வன்முறையில்லா வகுப்பறை



விழிப்புணர்வுத் தொடர்

குழந்தைகள் ஏன் பள்ளியை வெறுக்கிறார்கள்...?ஒரு மாணவன் எதையெல்லாம் செய்தால் ஒரு ஆசிரியரான உங்களுக்குப் பிடிக்கும் என்பதைப் போல ஒரு ஆசிரியராக நீங்கள் எதை எல்லாம் செய்தால் தனக்கு பிடிக்கும் என கருத ஒரு மாணவருக்கும் உரிமை உள்ளது.
- கரோலின் டிவிக், குழந்தை உளவியலாளர்

‘குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல கூசுகின்றன’ என்பது தேசிய கல்வி கணக்கெடுப்பு (2006) தரும் இறுதி முடிவு. அது மிகுந்த காட்டமான கீழ்க்கண்ட மூன்று
கருதுகோள்களை முன்வைத்தது.

1. 99.1 குழந்தைகள் பள்ளியைக் கண்டு அஞ்சுகிறார்கள்.
2. பெரும்பான்மை குழந்தைகள் புரிந்து கற்பது இல்லை.
3. மனச்சோர்வு, அவமதிப்பு, பெரும் பதற்றம் இவற்றோடு வீடு திரும்புகிறார்கள்.
இக்கருதுகோள்கள் காலம் காலமாக இங்கே முன்வைக்கப்படுவதுதான். ஆனால் இந்திய மழலையர் பள்ளிகள், ஆரம்பமற்றும் நடுநிலைப் பள்ளிகளில் அரசுக் குழுக்களும், அரசு சாரா (NGO) அமைப்புகளும் இணைந்து இந்த பிரமாண்ட புள்ளிவிவர சேகரிப்பில் ஈடுபட்டு இருந்தமையால் முடிவுகள் அதிர்வுகளை ஏற்படுத்தின. பெரிய இதழ்களில் (குறிப்பாக ‘இந்தியா டுடே’) தேசிய கல்விக் கணக்கெடுப்பு குறித்த ஆய்வறிக்கையின் பகுதிகள் வெளியானபோது இந்தியா முழுவதும் கல்வியாளர்கள் கொதித்தனர். காரணம் மூன்று.

1. மத்தியக் கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளை விட இந்தியாவில் பள்ளிக்கூட அதிகார சூழலால் பாதியில் படிப்பை துறக்கும் குழந்தைகள் 4 மடங்கு அதிகம்.

2. கல்விச்சூழல் தரும் மன அழுத்தம் தாங்காமல் வீட்டை விட்டு ஓடுதல் முதல் தற்கொலை செய்துகொள்ளுதல் வரை அதீத முடிவுகள் எடுக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை முன் எப்போதையும்விட பல மடங்கு அதிகரித்துள்ளது.

(2007ல் வெளிவந்த கல்வியாளர் நெகாரிகா வோராவின் ஆய்வு, நம் நாட்டில் பள்ளி செல்லும் குழந்தைகளில் ஏழு பேரில் ஒருவர் வாழ்வை முடித்துக்கொள்ளும் அபாய மனநிலையில் உள்ளதை ஊர்ஜிதம் செய்தது)

3. குழந்தைகள் மீதான சித்திரவதை (Abuse against Children) அரேபியா, ஆப்ரிக்கா பகுதிகளைவிட இந்தியாவில் அதிகம்.

பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் சேர்க்கப்படும் 100 குழந்தைகளில் ஆண் குழந்தைகளாக இருப்பின் 27 பேரும் பெண் குழந்தைகளாக இருப்பின் 12 பேரும்தான் உயர்நிலைப் பள்ளியில் அடியெடுத்து வைக்கிறார்கள் என்பது மிகைப்படுத்தப்பட்ட விஷயமாக நமக்குத் தோன்றலாம். ஆனால் ஒட்டுமொத்த இந்தியாவில் வயதானவர்களைவிட குழந்தைகள் அதிகம் என்பதையும் அது 12 கோடி என்பதையும் மனதில் நிறுத்திப் பார்த்தால் உண்மையான முழு வரைபடம் புலப்படலாம்.
ஆனால், நம் பள்ளிகளை குழந்தைகள் ஏன் வெறுக்கிறார்கள்..? 

பத்து மழைத்துளிகள் போட்டால் போதும்... ‘ரமணன் விடுமுறை அறிவிப்பாரா’ என அவர்கள் துடிப்பது எதைக் காட்டுகிறது? தாய்மார்கள் சின்னக் குழந்தைகளுக்கு சோறூட்ட நிலாவைத் துணைக்கு அழைக்காமல் ‘‘ஸ்கூல்ல... டீச்சர் கிட்ட சொல்லிடுவேன்’’ என மிரட்டி பணிய வைப்பது இன்று சகஜமாகி விட்டதே..?
குழந்தைகள் பள்ளியை வெறுப்பது இருக்கட்டும். அவர்களுக்கு அங்கே என்ன பாதுகாப்பு இருக்கிறது என்பது மிகவும் கவலைக்குரிய விஷயமாகி விட்டது. உண்மைதானே..! சேலத்தில் பிரம்படியால் கண்களை இழந்த மழலை... பெங்களூருவில் ‘ஆசிரியர் போர்வை’யில் இருந்து கயவனால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட குழந்தை... சென்னையில் தன் சொந்த வகுப்பறைக்குள் ஆசிரியையை கத்தியால் கழுத்தறுத்த ஆத்திர மழலை... இவை எல்லாம் நமக்கு உணர்த்துவது என்ன?

குழந்தைகளுக்கான கல்வி உரிமைச் சட்டம் கொண்டுவந்த  ஆசிரியர்-மாணவர் வரவு பற்றிய கெடுபிடிகளால், சட்டங்களால் இதுவரை 1 லட்சத்திற்கும் அதிகமான
குற்றங்கள் பதிவாகி உள்ளன நம் தமிழகத்தில் மட்டும்.

*   6143 ஆசிரியர்களுக்கு  மெமோ வழங்கப்பட்டுள்ளது.
*   412 பேர் மீது முதல் குற்ற ஆவணம் பதிவாகியுள்ளது.    (அவர்கள் பெயிலில் உள்ளனர்)
* 92 ஆசிரியர்கள் இதுவரை சிறைத் தண்டனை
        பெற்றுள்ளனர்.
* சுமார் 7000 பேர் (குறிப்பாக தனியார் பள்ளிகளில்) வேலையிழந்தும் உள்ளனர்.
எனவே வகுப்பறை வன்முறை என்பது இன்றைய ஆசிரியர்களின் மிகப்பெரிய வேலைச் சவாலாக உள்ளது. குழந்தைகளை அடிக்கக்கூடாது. திட்டக்கூடாது.  எதுவுமே சொல்லக்கூடாது என்றால் இதன் பொருள் என்ன? ஒருபுறம்  குழந்தைகளின் தலையைத் திறந்து பாடப்பொருளை கொட்டித் தீர்க்கத் தூண்டும் பாடச்சுமை. மற்றொருபுறம் குழந்தைகள் உரிமை என்னும் பெயரில் மிரட்டல்...

தேர்ச்சி சதவிகிதம் அதிகரித்துக் காட்டாத ஆசிரியர்களுக்கு துறை நடவடிக்கை... இந்த துயரமான சூழலுக்கு தன்னை கல்வியாளர்கள் என கூறிக்கொள்
பவர்கள் தரும் தீர்வு என்ன?

‘குழந்தைகளை அவர்கள் பாட்டுக்கு விட்டு விடுங்கள். தனக்கு தேவையானதை அவர்களே கற்றுக்கொள்வார்கள்’ என்பது உண்மையா? பள்ளிக்கூடங்கள் பெரும்பான்மை குழந்தைகளை வாட்டி வதைக்கின்றன’ என்பதற்கான தீவிர எதிர்வினை என இந்த கல்வியாளர்களை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. எனினும் கட்டுப்பாடு, சுயநடத்தை உருவாக்கம், திறன் மேம்பாடு, உயர்நிலை சிந்தனைப்போக்கு இவற்றை தாங்களாகவே குழந்தைகள் எப்படி கற்க முடியும்?

ஆனால், இந்த சூழலுக்கு முழுக்க முழுக்க ஆசிரியர்தான் காரணமா? இதில் பெற்றோரின் பங்கு என்ன? கடந்தவாரம் பேருந்தில் பயணம் செய்தபோது காதில் விழுந்த ஒரு உரையாடல் என்னை ரொம்பவே இம்சித்தது. ‘பார் அந்த டேவிட் டாக்டருக்கு படிக்கிறானாம். உன்னால முடியாதா...? இப்ப இருந்தே முயற்சி செய்... நீ டாக்டருக்கு படிக்கலனா நான் வாழ்ந்து... இவ்வளவு கஷ்டப்பட்டு என்ன பிரயோஜனம்?’ என்று ஒரு அம்மையார் பொரிந்து தள்ளிக்கொண்டிருந்தார். அவர் யாரிடம் பேசுகிறார் என்று தேடினேன். ‘கவலைப்படாத அம்மா’ என அவருக்கு ஆறுதல் கூறிய அந்தசிறுமி ஒன்றாம் வகுப்பு குழந்தை!

ஒன்றாம் வகுப்பு சிறுமிக்கு டாக்டராகுவது என்றால் என்ன என்றாவது தெரிந்திருக்குமா? எனக்குப் பிடிபடவில்லை. இது 2015 அக்டோபர் மாதம், ஏழாம் தேதி என்று வைத்தால் இந்த ஒன்றாம் வகுப்பு சிறுமி 12-ம் வகுப்புக்கு எப்போது வருவார்..? 2027-வது வருடம்... கீழ்க்கண்ட கேள்விகளுக்கு அதே 2027 அக்டோபர் 7-ம் தேதியை கற்பனை செய்து உங்களால் பதிலளிக்க முடியுமா?

(1) 2027-ல் எது தலையாய - நம்பர் ஒன் - பணித்துறையாக (Career) இருக்கப் போகிறது?
(2) 2027-ல் எந்த பல்கலைக்கழகம் உயர்ந்த அந்தஸ்தில் இருக்கும்...?
(3) எந்த வெளிநாட்டில் வேலை கிடைப்பது பொருளாதார ஆக்கம் தரும்?
(4) அப்போது 2027-ன் தொழில்நுட்ப கவர்ச்சி எந்த கருவிக்கு இருக்கும்?
இதில் ஒரு அனுமானமாகக்  கூட சரியான பதிலை யாராலும் தரமுடியாது அல்லவா..? அப்படி இருக்க, இன்று அந்த ஒன்றாம் வகுப்பில் பாஸ்/ஃபெயில், முதல் ரேங்க் இதற்கெல்லாம் அர்த்தம் கண்டு பதறுவது எவ்வளவு முட்டாள்தனம்?

நமக்குத் தேவை குழந்தைகள் தைரியமாக குதூகலிக்கும் ஒரு வகுப்பறை. ஆசிரியர்- மாணவர் உறவில் நேர்மறை (Positive) ஒழுக்கத்தின் கூறுகள் நிலவுகிற, குழந்தைகள் தங்களை பாதுகாப்பாக உணருகிற, அதேசமயம் கற்றல் தடையின்றி நடக்கும் ஒரு வகுப்பறை. அதற்கு ஆசிரியர்கள் தண்டனை வழி ஒழுக்க (Punishment based discipline) முறையை துறந்து அதற்கான மாற்று என்ன என்பதை யோசிக்க வேண்டும். வகுப்பறைகளை போர்க்களமாக  இன்றி கற்றலுக்கான சொர்க்கபுரியாக ஆக்கும் பாதையை நோக்கித்தான் நாம் பயணிக்க இருக்கிறோம்.

இந்த பக்கங்களை தொடர்ந்து வரும் ஒரு ஆசிரியர் தனது பணி இடத்தின் சவால்களை சரித்திரமாக்கும் இயல் ஊக்கத்தை பெறுதலே நமது நோக்கம். அதற்கு நாம் முதலில் குழந்தைகள் ஏன் ஒழுங்கீனமாக நடக்கிறார்கள என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். அதை சோவியத் (ரஷ்ய) கல்வியாளர் ஆண்டன் மக்கெரென் கோவிடமிருந்து தொடங்குவதே சரி. வன்முறையில்லா வகுப்பறையின் கதவுகளை திறப்போம் வாருங்கள்.

ஒன்றாம் வகுப்பில் சேர்க்கப்படும் 100 குழந்தைகளில் ஆண் குழந்தைகளாக இருப்பின் 27 பேரும் பெண் குழந்தைகளாக இருப்பின்
12 பேரும்தான் உயர்நிலைப் பள்ளியில் அடியெடுத்து வைக்கிறார்கள்

குழந்தைகளுக்கான கல்வி உரிமைச் சட்டம் கொண்டுவந்த  ஆசிரியர்-மாணவர் வரவு பற்றிய கெடுபிடிகளால், சட்டங்களால் இதுவரை 1 லட்சத்திற்கும் அதிகமான
குற்றங்கள் பதிவாகி உள்ளன

‘ஆயிஷா’ இரா.நடராசன்

சிறுவர் இலக்கியத்துக்காக வழங்கப்படும் ‘பால சாகித்ய அகாடமி’ விருது பெற்ற எழுத்தாளர், கல்வியாளர். இன்றைய பள்ளிச்சூழல் ஒரு குழந்தைக்குள் ஏற்படுத்தும் மாற்றம் பற்றி இவர் எழுதிய ‘ஆயிஷா’ என்ற குறுநாவல் ஒரு லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகி தமிழ்ச்சூழலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. குழந்தைகளின் உளவியல் சார்ந்தும், அறிவியல் சார்ந்தும், வரலாறு சார்ந்தும் நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் என பல்வேறு வடிவங்களில் எழுதிக் குவிக்கும் இவர், கடலூர் கிருஷ்ணசாமி நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் முதல்வராகப் பணிபுரிகிறார்.

(முதல் பாடவேளை முடிந்தது)

‘ஆயிஷா’  இரா. நடராசன்