பில்லோ ரோபோஒரு காலத்தில் வயதானவர்கள் மட்டுமே தங்களின் உடல் நலத்தைப் பேணிக்காக்க தினமும் மாத்திரைகள் எடுத்துக்கொள்வார்கள். ஆனால், இன்று குழந்தைகள் முதல் எல்லோருமே ஏதோ ஒரு உடல் ரீதியான பிரச்சனைகளுக்கு மாத்திரைகள் உட்கொள்வதை தினந் தோறும் பார்க்கிறோம்.
அந்தளவுக்கு நம்முடைய உடல் நலம் ஆரோக்கியமற்றதாக இருக்கிறது. தவிர, வைட்டமின் மற்றும் ஊட்டச்சத்து மாத்திரைகளையும் வழக்கமாக சாப்பிடுபவர்களும் இருக்கிறார்கள். இந்நிலையில் உங்களை மாத்திரையின் பிடியில் இருந்து விடுவிக்க வந்துவிட்டது பில்லோ ரோபோ.

இது ஒரு ஹோம் ஹெல்த் ரோபோ. உங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தைத் துல்லியமாக கவனிப்பதற்காக இதை வடிவமைத்திருக்கிறார்கள். சிறிய பொம்மை போல தோற்றமுடைய பில்லோ எளிதில் நம்மை வசீகரித்துவிடுகிறது.

தனக்கு முன்னால் இருப்பதைப் பார்க்க ஹை-டெபனிஷன் கேமரா, எஜமான் சொல்வதைக் கேட்க ஹை-டெக் மைக்ரோபோன், டச் ஸ்க்ரீன், தொடர்புகொள்ள டெக்ஸ்ட் டூ ஸ்பீக் சாப்ஃட்வேர், வாய்ஸ் ஃபேஷியல் மூலம் உங்களை அடையாளம் கண்டுகொள்ளும் வசதி, செயற்கை நுண்ணறிவு என அசத்துகிறது பில்லோ.

நீங்கள் வழக்கமாக சாப்பிடும் மருந்து மாத்திரைகளை இதனுள் ஸ்டோர் செய்துகொள்ளலாம். சரியான நேரத்துக்கு அதுவே மாத்திரைகளைக் கொடுத்து உங்களை ஆச்சர்யப்படுத்தும். நீங்கள் பில்லோவின் முன்னால் நின்றாலே போதும், உங்களின் பெயர், வயது, எடை,  
உயரம், உடலில் இருக்கும் பிரச்சனை என வரிசையாக மானிட்டரில் காட்டும்.

பிறகு அன்றாடம் நீங்கள் செய்ய வேண்டியதை நினைவுபடுத்தும். உதாரணத்துக்கு, அதிகாலை 6 மணிக்கு யோகா செய்ய வேண்டும். அதனை மறந்திருப்பீர்கள். ஆனால், பில்லோ ஒருபோதும் அதை மறக்காமல் ஞாபகப்படுத்தும். அத்துடன் உடல் ஆரோக்கியம் சம்பந்தமான கேள்விக்கும் பதில் தருகிறது இந்த ரோபோ.

உங்களுக்கு உடல் ரீதியாக ஏதாவது பிரச்னை என்றால் உடனடியாக அலர்ட் செய்யும். தவிர, குடும்ப மருத்துவருக்கும் சரியான தகவலைத் தருகிறது. ‘‘இது எங்கள் குடும்ப மருத்துவர்...’’ என்று பில்லோவை புகழ்கின்றனர் வாடிக்கையாளர்கள்.