இன்னும் தீராத கடன்
சுய விமர்சனம்
முப்பத்திரண்டு ஆண்டுக்கால என் ஆசிரியப்பணியை விமர்சனப் பூர்வமாக எடை போட்டுப் பார்க்கிறேன். அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. கல்லூரியில், பி.யூ.சி. ‘பி’ வகுப்பு! அதுதான் என் முதல் வகுப்பு.
‘இன்று என் மக்குத் தலையில் மகுடம் சூட்டப்பட்டிருக்கிறது’ என்பதுதான் வகுப்பறையில் நான் உதிர்த்த முதல் வாசகம். பாடத்தைத் தொடங்குவதற்கு முன், ஒரு சுவையான அறிமுகத்தைச் சொல்லி மாணவர்களை ஈர்க்கவேண்டும் என்பதற்காகக் காலை 4 மணிக்கே எழுந்து சில வாக்கியங்களை எழுதி மனப்பாடம் செய்து வைத்திருந்தேன்.
முதல் வகுப்பிலேயே கைதட்டல் கிடைத்தது. தொடர்ந்து, மாலையில் முதல்வர் அறையில் அதற்கான விசாரணை. கைதட்டலும் விசாரணையுமாகத்தான் இத்தனை ஆண்டு என் பணி தொடர்ந்திருக்கிறது.‘கூச்சமுள்ள கிராமத்துவாசியான என்னுடன் எத்தனையோ விசயங்கள் பொருந்தாமல் நழுவிவிட்டன. வகுப்பறை மட்டும் என்னோடு வந்து கச்சிதமாகப் பொருந்திவிட்டது. வகுப்பறை பொருந்திய அளவுக்குப் பேண்ட் சட்டைகள் கூடப் பொருந்தவில்லை.
வாழ்க்கை தரும் பாடங்களை (Lessons from Life) இலக்கியக் கல்வியோடு இணைப்பது, முதல் வகுப்பிலிருந்தே என் குறிக்கோளாக இருந்துவந்திருக்கிறது. இந்தக் குறிக்கோளில் இன்றுவரை மாற்றம் இல்லை. கற்பிக்கும் முறையில் முதல் வகுப்பறையிலிருந்து இன்றைய வகுப்பறை பெரிதும் மாறியிருக்கிறது.
முதல் சில ஆண்டுகள், வகுப்பறை முழுக்க முழுக்க என் வகுப்பறையாகவே இருந்தது. அதாவது என்னுடைய உழைப்பு, என் பேச்சாற்றல், நான் தேடித்தேடிக் கொண்டுவந்து சொன்ன கதைகள் என எல்லாமே என் சார்ந்தவையாக இருந்தன. என் திறன் கண்டு மாணவர்கள் மெச்சிப்புகழ நான் மனங்குளிர்ந்து கிடந்தேன்.
இது ஒரு வழிப்பாதைப் பயணம் என்பதை நான் அன்றறியவில்லை. மாணவர்கள் ஆற்றலோ அடங்கிக் கிடந்தது. மாணவர்களின் ஆற்றலைத் தூண்ட கட்டுரை, பேச்சுப் போட்டிகளும், கல்லூரி நாள் விழாக் கலை நிகழ்ச்சிகளுமே அன்று நாங்கள் அறிந்திருந்த வழிகள். கையில் வெண்ணெய்போல வகுப்பறை இருந்தது. வெண்ணெயின் உபயோகம் தெரியாமல் இருந்தது.
அடுத்து வந்த ஆண்டுகளிலும் கற்பித்தல் முறையில் பெரிய மாற்றம் உண்டாகி விடவில்லை. ஆனால், 1975-ம் ஆண்டு தொடங்கி கல்லூரி வளாகங்களில் உருவான மோதல்கள், போராட்டங்கள், மூட்டா இயக்கத்தில் ஆசிரியர்கள் கொண்ட தீவிர ஈடுபாடு ஆகியவை, ஆசிரியர்களிடம் ‘பார்வை மாற்றத்தை’ உண்டாக்கிவிட்டன. மூட்டா (ஆசிரியர் இயக்கம்) உண்டாக்கிய மாற்றத்தை நானும் ஏற்றுக்கொண்டேன்.
வாழ்க்கையிலிருந்து பாடங்களை லட்சியநோக்கில் எடுத்துக்கொண்டு வந்து, வகுப்பறையில் நீதிநெறிகளை வலியுறுத்திய போக்கு மாறிவிட்டது. வாழ்க்கைப் பாடங்களை யதார்த்தமாகவும், விமர்சனப் பூர்வமாகவும் அணுகக்கூடிய பார்வையை மூட்டா இயக்கம் தந்தது.
அதன் விளைவாக, வகுப்பறையில் ஆழமான கேள்விகளை மாணவர்கள் முன்னால் வைக்க முடிந்தது. அப்போதும் வகுப்பறையில் விவாதங்களைத் தொடங்கவில்லை. வகுப்பறையில் சிந்தனைப் பொறி பறந்த அந்த நேரத்திலும் வகுப்பறை முழுவதும் நானே ஆக்கிரமித்து நின்றுகொண்டிருந்தேன்.
எண்பதுகளின் இறுதியில் கல்லூரியில் வயது வந்தோர் கல்வித்திட்ட அலுவலராகப் பொறுப்பேற்று 4 கிராமங்களில் வேலையைத் தொடங்கியதும் என் கற்பித்தல் முறைகளிலும் மாற்றம் வந்தது.வகுப்பறையின் கட்டுப்பாடுகள் முதியோர் மையங்களில் உடைபடக் கண்டேன். படிப்புக்கு நடுவே, ‘‘வீட்டுக்கு வந்து ஒரு வா சாப்பிட்டுப் போங்க சார்!” ‘‘நாளைக்கிக் கொள்ள சிலேட்டு கொண்டு வாங்க. ஒடைஞ்சி, ஒடைஞ்சி போகுது’’ என்று முதியோர் மையங்களில் குரல்கள் எழுந்தபடி இருக்கும்.
உஷ்! உஷ்! என்று என் மாணவத் தொண்டர்கள் அந்தக் குரல்களை அடக்கப் பார்ப்பார்கள். முடியாது.‘வகுப்பறை ஜனநாயகம்’ குறித்து நான் உருப்படியாகச் சிந்திக்க கிராம மக்கள் கற்றுக் கொடுத்தார்கள்.
தோப்பில் முகமது மீரான் எழுதிய ‘கடலோர கிராமத்தின் கதை’ என்ற நாவல் அப்போது பாடமாக இருந்தது. அறுபது மாணவர்கள் இருந்த ஒரு வகுப்பறையில் அந்தப் பாடத்தை நடத்த வேண்டியிருந்தது. நாவலில் இருந்து அறுபது தலைப்புகளைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்து மாணவர்களையே அந்தப் பாடத்தை நடத்தச் செய்தேன்.
ஊடே ஊடே நானும் பேசுவேன். பேசாமல் எங்கே இருக்கமுடிகிறது...?நான் நடத்திய வகுப்புகளைவிட மாணவர் வகுப்புகள் சுவாரஸ்யமாய் இருப்பதைக் கண்டேன். மாணவர்கள் உன்னிப்பாய் வகுப்பைக் கவனிப்பார்கள். அந்த வகுப்புகள் மதிய உணவுக்குப் பின்னர் வருபவை. ‘கட்’ அடிக்கலாம் என்ற உந்துதலை அப்பாவிக்கும் கொடுக்கக்கூடிய வகுப்புகள்.
ஆனால் ஒரு மாணவன்கூட ‘கட்’ அடிக்காமல் அந்த வகுப்புக்கு வருவான். இதுவரை ஒற்றைக் குரல், ஒற்றைச் சிந்தனை கொடுத்துவந்த அலுப்பை, பல குரல்... பல மூளைகள் பங்கேற்றுத் தூக்கி எறிந்தன. இம்மாற்றத்தை உள்ளுக்குள் இருந்து நான் உருவாக்கவில்லை. இந்த மாற்றம் வெளியே இருந்த உலகத்தின் பங்களிப்பு.
பின்னர் வந்தது மகத்தான அறிவொளி அனுபவம். ஏழாம் வகுப்பு படித்த தொண்டரில் இருந்து எம்.ஏ. படித்த தொண்டர் வரை எங்களிடம் இருந்தார்கள். எங்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக எம்.ஏ. தொண்டர்களின் பெரும்பாலான வகுப்புகள் இறுகி மூடிக்கிடந்தன.ஏழாம் கிளாஸ் தொண்டர் வகுப்பில் கலகலப்பு கொடிகட்டிப் பறந்தது. ஏழாம் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்புவரை படித்த இளம்பெண் தொண்டர்களின் மையங்கள்தான் வெற்றிபெற்ற மையங்களாகத் திகழ்ந்தன.
காரணம் ஆசிரியர் - மாணவர் என்ற இடைவெளி இல்லாத வகுப்புகள் அவை. இந்த வகுப்புகளில் ‘ஏ! மல்லிகா! நீ என்ன ஆடிக்கொரு நா அமாவாசைக்கொரு நா வந்து பாடம் நடத்துற. ஒழுங்கா தினசரி வந்து சொல்லிக் குடு!’ என்று கற்போர் தொண்டரைச் செல்லமாய்் அதிகாரம் செய்யக் கண்டோம். ‘தினசரி ஒழுங்காய் படி!’ என்ற ஆசிரியக் குரலைத்தான் இதுவரை கேட்டு வந்திருந்தோம். ‘தினசரி ஒழுங்கா சொல்லிக்குடு’ என்ற இந்தப் புதிய குரல் தேவாமிர்தமாய் எங்கள் காதில் வந்துவிழுந்தது.
இடைவெளியற்ற இந்த சகஜத்தன்மையைப் பார்த்து நான் ஏக்கமுற்றேன். மெத்தப் படித்த மேதாவியாய் உச்சாணிக் கொம்பில் உட்கார்ந்து கொண்டு மாணவர்களிடம் உரையாடுவதைவிட அவர்களோடு சகஜமாய் இணையக்கூடிய ஆசிரியராய் இருந்தால் போதும் என்ற எண்ணம் - ஆசை என்னை ஆட்டிப்படைக்க ஆரம்பித்தது. இன்றுவரை அது சாத்தியமாகவில்லை என்றே படுகிறது.
பாட்டு, கதை, விளையாட்டு என்று அறிவொளி மையம் ஒரு கலாச்சார மையமாகத் திகழ்ந்தது. கல்லூரி வகுப்பறையையும் ஒரு கல்வி கலாச்சார மையமாக ஆக்கவேண்டும் என்ற உத்வேகத்தோடு கல்லூரிக்குத் திரும்பி வந்தேன். நாடகம், விளையாட்டு, அறிவுப்பயிற்சி, விவாதம், படைப்பாற்றல் என்று இப்போது வகுப்பறை களை கட்டியது.
வகுப்பறைக்குள் நாடகங்கள் நடத்தினேன். இலக்கண விளையாட்டுகள் நடத்தினேன். படைப்பாற்றலைத் தூண்டும் பயிற்சிகளைக் கொடுத்தேன். வெளியிலிருக்கும் திறமையாளர்களை வகுப்பறைக்குள் கொண்டுபோனேன். திறந்த வெளியிடங்களில் வகுப்பறையை உருவாக்கி மாணவர்களை அங்கு கொண்டு போனேன்.
ஒவ்வொரு முயற்சியும் வெற்றி பெற்றிருக்கிறது. வகுப்பறை மலர்ந்திருக்கிறது. இருப்பினும் மீண்டும் மீண்டும் இறுகிப் போவதற்கான உள்பலவீனத்துடன் வகுப்பறை விளங்குவதையும் கவலையுடன் உணர்கிறேன். மாணவர்களை ஆசிரியர்களாக்கி ஒத்தாசைக்குக் கூட இருப்பதுதான் உண்மையான ஆசிரியப்பணி என்று சமீபத்தில் மனத்தில் படுகிறது. என் முழுக்கவனமும் இப்போது அந்தப் பக்கம் இருக்கிறது.
சிரத்தையோடு படித்து வருவது; செய்தியைக் கற்பனை கலந்து தருவது; வெளியிடும் கருத்துக்களை ஒழுங்குபடுத்திக்கொள்வது; சக மாணவர்களின் கேள்விகளை நிதானமாக எதிர்கொள்வது; சக மாணவர்களின் விமர்சனங்களைப் பணிவோடு ஏற்றுக்கொள்வது ஆகிய பண்புகளையும் பயிற்சிகளையும் ஆசிரியராகிப் பாடம் நடத்தும் மாணவர்கள் பெறுவதைப் பார்த்திருக்கிறேன். என்னைப் புதுப்பிக்கும் அனுபவமாக இது இருக்கிறது.
மாணவர்கள் ‘ஆசிரியப் பொறுப்பை’ விரும்பி ஏற்றுக்கொள்கிறார்களா? அவர்களாக முன்வர மாட்டார்கள். ஆனால் ஆசிரியர் நம்மைச் சொல்லமாட்டாரா என்று அவர்களின் கண்கள் ஏக்கத்துடன் காத்திருக்கும். இது நம் பண்பாடு சார்ந்த பலவீனம். ச.மாடசாமி எழுதியுள்ள எனக்குரிய இடம் எங்கே? நூலில் இருந்து... விலை:ரூ.100, வெளியீடு: சூரியன் பதிப்பகம், 229, கச்சேரி சாலை, மயிலாப்பூர், சென்னை-4. மொபைல்: 7299027361
வகுப்புகளில் ‘ஏ! மல்லிகா! நீ என்ன ஆடிக்கொரு நா அமாவாசைக்கொரு நா வந்து பாடம் நடத்துற. ஒழுங்கா தினசரி வந்து சொல்லிக் குடு!’ என்று கற்போர் தொண்டரைச் செல்லமாய்் அதிகாரம் செய்யக் கண்டோம். ‘தினசரி ஒழுங்காய் படி!’ என்ற ஆசிரியக் குரலைத்தான் இதுவரை கேட்டு வந்திருந்தோம்.
‘தினசரி ஒழுங்கா சொல்லிக்குடு’ என்ற இந்தப் புதிய குரல் தேவாமிர்தமாய் எங்கள் காதில் வந்துவிழுந்தது. மாணவர்களை ஆசிரியர்களாக்கி ஒத்தாசைக்குக் கூட இருப்பதுதான் உண்மையான ஆசிரியப்பணி என்று சமீபத்தில் மனத்தில் படுகிறது. என் முழுக்கவனமும் இப்போது அந்தப் பக்கம் இருக்கிறது.
பேராசிரியர் ச.மாடசாமி
|