மும்பை ஐபிஎல் அணியில் தமிழ்நாட்டுப் பெண்!



தமிழ்நாட்டைச் சேர்ந்த கமலினி 19 வயதிற்குட்பட்ட இந்திய மகளிர் அணிக்காக விளையாடி வருகிறார். மேலும் இந்த வருடம் நடக்க இருக்கும் பெண்கள் ஐபிஎல் போட்டியில் மும்பை அணிக்காக தேர்வாகியுள்ளார். அதில் இவர் அந்த அணிக்காக விளையாடுவதற்காக 1.60 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளனர் மும்பை அணியினர். 
இவர் விளையாடிய அனைத்து மேட்சுகளிலும் தன்னுடைய அடையாளத்தினை பதிவு செய்துள்ளார் கமலினி. அவரின் இந்த கடுமையான உழைப்பிற்கு கிடைத்த பரிசுதான் குறைந்த வருடங்களிலேயே இந்திய அணிக்காக  விளையாட தேர்வாகி இருப்பது. 16 வயதே நிரம்பிய கமலினி யார்? எப்படி இந்திய அணிக்கு தேர்வானார் என்பது குறித்து பார்ப்போம்.

மதுரையில் பிறந்தவர் கமலினி. ஆரம்பத்தில் ஸ்கேட்டிங் விளையாட்டுகளில் விருப்பம் இருந்தது. அவருடைய அண்ணன் கிரிக்கெட் விளையாடுவதை பார்த்து அவருக்கும் ஆர்வம் ஏற்பட்டது. தன் விருப்பத்தை அப்பாவிடம் கூறவே அவரும் ‘உனக்குப் பிடிச்சதை செய்’ என்று ஊக்கம் கொடுத்துள்ளார். அதோடு நில்லாமல், கமலினியின் அப்பாவும் மாலை நேரத்தில் அவருக்குப் பயிற்சி அளித்துள்ளார். 

இவர் விளையாட அப்பா அவருக்கு பந்து போட என மேலும் அவரை உற்சாகப்படுத்தியுள்ளார். கிரிக்கெட் மேல் இருக்கும் இவரின் ஆர்வத்தை புரிந்து கொண்டு மதுரையில் இருக்கும் அகாடமியில் இணைந்து விளையாடினார். அதில் தன்னுடைய முதல் போட்டியில் சதம் அடித்துள்ளார். அப்போதுதான் தனக்கு கிரிக்கெட் விளையாட வருகிறது என்பதை புரிந்து கொண்டு மதுரையிலிருந்து சென்னைக்கு வந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தொடங்கியுள்ளார்.

பெண்கள் விளையாடுவதற்கு போதுமான இடங்கள் கிராமங்களில் இல்லை. பெண்கள் கிரிக்கெட் விளையாடலாம் என நினைத்தாலும் அதில் ஆண்களே அதிகமாக கோலோச்சுவதால் அங்கு சொல்லித் தருவதற்கு, பயிற்சி செய்வதற்கு நிறைய சிக்கல்கள் இருக்கிறது. மதுரையில் விளையாடுவதற்கு போதுமான வசதிகளும் இல்லை. 

அதனால் அங்கிருந்து விளையாடுவதற்காகவே சென்னைக்கு வந்து சென்றுள்ளார். கமலினியின் அப்பா அடிக்கடி சென்று வருவதற்கு பதில் சென்னையிலேயே தங்கிக் கொள்ளலாம் என சொல்லி சென்னையில் ஒரு மாத காலம் தங்கி கிரிக்கெட் பயிற்சிகளுக்கு சென்றுள்ளார் கமலினி. சென்னை வந்த பிறகுதான் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கிரிக்கெட் விளையாடுவதற்கு தயாராகியுள்ளார்.

அங்கிருந்த பயிற்சியாளர்கள் கிரிக்கெட் விளையாடுவதற்கு நுணுக்கங்களை சொல்லிக் கொடுத்து அவரை ஊக்கப்படுத்தியுள்ளனர். அவருக்கு விளையாட்டின் மேல் இருந்த ஆர்வத்தை புரிந்து கொண்டு பயிற்சியாளர்கள் மற்றும் அவரின் அப்பா அவர் அதில் மிகப்பெரிய ஸ்கோரினை பெற வேண்டும் என்று ஊக்கப்படுத்திக் கொண்டே இருந்துள்ளனர். மாநில அளவிலான போட்டிகளில் அவரின் பெஸ்ட்டினை கொடுத்துள்ளார்.

பல மேட்சுகளில் அரை சதம் அடித்துள்ளார். தனக்கு சிஎஸ்கே ஹெல்மெட் வேண்டும் என தன் பயிற்சியாளரிடம் கமலினி கேட்ட போது, மாநில அளவிலான மேட்சில் இரண்டு சதம் அடித்தால் தருவதாக பயிற்சியாளர் வாக்கு அளித்துள்ளார். அதற்காகவே இரண்டு சதமல்ல மூன்று சதமடித்து, தன்னுடைய இலக்கான சிஎஸ்கே ஹெல்மெட்டினை அடைந்துள்ளார். அவரின் திறமைக்கு பரிசாக தமிழகப் பெண்கள் அணியை நடத்தும் பொறுப்பு கமலினியிடம் வந்தது.

எல்லாம் கைகூடி வரும் சமயத்தில் ஒரு ஸ்பீட் பிரேக் ஏற்படும் என்று சொல்வார்கள். கமலினியின் வாழ்க்கையிலும் அது நிகழ்ந்தது. அவரின் அப்பாவிற்கு இதய நோய் வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த சமயத்திலும் அவருடைய அப்பா ‘நீ கிரிக்கெட் விளையாட போ... நான் சரியாகி விடுவேன்’ என தைரியம் சொல்லி அனுப்பி வைத்துள்ளார். அந்த மேட்சில் சதம் அடித்தார். இதன் மூலம் 19 வயதிற்குட்பட்டவர்களின் தரவரிசைப் பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு வந்துள்ளார்.

பேட்டிங் மட்டுமில்லாமல் பவுலிங் திறனும் இருந்ததால், விக்கெட் கீப்பராக பயிற்சி எடுத்தால் சீனியர்ஸ் அணியில் இடம் பிடிக்கலாம் என நண்பர்கள் சொல்ல அதற்கான பயிற்சியில் கடுமையாக ஈடுபட ஆரம்பித்துள்ளார். கமலினி கலந்து கொண்ட 8 போட்டிகளில் 393 ரன்கள், ஒரு சதம், 3 அரை சதம் என அடித்து தன் திறமையை வெளிக்காட்டினார். 

இரண்டு முறை சிறந்த பேட்டிங் மற்றும் வருடத்தின் சிறந்த பேட்டிங் செய்ததற்கான பரிசுகளையும் பெற்றார். இதன் மூலம் நேரடியாகவே U23 சீனியர் அணிகளுடன் விளையாட வாய்ப்பு கிடைத்தது. அதிலும் சிறந்த பேட்டிங்கிற்காக பரிசு பெற்றுள்ளார்.

இந்த வெற்றிகள் அவருக்கு 19 வயதிற்குட்பட்ட இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றுக் கொடுத்தது. இந்திய அணியின் ஜெர்சியுடன் களமிறங்கிய கமலினி பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 44 ரன்கள் குவித்தார். 

பேட்டிங், பவுலிங், வீக்கெட் கீப்பிங் என மூன்று துறையிலும் ஆல் ரவுண்டராக திகழும் கமலினியை இந்த வருடம் நடைபெற இருக்கும் மகளிர் ஐபிஎல் போட்டியில் விளையாட 1.60 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்துள்ளது மும்பை அணி. பிடித்ததை விடாமுயற்சி மற்றும் கடுமையான பயிற்சியோடு செய்தால் எவ்வளவு பெரிய எல்லைக்கும் செல்லலாம் என்பதற்கு கமலினி உதாரணம்.

மா.வினோத்குமார்