பதற்றமில்லாத உடற்பயிற்சி தேவை!
மூளையின் முடிச்சுகள்
புது வருடம் தொடங்கியதுமே, பலவித உறுதிமொழிகளோடு (Resolution) நமது நாட்களை ஆரம்பிப்போம். இதில், பெரும்பாலும் அவரவர் தனிப்பட்ட வாழ்க்கையில் செய்த நல்ல விஷயங்களைக் கூடுதலாக மேம்படுத்தவும், கடந்த ஆண்டுகளில் செய்த தவறுகளை மீண்டும் செய்யாமல் இருக்கவும் உறுதிமொழி எடுப்போம்.சிலர் புது வேலைக்கு மாற நினைப்பார்கள். சிலர் புது வீடு கட்ட வேண்டும் என்பார்கள். சிலர் எனது நீண்டநாள் கனவை நிறைவேற்றப் போகிறேன் என்பார்கள். இப்படியாக மனிதர்கள், தங்களுக்குத் தாங்களே விதவிதமாக உறுதிமொழிகளை எடுத்து செயல்படுவதைப் பார்க்கும் போது, பார்க்கும் நமக்கும் எனர்ஜி தொற்றிக் கொள்ளும். உடனிருப்பவர்கள், இம்மாதிரியாக உறுதிமொழி எடுப்பவர்களை, மரியாதையுடன் அல்லது அவர்களுக்கு உதவும் பொருட்டு உறுதுணையாகவே இருப்பார்கள். நம் மக்கள் சிரிப்பதும், கிண்டல் செய்வதும், ஒரே ஒரு உறுதிமொழி எடுப்பவர்களைப் பார்த்து மட்டுமே. அதாவது, உடற்பயிற்சி செய்து உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ளப் போகிறேன் எனக் கூறும் நபர்களைப் பார்த்தே அதிகமாக எள்ளி நகையாடுவார்கள். கூடுதலாய் இன்று சமூக வலைத்தளங்களில், இவர்களை கிண்டல் செய்து, மீம்ஸ்களை பலவிதமாகப் போட்டு கலாய்த்து தள்ளுகிறார்கள்.
உடல் எடை குறைக்கிறேன் பேர்வழி என, உறுதிமொழி எடுத்தவர்களும், உடற்பயிற்சிக் கூடங்கள் வழங்குகிற தள்ளுபடி விளம்பரங்களைப் பார்த்து, மொத்த பணத்தையும் கட்டிவிடுவார்கள். ஆனால், ஒரு வருடத்தில் உடற்பயிற்சி கூடத்திற்கு இவர்கள் சென்ற நாட்களை விரல் விட்டு எண்ணி விடலாம். இம்மாதிரி உறுதிமொழிகளை தொடரமுடியாமல் போவதால்தான், எடை குறைப்பு என்ற வார்த்தையை பார்த்தாலோ அல்லது கேட்டாலோ பல்வேறு கேலி மற்றும் கிண்டல்கள் வெளிவருகிறது.
உடற்பயிற்சி எதுவும் செய்யாமல் இருப்பவர்கள் ஒரு பக்கம் என்றால், மற்றொரு பக்கம், அளவுக்கு அதிகமாகவே உடற்பயிற்சி செய்து தன்னை வருத்திக் கொள்பவர்களும் அதிகமாகிறார்கள். ஒரு திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த், ‘மகிழ்ச்சி’ என்கிற வார்த்தையை சொன்னது, எந்த அளவிற்கு பிரபலமாக்கப்பட்டதோ, அதே அளவிற்கு உடற்பயிற்சி மற்றும் டயட் போன்ற வார்த்தைகளும் பிரபலமாக்கப்பட்டு இருக்கிறது.
எந்தவொரு விஷயமும் நமது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். டயட் இருப்பதற்காகவே பல ஆயிரங்களை செலவழிக்கும் நபர்களை கண்கூடாகவே நாம் பார்க்கிறோம். உண்மைகள் என்னவெனப் புரியாமலே அல்லது புரிந்து கொள்ள விரும்பாமலே மக்கள் இருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
அதீத உடற்பயிற்சியும், அதீத உணவுக்கட்டுப்பாடும் சுய வதைக்கு நம்மை இட்டுச் செல்லும். சுய வதையினை என்றைக்குமே மக்கள் வெறுப்பார்கள். அதனால்தான், உடற்பயற்சியும் உணவுக் கட்டுப்பாட்டிற்கான ‘டயட்’ என்கிற வார்த்தையும், அதிகம் நம்மை பயப்படவைக்கும் பேசுபொருளாக மாறி நிற்கிறது.
நமது மருத்துவத்துறை மற்றும் உலக சுகாதார அமைப்பின் ஆலோசனைபடி, உடற்பயிற்சிக்கு ஒரு நாளில் நாற்பத்தைந்து நிமிடங்கள் அல்லது வாரத்தில் நான்கு நாட்கள் என மொத்தமாக வாரத்தில் மூன்று மணி நேரம்தேவைப்படும். அப்போதுதான்உடலிலுள்ள மெட்டபாலிசம் சரியாக இருக்கும் என்கிறார்கள்.
அதாவது, நமக்கு பிடித்துச் செய்கிற செயல்பாடுகளில் உள்ள ஓடுவது, விளையாடுவது, நடனமாடுவது, யோகா செய்வது, நடப்பது போன்ற பயிற்சிகளில், ஒன்றினை எடுத்து, முழு மனதோடு செய்தாலே போதுமானது. எந்தவொரு உடற்பயிற்சியும் உடலையும், மனதையும் இலகுவாக்க செய்யப்பட வேண்டியதாக இருக்க வேண்டும்.
மேலும், டயட் என்று சொல்வதை விட, ஒவ்வொரு மனிதரின் உடல்வாகுக்கு ஏற்ற கலோரிகள் இருக்க வேண்டும் என்று சொன்னால் சரியாக இருக்கும். வேலை நிமித்தமாக தொடர்ந்து உட்கார்ந்து கொண்டே இருப்பவர்களின் கலோரி பெரும்பாலும் 1800 வரை இருக்க வேண்டும். உடல் உழைப்பு ஓரளவு இருப்பவர்களின் கலோரி 2200 ஆகவும், உடல் உழைப்பு மட்டுமே மூலதனம் என்று இருப்பவர்களின் கலோரி 2500 வரை இருக்கும்படியாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
கலோரி என்பது, நம் பசிக்குத் தக்க குறைந்தது 4 இட்லி முதல் 3 தோசையில் தொடங்கும். தினம் நாம் சாப்பிடுகிற உணவுகளில் உள்ள பருப்பு, கீரை, பழங்கள், மீன், கறி, முட்டை, சப்பாத்தி போன்றவையே நம் உடலுக்கு போதுமானது. ஆனால், சிலர் மன அழுத்தம் அல்லது கோபத்தில் இருக்கிறேன் என்று தன்னுடைய பசிக்கு மீறி அதிகமாகச் சாப்பிடுவது அல்லது சாப்பிடாமல் பசியோடு இருப்பது என்றிருப்பார்கள். தூக்கமின்றி இருப்பது, தொடர்ந்து மனச்சோர்வுக்கு ஆளாவது என்று, ஆரோக்கியமான உடலை, தாங்களே கெடுத்துக் கொள்வதே அடிப்படை விஷயமாக இருக்கும் என்பதை மறந்து விடுகிறார்கள்.
நாம் உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி பற்றியே எப்பொழுதும் பேசிக் கொண்டிருக்கிறோம். இயல்பாக பிடித்துச் செய்யும் விஷயங்களில் விளையாட்டு மற்றும் நடனம் எப்போதும் இருக்கும். அதனால்தான், இன்றும் விளையாட்டை மையப்படுத்தி எடுக்கின்ற படங்கள் கொண்டாடப்படுகிறது. மருத்துவ ஆய்வுகளின் படி, நன்றாக விளையாடி படிக்கும் குழந்தைகளின் கவனிக்கும் திறன், நினைவுத்திறன் நன்றாக இருக்கும் என்கிறார்கள்.
விளையாடாமல் படிக்கும் குழந்தைகளின் மனமும், உடலும் ஆரோக்கியத்தை வெகுவாக இழக்கிறது என்கிறார்கள். அதனால்தான், பள்ளிகளில் விளையாடுவதற்கென ஒரு வகுப்பு மாணவர்களுக்கு கண்டிப்பாக வேண்டுமென்று தொடர்ந்து கூறி வருகிறோம்.பல்வேறு விளையாட்டு சார்ந்த அமைப்புகள் இன்று சிறுசிறு குழுக்களாக இருக்கிறது.
அதில் அனைத்து வயதினரும் பங்கேற்கவும், பல்வேறு தரப்பட்ட மனிதர்களும் ஒன்று சேர்ந்து விளையாடவும் வாய்ப்புகள் இருக்கிறது. இதன் மூலமாக வீடு, வேலை என்பதைத் தாண்டி நமக்கான, பிடித்த உலகத்தை உருவாக்கிக் கொள்ளவும் நம்மால் முடியும். இப்படித் தொடர்ச்சியாக விளையாடும் போது, நமது உடலும், மனதும் தொடர்ந்து ஒத்துழைக்கும். எனவே எங்கெல்லாம் விளையாட வாய்ப்பிருக்கிறதோ அதைத் தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அடுத்ததாக நடனம். நடனம் உடலுக்கும், மனதுக்கும் ஆரோக்கியத்தை வலுப் படுத்தக்கூடிய விஷயமாக இருக்கிறது. அதனால்தான் சமூக வலைத்தளங்களில் வயது வித்தியாசமின்றி, பலரும் பாட்டு, நடனம், ரீல்ஸ் என பதிவேற்றுகிறார்கள். நடனமாட தொடங்கும் போது, உடல் பாகங்கள் அத்தனையும் அசைவில் இணையும். இதில் பரதம் உடலின் கீழ் பகுதியையும், ஜும்பா உடலின் நடுப் பகுதிகளையும் வலுப்படுத்துகிறது. பெல்லி நடனம் முதுகு தசைகளை சமமாக்குகிறது.
உடல் ஆரோக்கியத்திற்காக, உணவிலும், உடற் பயிற்சியிலும் நம்மை வதைத்துக் கொள்ளாமல், நமக்கு மிகவும் பிடித்துச் செய்கிற விஷயங்களாக இருக்குமாறு பார்த்துக் கொண்டால், உடல் பருமன், மன அழுத்தம், உடல் சோர்வு அனைத்தும் தானாகவே சரியாகிவிடும்.
இன்றைய வாழ்கை சூழலில் நம்மை அழுத்துகிற பதற்றம், மன அழுத்தம், தேவையில்லாத எண்ணங்களில் இருந்து எளிதாக விடுபட முடியும். இவை அனைத்துமே நம்மை நாம் ஆரோக்கியமாக வைக்க நாம் செய்கின்ற முதலீடுகள் என்பதை ஒருபோதும் மறந்து விட வேண்டாம்.
காயத்ரி மஹதி, மனநல ஆலோசகர்
|