தமிழர் வாழ்க்கை முறையை கற்றுத்தர ஒரு பள்ளி



மரபு

‘கற்றல் இனிது’

தொன்மத் தமிழ் மக்களின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத அங்கமாக இருந்தன கலைகள். மகிழ்ச்சியிலும் சரி, துக்கத்திலும் சரி... கலைகளே அம்மக்களின் வடிகாலாக இருந்தன. தமிழ்ச்சமூகத்தின் அடையாளமாகவும், சிறப்புமாகவும் இருந்த பெரும்பாலான கலைகள் இன்று அழிந்துவிட்டன. கலையை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்ந்த கலைஞர்கள் இன்று வெவ்வேறு தொழில்களில் வெதும்பிக்கொண்டிருக்கிறார்கள்.

பரபரப்பும் அவசரமும் நிறைந்த வாழ்க்கையைச் சுமந்து கொண்டு, தங்கள் பண்பாட்டையும், பாரம்பரியத்தையும் இழந்துவிட்டு எதை நோக்கியோ இலக்கற்று ஓடிக்கொண்டிருக்கிறார்கள் தமிழர்கள். கரகாட்டம், பறையாட்டம், கும்மி, காவடி, மயிலாட்டம், கோலாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், பொம்மலாட்டம், பொய்க்கால் குதிரை, தெருக்கூத்து போன்ற வண்ணமயமான கலைகளும், கபடி, சிலம்பம், வளரி (பூமராங்), வாள் சண்டை, வடம் இழுத்தல், ஈட்டி எறிதல், வழுக்கு மரம் ஏறுதல், வில் அம்பு எய்தல் போன்ற தமிழ் பண்பாடு மணக்கும் விளையாட்டுகளும் இன்றுள்ள பிள்ளைகளுக்கு அந்நியமாகிவிட்டன.

பாடப்புத்தகங்களின் அழுத்தத்தில் தவிக்கும் பிள்ளைகளுக்கு இதைப்பற்றியெல்லாம் யோசிக்கவோ, கற்றுக்கொள்ளவோ
நேரமில்லை. கற்றுத்தரவும் யாருமில்லை. இந்தப் பேரவலத்தைப் போக்குவதற்காகவே டாக்டர் ப்ரீத்தா நிலா ‘கற்றல் இனிது’ வாழ்வியல் பள்ளியைத் தொடங்கியிருக்கிறார்.

தேனி மாவட்டம், வீரபாண்டியில் செயல்படும் இந்தப் பள்ளியில் தமிழர் கலைகள், கதை சொல்லல், பாரம்பரிய வேளாண்மை, சிறுதானிய சமையல் முறை, பாரம்பரிய வைத்திய முறை என நம் மூதாதையர்கள் வாழ்ந்த அத்தனை வாழ்க்கை முறைகளையும் கற்றுத்தருகிறார்கள். ஆயுர்வேதம் மருத்துவரும் உளவியல் நிபுணருமான ப்ரீத்தா நிலா இப்படியொரு பள்ளியைத் தொடங்க உந்துதலாக இருந்தது எது?
அவரிடமே கேட்டோம்.

‘‘உலகத்தில் வேறெந்த தொல் சமூகத்திற்கும் இல்லாத கலையும் மரபும் நம்மிடம் இருந்திருக்கிறது. அவை இன்று நம்மிடம் இருந்து பறிபோய்விட்டன. வேற்றிடம் சென்று வேறு ஒரு பெயரில் அவை திரும்பி வரும்போது நம் மக்கள் அதைக் கொண்டாடுகிறார்கள். அந்நிய அடையாளம் இருந்தால் தான் அவற்றை ஏற்றுக்கொள்கிறார்கள்.

‘வளரி’ என்கிற வார்த்தையை நம்மில் எத்தனைபேர் கேள்விப்பட்டிருப்போம்? தமிழ்நாட்டில் நடந்த பண்டைய போர்களில் பயன்படுத்தப்பட்ட ஒரு முக்கிய ஆயுதம், வளரி. அது, இப்போது ஆஸ்திரேலியாவின் முக்கிய விளையாட்டு.

இங்கே, நமக்கு அதன் பெயர்கூடத் தெரியாது. ஆனால் மருது சகோதரர்களும், வேலு நாச்சியாரும் போர்களில் இந்த வளரியைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இதைப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கியபோது, இதுமாதிரி ஏராளமான வளங்கள் அழிந்துபோனதை அறிந்தேன். அந்த ஆதங்கம் தான் இப்படியொரு பள்ளியை தொடங்க உந்துதலாக இருந்தது...” என்கிறார் ப்ரீத்தா.

இன்றைய கல்வி முறைகள் மீதும், குழந்தை வளர்ப்பு முறைகள் மீதும் ப்ரீத்தாவுக்கு நிறைய விமர்சனங்கள் இருக்கின்றன.

“இன்றைய பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளிடம் என்ன திறன் இருக்கிறது? அந்தத் திறனை எப்படி மேம்படுத்துவது? என்பதைப் பார்க்காமல் அதிக மதிப்பெண்களைத் தேடி ஓடும் பந்தயக் குதிரைகளாக மாற்றிக் கொண்டிருக்கின்றனர். பணம் சேர்ப்பவர் தான் வெற்றியாளர்கள் எனும் தவறான சித்தாந்தம் உருவாகிவிட்டது.

மதிப்பெண் வேட்டைக்காக, அரசுப் பள்ளிகளிலிருந்து, ஆங்கிலவழிப் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பிள்ளைகளைத் தள்ளுகிறார்கள். இதனால் புத்தகப்படிப்பு ஒன்றில் மட்டுமே தங்கள் முழுக்கவனத்தையும் செலுத்தும் மாணவர்கள் நடைமுறை வாழ்க்கைக்குத் தேவையான வேறு எந்தத் திறனையும் வளர்த்துக்கொள்ள முடிவதில்லை. பள்ளி, கல்லூரிகளில் முதலிடம் பெற்ற மாணவர்கள் கூட, தங்கள் வாழ்க்கையில் நல்லதொரு வெற்றியைப் பெறமுடிவதில்லை என்பதுதான் இன்றைய நிலை.

வாழ்க்கையின் வெற்றிக்குத் தேவையான பல்வேறு திறன்களை பள்ளிக்கும், கல்லூரிக்கும் வெளியில்தான் கற்றுக்கொள்ள வேண்டி யிருக்கிறது. அனைவருடனும் இயல்பாகப் பழகும் திறன், சிந்திக்கும் திறன், தகவல் பரிமாற்றத் திறன், ஆளுமைத் திறன், தொழில்நுட்பத் திறன், எதையும் ஏற்றுக்கொள்ளும் திறன் என்று வாழ்க்கைக்குத் தேவையான எத்தனையோ அடிப்படைத் திறன்கள் இருக்கின்றன. இவைகளையெல்லாம், பள்ளிகளிலோ, கல்லூரிகளிலோ கற்றுக் கொள்ளக்கூடிய சூழல் தற்போது இல்லை.

மனப்பாடம் செய்து படிக்கும் வழிமுறையை மட்டுமே ஆசிரியர்கள் கற்பித்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் மாணவர்கள் பல்வேறு மன அழுத்தங்களுக்கு ஆளாகி அவதிப்படுன்றனர். எந்த ஒரு தோல்வியையும் ஏற்றுக் கொள்ளக்கூடிய மனநிலையோ, எதிர்கொள்ளும் துணிவோ சிறிதுகூட இருப்பதில்லை.

இன்றைய மாணவர்களிடத்தில் உடல் நலனுக்கான விளையாட்டுகளோ, மன நலனுக்கான பயிற்சிகளோ இல்லாமல் போய்விட்டது. ஓடியாடி விளையாடுவதை விட்டுவிட்டு, ஒரே இடத்தில் அமர்ந்து கம்ப்யூட்டரிலும். மொபைல் போனிலும் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த விளையாட்டுகளில் பல வன்முறையான செயல்களை மையமாகக் கொண்டதாகவே அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த மின்னணுச் சாதன விளையாட்டுகளும் மாணவர்களை மன அழுத்தங்களுக்கே உள்ளாக்குகின்றன.

நம் தமிழர் வாழ்வில் ஒன்றிணைந்து கிடந்த கலை, பண்பாடு, கலாச்சாரம், வீரம், விவசாயம், விளையாட்டு, உணவுப் பழக்க வழக்கங்கள் போன்ற பல்வேறு மரபுவழி சார்ந்த செயல்கள் இன்று காணாமல் போய்விட்டன. தமிழர்களின் மரபுவழிச் செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு, நடைமுறை வாழ்க்கைக்குத் தேவையான பல்வேறு திறன்களை வளர்க்கும் விதமான பயிற்சிகளை மாணவர்களுக்கு அளிக்க வேண்டும் என்கிற நோக்கத்தில்தான் நான் ‘கற்றல் இனிது’ வாழ்வியல் பள்ளியை தொடங்கியிருக்கிறேன்.

கலைகள், விளையாட்டுகள் தவிர, விவசாயத்தின் அவசியம், விவசாயம் குறித்த விழிப்புணர்வு, இயற்கை விவசாய முறைகள், வீட்டுத் தோட்டம், மாடித் தோட்டம் அமைத்தல், உயிர் உரங்கள், மண்புழு உரம் போன்றவைகளைத் தயாரித்தல் போன்றவைகளும், நோய் வராமல் உடல் நலனைப் பாதுகாத்தல், இயற்கை மருந்துகளைப் பயன்படுத்தல், மன நலனுக்கான பல்வேறு கதைகளை மாணவர்களுக்குச் சொல்லுதல் போன்றவைகளும் கற்றுத்தரப்படுகின்றன...” என்கிறார் ப்ரீத்தா.

‘கற்றல் இனிது’ பள்ளி இருக்கும் சூழலே ஈர்க்கிறது. தென்னந்தோப்புக்கு மத்தியில் ஒரு மைதானம். ஒருபுறம் அழகிய நதி ஓடிக்கொண்டிருக்கிறது. மறுபுறம் புல்வெளியால் நிரம்பியிருக்கிறது. “அண்மையில் கோடைகாலப் பயிற்சிகள் நிறைவடைந்தன.

இப்போது சனி, ஞாயிறு களில் வகுப்புகள் நடக்கின்றன. தொடக்கத்தில் மாணவர்களுக்கு மட்டுமே பயிற்சி என்று நிர்ணயித்தோம். ஆனால், நிறைய பெரியவர்கள் எங்களுக்கும் பயிற்சி தாருங்கள் என்றார்கள். அதனால் இப்போது அந்த விதிமுறையைத் தளர்த்தியிருக்கிறோம்.

தேர்ந்த கலைஞர்களும், தொழில்நுட்ப வல்லுநர்களும் பயிற்சிகளை வழங்குகிறார்கள். அவர்களுக்குத் தருவதற்காக மிகக்குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தகுந்த சூழல் வாய்க்கும்போது இந்த பள்ளி முற்றிலும் இலவசப் பள்ளியாக இயங்கும்.

அதுவே என் இலக்கு...” என்கிறார் ப்ரீத்தா. அழிந்துபோன, அழிவின் விளிம்பில் இருக்கிற தமிழர் பண்பாட்டை மீட்க தன் வாழ்க்கையை அர்ப்பணித்துள்ள ப்ரீத்தா நிலாவின் சேவை போற்றுதற்குரியது.

“ ‘வளரி’ என்கிற வார்த்தையை நம்மில் எத்தனைபேர் கேள்விப்பட்டிருப்போம்? தமிழ்நாட்டில் நடந்த பண்டைய போர்களில் பயன்படுத்தப்பட்ட ஒரு முக்கிய ஆயுதம், வளரி. அது, இப்போது ஆஸ்திரேலியாவின் முக்கிய விளையாட்டு. இங்கே, நமக்கு அதன் பெயர்கூடத் தெரியாது. ஆனால் மருது சகோதரர்களும், வேலு நாச்சியாரும் போர்களில் இந்த வளரியைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்...”

- தேனி மு. சுப்பிரமணி