டி.என்.பி.எஸ்.சி. அனைத்துப் போட்டித் தேர்வுகளையும் எதிர்கொள்ள சூப்பர் டிப்ஸ்



போட்டித் தேர்வு டிப்ஸ்

முனைவர் ஆதலையூர் சூரியகுமார்

கடந்த இதழில் எட்டுத்தொகை நூல்களில் நற்றிணை பற்றி பார்த்தோம். இனி அடுத்து வரும் பாடத்திட்டங்களையும் அவை பற்றி சிறு குறிப்புகளையும் பார்க்கலாம்.

2. குறுந்தொகை

* எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று குறுந்தொகை.                 
* குறுந்தொகை - குறுமை+தொகை. குறைந்த அடிகளால் ஆன பாடல்களைக் கொண்ட தொகை நூல். நல்ல என்ற வார்த்தையை அடைமொழியாகக் கொண்ட நூல் ( நல்ல குறுந்தொகை).
* இந்நூல் நான்கடிச் சிறுமையும் எட்டடிப் பெருமையும் உடைய ஆசிரியப்பாக்களால் ஆகிய நூல்.
* அகப்பொருள் பாடல்களைக் கொண்டது. ஆசிரியப்பாவால் அமைக்கப்பட்டது.
* இந்நூலின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் ஆவார்.
* இந்நூலில் 402 பாடல்கள் உள்ளன.
* இந்நூலைப் பாடிய புலவர்கள் இருநூற்றைவர் (205). நூலைத் தொகுத்தவர் “பூரிக்கோ” என்னும் புலவர், பாடப்பெற்ற பெரியோர் 25 பேர்

3. ஐங்குறுநூறு

* ஐங்குறுநூறு = ஐந்து +   குறுமை +   நூறு.
* ஐங்குறுநூறில் அடிவரையறை -  மூன்றடிச் சிறுமையும், ஆறடிப் பெருமையும் கொண்ட 500 பாடல்கள் உள்ளன.
* ஆசிரியப்பாவால் அமைக்கப்பட்டது.
* மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை என்னும் வரிசை முறையில் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு திணையும் 100 பாடல்களைக் கொண்டுள்ளது. இவை பத்துப் பகுதிகளாகப் பகுக்கப்பட்டு ஒவ்வொரு பகுதியிலும் 10 பாடல்கள் இடம் பெறுகின்றன.
* ஒவ்வொரு திணையிலும் உள்ள 100 பாடல்களும், பத்துப் பத்துப் பாடல்கள் கொண்ட பத்துப் பகுதிகளாக தனித்தனித் தலைப்புகளின் கீழ்ப் பகுக்கப்பட்டுள்ளன.
* இந்நூலில் உள்ள மருதத்திணைப் பாடல்களை ஓரம்போகியாரும், நெய்தல் திணைப்பாடல்களை அம்மூவனாரும், குறிஞ்சித் திணைப் பாடல்களைக் கபிலரும், பாலைத்திணைப் பாடல்களை ஓதலாந்தையாரும், முல்லைத் திணைப் பாடல்களைப் பேயனாரும் பாடியுள்ளனர்
* ஐந்து நூறுகளையும் தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர் கிழார். தொகுப்பித்தவர் கோச்சேரமான் யானைக்கண் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்னும் சேரமன்னன்.

4. பதிற்றுப்பத்து

* பதிற்றுப்பத்து அதன் தலைப்புக்கு ஏற்ப 10 X 10 பாடல்கள் கொண்டது. இவை அனைத்தும் சேர மன்னர்களைப் பற்றிய பாடல்கள்.
* ஒவ்வொரு மன்னனைப் பற்றியும் 10 பாடல்கள் இடம் பெறுகின்றன. ஒவ்வொரு பத்தையும், ஒரு புலவரே பாடியுள்ளார். இந்நூலைத் தொகுத்தவர், தொகுப்பித்
தவர் பெயர்களை அறிய முடியவில்லை
* இந்நூலின் முதலாவது பத்தும், பத்தாவது பத்தும் கிடைக்கவில்லை. ஏனைய 8 பத்துக்கள் மட்டுமே இப்போது உள்ளன
* துறை, தூக்கு, வண்ணம் என்ற அமைப்புகளைக் கொண்ட பாடல்கள் உள்ள நூல் பதிற்றுப்பத்தாகும்.
* பதிற்றுப்பத்தை முதலில் பதிப்பித்தவர் டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர்

5. பரிபாடல்

* பரிபாடல் பொருட்கலவை நூல் என்றழைக்கப்படும் நூலாகும்.
* பரிபாடலுக்கு உரை எழுதியவர் பரிமேலழகர். உரையுடன் பதிப்பித்தவர் உ.வே.சாமிநாத ஐயர்.
* பரிபாடல் இசை அமைத்துப் பாடக்கூடிய பாடல்களைக் கொண்டது. இந்நூல் 70 பாடல்களைக் கொண்டது. பரிபாடலின் சிற்றெல்லை 25 அடிகள், பேரெல்லைகள் 40 அடிகள்.
* இந்நூலில் இடம்பெறும் பாடல்களைப் பாடியவர்கள் பதின்மூவராவர்.
* பாடு பொருள் திருமால், செவ்வேள் (முருகப் பெருமான்) வையை (வைகை நதி) முதலியனவாகும்.
* ஏட்டுப் பிரதியான இந்நூலைத் தேடி எடுத்து அச்சேற்றியவர் டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர் ஆவார். பரிபாடலின் 70 பாடல்களில் திருமாலுக்குரியவை 8, முருகனுக்குரியவை 31, கொற்றவைக்கு 1, வையையாற்றுக்கு 26, மதுரைக்கு 4 என மொத்தம் 70 பாடல்களாகும்.

6. கலித்தொகை

* கற்றோரேத்தும் கலித்தொகை தமிழறிஞர்களைக் கவர்ந்த ஒரு நூல். இதில் ஐவகை நிலங்களைப் பற்றிய பாடல்கள் அடங்கியுள்ளன.
* பாடிய புலவர்கள்
பாலைக்கலி - பெருங்கடுங்கோ
குறிஞ்சிக்கலி - கபிலர்
மருதக்கலி - மருதன் இளநாகனார்
முல்லைக்கலி - சோழன் நல்லூருத்திரன்
நெய்தற்கலி - நல்லந்துவனார்

* இந்நூலுக்கு உரை எழுதியவர் கி.பி.14ம் நூற்றாண்டில் வாழ்ந்த நச்சினார்க்கினியர் ஆவார்.
* கலித்தொகையைத் தொகுத்து கடவுள் வாழ்த்துப் பாடியவர் நல்லந்துவனார்

7. அகநானூறு

* அகநானூறு - அகம் + நான்கு + நூறு அகப்பொருள் இலக்கணத்திற்கு இலக்கியமாய்த் திகழும் 400 அகவற்பாக்களால் அமைந்த நூல் அகநானூறு ஆகும்.
* மதுரை உப்பூரி குடிகிழார் மகனார் உருத்திரசன்மரால் தொகுக்கப்பட்டது. இந்நூலைத் தொகுப்பித்தவர் பாண்டியன் உக்கிரப் பெருவழுதியாவான்.
* அகப்பொருள் நூல்கள் தமிழில் பல இருப்பினும் “அகம்” என்றே பெயர் அமைந்த பழந்தமிழ் இலக்கிய நூல் மட்டுமேயாகும். இந்நூலுக்கு “நெடுந்தொகை” என்ற பெயரும் உண்டு.
* அகநானூறு மூன்று பகுதிகளாக உள்ளது. முதல் 120 பாட்டுகள் - களிற்று யானை நிரை எனப்படும். அடுத்த 180 பாட்டுகள் - மணிமிடைப் பவளம் எனப்படும். கடைசி 100 பாட்டுகள் நித்திலக்கோவை எனப்படும். இந்நூலில் வரலாற்றுச்
செய்திகள் அதிகம் இடம்பெற்றுள்ளன.

8. புறநானூறு

* புறநானூறு - புறம் + நான்கு + நூறு. இந்நூலைப் புறப்பாட்டு எனவும் புறம் எனவும் வழங்குவர்
* வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை, பாடாண், பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை ஆகிய புறத்திணைகளுக்குரிய துறைப் பொருள்கள் அமைந்த 400 பாடல்களை இந்நூல் கொண்டுள்ளதால் புறநானூறு என்று பெயர் பெற்றது.
* இந்நூலிற்குக் கடவுள் வாழ்த்துப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் ஆவார்.
* இந்நூலைத் தொகுத்தவர், தொகுப்பித்தவர் பெயர் கிடைக்கப்பெறவில்லை.
* வெளிநாட்டவராகிய அறிஞர் ஜி.யு.போப் அவர்களுக்குத் தமிழ் மீது பற்று உண்டாவதற்குக் காரணமாக இருந்த நூல்களுள் இப்புறநானூறும் ஒன்றாகும். அவ்வறிஞர் புறநானூற்றுப் பாடல்கள் சிலவற்றை அவ்வப்போது ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளார்.
பிறவற்றை அடுத்த இதழில் பார்ப்போம்.