உடன்பிறவா உறவுகள்!
உன்னத உறவுகள்
ஒரே குடும்பத்தின் அண்ணன்-தம்பிகள், அக்கா-தங்கைகள் என்றால், நிகழ்வுகள் நடைபெறும் போதே, அவர்களின் ஈடுபாட்டிலிருந்து நம்மால் கணித்து விட முடியும். இயற்கையிலேயே ரத்த பந்த உறவுகள் என்றால் பாசம் கட்டி இழுக்கும். யாருக்கேனும் ஒரு சிறிய பிரச்னை ஏற்பட்டாலும், மற்றவருக்கு வலிக்கும். இதைத் தான் “தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்” என்பார்கள். இப்பொழுதுள்ள காலகட்டத்தில் சொந்த அண்ணன், தம்பிகள், அக்கா, தங்கைகள் கூட இளம் வயதிலேயே படிப்பைக் கருத்தில் கொண்டோ, உத்தியோக நிமித்தமாகவோ பிரிந்து வசிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.பிரிந்து ஒன்று கூடும் பொழுது பாசம் அதிகமாகவே காணப்படும்.
ஆனால் முன்பு போல் ஒன்றாக விளையாடி, சண்டையிட்டு, சமாதானத்தில் ஒருவரை ஒருவர் மன்னிப்பது போன்ற நிகழ்வுகள் நம்மால் பார்க்கப்படுவதேயில்லை. அவ்வளவு பிள்ளைகள் ஒன்றாக இருந்த போது குழப்பங்களே இல்லாமல் புரிதல் காணப்பட்டது. பெற்றோருக்கு எத்தனை பிள்ளைகள் இருந்தாலும், பாசத்தை பங்கு போட முடியாது. அனைவரிடமும் ஒரே பாச உணர்வுதான் இருக்கும். இன்று இரண்டு பிள்ளைகள் இருக்கும் ஒரு வீட்டில், சிறிய பெண்ணோ, ஆண் பிள்ளையோ என்ன நினைக்கிறார்கள் தெரியுமா? மூத்தவர் வெளியில் திருமணமாகி சென்று விட்டாலோ, வேலை பார்க்கச் சென்று விட்டாலோ தனக்கு அதிக உரிமை கிடைத்து விடுவது போலவும், பெற்றோர் முன்னுரிமை முழுவதும் தன்பக்கம் திரும்பும் எனவும் கணிக்கிறார்கள். மூத்த பிள்ளைக்கு தனிப்பட்ட முறையில் குடும்ப அக்கறையும், பொறுப்புணர்ச்சியும் அதிகம் என்பது நடைமுறையில் நாம் கண்ட உண்மை. “பெற்றால்தான் பிள்ளையா?” என்பார்கள். பெறாமலே நம் குடும்பங்களில் நிறைய பிள்ளைகள் இருப்பார்கள். அவர்கள் ஆண் வழியில் தலைமுறைகளாக வருபவர்கள். அப்பாவின் உடன் பிறந்தவர்களின் வாரிசுகள், அப்பாவின் அப்பாவான தாத்தாவின் வழியில் உடன் பிறப்புகளின் பிள்ளைகள் என அனைவரும் அடங்குவர். இத்தகைய உறவையெல்லாம் ‘தாயாதி’ என்பார்கள். சில குடும்பங்களில் ‘பங்காளி’ என்றும் சொல்வார்கள்.
ஒரு குடும்பத்தில் ‘மரணம்’ சம்பவித்தால் கூட, தாயாதிகள் பத்து நாட்களுக்கு ‘துக்கம்’ கடைபிடிப்பார்கள். இன்றைய தலைமுறைக்கு இத்தகைய உறவு முறைகள் புரியாது. பொதுவாக ‘கசின்’ என்ற ஆங்கில வார்த்தையில் உறவு சொல்வார்கள். பெரியவர்கள் இருக்கும் குடும்பங்களில் இன்று வரை அதற்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. அவர்களை கலந்து ஆலோசித்துத் தான் திருமணங்களைக் கூட நிச்சயித்தார்கள்.
இன்று பிறர் குடும்ப விஷயங்களில் யாரும் தலையிட்டுக் கொள்வதில்லை. அதுவும் நல்ல முன்னேற்றம்தான். ஆனால் பாசம்-பந்தம் பிரியாமல் இருப்பதுதான் சிறப்பு. வீட்டில் திருமண விசேஷம் என்றால், பெரியம்மா பையன்கள் எல்லோரும் இழுத்து போட்டுக் கொண்டு அனைத்தையும் செய்வார்கள். அப்பொழுதெல்லாம் ‘காண்ட்ராக்ட்’ வசதிகள் இல்லாத சமயம். திருமணப் பொருட்கள் அனைத்தையும், மூட்டைகளில் வாங்கி வந்து பந்தி பரிமாறுவது முதல் அனைத்து வேலைகளையும் வீட்டில் உள்ளவர்கள்தான் பார்த்தார்கள்.
இன்று பணம் கொடுத்தால் அனைத்தும் நடக்கிறது. பாசத்தோடு நடக்கிறதா என்பதை நாம் யோசித்துத்தான் பார்க்க வேண்டும். ஒவ்வொரு வேளை சடங்கு அலங்காரத்தின் போதும், அனைத்து உறவினர்களும் போட்டி போட்டுக் கொண்டு முன் வருவார்கள். இதற்காக தங்களிடமிருக்கும் நகைகளை பெண் அலங்காரத்திற்கென எடுத்து வருவார்கள். கேலியும் கிண்டலுமாக பெண்கள் பேச, பெரியவர்கள் அவரவர் வாழ்வில் நடந்த சம்பவங்களையெல்லாம் சொல்லி வாழ்க்கையின் மகத்துவத்தை உணர்த்துவார்கள்.
அப்பொழுதெல்லாம் இன்று போல் ‘பியூட்டி பார்லர்கள்’ கிடையாது. அனுபவம் மிக்க பெரியவர்கள் மற்றும் சில உறவினர்கள்தான் அலங்காரம் செய்து விடுவார்கள். பின்னலில் பூ தைப்பது, குஞ்சலம் வைத்துப் பின்னல் போட்டு பூச்சரம் வைத்து சடை அலங்காரம் செய்வது, தலையில் ‘ராக்கோடி’ என்னும் கல் அலங்காரத்துடன் கூடிய வில்லை வைப்பது என அனைத்தும் வீட்டுப் பெண்களே செய்து விடுவார்கள். இன்றைய காலம் போல் ‘மெஹந்தி பங்ஷன்’ என்றெல்லாம் கிடையாது. வீட்டில் உள்ள மருதாணி செடியில் இலை பறித்து அரைத்து வைத்துக் கொள்வார்கள். இரு கைகளிலும் மருதாணி வைத்துக் கொண்டால் சாப்பிடுவது கடினம். அந்த மருதாணி காயும் வரை, அண்ணன், தம்பி, பெரியப்பா பிள்ளைகள்தான் சாப்பாட்டினை வாயில் ஊட்டி விடுவார்கள். இன்று நடனம், பாட்டு என மெஹந்தி விழா கொண்டாடப்படுகிறது.
அன்று அவர்கள் பாசத்துடன் உணவினை ஊட்டி விடுவதுதான் கொண்டாட்டமாக இருந்தது. பின் யாருக்கு கை சிவந்திருக்கும் என்பதைப் பார்த்து ஒரு பொருமல் நடக்கும். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உறவின் பாசமும், பந்த நெருக்கமும் காணப்பட்டது. இரண்டு கைகளில் மருதாணி இருந்தால், சிறிய பெண்கள் நேரத்தை வீணடிக்காமல் ‘நொண்டி’ விளையாட்டு விளையாடுவார்கள். கொஞ்சம் வயது முதிர்ந்த பெண்கள் ‘பல்லாங்குழி’ ஆடுவது வழக்கம். இது போல் அன்றைய காலத்தில் நம் முன்னோர்கள் ஒவ்வொரு விளையாட்டிற்கும் கூட ஒரு தத்துவத்தைக் கொண்டே நிர்ணயித்திருக்கிறார்கள். இதுபோல் கில்லி, சதுரங்கம், தாயம் அனைத்தும் விளையாடப்பட்டது. உடற் பயிற்சியுடன் அதன் நோக்கங்களும் விளையாட்டின் மூலமே சொல்லப்பட்டது.
நம் உடன்பிறந்த சொந்தங்கள் தினமும் நம்முடன் ஒன்றாக இருப்பவர்கள். பெரியப்பா, சித்தப்பா பிள்ளைகள், தாத்தா வழி உறவுகளின் வாரிசுகள் என திருவிழா, பண்டிகை, திருமணக் காலங்களில் கூடும் பொழுது அதன் மகிழ்வே தனி.
அதிலும் அவரவர் வயதையொத்தவர்களுடன் சேர்ந்து கோரிக்கைகளில் ஈடுபடும் பொழுது எந்தவித பாகுபாடும் இல்லாமல் மகிழ்ச்சி மட்டுமே. இன்று கோர்ட்டில் நிகழும் வழக்குகள், அன்று பெரியவர்கள் அறிவுரையால், உறவினர்களின் பேருதவியால், அன்பின் பாச பந்தத்தால் சாத்தியமாக இருந்தது. உறவுகள் நமக்கு அரண் போல நின்று காத்தனர். வாசகர் பகுதி
சிறுநீரகக் கற்களை உடைக்கும் நெருஞ்சி!
வரப்பு ஓரங்களிலும், வேலிப் புதர்களிலும் மிகச் சாதாரணமாக தென்படும் நோய் தீர்க்கும் மூலிகைகளுள் ஒன்று நெருஞ்சி. சாதாரணமாக கோடையில் வரும் நீர்ச் சுருக்குக்கு நெருஞ்சி முள்ளை ஒன்றிரண்டாக இடித்துத் தேநீர் வைப்பது போல் கஷாயமிட்டு காலை, மாலை என 5 நாட்கள் குடித்து வந்தால் நீர்ச்சுருக்கு குணமாகும்.
மேகச் சூட்டினால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதலுக்கு நெருஞ்சி முள் மற்றும் அதன் வேரைப் பச்சரிசியுடன் சேர்த்து வேகவைத்து, வடித்துக் கஞ்சியாகக் கொடுக்கலாம். வெள்ளைப்படுதலுடன் சூதகப் பாதையில் ஏற்படும் சுழற்சிக்கும் நெருஞ்சிக் கஷாயம் பயன் அளிக்கும். சிறுநீரகக் கற்களுக்கு நெருஞ்சி ஒரு சிறந்த மருந்து. நெருஞ்சி, நீர் முள்ளிச்செடி, மாவிலங்கப்பட்டை, சிறு கண்பீளைச் செடி இந்த நான்கையும் சம பங்கு எடுத்து, 400 மில்லி நீர் ஊற்றி, 60 மில்லியாகக் குறுக்கிக் காய்ச்சி வடித்து காலை, மாலை என இருவேளை 45 நாட்கள் கொடுத்து வந்தால் கற்கள் உடைந்து விடும்.
நெருஞ்சி, சீந்திற்கொடி, அமுக்கிராக் கிழங்கு, நெல்லி முள்ளி இவைகளை வகைக்கு 10 கிராம் அளவு எடுத்து, அவைகளை ஒன்றிரண்டாக தட்டி, ஒரு பாத்திரத்தில் போட்டு, 200 மில்லி தண்ணீர் விட்டு, 100 மில்லிச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி, காலை, மாலை 1 அவுன்ஸ் வீதம் கொடுத்து வந்தால் வாத நோய் குணமாகும்.
- பி.தீபா, கிருஷ்ணகிரி.
|