செலவில்லாமல் கடல்நீரைக் குடிநீர் ஆக்கலாம்!



சாதனை

சாதித்துக்காட்டிய மாணவி


புதிய புதிய சிந்தனைகளை விதைப்பதுதான் கல்வியின் நோக்கம். இந்த உலகம் எதிர்நோக்கும் சிக்கல்களுக்கு தீர்வைத் தேடி மாணவர்களை உந்தித் தள்ளுவதே வகுப்பறைகள். தங்கள் பொறுப்பை உணர்ந்து அந்த இலக்கை எட்டிப்பிடிக்கும் மாணவர்களை இந்த உலகம் கொண்டாடத் தவறுவதே இல்லை. அதற்கு உதாரணம்...

 டெவ்லினா தாஸ். வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் பிஹெச்.டி மாணவியான இவருக்கு 16 லட்சம் ரூபாய் பரிசளித்து கொண்டாடியிருக்கிறது லண்டனைச் சேர்ந்த ஒரு நிறுவனம். காரணம், உலகத்தின் மிகத் தீவிரமான ஒரு பிரச்னைக்கு டெவ்லினா கண்டுபிடித்த தீர்வு.

தண்ணீருக்காக உலக யுத்தமே மூளும் என்று மிரட்டுகிறார்கள் விஞ்ஞானிகள். எதிர்காலம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறிவரும் சூழலில் அதற்கு மிக எளிய தீர்வொன்றை முன் வைத்திருக்கிறார் டெவ்லினா. கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் உலக அளவில் செயல்படுத்தப்படுகிறது. ஆனால், இருப்பதிலேயே மிகவும் செலவீனம் கொண்ட திட்டம் அதுதான். அதை செலவே இல்லாமல் செய்வதற்கான வழிமுறைகளை உருவாக்கியிருக்கிறார் இவர்.

கடந்த மாதம் இங்கிலாந்தில் நடந்த உலகளாவிய ஆராய்ச்சிப் போட்டியில் ‘சூரிய ஒளி மூலம் கடல்நீரைக் குடிநீராக்கும்’ இவரது `சலினோ’ திட்டம் இரண்டாம் பரிசைப் பெற்றிருக்கிறது. 25 ஆயிரம் அமெரிக்க டாலரோடு சுமார் மூன்றரை லட்சம் அறிவியல் கட்டுரைகள் அடங்கிய உலகளாவிய இணைய ‘சயின்ஸ் டைரக்டரி’யையும் பரிசாக கொட்டிக் கொடுத்திருக்கிறது லண்டனைச் சேர்ந்த  RELX நிறுவனம்.

கடந்த 5 வருடங்களாக, உலக அளவில் சுற்றுச்சூழல் சவால்களைத் தீர்ப்பதற்கான செயல் திட்டங்களை தேர்வுசெய்து பரிசளித்து வருகிறது இந்நிறுவனம். உலக சுகாதார நிறுவனம், யுனிசெப் நிறுவனங்களின் நேரடிக் கண்காணிப்பில் நடத்தப்படும் இப்போட்டியில் இந்த ஆண்டு 500க்கும்  மேற்பட்டவர்கள் பங்கேற்றார்கள். அதில் டெவ்லினாவிற்கு இரண்டாம் இடம்.தன் ஆராய்ச்சி பற்றி பெருமிதமாகப் பேசுகிறார் டெவ்லினா. ‘‘உலகத்தை அச்சுறுத்தக்கூடிய பெரும் பிரச்னை தண்ணீர் பிரச்னை. நிலத்தடி நீரும், நன்னீர் வளங்களும் நாளுக்குநாள் குறைஞ்சிட்டு வருது. அதனாலதான் இம்மாதிரியான ஒரு களத்தைத் தேர்ந்தெடுத்தேன்.

பூமியோட 70 சதவீதத்தை கடல்நீர் சூழ்ந்து நிற்குது. ஆனா அதைப் பயன்படுத்த முடியலே. பொருளாதாரம் தடையா இருக்கு. குறைந்த செலவுல சுத்திகரிச்சா தண்ணீர் பிரச்னை தீர்ந்திடுமேன்னு யோசிச்சேன். ஏற்கனவே கடல்நீரை குடிநீரா மாத்துற திட்டம் பல நாடுகள்ல நடைமுறையில இருக்கு.

தமிழகத்திலயும் கூட கடல்நீரை குடிநீரா மாத்துறோம். ஆனா, அந்த ‘காஸ்ட்லி ப்ராஜெக்ட்’ ஏழைநாடுகள், வளரும் நாடுகளுக்கு மிகப்பெரிய சுமையை உருவாக்கிடும்.  செலவில்லாத சுத்திகரிப்பு பத்தி தீவிரமா ஆராய்ச்சியில இறங்கினேன். செலவில்லாத ஒரே எனர்ஜி சோலார் எனர்ஜி தான். அதைப் பயன்படுத்தும்போது என் திட்டம் 100% சக்சஸ் ஆச்சு...’’ என்று புன்னகைக்கிறார் டெவ்லினா.

கொல்கத்தாவைச் சேர்ந்த டெவ்லினாவுக்கு பள்ளிக்காலத்திலிருந்தே அறிவியல் மீது அளவு கடந்த ஆர்வம். பி.டெக்  பயோடெக்னாலஜி படிப்பில் சிறந்த மாணவியாக தேர்வு பெற்றவர். அதனால் மெரிட்டிலேயே  அவருக்கு பி.எச்டி படிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இப்போது, அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் உதவித்தொகை பெற்று வி.ஐ.டியிலேயே ஆராய்ச்சி மேற்கொண்டு  வருகிறார்.

- பேராச்சி கண்ணன்
படங்கள்: இ.ராஜ்குமார்