வாழ்க்கையை படம் பிடித்துக் காட்டும் நாட்டுப்புற பாடல்கள்!
விவசாயம் செய்யும் போது பொழுதுபோக்கிற்காக பாடப்பட்ட பாடல்கள் எல்லாமே ஒரு கலை வடிவமாக மாறி அது எல்லோராலும் பாடப்பட்டது. அந்தப் பாடல்கள் எல்லாமே தங்களுடைய சந்தோஷம், துக்கம், வலி, வேலைப்பாடுகள், எதிர்காலத்தின் மீதான ஏக்கம், பசி என பலவற்றை பற்றிய பாடல்களாக இருந்தது. களைப்பு நீங்க பாடப்பட்ட பாடல்கள் எல்லாமே மக்களுடைய பேச்சு மொழியிலேயே இருந்தது.
அந்தப் பாடல்கள் எல்லாமே அந்தக் காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கைச் சூழலை சொல்லியது. காலம் கடந்து வந்தாலும் அந்தப் பாடல்கள் எல்லாமே அந்தக் காலத்தின் பிரதிநிதியாகவே நம் செவிகளில் இன்றும் ஒலிக்கிறது. ஒருவர் மாறி ஒருவர் என பாடப்பட்ட பாடல்கள் பல ஆண்டுகளை கடந்து இருப்பதற்கு முக்கிய காரணம் அந்தப் பாடல்கள் மேடைஏறியதுதான்.
விழாக் காலங்களில் நடக்கும் திருவிழாக்களின் போது நாட்டுப்புற பாடல்கள் பாடகர்களால் பாடப்பட்டது. மக்களும் அதை ரசிக்கத் தொடங்கினர். அதற்கடுத்து அது சினிமா பாடல்களாக உருமாற்றப்பட்டு காலம் கடந்து இன்றும் நம்மிடையே ஒலித்துக் கொண்டிருக்கிறது. நெடுங்காலத்தின் முன் எங்கேயோ ஒரு குக்கிராமத்தில் பாடப்பட்ட பாடல் இன்றைய இளைய தலைமுறையும் கேட்டு ரசிக்கும் வண்ணம் இருப்பதற்கு முக்கிய காரணம் அந்தப் பாடல்களை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு வந்த நாட்டுப்புற பாடகர்கள்தான்.
இந்தப் பாடகர்கள் மூலமாக இன்றும் நாட்டுப்புறக் கலை உயிர்ப்போடு இருக்கிறது. அப்படிப்பட்ட நாட்டுப்புற பாடகர்களில் ஒருவர்தான் சேலத்தைச் சேர்ந்த ராதிகா. உழைக்கும் மக்களின் திருவிழாவான பொங்கல் பாடலை பாடியவாறே பேசத் தொடங்கினார் ராதிகா.
‘‘ஜல் ஜல் ஜல் ஜல் ஜல் ஏ மச்சான்... வண்டிக்காள பூட்டிகிட்டு வரப்பு மேல போற மச்சான் பொங்க பான தூக்கிகிட்டு நானுந்தா வாரேன்.
உங்க பொதிகாளைக்குக் கொஞ்சம் - அடி கரும்பையும் தாரேன். நெல்லு வெளஞ்சிருச்சு தை மாசம் பொறந்திருச்சு, தாரகையே நீயும் என் கூட வாயேன்டி தரணிலே பொங்க வச்சு படையல் போடேன்டி...’’
இந்தப் பாடலை கேட்கும் போதே பொங்கல் திருவிழா நடப்பது போன்ற ஒரு தாக்கத்தை நமக்குக் கொடுக்கும். நாட்டுப்புற பாடல்களோட வலிமையே அதனுடைய வரிகள்தான். பேச்சு வழக்குகள் இருக்கிற அந்தப் பாடல்கள் தமிழ் தெரிந்த யாரொருவரையும் ரசிக்க வைத்து விடும். எனக்கு சொந்த ஊரு சேலத்தில் இருக்கிற மேட்டூர்.
நான் இப்போ அரசு பொறியியல் கல்லூரியில வேலை செய்றேன். இதைத் தவிர நான் ஒரு பாடகி. அதிகமா நான் வெளியில் அறியப்பட்டதெல்லாம் நாட்டுப்புற பாடல்களால்தான். என்னோட அண்ணாவும், மாமாவும் தனியாக ஆர்கெஸ்ட்ரா வச்சிருந்தார்கள். அதில அதிகமா நாட்டுப்புற பாடல்கள்தான் பாடுவாங்க.
நானும் சின்ன வயசில இருந்தே கிராம பின்னணியில்தான் வளர்ந்தேன். அப்போது விவசாய வேலைகளுக்கு போறவங்க அவங்க வேலை அலுப்பு தெரியாம இருக்க பாடல்கள் பாடுவாங்க. அந்தப் பாடல்கள் எல்லாமே அவங்க வலிகளையும் சந்தோஷங்களையும் சொல்லக்கூடிய பாடல்களாக இருக்கும். அவங்க பாடுவதை நான் நேர்ல பார்த்திருக்கேன்.
எப்படி பாடுறாங்க... என்ன மாதிரியான ராகங்களில் பாடுறாங்கன்னும் பார்த்துக் கேட்டு நானும் பாடத் தொடங்கினேன். கொஞ்சம் கொஞ்சமா எனக்கு பாடல்கள் பாட ரொம்பவும் பிடிச்சிருந்தது. நாட்டுப்புற பாடல்கள் நம்முடைய வாழ்க்கையை அப்படியே சொல்லும். அதனால அந்தப் பாடல்களால் ஈர்க்கப்பட்டேன். மெல்ல நானும் பாடத் தொடங்கினேன்.
வீட்டுல இருக்கும் போதும் வெளிய போகும் போதும் எல்லாம் பாட்டு பாடிக் கொண்டே போவேன். இதை பார்த்த என் அண்ணா, ‘‘நீ நல்லா பாடுறே. உன்னோட குரல் நல்லா இருக்கு. ஆர்கெஸ்ட்ராவில வந்து பாடுறீயா’’ன்னு கேட்டார்.
நான் பொதுவெளியில மைக்க பிடிச்சிட்டு எல்லோர் முன்னாடியும் பாடப் போறேன்னு நெனைச்சு எனக்கு சந்தோஷமாகவும் பிரமிப்பாகவும் இருந்துச்சி. நான் அந்த சமயம் 8ம் வகுப்பு படிச்சிட்டு இருந்தேன். அப்பவே என் அண்ணன் மூலமா எனக்கு முதல் மேடை கிடைத்தது’’ என்றவர், முழுமையாக நாட்டுப்புற பாடகியான கதையை சொல்லத் தொடங்கினார்.
‘‘நாட்டுப்புற பாடல்கள் மேல ஈர்ப்பு ஏற்பட்டு நான் நிறைய கச்சேரிகளுக்கு போக ஆரம்பித்தேன். கச்சேரிகளுக்கு போனாலும் படிப்பை விடக்கூடாது. இரண்டையும் சரியா செய்யணும் என்பது தான் என் அண்ணாவோட கட்டளை. அதனால நான் படிப்புலேயும் கவனமா இருப்பேன். கச்சேரிகள் இரவு நேரத்தில் நடக்கும். அந்த சமயம் என் பாட்டை பாடிவிட்டு கிடைக்கும் நேரத்தில் படிப்பேன்.
சாதாரணமா நாட்டுப்புற பாடல்கள் பாடும் போது அதற்கு பின்னணி இசை இருக்காது. நாங்க இசைக் கச்சேரிகள் நடத்துவதால் அதற்கான பின்னணி இசையை அமைக்கத் தொடங்கினோம். அண்ணா எல்லா இசைக் கருவிகளையும் வாசிப்பார். நானும் அவரும் சேர்ந்து அந்தப் பாடல்களுக்கு இசையமைப்போம்’’ என்றவர், இசைக் குடும்பத்தைச் சேர்ந்தவரைதான் மணமுடித்துள்ளார்.
‘‘நான் போகும் கச்சேரிகளுக்கு கீ போர்ட் கலைஞர் ஒருவர் வருவார். அவருக்கு என்னை பிடித்திருந்தது. அதனால் என் வீட்டில் முறையாக வந்து பெண் கேட்டார். அவங்க குடும்பமும் இசைக் குடும்பம். அவரின் மாமா கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை செயலாளராக இருந்தார். அவரும் எல்லா இசைக் கருவிகளையும் வாசிப்பார். எங்க வீட்டில் அவங்க குடும்பத்தை பிடித்து இருந்ததால் இரு வீட்டார் முன்னிலையில் எங்க திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பிறகும் நான் கச்சேரிக்கு சென்று கொண்டிருந்தேன்.
கம்யூனிஸ்ட் கூட்டங்களிலும் பாடுவேன். கட்சியில் உள்ள தோழர்கள் எழுதி தரும் பாடல்களுக்கு ஏற்ப நாங்க இசையமைத்து பாடுவோம். அரசியல் நிகழ்வுகள், சமுதாய நிகழ்ச்சிகள் என எல்லா இடங்களிலிருந்தும் எனக்கு அழைப்பு வந்தது. இதே காலகட்டங்களில் எனக்கு அரசு பொறியியல் கல்லூரியில் ஆய்வக உதவியாளர் வேலை கிடைத்தது. வேலை, கச்சேரி என என் நாட்கள் சுழன்று கொண்டு இருக்கிறது’’ என்றவர், விவசாயிகளுக்கான ஒரு பாடலை பாடினார். ‘‘அழகான தென்ன வச்சேன்... நடுவினிலே நாத்து நட்டேன்!!! மாச மாறு கண்ண போல காத்து வந்தேன், நா மக்களோட தெனந்தெனமும் பாத்து வந்தேன்!!
உச்சி வெயில் உரைக்க வில்ல - உடம்ப பத்தி கவலையில்ல நெல்லுமணி உன்னத்தானே நம்பி வந்தேன். நான் உனக்கு நித்தம் நித்தம் நீரே பாச்சி பாத்து வந்தேன்... நேத்து பேஞ்ச மழையில நீ நேரத்தோட போனதெங்கே... சொல்லாம நீ சென்றதால எங்க தேடுவேன்...
என் சனமெல்லாம் சோறு கேட்டா எங்க ஓடுவேன்... என்ன பத்திக் கவலையில்ல, ஏ மக்க கொற தீர்த்து வை... எங்க நீ போனாலும், அங்கு வெளஞ்சுரு ஏழை மக்க பசிய போக்க நீயும் வாழ்ந்திரு...’’
இந்தப் பாடல் விவசாயிகளின் வலிகளை சொல்லும். இந்தப் பாடலை நான் மேடையில் பாடும் போது அவர்கள் பட்ட கஷ்டங்கள் எல்லாமே என் கண் முன்னே வரும். அவர்களின் கஷ்டங்களை ஒருவர் பாடலாக பாடுவதை கேட்கும் போது அவர்களின் மனதில் இருந்த இறுக்கம் குறையும்.
இந்த விஷயத்தைதான் நாட்டுப்புற பாடல்கள் செய்கின்றன. இப்போது சினிமா பாடல்களைதான் மக்கள் விரும்புறாங்க. நாங்களும் அந்தப் பாடல்களை பாடத் தொடங்கினோம். ஊர் திருவிழா மற்றும் கலை விழா போன்ற இடங்களில் நாட்டுப்புற பாடல்களை பாடும் போது அந்தக் காலத்திற்கு எங்களை கொண்டு செல்லும். அவர்களுள் எழும் மன உணர்ச்சிகள்தான் இன்றும் இந்தப் பாடல்களை உயிரோடு வைத்திருக்க காரணம்’’ என்கிறார் ராதிகா.
‘‘வாருங்கள் மனிதர்களே... சொல்வதை கேளுங்கள். உறவுகளே பொங்கல் வந்தாச்சு கொண்டாட்டம் போடுங்க...
இது போல சிறந்த விழா உலகிலேதும் இல்லீங்க. உழவர்களின் பெருமைகளை ஊர் முழுக்க சொல்லுங்க. உயிரொன்று உள்ளவரை உழவு இன்றி போகுமா? ஊரிலுள்ள யாவருமே பசியை வெல்ல முடியுமா? உணவு அனு முக்கியம் உண்மை இது சத்தியம்... அரிசியும் வெல்லமும் சேத்து பொங்க வச்சுக்கோ... ஆண்டவணுக்கு பொங்க சோற படையல் போட்டுக்கோ...’’
‘‘குத்தம் இங்கு யாரு மேல நித்தம் உழவன் மடிவதால புத்தம் புது தீனி தின்ன - சுத்தமான சோறு இல்ல உனக்கு...
ஊருக்கெல்லாம் சோறு போட்டு. ஆனா, தன் வயிற பட்டினி போட்டு... உச்சி வெயிலும் வாட்டுதம்மா - பாலுக்கு பச்ச கொழந்தையும் ஏங்குதம்மா... காலையில கண் முழிச்சு கஞ்சி கலயத்தோட நானும் போவேன்...
மாலையிலே வீடு வந்தா எனக்கு பச்ச மொளகா பழைய சோறு... ஐயா, நாங்க பெத்த பிள்ளைகளும் வாழ வழியும் சொல்லுங்களே... இந்த ஏழ உழவன் நெல்லுக்குத்தான் உரிய விலையும் வையுங்களேன்!!’’
மா.வினோத்குமார்
|