வெனிசுலா: இழந்த சொர்க்கம்!அழகிய கரீபியன் பீச்சுகள், பனிபடர்ந்த ஆண்டிஸ் மலைத்தொடர் என இயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் வெனிசுலா, எண்ணெய் வளம் கொண்ட பொக்கிஷ நாடு. வளமிருந்தாலும் வழிகாட்டியின்றி தவித்த வெனிசுலா, 1999 ஆம் ஆண்டு ஆட்சி எனும் ஸ்டீரிங் வீலை ஹியூகோ சாவேஸ் பிடித்தவுடன் சரியான வழிக்குத் திரும்பியது உண்மை.

வறுமையின் கோரம் குறைந்து, ஏராளமான குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்பட்டனர். தூய்மையான குடிநீரை கையிலேந்தி சப்புக்கொட்டி குடிக்க முடிந்தது. ஆனால் இன்று இதெல்லாம் பழைய ஃப்ளாஷ்பேக்காகிவிட்டது. இன்று உலகிலேயே அதிக பணவீக்கம் கொண்ட நாடு வெனிசுலாதான். தினமொரு போராட்டம், டன் கணக்கில் கற்கள், விச்சு, லிட்டர் கணக்கில் ரத்த விரயம் என காமதேனுவாக பார்க்கப்பட்ட நாடு இன்று கண்ணீர் தேசமாக காட்சியளிக்கிறது. காரணம் என்ன?

ஆயிலால் அழிவு!  

வெனிசுலாவின் முக்கிய வருமானமே எண்ணெய்தான். ஒரு பேரல் ஆயில் 100 டாலர்களுக்கு விற்கப்பட்டு அதன் மூலம் கிடைத்த வருமானம்தான் சமூகநல திட்டங்களுக்கு வரைமுறையின்றி  செலவிடப்பட்டு வந்தது. எ.கா: உணவு மானியங்கள்.  அதேசமயம்  நிறுவனத்திற்கான முதலீட்டுத்தொகை  குறைந்ததால் அரசின் பெட்ரோலிய நிறுவனம் மெல்ல நொண்டியடிக்கத் தொடங்கியது.

கூடுதலாக உலக சந்தையில் திடீரென ஏற்பட்ட எண்ணெய் விலை வீழ்ச்சி,  ஏராளமான  மானியங்கள் நாட்டின் பொருளாதாரத்தை  முச்சந்திக்கு கொண்டு வந்து நிறுத்திவிட்டன. அந்நிய  செலாவணி இருப்பும் இறங்குமுகத்தில் இருப்பதால், வெனிசுலாவின் இறக்குமதி 50% சுருங்கி ஓராண்டாகிறது.  இன்று  வெனிசுலா அரசு, தன் மக்களுக்கு அவசியமான வைட்டமின் மாத்திரைகள் வாங்கக் கூட நிதியின்றி தவித்து வருகிறது.
  
விலை கட்டுப்பாடு ஏற்படுத்திய வினை!  

சாவேஸ்  ஆட்சிக்காலத்திலேயே  விலைக்கட்டுப்பாடு  விஷயம்  சூடுபிடிக்கத்  தொடங்கி விட்டது. முக்கியமான பல்வேறு பொருட்களை பிக் பஜார் ஆஃபர் போல அரசு கம்மி ரேட்டுக்கு கொடுக்க, ஆளாளுக்கு அள்ளிச்செல்ல,  உள்நாட்டு  உற்பத்தி  ஜீரோவானது. எப்படி? ஒரு பாக்கெட் சோளமாவு 639 பொலிவார்ஸ். இது சோளமாவின்  உற்பத்திச் செலவைவிட மிகக் குறைவு. அரசின் அதிகாரபூர்வ தொகை 
மிகக் குறைவு என்பதாலும் கடைகளில் சோளமாவு கிடைப்பதில்லை.
  
கரைந்துபோன அந்நிய செலாவணி!  

வெனிசுலாவின் கையிலுள்ள மொத்த அந்நியச் செலாவணி கையிருப்பு 10.5 பில்லியன் டாலர்கள்தான் என வெனிசுலாவின் மத்திய வங்கி தகவல் தெரிவித்துள்ளது. தற்போது வெனிசுலாவுக்கு  இருக்கும் கடன்தொகை எவ்வளவு தெரியுமா? 7.2 பில்லியன் டாலர்கள். தினமொரு போராட்டம் என நடைபெறும் கலவரபூமியில் எப்படி அமைதியை ஏற்படுத்தப்  போகிறது  நிக்கோலஸ் மதுரோவின் அரசு?
  
மதுரோ டயட்!  

நக்கலோ விக்கலோ அல்ல. சிச்சுவேஷன் அப்படித்தான். 2015-2016 என இரு ஆண்டுகளில் மூன்று வேளை சாப்பிட்ட  மக்களில் இன்று  3% பேர்  இருவேளை அல்லது ஒரு வேளை சாப்பிடும் நிலைமைக்கு வந்துவிட்டனர். 72.7% மக்கள் தங்களின் உடல் எடை 19 பவுண்டுகளை இழந்துவிட்டது என கண்ணீர் விட்டிருக்கின்றனர். 
  
வன்முறை அடக்குமுறை!  

தனக்கு எதிராக கிளர்ந்த எதிர்க்கட்சியினர் மற்றும்  மக்களை ஒடுக்க அரசு என்ன செய்யுமோ, அதையே அதிபர் மதுரோ  வழிமொழிந்துள்ளார். ராணுவம்  போராட்டக்காரர்களை  தினந் தோறும்  தெருக்களில் லத்திகளால் பந்தாடி வருகிறது. இதில் பத்திரிகையாளர்களும் விதிவிலக்கல்ல.
  
நாட்டில் நடப்பது என்ன?  

நாட்டின் பாராளுமன்றம் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புப்படி முடக்கி வைக்கப்பட்டு, அனைத்து அதிகாரங்களும்  அதன் வசமே  உள்ளன.  ஆட்சியை  நிக்கோலஸ் மதுரோவின்   கட்சியான யுனைடெட் சோஷியலிஸ்ட் கட்சி எடுத்துக்  கொண்டுள்ளது. தெருவில்  நடை பெறும்  பேரணிகளை  ஆட்சிக்   கவிழ்ப்புக்கான கலகம் என அர்த்தம் சொல்கிறார்  எதிர்க்கட்சித்  தலைவரான  ஹென்ரிக்  கேப்ரில்ஸ்.  தற்போது  நீதிமன்றத்தில் தீர்ப்பு   மாற்றப்பட்டாலும்  போராட்டம்  ஓய்வதாக  இல்லை.  

பால், மாவு உள்ளிட்ட அவசிய  பொருட்கள்,  மருந்துகள்,  தட்டுப்பாடு, வேலையில்லாத் திண்டாட்டம்,  மின்சாரமின்மை, குற்றச்செயல்கள் அதிகரிப்போடு மலேரியா நோயும்  வேகமாகப்  பரவி  வருவது மக்களுக்கு  வாழ்வா  சாவா  பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது.