வெளிநாட்டு மொழி படியுங்கள் உலகை வெல்லுங்கள்!



அறிவியல் வளர்ச்சி இன்று உலகைச் சுருக்கி உள்ளங்கைக்குள் கொண்டு வந்துவிட்டது. குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டிக்கொண்டிருந்த நிலை மாறி, உலகம் முழுக்க நம் எல்லைகளை விஸ்தரித்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் வந்து விட்டன.

அறிவையும் செல்வத்தையும் பெருக்கிக்கொள்ள தாய்மொழிக்கும் அப்பால் வேறு மொழிகளின் தேவை அதிகரித்துள்ளது. ‘ஆங்கிலம் மட்டும் கற்றுக்கொண்டாலே உலகத்தைச் சுற்றிவிடலாம்’ என்று சிலர் நம்புகிறார்கள், அது உண்மையல்ல! பல நாடுகளில் அந்தந்த நாடுகளின் தாய்மொழியே பிரதானமாக இருக்கிறது. அம்மொழியைக் கற்றுக்கொண்டவர்களுக்கு வரவேற்பும் அதிகமிருக்கிறது.

உலகமயமாக்கலுக்குப் பிறகு வெளிநாட்டு வேலைக்கான வாய்ப்புகள் அதிகரித்துவரும் நிலையில், ஆங்கிலத்தைத் தாண்டி பிற வெளிநாட்டு மொழிகளைக் கற்றுக்கொள்வது அத்தியாவசியமாகிறது. தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களிலும் மற்றும் அண்டை மாநிலங்களிலும் பல்வேறு வெளிநாட்டு மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. எந்தப் பல்கலைக்கழகத்தில் எந்த மொழிகள் கற்பிக்கப்படுகின்றன... பார்க்கலாம்.

சென்னைப் பல்கலைக்கழகம்

பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலியன், கொரியன், ஸ்பானிஷ், ரஷ்யன் ஆகிய மொழிகள் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முழு நேரமாகவும் தொலைதூரக் கல்வியிலும் கற்றுத் தரப்படுகின்றன. பட்டப்படிப்பு முடித்தவர்கள் இம்மொழிகளில் சான்றிதழ் படிப்புகளைப் படிக்கலாம். காலம் 6 மாதம். இந்த சான்றிதழ் படிப்பை முடித்தவர்கள் ஓராண்டு டிப்ளமோ படிப்புகளில் சேரலாம்.

விருப்ப பாடமாகவும் இவற்றைத் தேர்வு செய்து படிக்கலாம். ‘லெவல் 1’ முடித்த பின்பு அடுத்த லெவலுக்குச் செல்ல வேண்டும். ஏதேனும் ஒரு மொழியில் பட்டப்படிப்பு அல்லது குறிப்பிட்ட மொழியை இரண்டாவது பாடமாக எடுத்துப் படித்தவர்கள், இரண்டாண்டு கால எம்.ஏ- பிரெஞ்சு படிக்கலாம். எம்.ஏ படிப்பில் 55% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் எம்.ஃபில். படிக்கலாம். பிரெஞ்சில் பிஹெச்.டி படிப்பும் உண்டு. பிரெஞ்சு, ஜெர்மன் மொழிகளைக் தொலைதூரக் கல்வி முறையிலும் படிக்கலாம். எம்.ஏ. மாடர்ன் அரபி மொழிப் படிப்பும் தொலைதூரக் கல்வியில் வழங்கப்படுகிறது. 

கூடுதல் விபரங்களுக்கு :  சென்னைப் பல்கலைக்கழகம், சேப்பாக்கம், சென்னை-600005. போன்: 044-2539 9422, 2539 9746. Website: www.unom.ac.in/
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் பிரெஞ்சு மொழியில் முதுகலைப் பட்டம், பட்டயம் மற்றும் தொலைதூரக் கல்வியை வழங்குகிறது. இ.எல்.ஐ. பிரெஞ்சு மொழியில் பட்டப்படிப்பு படித்தவர்கள் எம்.ஏ. பிரெஞ்சு படிக்கலாம். எம்.ஃபில். பிரெஞ்சு படிப்பும் உண்டு.
+2 முடித்தவர்கள் 6 மாத கால பிரெஞ்சு மொழி சான்றிதழ் படிப்பை அஞ்சல் வழியில் படிக்கலாம். கூடுதல் விபரங்களுக்கு: மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், பல்கலை நகர், மதுரை-625 021. போன்:0452-2458471. Website: http://mkuniversity.org/direct/

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் அரபி, பிரெஞ்சு மொழிகள் அஞ்சல் வழியில் பயிற்றுவிக்கப்படுகின்றன. +2 முடித்தவர்கள் ஓராண்டு கால அரபி டிப்ளமோ,  ‘அப்ஜல் உல் உலாமா’ படிப்புகளில் சேரலாம். +2 முடித்தவர்களுக்கு ஓராண்டு கால பிரெஞ்சு சான்றிதழ் படிப்பும் வழங்கப்படுகிறது. 
கூடுதல் விபரங்களுக்கு : மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், அபிஷேகப்பட்டி, திருநெல்வேலி - 627012. போன்: 0462-2333741, 2338721. Website: http://msuniv.ac.in/beta/index.html.

அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பிரெஞ்சு மொழியில் சான்றிதழ் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. +2 தேர்ச்சி பெற்றவர்கள் இப்படிப்பில் இணையலாம்.
கூடுதல் விபரங்களுக்கு: அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், சிதம்பரம்-608002. போன்:04144-238282. Website:http://annamalaiuniversity.ac.in

பாரதிதாசன் பல்கலைக்கழகம்

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உள்ள ‘ஸ்கூல் ஆஃப் இன்டர்நேஷனல் லாங்குவேஜ்’ நிறுவனம் பிரெஞ்சு, ஜெர்மன் மற்றும் அரபி மொழிகளைப் பயிற்றுவிக்கிறது. +2 தேர்ச்சி பெற்றவர்கள் இந்தப் படிப்புகளில் சேரலாம். தவிர
இந்தப் பல்கலைக்கழகத்தில் பயிற்றுவிக்கப்படும் பி.எஸ்.சி. ஹோட்டல் மேனேஜ்மென்ட் அண்ட் கேட்டரிங் சயின்ஸ்  பாடத்திட்டத்தில் பிரெஞசுமொழி கற்பிக்கப்படுகிறது.

கூடுதல் விபரங்களுக்கு: பாரதிதாசன் பல்கலைக்கழகம், பல்கலைப் பேரூர், திருச்சி-620024. போன்: 0431-2407071. Website: www.bdu.ac.in
சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆஃப்இங்கிலீஷ் அண்ட் ஃபாரின்லாங்குவேஜ், ஐதராபாத்இந்த நிறுவனத்தில் அரபிக், பிரெஞ்சு, ஜெர்மன், ஜப்பானீஸ், ரஷ்யன் மற்றும் ஸ்பானிஷ் மொழிகளை தொடக்க நிலையில் இருந்து பிஹெச்.டி. வரை படிக்கலாம்.ரஷ்ய மொழியைப் பொறுத்தவரை பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் லெவல் 1.1 முதல் லெவல் 1.6 வரை படிக்கலாம். அம்மொழியில் இருக்கும் தகுதியைப் பொறுத்து எந்த லெவலிலும் சேரலாம். பகுதி நேரமாகவும் முழு நேரமாகவும் படிக்கலாம். தவிர Diploma  in  Translation, Advance  Diploma  in  Translation  படிப்புகளும் வழங்கப்படுகிறன. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் இதில் சேரலாம்.

அரபி மொழியில் ஆர்வமுள்ளவர்கள் பகுதிநேர தொடக்கநிலை வகுப்பில் சேரலாம். இந்த 100 மணி நேர வகுப்பில் சேர பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதன் பாடத்திட்டம் லெவல் 1.0 முதல் 1.6 வரை உள்ளது. இதில் லெவல் 1.5 முடித்தவர்கள் எம்.ஏ., வகுப்பில் சேரத் தகுதி படைத்தவர்களாவார்கள். அரபி மொழியில், அவர்களுக்குள்ள தேர்ச்சியை /தகுதியைப் பொறுத்து எந்த நிலையிலும் சேரலாம்.

பகுதிநேர மொழிபெயர்ப்பு டிப்ளமோ, எம்.ஏ. அரபி, அரபி மொழி ஆசிரியருக்கான போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ., எம்ஃபில்., பிஎச்.டி, படிப்புகளும் உண்டு.
பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ்,  மொழியில் சான்றிதழ், பட்டயம், அட்வான்ஸ்ட் டிப்ளமோ, எம்.ஏ., பிரெஞ்சு மொழி ஆசிரியருக்கான போஸ்ட், கிராஜுவேட் சான்றிதழ், இ - மாஸ்டர் (ஆன்லைன், எம்.ஏ., மற்றும் எம்.ஃபில்), பி.ஹெச்டி படிப்புகள் வழங்கப்படுகின்றன. கூடுதல் விபரங்களுக்கு : THE EFL UNIVERSITY, HYDERABAD-500 007. Phone; 040-27689400. Website: www.efluniversity.ac.in

தொகுப்பு: வெ.நீலகண்டன்