வேலை வேண்டுமா?



உத்வேகத் தொடர்

பொது அறிவுப் பகுதியில் அதிக மதிப்பெண் பெற எளிய வழிகள்!


பொதுவான போட்டித் தேர்வு களுக்கு அடிப்படையாக இருக்கும் பொதுஅறிவு சார்ந்த பாடத்திட்டங்களைப் பற்றி பார்த்து வருகிறோம். இந்திய வரலாறு தொடங்கி, இந்தியா மற்றும் உலக உறவுகள் வரை கடந்த இதழில் பார்த்தோம். இந்த இதழில் பிற பாடங்களைப் பார்ப்போம். இந்தியப் பொருளாதாரம் ((Indian Economy)இந்தப் பாடத்தில், இந்தியப் பொருளாதாரத்தின் மாற்றங்கள்...

குறிப்பாக, பொருளாதாரத் தாராளமயமாக்குதல் அறிமுகப்படுத்தப்பட்டபின் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள், பொருளாதார மாற்றத்தினால் தொழிற்சாலை மற்றும் நிதித்துறையில் ஏற்பட்ட விளைவுகள், இந்தியாவின் ஐந்தாண்டுத் திட்டங்கள், ஐந்தாண்டுத் திட்டங்களினால் வேளாண்மை, உடல்நலம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி ஆகிய துறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள், திட்டக் கமிஷன், தேசியவளர்ச்சிக் குழு, மாறுபடும் பொருளாதாரச் சூழ்நிலை, வெளிநாட்டு நேரடி முதலீடு (Foreign Direct Investment) பற்றிய கேள்வி கள் பொது அறிவுப் பாடத்தில் அமையும். மேலும், வேளாண் சந்தையியல், தேசிய வேளாண் கொள்கை, வேளாண் காப்பீடு, சிறு தொழில்கள் மற்றும் குழந்தைத் தொழில்கள் ஆகியவற்றைப் பற்றியும் நன்கு தெரிந்துகொண்டால் அதிக மதிப்பெண்கள் பெறலாம்.

எழுத்துத் தேர்வில் இடம்பெறும் பொது அறிவுப் பகுதிகளான இந்திய வரலாறு, இந்திய மற்றும் உலகப் புவியியல், இந்திய அரசியல், இந்தியா மற்றும் உலக உறவுகள், இந்தியப் பொருளாதாரம் ஆகியவற்றைப்பற்றி தெரிந்து கொள்ளும்போதே, பொது அறிவின் மற்ற பகுதிகளான உலக நிகழ்வுகள் மற்றும் அமைப்புகள், அறிவியல் தொழில்நுட்பம் ஆகியவற்றைப் பற்றியும் விளக்கமாகத் தெரிந்து கொள்வது நல்லது.

உலக நிகழ்வுகள் மற்றும் அமைப்புகள் (International Affairs and Institutions)உலக அளவிலான முக்கியத் தகவல்கள், பிரச்னைகள், தலைவர்கள், அமைப்புகள் பற்றிய தகவல்களைச் சேகரிக்க வேண்டும்.குறிப்பாக - ஐக்கிய நாடு அமைப்பு, ஐ.நா வளர்ச்சித் திட்டம், ஐ.நா. குழந்தைகள் நல அமைப்பு, ஐ.நா. மக்கள்தொகை செயல்பாட்டு நிதியம், ஐ.நா. மாநாடு போன்றவற்றையும், உணவு மற்றும் வேளாண் நிறுவனம், சர்வதேச வளர்ச்சி, உலக வங்கி, சர்வதேச நிதிக்கழகம், சர்வதேச விமானப் போக்குவரத்து நிறுவனம், சர்வதேச வேளாண் நிதி நிறுவனம், சர்வதேச தொழில்நுட்பக் கழகம், சர்வதேச கடல் நிறுவனம், ஐ.நா.கல்வி அறிவியல் கலாசாரக் கழகம் போன்றவைகளைப் பற்றியும் தகவல் சேகரித்து அவ்வப்போது நினைவுப்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவை தவிர, North Atlantic Treaty Organisation (NATO), Bank for International Settlements (BIS), Organisation for Economic Co-Operation and Development (OECD), European Community (EC), Council  of Europe, Common Wealth of Independent States (CIS) Organisation of American States (OAS), Caribbean Community (CARICOM), Asian Development Bank (ADB), Colombo Plan, Asia-Pacific Economic Co-operation (APEC), Associations of South East Asian Nations for Regional Co-Operation (SAARC), The League of Arab States, Organisation of African Unit (OAU), World Council of Churches, Unrepresented Nations and People Organisations (UNPO), International Committee of the Red Cross(ICRC), International Criminal Police Organisation (Interpol), International Telecommunications Satellite Organisation (Intelsat), International Air Transport association (IATA), International Organisation for Standardisation (ISO), World Wide Fund for Nature (WWF) போன்ற உலக நிறுவனங்கள் பற்றியும் தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது. உலக நாகரிகங்கள், உலக மொழிகள், உலக சமயங்கள், உலக மக்கள்தொகை பற்றிய அறிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (Science and Technology)

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் கடந்த ஆண்டுகளில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்ற விவரங்களை விரிவாகச் சேகரிக்க வேண்டும். உயிரி தொழில்நுட்பம்(Bio Technology), தகவல் தொழில்நுட்பம் (Information Technology), வானவியல் மற்றும் தகவல்தொடர்பு (Space and Communication), அணுசக்தி (Nuclear Power) போன்ற பாடங்களிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

பயோ டெக்னாலஜி துறைக்கு இந்தியா அதிக முக்கியத்துவம் அளித்துவருகிறது. Genetic Engineering, DNA, Finger Printing, PCR Technique போன்றவை பயோ டெக்னாலஜி பாடத்தில் மிக முக்கியம். இவைபற்றி ஏராளமான ஆராய்ச்சிகள் நடந்து வருவதால் அந்த ஆராய்ச்சி முடிவுகள் பற்றியும் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியமாகும்.

தகவல் தொழில்நுட்பம் (Information Technology)

கம்ப்யூட்டர் தொழில்நுட்பத் துறையில் என்னனென்ன மாற்றங்கள் உருவாகியுள்ளன என்பது பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். மேலும், கம்ப்யூட்டர் பற்றிய கலைச்சொற்கள் மற்றும் அதற்கான பொருள்களையும் கவனமுடன் சேகரிக்க வேண்டும். இதுதவிர Artificial Intelligence, Virtual Relativity  பற்றியும் தெரிந்து இருக்க வேண்டும்.

இந்தியப் பொருளாதார கொள்கையில் தாராளமயமாக்குதல் அறிமுகப்படுத்தப்பட்ட பின் கம்ப்யூட்டர் துறையில் என்னென்ன மாற்றங்கள் உருவாகியுள்ளன என்பது பற்றியும் இந்த மாற்றம் வேளாண் தொழில், தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றில் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது என்பது பற்றியும் தகவல்கள் சேகரிப்பது நல்லது.     
       
வானவியல் தொழில்நுட்பம் (Space and Communication)

வானவியல் தொழில்நுட்பம் பாடத்தில் வான்வெளி அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்.  இந்திய வான்வெளி விஞ்ஞானிகள், வான்வெளி தொழில்நுட்ப வளர்ச்சியில் குறிப்பாக, Developing the Cryogenic Engine, Polar Satellite Launch Vehicle (PSLV), Geostationary Satellite Launch Vehicle (GSLV)    ஆகியவற்றைப் பற்றிய ஆராய்ச்சிகளையும், அதன் முடிவுகளையும் தெரிந்துகொள்ள வேண்டும்.

இதுதவிர, ஏவுகணைத் தொழில்நுட்ப வளர்ச்சியில் பங்குகொண்ட விஞ்ஞானிகள் பற்றியும் தகவல்கள் சேகரித்துக்கொள்ள வேண்டும். வேளாண் துறையில் Remote Sensing எந்த அளவுக்குப் பயன்படுகிறது என்பதையும், நிலநடுக்கம், புயல் போன்ற காலங்களை முன்கூட்டியே அறிந்து வேளாண்மையைக் காக்கும் வழிமுறைகளையும் தெரிந்துகொள்ள வேண்டும்.

அணுசக்தி (Nuclear Power)அணுசக்தி பாடத்தில் அணுசக்தி

ஆற்றல் பற்றியும், அவை எந்தமாதிரியான ஆக்கப்பூர்வமான வழிகளில் பயன்படுத்தப்படுகின்றன என்பது பற்றியும், அணுசக்தியால் ஏற்படுத்தப்பட்டுள்ள சமூகப் பொருளாதார மாற்றங்கள் பற்றியும் தகவல்கள் சேகரிப்பது அதிக மதிப்பெண்கள் பெற உதவும். 

கடல்சார் தொழில்நுட்பம் (Ocean Technology)

 கடல்சார் தொழில்நுட்பம் பற்றி அறிந்து கொள்வதும், இந்தியாவின் கடல் தொழில்நுட்ப மேம்பாடு பற்றித் தெரிந்துகொள்வதும், மருத்துவத் துறையில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப மாற்றங்கள், நோய் கண்டறியும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கருவிகள் பற்றி தெரிந்துகொள்வதும் இப்பாடத்தில் அதிக மதிப்பெண்கள் பெற உதவும்.

 இதுவரை குறிப்பிட்டுள்ளவை அனைத்தும் பொதுஅறிவு பாடத்தில் இடம்பெறும் முக்கியப் பாடங்கள் ஆகும். இவற்றில் குறிப்பிடப்படாத பொதுஅறிவு சம்பந்தப்பட்ட தலைப்புகளிலும் கேள்விகள் அமைய வாய்ப்புகள் உள்ளன. இந்தப் பாடங்களில் குறிப்பிடப்படாத கேள்விகள் இடம்பெற்றால் அதற்கு பதில் எழுதுவதற்கு சில பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களில் வெளிவரும் அரசியல், பொருளாதாரம், அறிவியல், சமூகம் மற்றும் தொழில்நுட்பக் கட்டுரைகளைத் தொடர்ந்து படிக்கவேண்டும். இதைப்போலவே வார, மாத இதழ்களையும் ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய தொகுப்புகளையும் தொடர்ந்து படித்து வருவது நல்லது.

எழுத்துத் தேர்வுக்கான தயாரிப்பை மேற்கொள்ளும்போது பொது அறிவுப் பாடத்திலுள்ள தலைப்புகளுக்கான விளக்கங்களை விரிவான முறையில் தெரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். அப்படித் தயாரானால் தான் கொள்குறி வகை வினா தேர்வு மற்றும் விரிவான விளக்க வகை கேள்விகள் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற இயலும்.

மேலும் சில முக்கியமான குறிப்புகளை மனதில் நிறுத்திக்கொள்வது நல்லது.

1. புள்ளி விவரங்களைக் குறிப்பிடும்போது, அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களை மேற்கோள் காட்டுவது நல்லது. அரசு, புள்ளி விவரங்களைத் தவிர மற்ற புள்ளி விவரங்களைக் குறிப்பிடும்போது ஆதாரங்களைக் குறிப்பிட்டு எழுத வேண்டும்.
2. சிறுசிறு வாக்கியங்களில் பதில்கள் அமைந்தால் நல்லது.
3. சரியான தலைப்புகளையும், துணைத் தலைப்புகளையும், தேவையான இடத்தில் கொடுப்பது சிறந்ததாகும். தடைப்படாத மொழியில் சிறப்பான நடையில் பதில் எழுதுவது அதிக மதிப்பெண் பெற உதவும்.
4. எந்த ஒரு விரிவான கேள்விக்கும் முன்னுரை மற்றும் முடிவுரை தெளிவாக எழுதப்பட வேண்டும்.
5. விடைகள் எழுதும்போது மிகவும் தெளிவாகவும், விளக்கமாகவும், புரியும்படியும் எழுத வேண்டும்.
6. எல்லைப் பிரச்னை, புவியியல் பற்றிய பதில்கள் எழுதும்போது சிறிய படம் வரைந்து விளக்குவது நல்லது
இனி போட்டித் தேர்வுகளில் இடம்பெறும் பல்வேறு கேள்விகளின் தன்மைகள், நிலைகள் பற்றிய விளக்கங்களை உதாரணங்களோடு அடுத்த இதழில் பார்ப்போம்.

ஐக்கிய நாடு அமைப்பு, ஐ.நா வளர்ச்சித் திட்டம், ஐ.நா. குழந்தைகள் நல அமைப்பு, ஐ.நா. மக்கள்தொகை செயல்பாட்டு நிதியம், ஐ.நா. மாநாடு போன்றவற்றையும், உணவு மற்றும் வேளாண் நிறுவனம், சர்வதேச வளர்ச்சி, உலக வங்கி, சர்வதேச நிதிக்கழகம், சர்வதேச விமானப் போக்குவரத்து நிறுவனம், சர்வதேச வேளாண் நிதி நிறுவனம், சர்வதேச தொழில்நுட்பக் கழகம், சர்வதேச கடல் நிறுவனம், ஐ.நா.கல்வி அறிவியல் கலாசாரக் கழகம் போன்றவைகளைப் பற்றியும் தகவல் சேகரித்து அவ்வப்போது நினைவுப்படுத்திக்கொள்ள வேண்டும்.

(தேடுவோம் வேலையை...)

நெல்லை கவிநேசன்