ஏழை வீட்டுப்பிள்ளையும் அமெரிக்காவில் படிக்கலாம்



வெளிநாட்டுக் கல்வி

அமெரிக்கக் கல்வி என்பது மேல்தட்டு மாணவர்களுக்கு மட்டுமே வாய்த்த வரம்’ என்ற நம்பிக்கையில் உண்மை இருக்கத்தான் செய்கிறது. கல்வி நிறுவனத்தில் விண்ணப்பிப்பது தொடங்கி, விசா வாங்குவது வரை பல இடங்களில் ‘எங்களுக்கு பணம் ஒரு பிரச்னை இல்லை’ என்று நிரூபிக்க வேண்டிய தேவை இருக்கிறது.

ஆனால், அண்ைமக்காலமாக இந்த நிலை மாறி வருகிறது. நடுத்தரக் குடும்பத்துப் பிள்ளைகளும், நன்றாகப் படிக்கும் அடித்தட்டுப் பிள்ளைகளும் கூட அமெரிக்காவுக்கு படிக்கச் செல்லும் சூழல் உருவாகியிருக்கிறது. இங்குள்ள சில நல்ல உள்ளங்கள் அதற்கு உதவுகிறார்கள்.

அமெரிக்காவைப் பொறுத்தவரை, முதுகலை படிக்கச் செல்வதுதான் சரியான முடிவு. இரண்டே வருடங்கள் படிப்பு... முடித்ததும் வேலை... அப்படியே செட்டில் ஆவது... இதுதான் சரியான செயல்திட்டம். அமெரிக்காவில் வெளிநாட்டு மாணவர்கள், சட்டப்பூர்வமாக வாரத்துக்கு 20 மணி நேரம் பகுதிநேர வேலை செய்யலாம். விடுமுறை நாட்களில் முழு நேரமும் வேலை செய்ய அனுமதியுண்டு.

அமெரிக்க நிறுவனங்களில் இந்திய மாணவர்களுக்கு ஏக டிமாண்ட் உண்டு. காரணம், கடின உழைப்பு. பகுதிநேர வேலை மூலம் மாதம் சுமார் ரூ.50,000 வரை சம்பாதிக்க வாய்ப்புண்டு. இதன்மூலம் தங்கும் செலவில் பெரும்பகுதியை ஈடுகட்ட முடியும். நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்கு அமெரிக்காவின் ‘ஸ்டேட் யுனிவர்சிட்டி’ எனப்படும் பிரதான பல்கலைக்கழகங்களில், கல்வி வளாகத்திலேயே பகுதிநேர வேலைவாய்ப்பு கிடைக்கிறது. ஆராய்ச்சியாளர்களுக்கு உதவியாளராக, லேப் பராமரிப்பாளராக, நூலக ஒருங்கிணைப்பாளராக, பராமரிப்பாளராக வேலை செய்யலாம். இது பொருளாதாரத் தேவைக்கு மட்டுமின்றி அறிவைப் பெருக்கிக் கொள்ளவும் உதவியாக இருக்கும்.

இங்கிருந்து அமெரிக்கா செல்வதுதான் சவால். ‘வங்கிப் பரிவர்த்தனையைக் காட்டு, பண இருப்பைக் காட்டு’ என்றெல்லாம் குடைவார்கள். அங்கே போய்விட்டால் நிலை வேறு. உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்து, கூடவே உழைப்பும், கல்வித்திறனும் இருந்தால், செலவே செய்யாமல் கூட படிப்பை முடித்து விடலாம். காரணம், பெரும்பாலான கல்வி நிறுவனங்கள், தங்கள் மாணவர்களுக்கு கல்விக்கடன் திட்டத்தை வைத்துள்ளன. மிகக்குறைந்த வட்டியில் அவர்களே கடன் தருகிறார்கள்.

படிப்பை முடித்து வேலையில் சேர்ந்த பிறகு கட்டினால் போதும். இங்குள்ள வங்கி மேலாளர்களைப் போல படிக்கும் காலத்திலேயே வட்டி கேட்டெல்லாம் துவைக்க மாட்டார்கள். பல கல்வி நிறுவனங்கள், நன்றாகப் படிக்கும் தங்கள் மாணவர்களுக்கு முழுக் கல்விக் கட்டணத்தையும் உதவித்தொகையாகவே வழங்கி விடுகின்றன. இப்படிப் படிப்பை முடித்துவிட்டு அங்கேயே செட்டிலான இந்திய மாணவர்கள் ஏராளம் உண்டு. இவை தவிர, நாசா போன்ற அரசு நிறுவனங்களும், கூகுள் போன்ற பெரு நிறுவனங்களும் தரமான மாணவர்களை அடையாளம் கண்டு உதவித்தொகைகளை வழங்கி, படிப்பு முடிந்ததும் தங்கள் நிறுவனத்திலேயே வேலைக்குச் சேர்த்துக் கொள்வதும் நடக்கிறது.

முதுகலை முடித்து, ஆராய்ச்சிப் படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு ஏக வரவேற்பு உண்டு அமெரிக்காவில். முழுச் செலவும் உதவித்தொகைகளாகவே கிடைத்து
விடும். தவிர, பணி வாய்ப்புகளும் உறுதி. அமெரிக்காவில் எந்தப் பல்கலைக்கழகத்துக்குப் போனாலும் குறைந்தபட்சம் 5 முதல் 10 பேராசிரியர்கள் இந்தியர்களாக இருக்கிறார்கள். காரணம், நல்ல மூளைக்கு அமெரிக்காவில் எப்போதும் மிகுந்த மதிப்புண்டு.

சில வெளிநாட்டுக் கல்வி ஆலோசகர்கள் அமெரிக்க விஷயத்தில் மாணவர்களுக்கு தவறாக வழிகாட்டுகிறார்கள். போலி ஆவணங்கள், தவறான பண மதிப்பு என சில தவறுகளைச் செய்ய மாணவர்களைத் தூண்டுகிறார்கள். உலகில் வேறெந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு அமெரிக்கா பாதுகாப்பு சார்ந்த விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்துகிறது. பிறநாட்டுத் தூதரகங்களில் விசா கேட்டு போலி ஆவணங்களோடு விண்ணப்பித்தால், விண்ணப்பத்தைத் தள்ளுபடி செய்வதோடு விட்டுவிடுவார்கள்.

ஆனால், அமெரிக்கா அப்படியில்லை. காவல்துறையில் புகார் செய்து நடவடிக்கை எடுக்க வைக்கிறது. அதன்பிறகு வாழ்க்கையே தொலைந்து போய்விடும். எனவே அதில் மாணவர்கள் கவனமாக இருக்க வேண்டும். தவறான ஆலோசனைகளுக்கு இரையாக வேண்டாம்.  உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்து, கூடவே உழைப்பும், கல்வித்திறனும் இருந்தால், செலவே செய்யாமல் கூட அமெரிக்காவில் படிப்பை முடித்துவிடலாம்.

அடுத்த இதழில் இங்கிலாந்து...