளில் ஏறி வருவார்கள். 

வயதான மாமிகளும் மடிசார் சேலையை சுற்றிய நிலையில், திருமணங்களுக்கு தடுமாறி படியேறுவார்கள். வெளிநாட்டவர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நிலையும் இதுதான். இவர்களுக்கெல்லாம் ரெடி டூ வேர் மற்றும் ஜிப் & கோ சேலைகள் மிகப் பெரிய வரப்பிரசாதம். இன்று 6XL, 7XL அளவுகளிலும் சேலைகளை தயாரித்துத் தருகிறோம்.

எங்களின் தயாரிப்பை இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து பதிவேற்றி வருவதால் யு.எஸ், யுரோப், ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா என குறைந்தது ஒரு நாளைக்கு 7 நாடுகளில் இருந்தாவது வெளிநாட்டுப் பெண்கள், ஜிப் அண்ட் கோ மற்றும் ரெடி டூ வேர் மடிசாரை வாங்க ஆர்வமாக வருகிறார்கள்.

நான் ஸாரி லவ்வர்..!

‘‘எனக்கு ஊர் திருநெல்வேலி. திருமணமாகி சென்னை வந்த பிறகு, 23 வருடமாகவே தொழில் சார்ந்து பயணிக்கிறேன். கொரோனாவுக்கு முன்புவரை நான் பொறுப்பான கணித ஆசிரியர். காரணம், கணிதத்தில் நான் எம்.எஸ்.ஸி. பட்டதாரி. கூடவே மாண்டிசோரி பள்ளி ஒன்றையும் நடத்தி வந்தேன். கொரோனாவுக்குப் பிறகு வாழ்க்கை தலைகீழாய் மாற, இப்போது செய்வது டெக்ஸ்டைல் பிசினஸ். எந்த வேலையில் இருக்கிறேனோ, அதில் ஸ்ட்ராங், யுனிக், ஆல்வேல் ஃபர்ஸ்ட் என்பதுதான் எனக்கான வெற்றி.

சின்ன வயதில் இருந்தே சேலை கட்டுவது எனக்குப் பிடித்த விஷயம். தூங்கும்போதும் சேலையில்தான் தூங்குவேன். ஆசிரியராகவும் இருந்ததால் சேலை தவிர வேறு உடைகள் எனக்கில்லை. சுருக்கமாக நான் ஸாரி லவ்வர். அதனால்தான் டெக்ஸ்டைலில் நான் செய்வது சேலை விற்பனை மட்டுமே.

தொழில் தொடங்கிய புதிதில் பட்டுச் சேலைகளில் மட்டுமே கவனம் செலுத்தியவள், பட்டுநூல் தயாரிப்பு, சேலை தயாரிப்பு குறித்த தகவல்களை களத்தில் இறங்கி சேகரித்து, மெட்டீரியல்களை ஹைதராபாத்தில் இருந்து மொத்தமாக இறக்கி, புடவை தயாரித்ததில் லாபம் அதிகமானது. எனது சேலை டிசைனும் யுனிக்காக இருந்ததால் வரவேற்பும் அதிகமானது.

கிடைத்த லாபத்தை வாடிக்கையாளர்களுடன் பகிர்ந்துகொள்ள முடிவெடுத்து, ஒரு சேலை வாங்கினால் 3 சேலைகள் இலவசம் என்ற விளம்பரத்தை செய்ய ஆரம்பித்தேன். இதில் முதல் நாள் வருமானமே 2 லட்சத்தை தொட்டது. எனக்கு லோன் தர மறுத்த வங்கிகள், ஒரே நாள் வருமானத்தைப் பார்த்து, என்னைத் தேடிவந்து லோன் கொடுக்க ஆரம்பித்தார்கள். 

கடையை விரிவுப்படுத்தி, சொந்தக் கட்டிடமாக மாற்றினேன். இன்று என் யூனிட்டில் 80 ஊழியர்கள் வேலை செய்கிறார்கள்.எந்தத் தொழிலையும் குறைந்த லாபத்தில் செய்தால், அது நம்மை என்றைக்கும் தோற்கடிக்காது என்பது எனது அனுபவத்தில் நான் கண்ட உண்மை.’’

செய்தி: மகேஸ்வரி நாகராஜன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்