ராபின் முர்ரே



பசுமை பேச்சாளர்கள் 28

இங்கிலாந்தின் வெஸ்ட்மார்லேண்டில் பிறந்த ராபின் முர்ரே தொழில்துறையில் ஜீரோவேஸ்ட் உத்தியைக் கையாண்டு சூழலைக் காத்ததோடு சிக்கனத்தையும் வலியுறுத்தியவர்.  லண்டன் எகனாமிக்ஸ், வணிகப்பள்ளியில் கல்வி கற்ற ராபின் முர்ரே, பின்னாளில் சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் 20 ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றியவர்.

பல்வேறு அரசு அமைப்புகளில் 1980-90களில் தொழில்வளர்ச்சி இயக்குநராக பணியாற்றி தன் ஐடியாக்களைச் செயல்படுத்தி சாதித்தார் ராபின். 1985 ஆம் ஆண்டு காஃபி, சாக்லெட்,பழங்கள் மற்றும் பருப்புகள் ஆகியவற்றை விற்க, ட்வின் என்ற விவசாய  கூட்டுறவு நிறுவனத்தை தொடங்கி  இங்கிலாந்து முழுக்க  விநியோகிக்க  தொடங்கினார் ராபின். இன்று இவரது ட்வின் நிறுவனம், 3 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளை இணைத்து செயல்பட்டு வருகிறது. 

Ecologika என்ற நிறுவனத்தின் துணைநிறுவனரான ராபின், போக்குவரத்து, உணவு, உடல் நலம், கழிவுப்பொருட்கள் எனபல்துறை சார்ந்தவர்களையும்  இணைத்து பணியாற்றத் தொடங்கினார். பின்னாளில் லண்டனின் துணை மேயராகி சூழலைக் கண்காணிக்கும் ஏஜன்சியை  உருவாக்கினார். “நான் சிறிய மலைப்பகுதி  ஒன்றில் பிறந்து வளர்ந்தவன்.

எங்கள் வீட்டைச்சுற்றிலும் விவசாயிகள் வசித்ததால் அவர்களின் வாழ்வு என் மனதில் நன்கு பதிந்து விட்டது. இன்றைய தொழில்முறை விவசாயம் நிலத்திற்கும் பயிர்களுக்குமான தொடர்பை துண்டிக்கிறது.

ஜெர்மனியில் அமலாகியுள்ள  புதுப்பிக்கத்தக்க  ஆற்றல்  திட்டங்கள் என்னை  வெகுவாக  கவர்ந்துள்ளன” என்கிறார் ராபின் முர்ரே. தன் ட்வின்  நிறுவனங்களின் மூலம்  விவசாயிகளின்  லாபத்தை 1.65  பில்லியன் டாலர்கள்  உயர்த்தி சாதித்த ராபின், அந்நிறுவனத்தின் இயக்கு நராக 20 ஆண்டுகள் பணியாற்றினார்.
 
1994 ஆம் ஆண்டில் வேஸ்ட் ஆக்‌ஷன் பிளான் தொடங்கி கழிவுகளை மறுசுழற்சி செய்வதை ஊக்குவித்த ராபின், பசுமை வீடுகளை கட்டுவதற்கான ஆலோசனைகளை வழங்கினார். Wealth From Waste (1999), The Open Book of Social Innovation (2010) ஆகிய நூல்களில் பருவச் சூழலை கார்பனை குறைத்து எப்படி சாத்தியப்படுத்தலாம் என்று எழுதி புகழ்பெற்றார்.

21 ஆம் நூற்றாண்டை  புதுப்பிக்கத்தக்க  ஆற்றல் பொருளாதாரம் கொண்டதாக மாற்ற,  தான் பங்குபெற்ற, உருவாக்கிய அமைப்பு களின் மூலம்  தொடர்ந்து  முயற்சித்து வந்த ராபின் முர்ரே,  கடந்த ஆண்டு மே மாதம் மரணித்தார்.