ஸ்டவ் மெக்கானிக் மகன் ஐ.ஆர்.எஸ். ஆன கதை
சக்சஸ்
நான் பூ.கொ.சரவணன். பூங்காவனம் கொளஞ்சியம்மாள் சரவணன். செஞ்சிக்குப் பக்கத்தில் இருக்கிற பொன்பத்தி என்கிற, பேருந்து கூட எட்டிப்பார்க்காத கிராமத்து பையன். என் அப்பா, அம்மாவுக்கு முன்பு வரை எங்கள் பரம்பரையில் யாருக்கும் படிப்பின் வாசனை என்னவென்றே தெரியாது. என் தாத்தா காலம்வரை மாடு மேய்த்தே வாழ்ந்தார்கள்.
அதனால் எங்கள் குடும்பத்துக்கு ‘மாட்டுக்கார வீடு’ என்று பெயர். கலைந்த கூரை வீட்டில்தான் என்னுடைய பால்யகாலம் கழிந்தது. கேஸ் அடுப்பு ரிப்பேர் செய்யும், கேஸ் மெக்கானிக் என் அப்பா. காக்கிச்சட்டையோடு மட்டுமே காட்சி தரும் அவரின் ஊக்கத்தில்தான் என்னுடைய வாசிப்புப் பழக்கம் ஆரம்பித்தது.
புத்தகம் வாங்க கட்டுப்படியாகாத, சோற்றுக்கே கஷ்டப்படுகிற சூழலில் வளர்ந்த எனக்கு அவர் நியூஸ்பேப்பர் கடையில் பழைய புத்தகங்களை வாங்கி வந்து அறிமுகப்படுத்தினார். அம்மாவுக்கு அரசுப் பள்ளியில் ஆசிரியர் வேலை கிடைத்தது பொருளாதார ரீதியில் குடும்பத்தை மீட்டெடுத்தது. அப்படியே என் வாசிப்பின் பரப்பும், மேடைப்பேச்சு மீதான ஈர்ப்பும் விரிவானது.
அம்மாவின் தயாரிப்பில் ஓரிரு மேடைகள் ஏறிய நான் அதன்பின்னர் சொந்தமாகவே பேச ஆரம்பித்தேன். காரணம் அப்பாவின் வரிகள்: ‘மனசில இருந்து வர்ற வார்த்தையை விடப் பெருசு எதுவுமில்ல தம்பி!’. என்னை மாநில அளவில் இடம்பெறும் ஒருவனாகவே வீட்டில் வரித்துக்கொண்டார்கள். நான் மேடை நாடகம், கவிதை என்றெல்லாம் கவனத்தைப் பலவாறு செலுத்தினேன். எதிர்பார்த்தபடியே பள்ளியில்கூட முதலிடம் வராமல் அவர்களை ஏமாற்றினேன்.
கல்லூரிக்குள் நுழைகிறபொழுது எல்லோரும் போகிற ஐடி துறைப் பக்கம் போகச்சொல்லி பலரும் வழிகாட்டினார்கள். நான் விவசாயப் பின்னணியைக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதால் விவசாய மற்றும் நீர்ப்பாசன பொறியியல் பாடத்தை அண்ணா பல்கலையின் கிண்டி பொறியியல் கல்லூரியில் தேர்வு செய்தேன். வேலை கிடைக்காமல் திண்டாடுவாய் என்று என்னைக் கேலி பேசினார்கள்.
நான் என் முடிவில் உறுதியாக இருந்தேன். கல்லூரி நுழைந்தபொழுது என் ஆங்கிலத்தில் எக்கச்சக்க தடுமாற்றம் இருப்பது நன்றாகப் புலப்பட்டது. கடினமான உழைப்பு தேவை என்று எனக்குத் தோன்றியது. கன்னிமாரா நூலகத்தில் அறிஞர் அண்ணா தவங்கிடந்தார் என்று அறிந்து கல்லூரி முழுக்க அதற்கான வழியைத் தேடி அலைந்தேன். கன்னிமாரா ஹோட்டலே பலருக்கும் தெரிந்தது. ஒருவழியாய் அந்தப் பாடசாலையைக் கண்டறிந்து பரவசமடைந்தேன்.
வாரத்துக்கு முப்பது புத்தகங்கள் என்கிற அளவுக்கு என் வாசிப்பு விரிந்தது. பாதிக்கு பாதி ஆங்கிலப் புத்தகங்கள். இதழியல் துறையில் சாதிக்க வேண்டும் என்கிற ஆர்வம் உந்தித்தள்ளியது. விகடனின் வாசல் தான் மனக்கண்ணில் நின்றது.
அப்பாவை அழைத்துக்கொண்டு உச்சி வெய்யிலில் சென்னை அண்ணா சாலையில் நடந்தேன். என் அப்பா அடிக்கடி செருப்புகளைப் பறிகொடுக்கும் பழக்கமுள்ளவர். ஒரு கட்டத்தில் நிரந்தரமாகச் செருப்பு அணிவதில்லை என்று முடிவெடுத்திருந்தார். அவரின் கால்கள் வெந்து நொந்தன. ‘என்னை அலையவைத்து இப்படிப் பண்ணிட்டியே தம்பி’ என்று அவரின் நா முணுமுணுத்தது. நான் எதுவும் சொல்லவில்லை.
மாணவ நிருபராக இரண்டாவது முயற்சியில் தேர்வானேன். அர்விந்த் கேஜ்ரிவால், அருந்ததி ராய் என்று பலரைப் பேட்டி எடுத்த நான் தலைசிறந்த மாணவ நிருபராகத் தேர்வு செய்யப்பட்டேன். என் அப்பாவைச் சென்னைக்கு வரவைத்து, அண்ணா சாலையில் அலையவைத்த கதையை எல்லார் முன்னும் சொல்லி அவரின் கையில் அந்த விருதைத் திணித்தேன்.
ஆங்கிலத்தில் திக்கித்திணறி ஆரம்பகாலங்களில் பேசிய நான், தமிழ் வழியில் பொறியியல் கல்வி அறிமுகப்படுத்தப்பட்ட பொழுது பல்வேறு புத்தங்களைத் தமிழில் மொழிபெயர்த்துக் கொடுத்தேன். நான் மொழிபெயர்த்தேன் என்றே தெரியாமல், ‘இந்த CONSTRUCTION MATERIALS புக்கை எழுதினவர் தெய்வம் அண்ணா’ என்று என்னிடமே மாணவர்கள் சொல்லும்போது என் கண்கள் கலங்கும்.
விவசாயம்தான் நம் தேசத்தின் அடிப்படை. ஆனால் இந்தியாவில் விவசாயம் சந்திக்கும் சவால்கள் பலவாறு உலுக்கியது. குறிப்பாகச் சாய்நாத்தின் எழுத்துக்கள் என்னவோ செய்தன. இன்னொரு புறம் அடித்தட்டு மக்களை இணைத்துக்கொண்டு நீர் மேலாண்மை மேற்கொள்ளப்பட்டால் மட்டுமே நாம் முன்னேறுவோம் என்று எங்கள் துறைக்கு வித்திட்ட பேராசிரியர் சக்தி வடிவேல் குறிப்பிட்டது வேறுவகையான ஊக்கத்தைத் தந்தது. நெஞ்சத்தின் ஓரத்தில் இருந்த குடிமைப் பணித்தேர்வு கனவு விரிவடைந்தது.
கல்லூரி இறுதியாண்டில், ‘கேம்பஸ் இன்டர்வியூ’க்களை தவிர்த்தேன். வீட்டில் காசு வாங்கிப் படிக்கக்கூடாது என்கிற தன்மான உணர்வு உந்தித்தள்ள பத்திரிகைகளுக்கு எழுதி கொஞ்சம் காசு செய்தேன். முதல் வருடம் முனைப்பாகத் தயாரானேன் என்றாலும், வினாத்தாளில் கவின்கலைகள் சார்ந்த கேள்விகள் அதிகம் வந்தது நான் எதிர்பார்க்காத ஒன்று.
அதுபோக CSAT எனப்படும் இரண்டாவது தாளில் ஆங்கிலப் பத்தி வாசிப்பில் என் அதீத நம்பிக்கையால் எண்ணற்ற தவறுகள் செய்தது முடிவுகள் வந்ததும் தெரிந்தது. முதல் சுற்றிலேயே வெளியேறியிருந்தேன்.
‘எதாச்சும் ஒரு வேலைக்குப் போயேன். எதுவுமே கிடைக்கலனா என்ன பண்ணுவே?’ என்று அம்மா கண்கலங்க பேசினார். நான் வருமானத்துக்காக என்னுடைய கட்டுரைகளை இரண்டு புத்தகமாக வெளியிட்டேன். நடுவில் பல்வேறு இதழ்களில் பத்தி எழுதுவதும் நிகழ்ந்தது.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக மேடைப்பேச்சில் தமிழகத்தின் மிக முக்கியமான கல்லூரிகளை என் வசமாக்கினேன். அதன் மூலமும் சென்னையில் என்னுடைய ஜீவனத்தைப் பார்த்துக்கொண்டேன். அப்படியும் போதாமல் போவது நிகழ்ந்து தாய், தந்தையிடம் காசு கேட்கிற பொழுது வெட்கம் பிடுங்கித் தின்னும்.
அடுத்த முறை CSAT தேர்வு தகுதித்தாளாக ஆக்கப்பட்டு இருந்தது. நான் கூடுதல் உழைப்பைச் செலுத்தி வாசித்தேன். எழுத்து, பேச்சுப் பணிகளை நிறுத்தி வைத்தேன். முதல் சுற்றில் வெற்றி பெற்றேன்.
அடுத்த கட்டத்தேர்வுக்குத் தயாராக ஆரம்பித்தபொழுது அடிக்கடி வாந்தி, மயக்கம், மூச்சிரைப்பு ஏற்பட்டது. கண்கள் மஞ்சள் ஆகியது. மஞ்சள் காமாலை என்று நினைத்து எடுத்த சிகிச்சைகள் பயன் தரவில்லை.
பத்து கிலோவுக்கு மேல் எடை இழந்தேன். ஹீமோகுளோபின் அளவைப் பரிசோதித்தபொழுது ஐந்துக்குக் கீழே இருந்தது. பிறகு ஒருவழியாக அது விட்டமின் B12 குறைபாட்டால் ஏற்பட்ட அனீமியா என்று தெரிந்து சிகிச்சை எடுத்து ராஜீவ்காந்தி மருத்துவமனையில் போராடி மீண்டு வந்தேன். அதற்கு அடுத்த வாரம் வெள்ளம் சென்னையைச் சூழ்ந்தது. இந்த நோய்வாய்ப்பட்ட காலத்தில் நான் ஒன்றை மட்டும் தவறாமல் செய்தேன்.
பத்துக்கும் மேற்பட்ட செய்தித்தாள்களின் தலையங்கங்களை ட்வீட்டரில் அனுதினமும் வாசித்து விடுவேன். பேனா பிடித்து எழுத முடியாத அளவுக்கு உடலைப் பிணி பீடித்திருந்தது. வெறும் பத்து நாட்கள் மட்டும் படித்துவிட்டுத் தேர்வு எழுதப் போனேன். நேர்முகத்துக்குத் தேர்வானது எனக்கு ஏறக்குறைய அதிர்ச்சி.
இப்பொழுது மீண்டுமொரு சிக்கல். நான் எப்பொழுதும் தமிழிலேயே கையெழுத்துப் போடுகிற பழக்கம் உடையவன். தமிழில் கையெழுத்துப் போடக்கூடாது. அதிகாரப்பூர்வ மொழியில்தான் கையெழுத்திட வேண்டும் என்று UPSC-யிடம் இருந்து கடிதம் வந்தது. நான் தமிழில்தான் கையெழுத்துப் போடுவேன் அல்லது தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் போடுவேன் என்று உறுதியாக நின்றேன். மூன்று மாதப் போராட்டத்துக்குப் பிறகு தமிழிலேயே கையெழுத்துப் போடுங்கள் என்று பெருந்தன்மையோடு வழிவிட்டது UPSC.
நேர்முகத்தில் என்னுடைய துறை சார்ந்தும், மக்கள் சார்ந்தும் கேள்விகள் முன்வைக்கப்பட்டன. எல்லாம் முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்ட சூழலில் 725-ம் இடத்தை அகில இந்திய அளவில் பிடித்திருக்கிறேன். வருமான வரித்துறை அதிகாரியாக எனக்குப் பணி நியமனம் இருக்கப்போகிறது. என்றாலும், அடித்தட்டு மக்களோடு நேரடியாக உரையாடும், செயலாற்றும் வாய்ப்புக்கு இன்னுமொரு முறை முயலத்தான் போகிறேன்.
என்னை எது செலுத்தியது? வாசிக்கவும், கற்கவும் நான் தயங்கியது இல்லை. ‘உன் மீது நீ நம்பிக்கை வைக்காட்டி யார் வைப்பா?’ என்று கேட்ட ஆசிரியர்களின் குரல் எப்பொழுதும் செலுத்தியது. மனிதர்கள் என்கிற ஒற்றைச் சொல்லில் அடங்கிவிடும் நண்பர்கள், நலம் விரும்பிகள் சென்னை வாழ்க்கையில் துவண்ட பொழுதெல்லாம் இந்தக் கிராமத்துப் பிள்ளையைத் தாங்கிக் கொண்டார்கள். இவன் எதையாவது சாதித்து விடுவான் என்கிற நம்பிக்கைதான்.
என் தந்தை காலத்துக்கும் காக்கிச் சட்டை அணிந்தவர். தனியாகப் பண்டிகைகளுக்குக் கூட ஆடைகள் வாங்கிக்கொள்ளாதவர். கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் அவர் எனக்குக் கற்றுக்கொடுத்தவை. அவரைப்போன்ற பல்லாயிரக்கணக்கான உழைப்பாளர்களின் பிள்ளைகள் நினைவில் கொள்ள வேண்டியது ஒன்றே ஒன்றுதான். அது மகத்தான இலக்குகளை அடைய மனம் தளராமல் முனைகிற மனிதர்களால் அது நிச்சயமாக முடியும் என்பதே ஆகும்.
நோய்வாய்ப்பட்ட காலத்தில் நான் ஒன்றை மட்டும் தவறாமல் செய்தேன். பத்துக்கும் மேற்பட்ட செய்தித்தாள்களின் தலையங்கங்களை ட்வீட்டரில் அனுதினமும் வாசித்து விடுவேன். பேனா பிடித்து எழுத முடியாத அளவுக்கு உடலை பிணி பீடித்திருந்தது. வெறும் பத்து நாட்கள் மட்டும் படித்துவிட்டுத் தேர்வு எழுதப் போனேன். நேர்முகத்துக்குத் தேர்வானது எனக்கு ஏறக்குறைய அதிர்ச்சி.
பூ.கொ.சரவணன்
|