அமேசான் காட்டுத்தீயை அணைக்க 35 கோடி வழங்கிய நடிகர்!



‘‘அனைத்து உயிரினங்களும் தற்போது எதிர்கொண்டிருக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல், பருவநிலை மாற்றம்தான். இதைச் சரிசெய்வதற்கான நடவடிக்கைகளைத் தள்ளிப் போடாமல், நாம் அனைவரும் ஒன்றிணைந்து உடனடியாகச் செயல்படவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

இந்த உலகைப்  பெருமளவில் மாசடைய வைக்கும் நிறுவனங்களின் சார்பாகப் பேசாமல், மனித இனத்தின் நலனுக்காக, உலகின் பூர்வகுடி மக்களுக்காக, பருவநிலை மாற் றத்தால் நேரடியாக பாதிக்கப் படும் கோடிக்கணக்கான பின்தங்கிய மக்களுக்காக, வருங்கால சந்ததிகளுக்காகப் பேசுகின்ற தலைவர்களையே நாம் ஆதரிக்க வேண்டும்..!’’ - ‘டைட்டானிக்’ நாயகன் லியனார்டோ டிகாப்ரியோ பிரான்ஸில் நிகழ்ந்த சுற்றுச்சூழல் நிகழ்வில் பேசிய உரையின் ஒரு பகுதிதான் இது.

இயற்கையைக் காப்பதற்காக டிகாப்ரியோ முழுமூச்சாகக்களம் இறங்கி சில வருடங்களாகிவிட்டன. மூன்று வருடங்களுக்கு முன்பு  ஃபிஷர் ஸ்டீவன்ஸ் இயக்கத்தில் ‘Before the Flood’ என்ற ஆவணப்படத்தை ஹாலிவுட்டின் முக்கிய நபர்களுடன் இணைந்து தயாரித்து, நடித்தும் இருந்தார். பருவநிலை மாற்றங்கள் குறித்து வெளியான முக்கியமான திரைக்காவியம் இது.

கடந்த சில வருடங்களில் வேறு எதையும் விட பருவநிலையில் பெரிய அளவில் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. மே மாதத்தில் அடிக்கின்ற வெயில் எல்லா மாதங்களிலும் அடிக்கிறது. மழை பெய்ய வேண்டிய காலத்தில் பெய்வதில்லை. அப்படியே பெய்தாலும் அளவுக்கு மிஞ்சி பெய்கிறது. இந்தியாவின் பல மாநிலங்கள் வெள்ளத்தில் மூழ் கின, ‘கஜா’, ‘வர்தா’ புயல்கள் எல்லாம் உங்களுக்கு நினைவிருக் கலாம். இயல்புக்கு மீறிய குளிரும், மழையும், வெப்பமும் பருவநிலை மாற்றத்தின் விளைவுகள்தான். நாம் ஏ.சி போட்டுக்கொண்டு சமாளிக்கலாம். காட்டு விலங்குகள்? இதனாலேயே பல உயிரினங்கள் அழிந்துவிட்டன.

‘‘இதே நிலை தொடர்ந்தால் இன்னும் ஐம்பது வருடங்களில் பனி மலைகள் உருகி கடல் மட்டம் உயரும், பெரிய அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல நகரங்கள் மூழ்கிவிடும். சொல்ல முடியாத பேரிடர்களுக்கு அனைத்து உயிரினங்களும் ஆளாகும். மனிதர்களும் தப்பிக்க முடியாது...’’ என்று சுற்றுச்சூழல் அறிஞர்கள் எச்சரிக்கை விடுக்கிறார்கள்.

டிகாப்ரியோ வன உயிரினங் களின்மீதும், இயற்கையின்மீதும் பெருங்காதல் கொண்டவர். 24 வயதிலேயே இதற்காக ஒரு அறக்கட்டளையை நிறுவி, அருகி வரும் உயிரினங்களை, இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். தான் சம்பாதிக்கும் பணத்தின் பெரும்பகுதியை இதற்குச் செலவிடுகிறார்.

வன விலங்குகளின் பாதுகாப்புக்காகவும், பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்காகவும் 20 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கி யிருக்கிறார். இதுமட்டுமில்லாமல் யானைகளின் பாதுகாப்புக்காக 6 கோடி ரூபாயும், கடல் வாழ் உயிரினங்களின் பாதுகாப்புக் காக 42 கோடி ரூபாயும் வழங்கியுள்ளார்.  ஐ.நா.சபையின் பருவ நிலை மற்றும் அமைதிக்கான தூதராகவும் இருக்கிறார்.

இயற்கையின் மீதான அக்கறையால் எழுந்த கோபத்துடன் டிகாப்ரியோ இதைச் சொல்கிறார்... ‘‘பருவநிலை மாற்றத்தை சீர்செய்ய நாம் ஆற்றுகின்ற எதிர்வினைதான், வருங்காலத்தில் மனித இனத்தின் தலையெழுத்தையும் பூமியின் விதியையும் தீர்மானிக்கப் போகிறது. இனிமேலும் விவாதித்துக்கொண்டு இருப்பதால் எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை.

ஒவ்வொரு நொடியும் இயற்கை நம்மை கவனித்துக்கொண்டிருக்கிறது. வருங்காலம் நம்மை சபிக்கக்கூடாத வகையில் ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டியது நம் கையில்தான் இருக்கிறது..!’’ இப்போது அமேசான் காட்டுத்தீயை அணைக்க முதல் ஆளாக முன்வந்து 35 கோடி ரூபாயை வாரி வழங்கியுள்ளார் டிகாப்ரியோ. சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்ட போது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு உலக மீடியாக்களை சென்னையின் பக்கம் திருப்பிய வரும் அவரே.