நட்பை பொசுக்கிய துரோகி!மர்மங்களின் மறுபக்கம் 35

டாக்டர் இங்கிலாந்து சென்றவுடன் கவர்னரின் நடவடிக்கைகள் சரியாக இல்லை என்பதை அதிகாரிகளிடம் விலாவரியாகச் சொன்னார். பிரயோஜனமில்லை. 1819 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி நெப்போலியனுக்கு வயது 50.

அடுத்து, சார்லஸ் டிரிஸ்டனின் மனைவி தனது மூன்று குழந்தைகளுடன் ஐரோப்பாவிற்கு கிளம்பிவிட்டாள். சார்லஸின் கடைசி பெண் குழந்தை இங்கே பிறந்தது. அதற்கு நெப்போலினி என்று பெயர் வைத்தது குழந்தைக்கு தந்தை நெப்போலியன்தான் என கிசுகிசு கிளம்ப காரணமானது.

நெப்போலியனை கவனிக்க  புதிய டாக்டராக கார்சிகாவைச் சேர்ந்த இளைஞர் பிரான்செஸ்கோ அட்டோன்மார்க்கி வந்தார். இவருடன் இரு பாதிரியார்கள் மற்றும் ஒரு சமையல்காரர் ஆகியோரும்  செப்டம்பர் 19 ஆம் தேதி இந்தத் தீவுக்கு வந்து சேர்ந்தனர்.

நெப்போலியன் அந்த டாக்டரிடம், தனது தந்தை கொடுமையான புற்றுநோயால் இறந்து விட்டார். மரபுரீதியாக எனக்கும் அந்நோய் வருமா? என்று கேட்க, அதை உடனே மறுத்த டாக்டர், மன்னர் உடற் பயிற்சி செய்தால் நல்லது என்று கூறி, தோட்ட வேலையை பரிந்துரைத்தார். மன்னரும் அதை ஏற்றார்.

1820 ஆம் ஆண்டு ஜூலை 19 ஆம் தேதி டாக்டர் அட்டோன்மார்க்கி  தனது டைரியில் ‘‘மன்னருக்கு  உடல்  வலி, காய்ச்சல், மயக்கம், இருமல், வாந்தி போன்ற பிரச்னைகள் அதிகரித்துள்ளன. பத்தே மாதங்களில் இவை அவரது உயிரையே பலி வாங்கி விட்டது’’ என்று எழுதியிருந்தார். நெப்போலியனின் மோசமான உடல்நிலையைப் பற்றி அவரது அந்தரங்க  ஊழியன் லூயி மார்ச்சந்தும், பல் டாக்டர் ஒருவரும் தமது டைரிகளில் விபரமாக 
எழுதியிருக்கிறார்கள்.

1955 ஆம் ஆண்டு விவரமாக வெளிவந்த நினைவுகுறிப்புகள்தான் ஆர்சனிக் விஷத்தை, ஸ்லோபாய்சனாக கொடுத்து அவரைக் கொன்றார்கள் என்பதைக் கூறிய சாட்சி. நெப்போலியனுக்கு வயிற்றுக்கு ஒவ்வாத  உணவுகளை சாப்பிட வைத்து, உடல்நிலையை குலைத்தனர் என்றும் பல் டாக்டர் தனது குறிப்பில் எழுதி வைத்திருக்கிறார். பலமற்ற அவர் உடலில் ஆர்சனிக் விஷம் உணவில் கலந்து கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த துரோகத்திற்கு ஸ்கெட்ச் போட்டவர் யார்?

தனது இதயத்தை உடலில் இருந்து தனியாக எடுத்து, அதைத் தன் மனைவி மேரி லூசிக்கும், தனது தலைமுடியை வெட்டி எடுத்து தனது நண்பர்களுக்கும் தனது ஞாபகச் சின்னமாக வழங்கவேண்டும் என்பதே நெப்போலியனின் கடைசி ஆசை. இறுதியில் தலைமுடி மட்டும் பலருக்கு ஞாபகச் சின்னமாக கொடுக்கப்பட்டது.

1960 ஆம் ஆண்டு டாக்டர் போர்ஸுட் இந்த முடியை செக் செய்து நெப்போலியனின் உடலில் ஆர்சனிக் விஷம் செலுத்தப்பட்டுள்ளது என்கிற எக்ஸ்க்ளூசிவ் உண்மையைக் கண்டுபிடித்தார். குற்றவாளியைக் கண்டுபிடிக்க ஆன காலம் 14 ஆண்டுகள். குற்றவாளி? ஆருயிர் நண்பர் சார்லஸ்தான்.

நெப்போலியன் மாளிகையில் ஆப்பிரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் மதுவில் ஆர்சனிக் விஷம் கலந்து  உணவில் கொடுத்து வந்திருக்கிறார் இந்த ஆருயிர் நண்பர். ஏன் இந்த வன்மம்? 1840 ஆம் ஆண்டு சார்லஸ் அங்கில்லாத நிலையில் செயின்ட் எலினா தீவுக்கு ஒரு பிரத்தியேக கமிட்டி அனுப்பப்பட்டு, மன்னரின் பிணம் பாரிஸுக்கு எடுத்து வரப்பட்டது.

சகல அரச மரியாதையுடன் அது இங்கே புதைக்கப்பட வேண்டும் என்பதே மக்கள் விருப்பம். சவ அடக்கத்தில் சார்லஸ் மட்டும் ஆப்சென்ட். துரோகியாக மாறிய சார்லஸ் பிரான்ஸ் மன்னர் பத்தாம் சார்லஸைச் சந்தித்து சொகுசான பதவியை வாங்கிவிட்டார். தன் மனைவியிடம் நெப்போலியன் உறவுகொண்டிருந்தார்  என்பது தான் சார்லஸை கொலைகாரராக்கியது.

(வெளிச்சம் பாய்ச்சுவோம்)