நீங்களும் ஆகலாம் ஐ.ஏ.எஸ்.



வழிகாட்டித் தொடர்

சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு இலவச பயிற்சி மற்றும் வழிகாட்டுதல்

முனைவர் ப.சுரேஷ்குமார் மண்டல வேலை வாய்ப்புத்துறை துணை இயக்குநர் (ஓய்வு)

ஒரு காலத்தில் சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதும் மாணவர்கள் சுயமாகத்தான் பயிற்சி பெற்றார்கள். புத்தகங்கள், பழைய செய்தித்தாள்களின் தொகுப்பு போன்றவற்றைப் படித்தே தயாரானார்கள். இன்று நிலை மாறிவிட்டது. மத்திய, மாநில அரசுகள், தொண்டு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் என பல பயிற்சி ஏற்பாடுகள் வந்துவிட்டன. சிவில் சர்வீசஸ் தேர்வுக்கென்றே நிறைய புத்தகங்களும் வந்துவிட்டன.

தனியார் பயிற்சி மையங்களைப் பொறுத்தவரை எளிய குடும்பத்துப் பிள்ளைகள் தொட முடியாத உயரத்தில் கட்டணங்கள் இருக்கின்றன. ஏராளமான நிறுவனங்கள் இருப்பதால் எந்த நிறுவனம் தரமானது என்பதைக் கண்டுபிடிப்பதிலும் சிரமங்கள் உண்டு. சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள அகில இந்திய குடிமைப்பணிகள் தேர்வு பயிற்சி மையத்தில் தமிழக அரசு சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான பயிற்சியை வழங்குகிறது.

முழுநேரமாக பயிற்சி பெறும் மாணவர்களுக்கு தங்கும் விடுதி வசதி, உணவு, பயிற்சி உள்பட அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. வெளியில் பணிபுரிந்தோ, படித்துக்கொண்டோ மாலைநேரப் பயிற்சியில் சேரும் மாணவர்கள் பயிற்சிக் கட்டணமாக ரூ.3000 செலுத்த வேண்டும். சனி, ஞாயிறுகளில் முழுநேரமும், பிற நாட்களில் மாலை 6.30 முதல் இரவு 8.30 வரையிலும் பயிற்சி அளிக்கப்படும். இவர்களுக்கு தங்கும் வசதியோ, உணவோ வழங்கப்படமாட்டாது. முழுநேர வகுப்புக்கு 225 மாணவர்களும், மாலை நேர வகுப்புக்கு 100 மாணவர்களும் சேர்க்கப்படுவார்கள்.

அண்ைமக்காலமாக சிவில் சர்வீசஸ்

தேர்வில் தேர்ச்சி பெற்ற பல மாணவர்கள் இந்த நிறுவனத்தில் பயிற்சி பெற்றவர்கள் என்பதால் இதில் சேர கடும் போட்டி. அதனால் சேர்க்கைக்கு என்று ஒரு நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த நுழைவுத்தேர்வு சென்னை, கடலூர், கோவை, தர்மபுரி, மதுரை, சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விழுப்புரம் ஆகிய நகரங்களில் நடைபெறுகிறது. 

இந்தத் தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் பட்டதாரியாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். 21 வயது நிறைவுற்றவராகவும், 32 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். ஆதி திராவிடர், அருந்ததியினர், பழங்குடியினருக்கு 5 ஆண்டுகள், பிற்படுத்தப்பட்டோர், இஸ்லாமியர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினருக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வயதுத்தளர்வு உண்டு.  இப்பயிற்சியில் இணைய விரும்பும் மாணவர்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.

பயிற்சி பெற தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு உதவித்தொகைகளும் வழங்கப்படுகிறது. டிசம்பர் மாதம் துவங்கும் பயிற்சிக்கான மாணவர் சேர்க்கை செப்டம்பர் 10ம் தேதியோடு நிறைவு பெற்றுவிட்டது. அடுத்த ‘பேட்ச்’க்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும். இந்த நிறுவனத்தின் இணையதள முகவரி: www.civilservicecoaching.com இதுதவிர, பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான பயிற்சிகளை வழங்க பல்கலைக்கழக மானியக்குழு (UGC) தனி நிதி ஆதாரத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அதன்மூலம் தமிழகத்தில் உள்ள எல்லாப் பல்கலைக்கழகங்களிலும்  இலவசமாக பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு அந்தந்த பல்கலைக்கழகங்கள் மூலம் வெளியிடப்படும்.

தமிழ்நாட்டில் செயல்படும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் அனைத்திலும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் உள்ளன. அவற்றின் மூலமும் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு இலவச பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது. சென்னையில், கன்னிமாரா நூலகத்திலும் மாவட்டங்களில் உள்ள மாவட்ட
மைய நூலகங்களிலும் சிவில் சர்வீசஸ் தேர்விற்கென சிறப்பு பிரிவு ஏற்படுத்தப்பட்டு தேவையான ஆதார நூல்கள், மாத இதழ்கள் பராமரிக்கப்படுகின்றன. மாணவர்கள் இலவசமாக பயன்படுத்தலாம்.

தனியார் அறக்கட்டளைகள், சிறுபான்மையினர் மேம்பாடு சார்ந்த அறக்கட்டளைகளும் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு பயிற்சி வகுப்புகளையும், வழிகாட்டுதல் நிகழ்ச்சிகளையும் நடத்துகின்றன. இந்நிகழ்வுகளில் மூத்த சிவில் சர்வீசஸ் அதிகாரிகள், இளம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் பங்கேற்று தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். இவையும் மிகுந்த பயனளிக்கும். இணையதளத்தில், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். மற்றும் இதர துறைகளில் பணியாற்றும் அலுவலர்கள் ஆலோசனை வழங்குகின்றனர். யு.பி.எஸ்.சி. அமைப்பின் www.upsc.gov.in  இணையதளத்தில் முந்தைய தேர்வுகளின் வினாவங்கி, விடைகள் வெளியிடப்படுகின்றன.


அடிப்படை அறிவை பெறுவதற்கும், சில உத்திகளை கையாள்வதற்கும், நம்பிக்கையோடு தேர்வை எதிர்கொள்வதற்கும் உதவும். மாதிரித் தேர்வுகளை எழுதிப் பார்க்கும்போது பிழைகளைத் திருத்திக்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். பிற விஷயங்களை அடுத்த இதழில் பார்ப்போம்.