ஒரு கோடி பெண்களுக்கு 2020 ஆம் ஆண்டுக்குள் வேலை என்பதே லட்சியம்!



நேர்காணல்: சேட்னா கலா சின்கா

மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்திலுள்ள  ஹாஸ்வாட் கிராமத்தில் பெண்களுக்காக அயராது உழைத்து வருகிறார் சமூகசெயல்பாட்டாளரான சேட்னா கலா சின்கா. இவர் 1997 ஆம் ஆண்டே பெண்களை ஒன்றிணைத்து Mann Deshi Mahila Sahakari Bank என்ற கூட்டுறவு வங்கியை தொடங்கி  பிரமிக்க வைத்தவர்.

சிறு தொழில் முனைவோர்களுக்கான முன்னோடி வாய்ப்புகள் அதன்பின்னர்தான் கிராமத்துப் பெண்களுக்கு கிடைக்கத் தொடங்கின. சேட்னா சின்காவிடம் அவரது பணிகளைக் குறித்து உரையாடினோம்.
  
ஹாஸ்வாட் சிறிய கிராமம். எப்படி அங்கு முதன்முதலில் பணியாற்றும் ஆர்வம் தோன்றியது?  

1970 ஆம் ஆண்டு ஜெயப்பிரகாஷ் நாராயணனின் இயக்கத்தில் பங்கேற்றிருந்தேன். முதலிலேயே மும்பையின் குடிசைப்பகுதி மக்களிடையே பணியாற்றியிருந்த அனுபவம் இருந்தது. ஆனால் இயக்கத்தின் பணிகளால் நகரை விட்டு வெளியேறவேண்டியிருந்தது. ‘சேட்கரி சங்காதனா’ அமைப்பின் சரத் ஜோஷியுடன் ஹாஸ்வாட் பகுதியில் பஞ்ச காலங்களில் பணியாற்றியிருக்கிறேன். ஆண்கள் வேலைக்கு நகரம் நோக்கி சென்றுவிட, பெண்கள்தான் கிராமத்தில் இருப்பார்கள். 

அங்கிருந்த கூட்டுறவு சங்கங்களும் பெண்களுக்கான தேவை குறித்து  அறியவில்லை. பெண்கள் தங்கள் தேவையை சிறு சேமிப்பு  மூலமே  தீர்த்துக்கொண்டதை பார்த்துத்தான் வங்கி தொடங்கினோம்.
  
கிராமத்தில் வங்கி  தொடங்கினீர்கள் சரி,  ஆனால் என்ஜிஓ போல முயற்சிக்காமல் ஏன் குறுங்கடன்கள் தர முயற்சித்தீர்கள்?  

வங்கி தொடங்குவது எங்களது லட்சியமெல்லாம் கிடையாது. நான் இங்கு வேலை செய்யத்தொடங்கியபோது, பெண்கள்  தங்கள்  சிறுசேமிப்பை வங்கியில் செலுத்த விரும்பினார்கள். ஆனால் வங்கி களின் குறைந்தபட்ச தொகையையே கிராமத்து பெண்களால் கட்ட முடியாத நிலை. எனவே அவர் களிடமுள்ள பணத்தை பாதுகாப்பான முதலீடாக்க வங்கி தொடங்கினோம்.
  
1970 இல் தொடங்கிய உங்கள் பயணத்தைப் பற்றி கூறுங்கள்.   அன்றிலிருந்து இன்றுவரை தினசரி கற்றுக்கொள்கிற அனுபவம்தான் உண்மை. நாங்கள் கடனைப் கொடுப்பதோடு அதனை எப்படி முதலீடு செய்வது  என்பது குறித்த பயிற்சிக்காக வணிகப்பள்ளிகளையும் நடத்துகிறோம்.  இதன்வழியாக 2  லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு சுயதொழில் முனைவோராக செயல்பட நம்பிக்கை  அளித்துள்ளோம். நவீன தொழில்
நுட்பத்தை எளிதாகப்  பழகிக்கொள்ளும் நுட்ப அறிவுடன் பெண்கள் உள்ளதை இச் செயல்பாட்டில்தான் உணர்ந்தோம். 
  
மன் தேசி என்ற உங்கள் திட்டம் மாபெரும் வெற்றி.  திட்டத்தின் வெற்றி பற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்?  

கடின உழைப்பும், உற்சாகமுமே வெற்றிக்குக் காரணம். எங்களைத் தொடர்ந்து   முன்நகர்த்துவதும் அதுவேதான். நாங்கள் தொடங்கி யுள்ள சமுதாய ரேடியோவில் விழிப் புணர்வு,  அவசிய  தகவல்கள், பிராணிகள் வளர்ப்பு  குறித்த  தகவல்களை இசைப்பாடல்களோடு பகிர்கிறோம். 2020க்குள் 1  கோடிப் பெண்களுக்கு   வேலைவாய்ப்பை உருவாக்குவதே எங்களது லட்சியம்.

நன்றி: Anupama katakam, Frontline

தமிழில்: ச.அன்பரசு