தேடல் நிறைந்த மாணவர்களின் சொர்க்கம் பிரான்ஸ்



வெளிநாட்டுக் கல்வி

வெளிநாட்டுக் கல்வி எல்லோருக்கும் சாத்தியம்

தங்கள் நாட்டுக்குப் படிக்க வரும் மாணவன் என்ன நோக்கத்தில் வருகிறான்? அவன் தேடல்கள் எப்படியிருக்கிறது? என்பதை அறிவதற்காகத்தான் Skype Interview. நீங்கள் அனுப்புகிற ஆவணங்களில் உங்கள் ‘ஸ்டேட்மென்ட் ஆப் பர்ப்பஸ்’ தான் முக்கியத்துவம் பெறும். அந்த அடிப்படையில்தான் சேர்க்கை நடக்கும்.

தங்கள் நாட்டுக்கு வரும் ஒரு மாணவன் தகுதி வாய்ந்தவனாக இருக்கிறானா என்பதைத் தெரிந்துகொள்ளவே கல்வி நிறுவனம் ஆர்வம் காட்டும். உங்கள் ஆராய்ச்சி மனோபாவம், கற்றுக்கொள்ளும் திறன், லட்சியம், மொழிவளம், ஆளுமைத் திறன் என அனைத்தையும் அரைமணி நேர Skype Interview-வில் கண்டுபிடித்துவிடுவார்கள்.

அந்த அடிப்படையில் உங்கள் சேர்க்கை உறுதி செய்யப்பட்டு ஆஃபர் லெட்டர் அனுப்புவார்கள்.  கல்வி நிறுவனம் உங்கள் சேர்க்கையை உறுதி செய்தவுடன் விசாவுக்கான ஏற்பாடுகளில் இறங்க வேண்டும். முதலில் கேம்பஸ் பிரான்ஸ் நிறுவனத்தின் www.inde.campusfrance.org/en என்ற இணையதளத்திற்குச் சென்று பதிவு செய்ய வேண்டும்.

பதிவு செய்த பிறகு உங்களுக்கு ஒரு நேரம் ஒதுக்கப்படும். அந்த நேரத்தில் ஒரிஜினல் ஆவணங்களோடு Alliance Francaise de Chennai, 24,College Rd, Subba Road Avenue, Nungambakkam, Chennai-600034 (Telephone: 044-42028773) என்ற முகவரியில் இருக்கும் கேம்பஸ் பிரான்ஸ் நிறுவன அலுவலகத்துக்குச் செல்ல வேண்டும். அங்கு உங்கள் ஆவணங்கள் சரிபார்க்கப்படும்.

இந்த நடைமுறை முடிந்ததும் விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டும். சென்னை, France Visa Application Centre, Fagun Towers, Third Floor, No 74, Ethiraj Salai, Egmore, Chennai - 600008 என்ற முகவரியில் இருக்கும் விசா அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விசாவில் உங்களுடைய நிதிநிலைமைதான் முக்கியமாகப் பரிசோதிக்கப்படும்.

வங்கியில் கடன் பெற்றிருந்தால், அதை உறுதி செய்யும் ஆவணம், அல்லது வேறு ஏதேனும் சொத்துகள் இருந்தால் அது குறித்த ஆவணங்கள் இணைக்க வேண்டும். கல்விக்கட்டணம் கட்டுவதற்கான சாத்தியத்தை ஆராயவே இந்தச் சோதனை. 7 முதல் 15 வேலை நாட்களுக்குள் உங்களுக்கு விசா கிடைத்துவிடும். ஆகஸ்ட் மாதத்தில் மெல்ல மெல்ல இதற்கான பணிகளைத் தொடங்கினால் செப்டம்பர் தொடக்கத்தில் விமானம் ஏறிவிடலாம்.

ஏதோ நாமும் பிரான்ஸில் போய் படிக்கிறோம் என்ற மனநிலை இல்லாமல், அங்கிருக்கும் வளத்தை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள முனைய வேண்டும். தேடல் நிறைந்த மாணவர்களுக்கு சொர்க்கம், பிரான்ஸ். தயக்கமில்லாமல் உள்ளூர் மாணவர்களிடம் பழகி மொழி, கலாச்சாரம், வாழ்க்கை முறைகளை எல்லாம் முழுமையாக உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.

நீங்கள் பிரான்ஸில் இருக்கிற ஒவ்வொரு நொடியும் உபயோகமானவை என்ற எண்ணத்தோடு இயங்க வேண்டும். பிரெஞ்சு மொழியை முழுமையாகக் கற்றுக்கொண்டவர்களுக்கு அந்நாட்டில் மிகச்சிறந்த எதிர்காலம் உண்டு. பிரான்ஸ் அரசு வழங்கும் சில உதவித்தொகைகளைப் பார்த்ததோடு நாம் அடுத்த நாட்டுக்குப் பயணிப்போம்..

பயிற்சிக்கான  உதவித்தொகைத் திட்டம்

 இந்தியக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இளநிலை அல்லது முதுநிலைப் பட்டப் படிப்பு படிக்கும்போது, பிரான்ஸ் சென்று அங்குள்ள கல்வி நிறுவனங்களில் 3 மாதங்கள் பயிற்சி பெறும் இந்திய மாணவர்களுக்காக இந்த உதவித்தொகைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மாணவர்கள் பரிமாற்றத் திட்டம்

இந்தியாவில் சில கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்கள் போன்றவை பிரான்ஸ் கல்வி நிறுவனங்களுடன் இருதரப்பு ஒப்பந்தங்கள் செய்துகொண்டிருக்கின்றன. அதுபோன்ற இந்தியக் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட திட்டம் இது. ஒப்பந்தப்படி பிரான்ஸ் சென்று படிக்கும் 3 முதல் 6 மாத காலத்துக்கு இந்திய மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.

இளநிலை, முதுநிலைப் படிப்புகளுக்கான உதவித்தொகை

பிரான்ஸில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு படிக்கும் இந்திய மாணவர்களுக்கான உதவித்தொகை இது. படிக்கும் காலத்தில் 1 முதல் 2 ஆண்டுகள் வரை மட்டுமே இந்த உதவித் தொகை கிடைக்கும். படிப்பில் மிகத் திறமையான மாணவர்களைத் தேர்ந்தெடுத்து இந்த உதவித்தொகையை வழங்குவார்கள். ஒவ்வொரு ஆண்டிலும் சில குறிப்பிட்ட படிப்புகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகின்றன.

ஆராய்ச்சிக்கான உதவித்தொகை

இந்தியப் பல்கலைக்கழகங்களில் பி.எச்டி படிப்பை முடித்துவிட்டு பிரான்சில் ஆராய்ச்சித் திட்டப்பணிகளை மேற்கொள்ள விரும்பும் மாணவர்களுக்கான உதவித்தொகை இது. 3 முதல் 6 மாதங்கள் மட்டுமே இந்த உதவித் தொகை கிடைக்கும்.

இளம் ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆராய்ச்சியின் ஒரு பகுதியை பிரான்ஸில் உள்ள மிகத் தரமான ஆய்வகங்களிலும் பல்கலைக்கழகங்களிலும் மேற்கொள்வதற்கு வாய்ப்பளிப்பதற்காகவே இந்த உதவித்தொகை வழங்கப்படுவதாக பிரான்ஸ் தூதரகம் கூறுகிறது.

இந்த உதவித் திட்டங்கள் மூலம் அளிக்கப்படும் அனைத்துப் படிப்புகளுக்கும் 30 வயதுக்குக் குறைந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். பிரான்ஸ் கல்வி நிறுவனத்தில் சேருவதற்கு அனுமதி கிடைத்ததற்கான கடிதத்தை வைத்திருக்க வேண்டும்.

பிரான்ஸ் தூதரகம் வழங்கும் உதவித் தொகையில் மாதம் ரூ.40 ஆயிரம் வரையிலான நிதியுதவி, விமான டிக்கெட் உள்ளிட்டவை அடங்கும். இந்த உதவித் தொகைகள் பெறுவதற்கான விண்ணப்பங்கள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே பெறப்படும். www.inde.campusfrance.org என்கிற இணையதளத்தில் இதற்கான விவரங்கள் தரப்பட்டுள்ளன.

அடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..!
அடுத்த  இதழில்...